அண்மைச் செய்திகள்
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு ||
Logo




          பெட்ரோமாக்ஸ்- விஞ்ஞான வெளிச்சத்தில் சோபை இழந்துபோன ஒரு வெளிச்சப் புள்ளி. மெட்ரோ ரயிலின் வேகத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி நிலையத்தில் நின்றுகொண்டு இருக்கும் புகைவண்டி இன்ஜின்கள்போல, எங்காவது ஓரிடத்தில் பயன்பாடு இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கிறது பெட்ரோமாக்ஸ் லைட். அதை எரிய வைக்கும் மேண்டில் விற்பனையிலேயே கிடையாது. சமூகத்தின் பெரும் வேக வளர்ச்சியில் மியூசியத் துக்குள் கிடக்கும் எத்தனையோ சாதனங்களில் சுப்பிரமணியின் வீட்டுக்கு கஞ்சி ஊற்றிய பெட்ரோமாக்ஸும் ஒன்று.

அரிக்கேன் விளக்கில் ஆயுளை முடித்துக் கொள்ளும் வீடுகளில் நல்லது கெட்டதுகளுக்கு வெளிச்சம் வீசி மகிழ்விக்கும் பெட்ரோமாக்ஸ். பத்து பெட்ரோமாக்ஸ் விளக்குகளையும் ஐந்து சைக்கிள்களையும் வாடகைக்கு விடுவதில்தான் சுப்பிரமணியின் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது.

அந்த வருமானத்தில் மூத்தவள் பூரணிக்கும் இளையவள் சந்திராவுக்கும் திருமணம் செய்து வைத்தார் சுப்பிரமணி. சந்திரா இளையவளாக இருந்தாலும் ஏழு மாதத்தில் வளைகாப்புக்குத் தயாராக நின்றாள்.



மாப்பிள்ளையை, ""எல்லாரும் இந்த ஒரு விஷயத்திலே படு ஸ்பீடுதான்'' என்று உள்ளூர் நக்கல்கள் ஓரம்கட்டும்.

""அப்புறம் எதுக்கு காசு செலவு பண்ணி கல்யாணம் பண்றது?'' என்று மாப்பிள்ளை சவடால் பேசியபடி சந்திரா வைப் பார்ப்பார். முதல் ராத்திரியில் இருந்து ஒவ்வொரு ராத்திரியும் அவளின் வெட்கம், படர்ந்த கண்களில் விரைந்து ஓடும். இந்த கவிச்சிப் பேச்செல்லாம் புரிந்தும் புரியாமல் கேட்டுக் கொண்டிருக்கும் தங்கவேலு, பத்தாம் வகுப்புக்குப் போயிருந்தான். பெட்ரோமாக்ஸ் காரருக்கு சுப்பிரமணி என்று பெயர் இருந்தும், தன் மகனுக்கு இவர் தங்கவேலு என்று பெயர் வைத்திருந்தாலும், ஊர் என்னமோ பெரிய பெட்ரோமாக்ஸ், சின்ன பெட்ரோமாக்ஸ் என்றே அவர்களை அழைத்தது. ஒவ்வொரு முறையும் இந்தப் பெயர் சொல்லி அழைக்கும்போது, கைபட்டு நொறுங்கிப்போன மேண்டிலாக மாறிவிடும் தங்கவேலுவின் முகம்.

அந்த சின்ன பெட்ரோமாக்ஸ்தான் சுப்பிரமணியத்தின் ஒரே ஆண்பிள்ளை தங்கவேலு. பத்தாம் வகுப்பில் படுசுட்டி என்று பெயர் வாங்கியவன்.

காலையில் எழுந்ததும் சைக்கிளை எல்லாம் துடைத்து விட்டு ஓடினால், தண்ணீர் குடத்தைக் கொடுத்து வரிசையில் நிற்கச் சொல்லுவாள் அம்மா.  வரிசையில் நிற்பதி லேயே அவனுக்கு சந்தோஷம், மரக்கடைக் காரர் மகள் கமலாவும் நிற்பதுதான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கமலாவும் அவள் அம்மாவும் சினிமா பார்ப்பதில் இடதுசாரிகள். மூன்று நாட்களுக்கு ஒரு படம் மாற்றும் கொட்டகையில், படம் விடாமல் பார்த்து தீவிர விமர்சனங்கள் பண்ணும் உள்ளூர் விமர்சனக் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்கள். படத்துக்குப் போவதற்குள் சென்சார் சர்ட்டிபிகேட் போட்டுவிட்டால், அவர்களுக்கு ஏற்படும் சோகம் குறைய டைட்டில் முடிய வேண்டும்.

