நாங்குனேரி: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வானுமாமலை மனைவிக்கு அரசுப் பணி: தமிழக அரசு
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24.7.2012 அன்று மறுகால்குறிச்சி கிராமத்தில் இரு தரப்பினரிடையே மண் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஏ. விஜயகுமார் அங்கு சென்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த வானுமாமலை என்பவர் காவல் துறை ஆய்வாளரை அரிவாளால் தாக்க முற்பட்டார்.
அப்போது தன்னை தற்காத்துக் கொள்வதற்காக காவல் துறை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் வானுமாமலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த வானுமாமலை குடும்பத்தினரின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது குடும்பத்திற்கு அரசு உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டும், வானுமாமலை குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த வானுமாமலையின் மனைவிக்கு தகுந்த அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.