காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மரணம்! போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி முத்து கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான கணேசன் குடிப்பழக்கம் உள்ளவர். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின்மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடி வந்துள்ளார்.
இதுதொடர்பான இவர் மீதான வழக்குகள் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் பதிவாகி உள்ளன. இதனிடையே செல்போன் திருட்டு தொடர்பாக கணேசனை வடபாகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சோர்சுகளின் தகவலின்படி விசாரணைக்கு கொண்டுசெல்லப்பட்ட கணேசனை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் காரணமாக அவர் மயக்கம் அடையவே, அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவர்கள் கணேசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கணேசன் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மார்ச்சுரியில் போலீசார் வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த கணேசன் உறவினர்கள் போலீசார் அடித்ததால்தான் மரணம் அடைந்தார் என்றும், வழக்கை திசை திருப்புவதற்காக போலீசார் நாடகம் ஆடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே கணேசன் உடல் பிரேத பரிசோதனைக்கு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.