ஆகஸ்ட் 2ல் கோவையில் திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் உரை
கோவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக பொதுக்கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முன்னணி தலைவர்கள் பலர் உரையாற்றுகின்றனர் என, அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை பீளமேட்டில் 380 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல்வர் கருணாநிதி கோவை செல்கிறார். அன்று மாலை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
கூட்ட ஏற்பாடு குறித்து, கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி,
முதல்வர் கருணாநிதி கோவை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு வருகிறார். காலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அன்று மாலை திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட, முன்னணி திமுக தலைவர்கள் பலர் கோவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரள்வார்கள் என்றார்.