Home Home Page
Logo
இனிய உதயம்
மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
......................................
கள்ள நோட்டு
......................................
முதல் முத்தம்
......................................
பாதச்சுவடு
......................................
மரணத்தின் நிழலில்...
......................................
மக்கள் நடத்திய மாநாடு!
......................................
திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல்
......................................

மக்கள் நடத்திய மாநாடு!
-கோவி. லெனின்



                             "எங்கள் பணத்தில் தானே அரசாங்கம் இந்த மாநாட்டை நடத்துகிறது? அப்படின்னா நாங்கதான் இந்த மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினர்கள்' என்று தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக மாநாட்டு வளாகத்திற்குத் திரண்டு வந்தால் எப்படி இருக்கும்? ஏறத்தாழ அப்படித்தான் இருந்தது- திருவள்ளுவராண்டு 2041, ஆனி 9 முதல் 13 வரை (2010-சூன் 23 முதல் 27) ஐந்து நாட்கள்  கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பெருமளவிலும் தமிழகத்தின் பிற மாவட்டத்து மக்கள் பரவலாகவும் திரண்டு, தங்கள் குடும்ப விழாவாகச் செம்மொழித் திருவிழாவை நடத்திக் காட்டியிருக் கிறார்கள். மாநாடு நடந்த கோவை கொடீசியா வளாகத்தில்  மாநாட் டுக்கு முந்தைய நாட் களிலும், மாநாட்டிற் குப் பிந்தைய நாட்களிலும் மக்கள் கூட்டம் கூட்ட மாக வந்து கொண்டே இருந்தது, புதிய தமிழுணர்வை உண்டாக்கி இருந்தது. உலகில் வேறெந்த இனமும் தனது மொழிக் காக இத்தனை சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் விழா நடத்தியதுமில்லை- நடத்திடவும் முடியாது என்பதை  உயிருக்கு நேரான தமிழுக்கு நடத்திய மாநாட்டின் மூலம் உலகிற்கு நிரூபித்திருக்கிறார்கள் தமிழர்கள்.

அரசாங்கம்தான் மாநாட்டை நடத்தியது. ஆனால் ஆட்சியாளர்களின் கெடுபிடிகள் இல்லை. ஆளுங் கட்சியினர்தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், அக்கட்சியின் கொடிகளோ பதாகைகளோ பாதைகளில் இல்லை. காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள். ஆனால் வழக்கமான கடுகடுப்பு இல்லை.  அரசாங்கத்தின் செயல்பாட்டைத் தங்களுடையதாக மக்கள் நினைத்து அதில் பங்கேற்றால் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதற்குச் செம்மொழி மாநாடே சாட்சி.



சுவர் விளம்பரங்களிலும் சாலை யோரப் பதாகைகளிலும் சங்க இலக்கியக் காட்சிகள்- பழந்தமிழரின் பண்பாட்டுச் செழுமைகள் ஆகிய வையே படங்களாகப் பளிச்சிட்டன. தொழிலாளர்கள், மாணவர்கள்,  உழைக்கும் பெண்கள், வணிகர்கள் உட்பட கோவைப் பகுதியில் உள்ள மக்களின் செல்பேசி களில் அழைப்பிசையாக, "செம்மொழியான தமிழ்மொழி யாம்' என்ற மாநாட்டின் மையநோக்குப் பாடலே ஒலித்தது. வழக்கமாக "ஹாய்... ஹலோ.. பை..' என்றே பேச்சைத் தொடங்கி ஆங்கிலத் தில் உரையாடுவதே பெருமை என நினைக்கும் இளைய தலைமுறையினர் "வணக்கம்' என்றும்; "நன்றி' என்றும் பேசியது புதிய மாற்றம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு முன்பே  மக்களிடம் ஏற்பட்ட இந்த நல்ல மாற்றங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதனை மேம்படுத்தவும் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதுதான் மிகவும் முக்கிய மானது.

தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு, இந்திய அரசு 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் செம்மொழித் தகுதியை வழங்கியது. இத்தகுதி கிடைத்தபின் நடைபெறும் முதல் தமிழ் மாநாடு என்பதால் கோவை மாநாட்டின் விளைவுகள் குறித்த எதிர்பார்ப்பு தமிழறிஞர்களிடம் நிறையவே இருந்தது. ஏறத்தாழ 400 கோடி ரூபாய் செலவில்  நடந்த மாநாட்டில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1. பொது அரங்கம்



குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீலால் தொடங்கி வைக்கப்பட்டு, மத்திய நிதியமைச்சர்  பிரணாப் முகர்ஜி தலைமையில் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் நிறைவுரையாற்றப்பட்ட மாநாட்டின்  பல நிகழ்ச்சிகள் இந்த பொது அரங்கத்தில்தான் நடந்தன.  பொழுதுபோக்கு, பிரபலத்து வம், மக்களைக் கவரும் மொழி யாளுமை இவையே பொது அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி களுக்கான தன்மைகளாகும். கவிஞர்கள் அப்துல்ரகுமான், வாலி, வைரமுத்து ஆகியோர் தலைமையில் நடந்த மூன்று கவியரங்கங்களில், தமிழகத் தின் பிரபல கவிஞர்கள் பலரும் தங்கள் படைப்புகளை முன் வைத்தனர். சங்க இலக்கி யம் தொடங்கி தற்கால இலக்கியம் வரையிலான படைப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கங்கள் மக்களின் சிந்தனையைப் புதிய நோக் கில் பயணிக்க வைத்தன. 

