காஷ்மீரில் மீண்டும் பதட்டம்: போலீஸ் குவிப்பு
காஷ்மீரில் தடையை மீறி பிரிவினைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாரமுல்லா மாவட்டம் பத்தான் பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.
போலீசார் உள்ளே மாட்டிக்கொண்டனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க, காஷ்மீரில் உள்ள அனைத்து பிரிவு மக்களுடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். சொந்த நாட்டு மக்களுடன் பேச்சு நடத்த எங்களுக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.
காஷ்மீருக்குள் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் புகுந்து கொண்டு, பிரிவினைவாதிகள் என்ற பெயரில் செயல்படுகிறார்கள். கலவர நேரங்களில் காஷ்மீரில் வாழும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம கூறியுள்ளார்.