தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிப்பொருள்கள் வெடித்ததால் தீ விபத்து!
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 30-ந்தேதி தீ விபத்தில் சிக்கியது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வரும்போது எஸ்-11 வது பெட்டியில் தீப்பற்றி எரிந்ததில் 32 பயணிகள் உயிர் இழந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆந்திர தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகி றார்கள். எரிந்து கிடந்த பெட்டியில் முழுமையாக சோதனை செய்தனர். அதில் இருந்து சேகரிக்கப்பட்ட துகல்களை எடுத்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் சமூக விரோதிகளின் நாசவேலை காரணமா? மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தடயவியல் இயக்குனர் நாராயணமூர்த்தி, ‘’தீ விபத்தில் எரிந்த ரெயில் பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் நிபுணர் குழு பரிசோதனை செய்ததில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயணம் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனாலும் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது. மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் விபத்திற்கான காரணம் குறித்து உறுதியாக சொல்ல முடியும்’’என்று கூறியுள்ளார்.
தடயவியல் ஆய்வுப் பணிகள் 10 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு அதிகாரிகளிடம் இறுதி அறிக்கை முறைப்படி சமர்ப்பிக்கபட்ட பிறகே விபத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.