"செம்மொழியை மேம்படுத்தும் பொறுப்பு வெள்ளித்திரைக்கா, சின்னத் திரைக்கா, அச்சுத்துறைக்கா' என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக் கொண்டு நடந்த பட்டிமன்றம்  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. வெள்ளித்திரை சார்பில் இயக்குநர் பாரதிராஜா, வாகை சந்திரசேகர்; சின்னத்திரை சார்பில் திண்டுக்கல் லியோனி, எஸ்.வி.சேகர் ஆகியோர் வாதாடினர். அச்சுத்துறைக்காக நக்கீரன் ஆசிரியரும் பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணனும் வாதங்களை வைத்தனர். அச்சுத்துறையின் சிறப்புகளை நக்கீரன் ஆசிரியர் அடுக்கிய விதத்தையும் மற்ற இரு திரைகளின் பரிதாப நிலைமையை அவர் வறுத்தெடுத்த பாணியையும் முதல்வர் கலைஞர் மிகவும் ரசித்தார். செம்மொழியை வளர்க்கும் பொறுப்பு அச்சுத்துறைக்கே என்று தீர்ப்பளித்தார் நடுவர்.



"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் கலைஞர் தலைமையில் நடந்த கருத்தரங்கில், இந்திய- தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்கள் தமிழின் பெருமையை எடுத்துரைத்தனர். மாநாட்டினைக் காணவந்த பொதுமக்களின் செவிகளுக்குத் தமிழுணவு வழங்கும் வகையில் அமைந்திருந்தது பொது அரங்கம்.  ஒன்றரை லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த அரங்கம், 5 நாள் நிகழ்ச்சிகளிலும் நிரம்பி வழிந்தபடியே இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் பலவும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. அரசியல் சார்பான கருத்துகள், தனிமனித புகழ்பாடல்கள் ஆகியவை கலந்திருந்த பொது அரங்க நிகழ்ச்சிகள் செவிக்கு உணவு என்றால், சிந்தனைக்கு விருந்தாக செம்மொழி மாநாட்டில் அமைந்திருந்த பல அம்சங்கள் அவ்வளவாக ஒளிபரப்பப்படவில்லை.

2. செம்மொழி ஆய்வரங்கம்



தமிழின் செம்மொழித் தகுதியை வரலாற்று வாயிலாகவும், இலக்கியச் செழுமையின் மூலமாகவும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வரங்கம் அமைந்திருந்தது. ஈழத்தைச் சேர்ந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையிலான ஆய்வரங்க நிகழ்ச்சிகளை சூன் 24-ஆம் நாள் (ஆனி 10) தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்றும்; அந்த நாகரிகத்தின் மூத்தமொழி தமிழே என்பதையும் புதிய ஆய்வுகளின் வாயிலாக மெய்ப்பிக்கும் வகையில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த  இந்தியவியல் பேராசிரியர் அஸ்கோ பர்போலா தனது ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். அவருடைய இந்த ஆய்வுக்காகத்தான் மாநாட்டுத் தொடக்க விழாவில் கலைஞர்



மு. கருணாநிதி பெயரிலான செம்மொழித் தமிழ் விருதினை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கிச் சிறப்பித்தார். தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தி, அதற்கான சான்றாவணங் களை இந்திய அரசுக்கு அனுப்பிய அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் என்பவரும் இந்த ஆய்வரங்கில் கட்டுரை வழங்கினார். "நான் தமிழ் நாட்டின் மருமகள்' என்ற பெருமிதத் துடன் ஜெர்மனியைச் சேர்ந்த ஒல்ரிக் அம்மையார் நிகழ்த்திய தமிழுரை பலரையும் கவர்ந்தது.

