மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் முன் முன்னாள் எம்எல்ஏ கோஷம்! திமுகவினர் வியப்பு!
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
திருமண மண்டபத்திற்கு வெளியே திமுக முன்னாள் எம்எல்ஏ பாபு, திடீரென்று சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மு.க.ஸ்டாலின் தரப்பிடம் இருந்து சிறிது காலம் விலகி இருந்த வி.எஸ். பாபு, திடீரென்று தற்போது மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியது, அங்கிருந்த திமுகவினரை ஆச்சரியப்பட வைத்தது.