Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
Logo
மெட்டி ஒலி
அதிபதி : மாஃபா லதா பாண்டியராஜன்
 ................................................................
தாயுமானவர் : தமிழச்சி தங்கபாண்டியன்
 ................................................................
நான் பெண் ஒளிப்பதிவாளராக இருப்பதால்.......
 ................................................................
யூத்
 ................................................................
ஆள் 50% ஆடை 50% - வர்ஷா பஞ்சாபி
 ................................................................
’அந்தி’ மேகங்களின் ஆனந்த...
 ................................................................
சி.ஜே.பாஸ்கருடன...
 ................................................................
மிஸ்டர் முடிவு - ராஜாத்தி
 ................................................................
அரும்பு மீசை... - கோவி.லெனின்
 ................................................................
சினிமா ஆண்கள்? -தேன்மொழி
 ................................................................
ராணி மகாராணி - சேலம் மேயர்
 ................................................................
தாயே போற்றி! - ஸ்ரீ காளிகாம்பாள்
 ................................................................
01-11-2008

தாயுமானவர் :  தங்கபாண்டியன்                ரு தந்தை தாயுமாக இருந்தால் அந்த அபூர்வ உறவுக்குள் எத்தனை பாசமிருக்கும். அந்த உறவு அறுந்து போனால் எத்தனை இழப்பு துயர் இருக்கும். எல்லாம் உணரமுடிந்தது தமிழச்சி தங்கபாண்டியன் சந்திப்பிலிருந்து.

            தந்தைதான் உலகம் என்று இருந்த தமிழச்சி அந்த உலகத்தின் மறைவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருகிறார்.   அப்பா இறந்ததுக்காக இப்படியா என்று ஊரார் கேட்கும் அளவிற்கு துயருற்றிருக்கிறார். சரியாக சாப்பிடாமல் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் புழுங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.  இந்த புழுக்கத்தில் இருந்து மீள்வதற்காக மரணமும் ஒரு கொண்டாட்டத்திற்கு உரியது என்று சொல்வதால் ஜென் கதைகளையும், ஒஷோவின் நூல்களையும் வாசித்திருக்கிறார். ஒரு நாளின் எந்த மணித்துளியிலிருந்து நீங்கள் என் கண்களிலிருந்து கண்ணீராக வெளியேறுகிறீர்கள் என தெரியவில்லை அப்பா என்று இப்போதும் புலம்புகிறார்.

            தமிழச்சிக்கு தந்தை (முன்னாள் தமிழக அமைச்சர் தங்கபாண்டியன் ) எழுதிய கடிதங்களையும், தந்தைக்கு தமிழச்சி எழுதிய கடிதங்களையும் படித்தால் ஒரு தந்தை, மகளின் உறவு இத்தனை ஆழமானதா என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.

            தமிழ் இலக்கியத் தளத்தில் தனித்தடம் பதித்திருக்கிறார் தமிழச்சி. குறிப்பாக வட்டார வாழ்வியல் சார்ந்த தமிழ்க்கவிதைகள் எழுதும் கவிஞர்கள் பட்டியலில் தனது பெயரை ஆழப் பதிவு செய்திருக்கிறார் . அவரின் இந்த இலக்கிய ஆளுமைக்கு காரணம் தந்தையாம். அதனால்தான் என் தாயுமாண தந்தை வே. தங்கபாண்டியன் அவர்களுக்கு.. என்று தனது முதல் கவிதை தொகுப்பு ’எஞ்சோட்டுப்பெண்’ணை சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

            "’அப்பாவால்தான் எனக்கு இலக்கியம் பரிச்சயம். அவரால்தான் இலக்கியத்திற்கு நான் பரிச்சயம். பதினாறு வயசில் எங்க வானம் பார்த்த பூமியைப் பற்றி ’மாரி’ன்னு கவிதை எழுதினேன். அதுதான் நான் எழுதிய முதல் கவிதை. ஆனா அப்பா அதை கவிதைன்னு ஏத்துக்கல. இது கவிதைக்கான முயற்சிதானே தவிர கவிதை கிடையாது. எழுதிப்பழகு எல்லாம் கைகூடும்னு ஊக்கப்படுத்தினார். கவிதை பயிற்சிக்காக திராவிட இயக்க கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நான் படிக்கிறதுக்கு வழிவகை செய்தார்.

        மதுரை தியாகராயர் கல்லூரியில படிக்கும்போது ‘அருவி’ மாணாக்கர் இதழ் கொண்டுவந்தேன். தான் படித்த கல்லூரியில தன் மகள் ஒரு தனி இதழே கொண்டு வந்திருக்காளேன்னு பெருமைப் பட்டார் அப்பா. அந்த ‘அருவி’யில் நான் இலக்கிய கட்டுரையும் கவிதையும் எழுதியிருந்தேன். அந்த ’சந்திப்பு’ கவிதையைத் தான் கவிதைன்னு ஏத்துக்கிட்டார். கவிதைக்கான முயற்சியில இருந்து கவிதை எழுதிட்டாய்னு வாழ்த்தினார்.

        எழுதுவதில் புதுமை செய்யச்சொல்லி வலியுறுத்தினார் அப்பா. அதனாலதான் மறுவாசிப்பு இலக்கியங்கள் படைக்க ஆரம்பிச்சேன்.

        கல்லூரி விரிவுரையாளர், நாட்டியம், நாடகம்னு நான் பல்வேறு தளங்களில் கால்பதிக்க அப்பாதான் காரணமா இருந்தார்’’ எனச் சொன்ன தமிழச்சியின் அறிவுணர்ச்சிக்கு காரணமே தந்தைதானாம். பொதுவாக வாத்தியார் வீட்டு பிள்ளை மக்கு என்பார்கள். தமிழச்சி விஷயத்தைப் பொறுத்த வரை அது பொய்யாகிவிட்டது.

        “ அப்பாவும், அம்மாவும் ஆசிரியர்களாக இருந்ததால நல்ல முறையில படிச்சேன்.  நல்லா படிக்கிற குழந்தைகளை முதல் வகுப்புல இருந்து மூன்றாம் வகுப்புக்கு மாத்திடுவாங்க. இரண்டாம் வகுப்பு படிக்க வேண்டிய அவசியமில்ல. மூன்றாம் வகுப்புல இருந்து ஐந்தாம் வகுப்புக்கு போய்ட்டேன். ஐந்து வருடத்தில் கழியவேண்டிய மல்லாங்கிணறு ஆரம்ப பள்ளி வாழ்க்கை ரெண்டே வருடத்தில் முடிஞ்சதுக்கு முக்கிய காரணம் அப்பாதான்.

        தமிழ்வழி கல்வி மட்டும் போதாது உனக்கு ஆங்கிலப்புலமையும் வேண்டும்னு விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில படிக்கவச்சார். அதுமட்டுமா, நீ விடுதியில தங்கி படிச்சாதான் கல்வியில் மேம்படுவாய்னு விருதுநகர் விடுதியிலேயே என்னை தங்கவச்சார். அம்மா( ராஜாமணி அம்மாள் ) என்னை டாக்டருக்கு படிக்கவைக்கனும்னு பிடிவாதமா இருந்தப்பக் கூட என் விருப்பம் போல ஆங்கில இலக்கியம் படிக்கவைச்சார்.

        பகுத்தறிவு சிந்தனையை எனக்குள் பரப்பியதும் அப்பாதான்.. பெரியார்,அண்ணா, தலைவர்(கலைஞர்) எழுதிய நூல்களை வாங்கித்தந்து படிக்க வைச்சார்.

        அருப்புக்கோட்டையில் திராவிட இயக்கம் சார்பாக எந்த கூட்டம் நடந்தாலும் அக்கூட்டத்துக்கு வந்தவங்க இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வருவாங்க. எனக்கெல்லாம் திருநாள் போல இருக்கும். அப்பாவால்தான் நல்ல சிந்தனையாளர்களுடன் பழகும் வாய்ப்பு இளம் வயதிலேயே கிடைச்சது.
 
    அவர்தான் இந்த சமூகத்தின் மீது பரந்த பார்வையை உண்டு பண்ணினார்’’ என்ற தமிழச்சி, தன்னை பண்பாளர் என்று சிலர் பாராட்டுகிறார்கள். தான் இப்படி பண்பாளராக பரிணமிப்பதற்கும் தந்தைதான் காரணம் என்று குறிப்பிட்டார்.

           பெரியவர்களுடன் தொலைபேசியில் பேசும் போதும் அப்பா எழுந்துநின்று பேசுவார். போனில் பேசும்போது நீங்க உட்கார்ந்து பேசுறீங்களா எழுந்து பேசுறீங்களான்னு தெரியப் போகுதா என்று அந்த நேரத்தில் சிரிப்பேன். ஆனா அவரின் மரியாதை உணர்ச்சியைக் கண்டு ஆச்சர்யப்படுவேன். அந்த ஆச்சர்யங்கள்தான் எனக்குள்ளும் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கு.

        ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரா பணியாற்றினேன். அங்க ஒரு வகுப்பறையில் இருந்து இன்னொரு வகுப்பறைக்கு செல்லும் தூரம் அதிகம். அந்த தூரத்தை வெயில் நேரத்துல கடக்க வேண்டியிருப்பதால் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டுதான் போவேன். இத தெரிஞ்சுக்கிட்ட அப்பா, நீ கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு போகும்போது கல்லூரி முதல்வர் எதிரே வந்தால் என்ன பண்ணுவேன்னு கேட்டார். வணக்கம் வைப்பேன்னு சொன்னேன். எப்படின்னு கேட்டார். நான் சிரித்துவிட்டு வணக்கம் வைத்து காட்டினேன். நான் இதைக் கேட்கவில்லை. நீ வணக்கம் வைக்கும்போது கூலிங்கிளாசை கழட்டுவாயா இல்லையா என்றார். கூலிங்கிளாஸ் போட்டிருப்பதற்கும் வணக்கம் வைப்பதற்கும் என்ன சம்பந்தம் என்றேன். உள்ளத்தில் உள்ளது கண்களில் தெரியும். நீ மனசில் மரியாதை வைத்திருக்கிறாயா என்பது கண்களை கவனித்தால்தானே தெரியும். அந்த கண்களை மறைத்து விட்டால் எப்படி என்று எனக்கு அறிவுறித்தினார்.

        இப்படி நல்ல பழக்கங்கள் பலவற்றைச் சொல்லி அவற்றை நான் வழக்கத்துக்கு கொண்டு வரும்படி செய்தார்  என்றவ,ர்  தலைவருடன் புகைப்படங்கள் எடுக்கும்போது நின்று கொண்டுதான் இருப்பார் அப்பா. பலரின் வற்புறுத்தலினால் ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பார் என்று அந்தப் படத்தை காட்டினார்.

    இப்படி எல்லாவற்றுக்கும் காரணம் தந்தைதான் என்று சொல்லிக்கொண்டே வந்ததால் உங்கள் அழகுணர்ச்சிக்கும் காரணம் அவர்தானா என்று எதார்த்தமாக கேட்டால் என் தாயுமாணவர் அன்றி வேறு யார் என்று ஆச்சர்யப்படுத்தினார்.

    பொதுவாகவே தமிழச்சியின் இளமை குறித்த ஆச்சர்யம் பலருக்கும் இருக்கு. கல்லூரி மாணவி போல் இருக்கிறார். ஆனால் கல்லூரியில் இருபது வருடங்களாக விரிவுரையாளராக இருந்திருக்கிறாரே என்பதுதான் அந்த ஆச்சர்யம். தன் இரு மகள்களுடன் ஒரே யூனிபார்ம் ஆடையில் இவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்தால் சகோதரிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றுதான் நினைக்கத்தோன்றும்.

“கருகருன்னு இருப்பார் என் அப்பா.. அழகாக, நல்ல சிவப்பா நான் பிறந்ததால சாருக்கு இப்படியொரு பொண்ணான்னு ஆச்சர்யப்பட்டிருக்காங்க.. அடுத்து தம்பி பிறந்தாலும் என் மீதுதான் அலாதியான பிரியம் வைத்திருந்தார் அப்பா. .

            உடல் ஆரோக்கியத்திலும், அழகுபடுத்திக் கொள்வதிலும் அப்பா மிகுந்த அக்கறையோடு இருப்பார். அவரைப் போலவே என்னையும் மாற்றிவிட்டார். சனிக்கிழமைகளில் அப்பா எண்ணெய் தேய்த்து குளிக்கிறது அத்தனை வேடிக்கையா இருக்கும். கருப்பு நிறத்துக்கும் அதுவும் உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்ச்சிக் கிட்டு நிற்கும் அப்பாவை பார்க்கும் போது அந்த சின்ன வயதில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்; அம்மாவுக்கும்தான். ஆனால், நான் குளிக்கப் போறேன்... நான் குளிக்கப்போறேன்...ன்னு அவர் வீடு முழுவதும் துள்ளி குதித்து ஓடும் போது சிரிப்பொலிகளால் வீடு அதிரும். அது என்னவோ தெரியவில்லை. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் அவர் குழந்தையாகிடுவார்.

        திருமணத்துக்கு பிறகும் என் உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கங்களில் அப்பா அக்கறை எடுத்துக்கிட்டார். குழந்தை பெற்றதும் நான் நன்கு சதை போட்டுவிட்டேன்.
 
    உணவுப் பழக்கவழக்கங்களிலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். ஏன் இப்படி மாறிட்டாய்னு வருத்தப் பட்டவர், சென்னை அண்ணாநகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு அழைத்துப் போய் சேர்த்து விட்டார்.

பரதக்கலையின் மூலம் உடல் அழகாகும், ஆரோக்கியம் பெறும் என்றுதான் என்னை அக்கலை பயில வைத்தார் அப்பா. பரதம் பயின்று அரங்கேற்றம் செய்து வந்ததுதான் என் இளமைக்கு முக்கிய காரணம் என்று நம்புகிறேன்.

        குழந்தை பருவத்தில் இருந்து... திருமணமாகி நான் குழந்தைகள் பெற்ற பிறகும் என் அழகு விஷயத்தில் அக்கறை செலுத்தினார் தாயுமானவர். நகப் பூச்சு, வளையல், ஆடைகள் என்று பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பார். நகப்பூச்சு சரியாக இல்லாவிட்டாலும் கண்டுபிடித்து விடுவார். அவரே சரிப்படுத்துவார். கண்ணுக்கு மை சரியாக இட்டுக்கொள்ளாவிட்டாலும் கோபப்படுவார். இதனால்தான் ஒப்பனை மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

        வெளியூர் சென்று வரும்போதெல்லாம் சந்தைக்கு வந்திருக்கும் புதிய அலங்காரப் பொருள்களை வாங்கி வந்திடுவார். பிரபலமான திரைப்படங்களில் இருக்கும் ஆடை வடிவமைப்பை போலவே வடிவமைத்து கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு வருவார். ‘பாபி’ படத்தில் வரும் ஸ்கர்ட் அப்போது ரொம்ப பிரபலம். மும்பை நண்பர்களிடம் சொல்லி அதே மாதியான ஸ்கர்ட் வாங்கித் தந்தார்.

        இதனால் அலங்காரம் மீது ஆர்வம் வைத்தேன். அது இன்று வரை தொடர்கிறது. எனக்கு அப்பா வைத்த பெயர் சுமதி. இந்த பெயருக்கு இரு அர்த்தம் உண்டு. சுத்தமான மதி (நிலவு), சுத்தமான மதி (அறிவு) . இந்த இரண்டுக்கும் தக்கபடி என்னை அர்த்தப் படுத்தினார் அப்பா..’’ எனச்சொல்லி சிரித்த தமிழச்சி, தாயுமானவரை பற்றி குறிப்பிடவேண்டிய மிக முக்கியமானது அவர் எனக்காக நேரம் ஒதுக்குவதுதான் என்கிறார்.

        “ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதெல்லாம் முக்கியமில்ல. அந்த குழந்தைக்கான நேரச் செலவிடல்தான் முக்கியம். பொது வாழ்க்கையில் இருந்தாலும் அப்பா எனக்கான நேரத்தை ஒதுக்கிவிடுவார். நான் எங்கே நாடகத்தில் நடித்தாலும் அங்கே வந்து விடுவார். சின்ன நடன அரங்கேற்றம் என்றாலும் தவறாமல் வந்துடுவார். அரசியல் பணி காரணமா வர முடியாவிட்டால் வருத்தம் தெரிவிப்பார். என்னை சமாதானப் படுத்திவிடுவார்.

            ராஜ ராஜ சோழன் நாடகத்தில் நான் ராஜ ராஜனாக நடித்தேன். அப்பாவால் அந்நாடகத்துக்கு வரமுடியாத சூழ்நிலை. அந்த வயதில் அதை புரிந்து கொள்ளாத நான் நாடகம் முடிந்து கோபமாக வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தால், ராஜ ராஜ சோழன் மாதிரியே பெரிய மீசை வைத்துக் கொண்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் அப்பா.. கோபமெல்லாம் போய் சிரித்துவிட்டேன்.

        விடுதியில் தங்கியிருந்த நாட்களில் வாரம் ஒருமுறை எனக்கு கடிதம் எழுதுவார். எனக்கு மட்டுமல்லாமல் என் தோழிகளுக்கும் கடிதம் எழுதி நலம் விசாரிப்பார். அவர் அரசியல் நிமித்தமாக கொரியாவில் இருந்த போது கொரியாவின் நெல் நாகரிகம் குறித்து நான் கடிதம் எழுதியிருந்தேன். அங்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் நான் எழுயதை வைத்து பேசி பாராட்டு பெற்றதாக கடிதம் எழுதினார். தந்தை மிசாவில் இருந்த போதுதான் எனக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

        எனக்காக சின்ன சின்ன விஷயத்துகெல்லாம் நேரம் ஒதுக்க முடிந்த அவரால் என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில்  கலந்து கொள்ளமுடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டன. 

        எனது எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதெல்லாம் அவர் சிறையில் இருந்திருக்கிறார். பருவம் எய்திய போது அவர் மிசாவில் இருந்தார். திருமணத்தின் போது சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் சிறையில் இருந்ததால் தாலி கட்டும் நேரம் பரோலில் வந்தார். வளைகாப்பு செய்யும் போதும் வரமுடியாத சூழ்நிலை. அதனால் வருத்தப்பட்டவர், உன் தலை பிரசவத்திற்கு எப்படியாவது அருகில் இருப்பேன் என்று உறுதிமொழி தந்தார். அதே மாதிரி உடனிருந்தார்’’ என்ற தமிழச்சி எனக்கு தெரியாமல் அப்பாவின் வாழ்க்கையில் எந்த ரகசியமும் இல்லை. அதே போல்தான் அப்பாவுக்கு தெரியாமல் என் வாழ்க்கையில் எந்த ரகசியமும் இல்லை என்றார்.

        “ கல்லூரி வாழ்க்கை, காதல் வாழ்க்கை என்று என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அப்பா. அப்பாவும், அம்மாவும் ஒரே பள்ளியில் ஆசிரியர்கள். அம்மா சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம்.  ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நடனம், பாட்டு என்று எல்லாவற்றிலும் அசத்தும் அம்மா ரெட்டை ஜடையில் வருவதை பார்த்து சரோஜாதேவி என்று கமெண்ட் அடிப்பாராம் அப்பா. அம்மா வீட்டினரை சம்மதிக்க வைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார் அப்பா. ஆனாலும் பிரயோசனம் இல்லாததால் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டு பாளையம்பட்டியில் வசித்திருக்கிறாங்க. .அப்பா, தனது அத்தைப் பெண் குஞ்சரத்தை முதல் திருமணம் செய்து கொண்டார். பெரியம்மாவுக்கு பிறந்த பானுமதி அக்கா இப்போது உயிருடன் இல்லை. இருந்த ஒரு சகோதரியையும் இழந்துவிட்டேன்..

        திருமணமான புதிதில் .சென்னை அண்ணாநகர் பெல்லி ஏரியாவில் குடியிருந்தேன். அது அவ்வளவாக வசதியில்லாத ஏரியா. அப்பாவிடம் புலம்பியபோது வாழ்க்கை என்பது வசதிகளில் இல்லை. நானும் அம்மாவும் எப்படியெல்லாம் கஸ்டப்படிருக்கிறோம் தெரியுமா. அதையெல்லாம் புரிந்து கொள்’ன்னு சொன்னார்.. பெல்லி ஏரியாவிலிருந்து கொஞ்சம் முன்னேறி ப்ளூ ஸ்டார் ஏரியாவுக்கு வந்தேன். அந்த வீட்டில் செம்பருத்தி செடி வைப்பதற்கு வசதி இருந்தது. ஊரில் மரம், செடிகளுடன் ஆடு, மாடுகளுடன் இருந்த எனக்கு... ’செமத்தி’ என்று என்னை அழைக்கும் கிராமத்து சனங்களை விட்டு பிரிந்து வந்த எனக்கு அந்த செம்பருத்தி செடிதான் ஆறுதலாக இருந்தது.

        அந்த வீட்டுக்கு வந்திருந்த அப்பா செம்பருத்தி செடியைப் பார்த்து, நீதான் என் சுமாஅம்மாவை பார்த்துக்கிறியா என்றார். அப்பா என்னை சுமாம்மான்னு கூப்பிடுவார். சில சமயங்களில் தங்கச்சி என்று கூப்பிடுவார். என் ஊர் பக்கங்களில் மகளை தங்கச்சி என்று கூப்பிடும் வழக்கம் இருக்கு.

        என் திருமணம் பற்றிய முடிவை அப்பாவிடமே விட்டு விட்டேன். நல்ல பையன் என்று போட்டோவை காட்டினார். நேரில் எப்போது பார்க்கிறாய் என்றார். அது தேவையில்லை. பார்த்து பார்த்து வளர்க்கறீங்க. . எனது பெஸ்ட் திங்ஸ் எல்லாமே நீங்க கொடுத்ததுதான். இதுவும் பெஸ்ட்டா தான்  இருக்கும். அதனால பார்க்க அவசியமில்லைன்னு சொல்லிட்டேன். என் கணவரும் என்னை நேரில் பார்க்கனும் என்று நினைக்கவில்லை. அதற்கு காரணம் அவர் என் அப்பா மேல் வைத்திருந்த மரியாதை. அப்பாவும் அவரை மகனைப் போலவே பாவிப்பார்’’ என்ற தமிழச்சி, படிப்புக்கும், வேலைக்கு போனதுக்கும் காரணம்.... அவரவர் சொந்தக் காலில் நிற்கணும். அதிலும் பெண்கள் அடுத்தவர்களை நம்பி இருக்கக் கூடாது என்று தந்தை சொன்னதால் தான் வேலைக்கு சென்றிருக்கிறார்.

        இப்படி தனது வாழ்க்கையின் எல்லாவற்றுக்கும் காரணமான தந்தை காலமாகிவிட்டாரே என்பதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை தமிழச்சியால்.

        “.கல்லூரிக்காலத்தில் மஞ்சள் காமாலை நோய் வந்து அவதிப்பட்டேன். ஒரு மாதம் பத்தியம் இருந்தேன். அந்த ஒரு மாதம் அப்பாவும் என்னோடு பத்தியம் இருந்தார். வெளியே செல்லும் போது பத்திய சாப்பாட்டை எடுத்துக்கிட்டுதான் போவார். அப்படிப்பட்ட அப்பாவைப் பிரிந்து எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.

        விடுதியில் தங்கியிருந்த நான் விடுமுறையின் போதுதான் ஊருக்கு வருவேன். அது மாதிரியான சந்தர்ப்பங்களிலும் பிரிந்திருக்கும் நிலை வரக்கூடாது என்பதற்குத்தான் தனித்தனி படுக்கை அறை கட்டாமல் இருந்தார் அப்பா.. எல்லோரும் ஒரே அறையில்தான் படுத்திருப்போம். பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் முடிந்து வேலை நிமித்தமாகவும் திருமண வாழ்க்கை நிமித்தமாகவும் நான் வெளியூரில் இருந்துவிட்டு ஊருக்கு வரும்போதும் ஒன்றாகத்தான் படுத்திருப்போம். எனக்காக படுக்கை அறை கூட கட்டாமல் இருந்த அப்பாவைப் பிரிந்து எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.

        கணவர் (சந்திரசேகர் ஐ.பி.எஸ்.) இரவுப்பணி காரணமா வெளியே போய்விடுவதால் இரவுகளில் நான் தனியாக தூங்க பயப்படுவேன்னு அமைச்சர் இல்லத்திலிருந்து தினமும் இரவு வந்து எனக்கு துணையாக தங்கிவிட்டு காலையில் கணவர் வந்ததும்தான் அப்பா போவார். ஒவ்வொரு நாள் தூங்கப்போகும் போதும் இது ஞாபகத்துக்கு வந்துடுது. என்னால் அழாமல் இருக்க முடியல.

        பார் மகளே படத்தின், ”அவள் எனக்கா மகளானால் நான் அவளுக்கே மகளானேன்” என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் அப்பாவே பாடுவது மாதிரி இருக்கு.

        ராஜ பாளையத்தில் சாதிக்கலவரம் என்பதால் சென்னையில் என் வீட்டில் இருந்த அப்பா ஊருக்கு கிளம்பினார். ஊருக்கு போகும் போது என்னிடம், வெளியே போகும்போது பார்த்து பத்திரமா போய்ட்டு வான்னு சொல்லிட்டுப் போனார். பதிலுக்கு நானும் பார்த்து பத்திரமா போங்கப் பான்னு சொன்னேன். அப்பா நிரந்தரமா போறதுக்குத்தான்னு அப்போ தெரியாம போச்சு. அடுத்த நாளில் அப்பா இறந்து விட்டதாக தகவல் வந்தது. யாரும் எதிர்பாராத இயற்கை மரணம். நான் ஊர் போய்ச் சேர்வதற்குள் அப்பாவை குளிப்பாட்டி அலங்கரித்து அஞ்சலி செலுத்துவதற்காக கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து மாலை போட்டு வைத்திருந்தார்கள். அதனால் கடைசி நேரத்தில் அப்பாவை கட்டிப்பிடித்து அழக்கூட முடியவில்லை.

        அது ஏன் என்றே தெரியவில்லை. என் வீட்டில் வளர்த்த நாய்க்கெல்லாம் மணி என்றே பெயர் வைத்தார் அப்பா. கடைசியாக வளர்த்த மணி, என்னை விட அப்பா மீது பாசம் வைத்திருந்திருக்கிறது. அப்பா இறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது.

        அப்பா சிறையில் இருக்கும் போதெல்லாம் பார்க்க முடியவில்லையே என்று கடிதங்களில் அழுவேன். என்னை பார்க்க முடியாம மனசுக்கு கஸ்டமாக இருக்கும் போதெல்லாம் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படி. உன்னை தேற்றிக் கொள்ள முடியும் என்றார். அது போலவே செய்தேன். அப்போதெல்லாம் என்னை தேற்றிக் கொள்ள முடிந்தது. 
   
    ஆனால் இப்போது நெஞ்சுக்கு நீதியை எத்தனையோ முறை படித்து பார்க்கிறேன். என்னால் தேற்றிக் கொள்ளமுடியவில்லை. சிறையில் இருக்கும் அப்பாவை விரைவில் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அப்போது அது முடிந்தது. இனி பார்க்கவே முடியாது என்ற தெரிந்து விட்டதால் இப்போது முடியவில்லை....’’என்றவர் சிறிது இடைவெளி விட்டார். அந்த காலியிடத்தை மவுனம் பூர்த்தி செய்தது.

  “அப்பாவை புன்னகை மன்னர் என்று சொல்வார்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். இங்கே உள்ள போட்டோவையெல்லாம் பாருங்க..’’ என்று சொல்லிவிட்டு தமிழச்சியும் தனது பார்வையை சுழல விட்டார். கடைசியாக ஒரு போட்டோவின் மீது பார்வையை நங்கூரமிட்டார்.

அந்த புன்னகை மன்னரின் சிரிப்பு என்ன செய்திருக்கும். தமிழச்சியின் கண்களில் கண்ணீர் முட்டியது.

எழுத்தாக்கம் : கதிரவன்
படங்கள் : எஸ்.பி.சுந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(14)
Name : ஓவியா Date & Time : 12/10/2008 5:07:22 PM
-----------------------------------------------------------------------------------------------------
அமரர் தங்கபாண்டியன் தந்தையர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்திருக்கிறார். உருக்கமான கட்டுரை இது.
-----------------------------------------------------------------------------------------------------
Name : samy Date & Time : 12/1/2008 10:31:23 PM
-----------------------------------------------------------------------------------------------------
தங்கபான்டியனுக்கு ஒரு தமிழச்சிபோல்/ எனக்கு ஒரு தமிழச்சி வேன்டும் இரைவா'
-----------------------------------------------------------------------------------------------------
Name : labamsivasamy Date & Time : 11/20/2008 11:11:00 AM
-----------------------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு மகளைப் பெற என்ன தவம் செய்தாரோ தங்கப்பாண்டியன்.. அருவியின் வீழ்ச்சியாய் அன்பின் அடையாளங்களைக் கொட்டிய தமிழச்சியின் பாசத்திற்கு என் தலைசாய்த்த வணக்கங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
Name : k.venkatesan Date & Time : 11/19/2008 9:27:28 AM
-----------------------------------------------------------------------------------------------------
MY NAME IS K.VENKATESAN FROM GULF SPIC-KUWAIT (A BRANCH OF SPIC COMPANY CHENNA-TUTICORIN)ALREADY I KNOW HER VERY,VERY,VERY WELL.SHE ALSO MY DISTRICT AND HER MOTHER ALSO.MY NATIVE PLACE IS E.KUMARALINGA PURAM,NADUVAPATTI-POST,SATTUR-TAULK,VIRUDHUNAGAR-DISTRICT.SHE IS MALLANKINARU.SCHOOL EDUCATION MINISTERR HON'BLE MR.THANGAM THENNARASU ALSO I KNOE VERY,VERY,VERY WELL.I AM ALSO VERY INTERETING IN POLITICS.HE ALSO WORKED IN SPIC COMPANY IN CHENNAI(10 YEARS).SHE IS CLOSE FRIEND TO MRS KANIMOLI M.P(RAJYA SABHA).SHE FATHER ALSO I KNOW VERY WELL.SO WHEN I WILL COME TO NATIVE PLACE I WILL MEET THEM.I THING SHE IS NEXT M.P(SIVAKASI CONSTITUANCY).THIS IS CONFORM.MINISTER IS VEY DISCIPLINE PERSON.I LIKE HIM.ALREADY I THOUGHT MANY TIMES SEND TO THE MAIL TO HON'BLE MINISTER BUT I DID NOT SEND BECAUSE HE IS MINISTER.I AM VERY,VERY INTERESTING IN POLITICS.I WILL WAIT FOR HIS AND HER MAIL.PLEASE CAN YOU TALL WITH MINISTER MY DEAR SISTER MRS TAMILLASSI THANGAPANDIYAN.ALREADY I KNOW VERY WELL ABOUT HER
-----------------------------------------------------------------------------------------------------
Name : thamizh Date & Time : 11/16/2008 10:10:53 PM
-----------------------------------------------------------------------------------------------------
கவிஞர் தமிழச்சி உணர்வுகள் சிறபாக தான் இருக்கிறது நடுத்தர மக்களின் பூர்ஸ்வா உளவியல். தமிழச்சியிடம் கேட்கிறேன் "உங்களின் உணர்வுகள் போல் வெளிப்படுத்த எத்தனை பாட்டாளி பெண்களுக்கு வைப்பு அமைந்து இருக்கிறது. உங்கள் இடிபஸ் உணர்வுகளை நிறுத்தி விட்டு மக்களுக்கான படைப்பை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் தோழி,.அன்பு தோழி குழலி தோழர் சல்மான் சொன்னதில் என்ன தவறு? பார்பனியத்தின் வேர் என்பது மையா புள்ளியை விட்டு விலகி போவது தானே!உணர்ச்சி வசபடுவது நிறுத்துங்கள் தோழி
-----------------------------------------------------------------------------------------------------
Name : vee.ramasamy Date & Time : 11/16/2008 12:26:30 AM
-----------------------------------------------------------------------------------------------------
thamilachien niraiya kavithikal appavai pattiya erukum karanam epothuthan purikirathu.tamil kaltureril appa makal pasam oru kaviyathanmai kondirupathu entha mannin unnathangalil onru.
-----------------------------------------------------------------------------------------------------
Name : narayanasamy Date & Time : 11/15/2008 9:08:33 AM
-----------------------------------------------------------------------------------------------------
தந்தை மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதற்கு இதைவிட வேறு உதார‌ண‌ம் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------
Name : kuzhali Date & Time : 11/14/2008 6:05:44 PM
-----------------------------------------------------------------------------------------------------
சல்மான் ஏன் இத்தனை வெறுப்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தமிழச்சி போன்றவர்களையே குறை சொல்கிறார் என்றால் அவருக்கு யார் மீதுதான் நம்பிக்கை வரும். அப்பா=மகள் பாசத்தை பற்றி சொல்வதில் எங்கே வந்தது பிராமணத்துவம்? எதற்கெடுத்தாலும் குறை சொல்வதே சிலரின் போக்கு. இவரும் அவர்களில் ஒருவராக இருப்பார் என்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை மிக அழகாக தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் தமிழச்சி.
-----------------------------------------------------------------------------------------------------
Name : salman.ramnad Date & Time : 11/14/2008 3:24:02 PM
-----------------------------------------------------------------------------------------------------
thamizhachikku kidaitha appa mathiri yarukkum kidaikkathuthan.athe nerathil avar appa,avar muthal mahalukku thayumanavaraha irunthara?thiravida,pahutharivu sinthanai, sinna vayathilaye than appaval vanthu vittathaha sollum sumathi,thannudaya ilamai,azhaghu patri poorithu pesuvathu pahutharivukkum ethiranathu.mettukudithana parpana sinthanaiyahum.eppadiyo pizhaippu odinal sari.thamzhachi ponravarhal tamizh murpokku penkalukkana pimbam alla. perum thunbam.nantri.
-----------------------------------------------------------------------------------------------------
Name : V.CHANDRA Date & Time : 11/14/2008 3:24:02 PM
-----------------------------------------------------------------------------------------------------
HI AKKA HOW ARE U?
-----------------------------------------------------------------------------------------------------
Name : akila Date & Time : 11/13/2008 11:50:39 AM
-----------------------------------------------------------------------------------------------------
ungalin life story super.en story pola ullathu.en tnthai iranthu 9 year akirthu.enakum daily en anthai gambagama.akila.australiya
-----------------------------------------------------------------------------------------------------
Name : anis Date & Time : 11/12/2008 2:10:40 PM
-----------------------------------------------------------------------------------------------------
நானும் அப்பாவும் எப்போதும் எலியும் பூனையுமாகத்தான் இருப்போம். தமிழச்சியையும் அவர் அப்பாவைப் பற்றியும் படித்த பிறகு என்னவோ போல் இருக்கு. அப்பாவுக்கு கடிதம் எழுதலாம் என்றிருக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------
Name : janaki Date & Time : 11/12/2008 2:10:40 PM
-----------------------------------------------------------------------------------------------------
அப்பா இறந்த துக்கத்தில் நான்கு மாதமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருக்கிறார் தமிழச்சி. இப்படியும் அப்பா, மகள் பாசமா...புல்லரிக்குதப்பா.
-----------------------------------------------------------------------------------------------------
Name : Ranjani Date & Time : 11/12/2008 8:24:16 AM
-----------------------------------------------------------------------------------------------------
த‌ன் அப்பா மீதான பாசத்தை மிக ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழச்சி. எல்லோருக்கும் வாய்க்குமா இந்த உறவு என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டார். தாயுமானவர் பகுதிக்கு சரியான சாய்ஸ்.
-----------------------------------------------------------------------------------------------------