தமிழின் தொன்மைச் சிறப்பு, அண்மைப் போக்கு, எதிர்காலச் சவால் கள் குறித்து ஆராயும் வகையில் நான்கு நாட்கள் நடந்த ஆய்வரங்கத்தில் 913 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகளின் தன்மைகள் ஆய்வுக் குட்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறும்போது, தமிழறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

3. இணைய மாநாடு- இணைய கண்காட்சி



தமிழ்மொழியை அடுத்த தளத்திற் கும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டது, செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட இணைய மாநாடு. கணினி யிலும் இணையத்திலும் தமிழை எளிதா கக் கையாள்வதற்கான மென்பொருள் களை உருவாக்குதல், விசைப் பலகைகளை தரப்படுத்துதல், பயன்பாட்டை பரவலாக்குதல் ஆகியவைதான் இம்மாநாட்டின் இலக்கு. புகழ் பெற்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் முதல் தமிழ்க் கணினி வளர்ச்சிக் காக அர்ப்பணித்துக் கொண்ட சாஃப்ட்வியூ உள்ளிட்ட நிறுவனங்கள் வரை பலரும் இதில் பங்கேற்று ஆய்வுகளை வழங்கினர். தமிழ் மென்பொருள் வடிவமைப்பில் எழுத்துருக் களை எளிமையாகக் கையாளும் வகையில் புதிய தயாரிப்பினைத் தந்துள்ள பனேசியா நிறுவனத் திற்கு தமிழக அரசின் ஒரு லட்ச ரூபாய் விருதினை நிறைவு நாள் நிகழ்ச்சியில்  முதல்வர் வழங்கினார். இணைய மாநாட்டை யொட்டி அமைக்கப்பட்டிருந்த இணைய கண்காட்சி, கணினி யில் தமிழைக் கையாளும் முறையை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் வகையில் அமைந் திருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இனி ஒருங்குறி எனப்படும் யூனிகோட் எழுத் துருவே பயன்படுத்தப்படும் என்ற அரசாணை, தமிழ் இணைய மாநாட்டின் முதல் வெற்றியாகும்.

நிலவுக்கு இந்திய செயற் கைக்கோளை அனுப்பிய சந்திரயான் திட்டத்தின் இயக் குநர் மயில்சாமி அண்ணா துரை தலைமையில் நடந்த அறிவியல் மாநாட்டிலும் தமிழில் அறிவியல் முயற்சிகள் குறித்த கருத்துகள் வெளிப் பட்டன. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றும் தமிழரான கணேசன்  உள்ளிட்ட பலரும் அறிவியலைத் தமிழிலே கற்பதன் சிறப்பை எடுத்துக் கூறி, அடுத்த தலைமுறையி னருக்குத் தமிழ் மீதான நம்பிக் கையை ஊட்டினர்.

4. செம்மொழிக் கண்காட்சி- கலைநிகழ்ச்சி



சிந்துவெளி நாகரிகம் தொடங்கி கணினியுகம் வரையிலான தமிழ்ப் பண்பாடு, நாகரிக வளர்ச்சி, அறிவியல் சிந்தனைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் காட்சிகளாய் விளக்கும் வகையில்  மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தபடியே இருந்தனர். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் தாக்கத்துக் குள்ளாகியிருக்கும் தமிழர்களுக்குத் தங்களின் மூதாதையர் வாழ்வையும் பெருமையையும் சொல்லும் விதத்தில் பயனுள்ளதாக இக்கண்காட்சி அமைந்திருந்தது. கொங்கு மண்டலத் தில் உள்ள மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் தமிழுணர்ச்சிக்கும் ஊக்கம் தரக்கூடிய இந்தக் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்ற அறிவிப்பு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  மாநாட்டு அரங்குகளி லும் கோவையின் முக்கிய இடங்களி லும் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள், நவீனக் கலைகள், புதிய முயற்சிகள் ஆகியவை வெளிப்பட்டு மக்களைக் கவர்ந்தன.

மாநாட்டின் பயன்

மாநாட்டின் நிறைவு நாளில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்க, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா செம்மொழி அஞ்சல் தலையினை வெளியிட்டார். தமிழர்கள் தங்கள் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தினார் சிறப்புரை யாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

செம்மொழி மாநாட்டிற்கு முதல் காரணமும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாகவும் திகழ்ந்த தமிழக முதல்வர் தனது நிறைவுப் பேருரையை ஒரு நிதிநிலை அறிக்கைபோல கவன மாகத் தயாரித்திருந்தார். அந்த உரை யில் அவர் அறிவித்துள்ளபடி தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கத் தனிச்சட்டம்,  மத்திய அரசில் தமிழ் ஆட்சி மொழி, மாநிலத்தின் அனைத்து நிர்வாகத் திலும் தமிழ், புதிய தமிழ் ஆய்வு களுக்கும் படைப்புகளுக்கும் ஊக்கம் தரும் வகையிலான நிதியுதவி, பள்ளி- கல்லூரி களில் செம்மொழிப் பாடத் திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்றினால், மக்கள் திருவிழாவாக நடந்தேறிய செம்மொழி மாநாடு, தமிழின் எதிர்காலத்திற்கு வளமும் நலமும் சேர்க்கும்.
படங்கள்: ஸ்டாலின்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :