பிரதமர், சோனியா வருகை: கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 450 கோடி செலவில் புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 13-ந்தேதி மாலை நடக்கிறது. விழாவில் பிரதமர் மன் மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வருகையையொட்டி சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், பாம்பன் ஆகிய கடல் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தவிர இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படையினர் 24 மணி நேரமும் அதிநவீன ரோந்து படகுகளில் சென்று கண் காணித்து வருகிறார்கள். பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை கடலோர பாதுகாப்பு குழும தலைவர் லாலாசங்கா இன்று காலை ராமநாதபுரம் வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சென்று கடலோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்திய கடல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்கச் செய்து கண்காணிக்குமாறும் உத்தரவிட்டார். தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றி உள்ள கடல் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான போர்கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.