அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்: ஸ்டாலின்
திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் அல்ல, அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவோம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் ரூ.600 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை முதல்வர் கருணாநிதி இன்று மாலை தொடங்கி வைத்தார். விழாவுக்கு தலைமை வகித்துப் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
1996 ஆம் ஆண்டு 4 ஆம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் அவர்கள் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் மூலமாக சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டுவந்தார். மத்தியில் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி. அப்போது ரூ. 1000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ஆட்சி முறையாக பயன்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அலட்சியத்தோடு அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்கள்.
2006 ஆம் ஆண்டு 5 முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த கலைஞர் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரை தொடர்ந்து வலியுறுத்தி நிதியை பெற்று நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் அந்த திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
நிச்சயமாக அந்த திட்டத்தையும் கலைஞர் ஆட்சி சென்னை மக்களுக்காக நிறைவேற்றித்தரும். இன்று மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியத் திட்டமாகும். சென்னை மக்களுக்கு மட்டும் அல்ல தமிழகம் முழுவதற்கும் தேவையான குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி வருவது.
கலைஞர் ஆட்சி. வறண்ட மாவட்டமான இராமநாதபுரத்தில் ரூ.616 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தந்தவர் தான் கலைஞர். மதுரை மேலூர் பகுதியில் ரூ.880 கோடி செலவில் குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. அதுபோல விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 450 கோடி செலவில் தாமரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க ரூ.1400 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிகமுக்கியமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை சுமார் ரூ. 1900 கோடி செலவில் செயல்படுத்திவருபவரும் முதலமைச்சர் கலைஞர் தான். திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை கலைஞர் அரசு. அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடும் அரசாகவும் திகழ்கிறது என்றார்.