பைப் லைனில் நின்றபடி முதல் நாள் பார்த்த சினிமாவை விமர்சனத்தோடு சொல்வாள் கமலா. படம் பார்க்க முடியாத விசனத்தோடு கேட்டுக்கொண்டு இருப்பான் தங்கவேலு. தலையில் அம்மா வைக்கும் கொட்டில்தான் குடம் நிறைந்ததே தெரியும். கால்வாசிப் படம்தான் முடிந்திருக்கும். பள்ளிக்கூடம் புறப்பட்டு வந்து தெருமுனையில் நிற்பான். மீதிக்கதையை பள்ளிக் கூடம் போகும்வரை அவிழ்த்துவிடுவாள் கமலா.

பள்ளி விட்டதும் ஓடிவந்து நிற்பான். ஜன்னல் வழியே அவள் பாடப் புத்தகங்களை எடுத்து வைத்த படியே ""இரு இரு வந்துட்டேன்'' என்று ஜாடை பண்ணுவாள். தங்கவேலுவுக்கு அந்தக் கவலை இல்லை. கடைசி பீரியடிலேயே அவன் மூட்டையைக் கட்டிவிடுவான். பள்ளிக்கூடத்திலிருந்து வீடுவரை மீதிப் படக்கதையைச் சொல்லுவாள். மறந்துபோன காட்சிகளுக்கு புது காட்சிகள் எழுதி இவள் ஒரு திரைக்கதை அமைப்பாள். சில நேரங்களில் டப்பாவுக்குள் தூங்கும் ரீல்களைவிட இவள் விடும் ரீல் சூப்பராக இருக்கும். இந்தப் படம் எப்படி ஓடாமல் போனது என்று புரியாமல் கதையைக் கேட்பான் தங்கேலு.

""டேய் எழவுக்கு போனவனே, உங்கப்பன் காணமுன்னு கத்திக்கிட்டு இருக்காரு. நீ இங்க முக்குல நின்னு கதை பேசிட்டு இருக்கியே'' என்று செல்லக்கோபத்தோடு பள்ளிக்கூடப் பையை அம்மா வாங்கிக்கொள்ள, கடையை நோக்கி ஓடுவான்.

""ஏனுங்க அத்தை திட்டுறீங்க. தங்கவேலு தங்கமான பையன்.''

""ஆமாண்டி கமலா. நீதான் மெச்சோணும்.''

இதற்கிடையில் கடைக்கு ஓடிப்போய் மூச்சிறைக்க நிற்பான்.

""பள்ளிக்கூடம் விட்டதும் நேரா வீட்டுக்கு வந்து பழகுடா. லைட்ட பூரா விபூதி போட்டு தொடைச்சு பளபளன்னு வை. இன்னைக்கு கரண்டுபோகுமாட்ட இருக்கு'' என்றபடி குளக்கரை நோக்கி நடந்தார் அப்பா.

பெட்ரோமாக்ஸ்களைத் துடைக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு பட்டையாக விபூதி போட்டுத் துடைத்து மாட்டி, பளபளப்பாக எடுத்து தன்னுடைய திறமையைத் தானே சரிபார்த்து கம்பித் தூக்கில் மாட்டினான். கடைக்குப்போய் மளிகை சாமானம் வாங்கிக்கொண்டு வந்த கமலா ஓடிவந்து தங்கவேலுவிடம் ஒரு பேப்பர் சுத்திய மிட்டாயைக் கொடுத்து விட்டு, ""இன்னைக்கு புதுப் படம் மாத்த      றாங்க'' என்று சொன்னபடி ஓடினாள்.

கடையில் அமர்ந்திருந்த வெட்டி ஆபிசர்களிடமிருந்து அவள் குறித்த உரையாடல்கள் பெருமூச்சோடு பறந்தன.

""மரக்கடைக்காரர் பொண்ணப் பாத்தியா, ஒரு மார்க்கமா இருக்கா.''

""நிக்கும்போதவிட ஓடும்போது சூப்பர்.''

""டேய், எலுமிச்சம் பழத்துக்கே ஏண்டா எச்சி விடறே? இன்னும் ஆரஞ்சு, மாம்பழம்னு எத்தன டெவலப்மெண்டு இருக்குது.''

தங்கவேலுக்கு மண்டை குழம்பியது.

""அவகிட்ட ஏது மச்சா எலுமிச்சம்பழம். கருவப்புள்ளையும் கொத்தமல்லியும்தானே வாங்கிட்டுப் போறா.''

வில்லேஜ் வெட்டி ஆபிசர்கள் கோரசாக சிரித்தார்கள்.

நமக்குத் தெரியவில்லையே என்று எலுமிச்சம் பழம் 

அவன் மனசை உறுத்தியது.

சினிமா கொட்டகைக்காரர் முகப்புத் தட்டியில், புதுப்பட போஸ்டரை ஒட்டிவிட்டு, தங்கவேலுவிடம் தட்டி பாஸ் கொடுத்துவிட்டுப் போனார். இரண்டு பேருக்கான இலவச அனுமதிச் சீட்டு அது. அம்மாவைக் கெஞ்சிக் கூத்தாடி யாவது அழைத்துப் போகவேண்டும் என முடிவெடுத்தான்.

மளமளவென லைட்டுகளை பளபளப்பாக்கிக் கொண்டிருந்தான். 

கடைக்கு வந்த அப்பா, ""டேய் தங்கவேலா, இன்னைக்கு கரண்டு கட்டாமா. சூப்ரவைசரு  சொன்னாரு. சினிமா கொட்டகைக்கு முன்னாடி நாம லைட்டு கொடுக்கற கடைகளுக்கு பத்திரமா கொண்டு போயி கொடுத்துட்டு வா.''

தியேட்டரில் கடைசிப் பாட்டும் போட்டு விட்டார்கள்.

கமலாவும் அவுங்க அம்மாவும் தியேட்டர் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார்கள். வண்ணப் பாவாடை சட்டையில் சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா எல்லாரும் கமலாவிடம் கலந்து தெரிந்தார்கள். இரண்டு பெட்ரோமாக்ஸுகளை  எடுத்துக்கொண்டு ஓடினான். 

அவளைப் பார்த்து சிரித்தான். அந்த வண்ணச் சட்டையில் எலுமிச்சம்பழங் களை அவள் ஒளித்து வைத்திருந்ததுஅவனுக்குப் புரிந்தது. மனசு பட்டென்று பலூன் மாதிரி வெடித்துச் சிதறியது. முதல்முறையாக அவள் முகத்தை பார்த்துப் பேசக் கூச்சப்பட்டான். வேகமான அவள் நடையில் எலுமிச்சம் பழங்கள் லேசாகக் குலுங்கின.

பார்க்கவும் பிடித்திருந்தது. பதட்ட மாகவும் இருந்தது. சினிமா கொட்டகை யை நெருங்கினார்கள். கரண்டு கட்டா னது. ஓடிப்போய் லைட்டைக் கொடுத் தான். எல்லாக் கடைகளுக்கும் ஓடி ஓடி எடுத்துவந்து கொடுத்தான். காராசேவ் கடைக்கு முன்னால் அமர்ந்து அப்பாக் கார சுப்பிரமணி பம்ப்பு அடித்துப் பற்றவைத்துக் கொடுக்க ஒவ்வொரு கடைக்காக கொண்டுபோய் வெளிச்சம் ஏற்றினான். கரண்ட்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் நிற்கும் கூட்டத்தில் அம்மாவோடு நின்றாள் கமலா. அந்த மங்கலான விளக்கொளியில் அவள் மேனியில் மலர்ந்திருந்த புதிய மேடுகளை கள்ளத்தனமாகப் பார்த்தபடி கடைகடை யாகப் போய்வந்து கொண்டு இருந்தான் தங்கவேலு. யாருக்கும் தெரியாமல் ஒரு காராசேவ் பொட்டலத்தை அவன் கைக்கு நகர்த்தினாள் கமலா.

லைட்டை எல்லாம் எரியவிட்டுவிட்டு தனது தாட்டி யான உடம்பைத் தூக்க முடியாமல் கையூனிய சுப்பிரமணி ""அப்பா முருகா, ஞானபண்டிதா...'' என்று எழ, காராசேவ் கடைக்காரர்,

""யோவ் பெட்ரோமாக்ஸ், நீ எந்திரிக்கக்கூட சாமி உன் குண்டியப் புடிச்சு தூக்கணுமா. அப்புறம் முக்கியமான வேலைக்கு சாமியக் கூப்பிட்டாக்கூட இவனுக்கு வேற வேலை இல்லன்னு  வரமாட்டாரு'' என்றார். எல்லாரும் சிரித்தார்கள். கமலாவின் சிரிப்பைவிட எலுமிச்சம் பழங்கள் சிரித்தது இவனுக்குப் பிடித்திருந்தது.

பள்ளிக்கூடமும் பாடங்களும் தேர்வுகளும் அவனை படாதபாடு படுத்தின. பற்றாக்குறைக்கு அப்பா "லைட்டை துடை- சைக்கிளை துடை- பளபளன்னு இருக்க வேண்டாமா மூதேவி' என்று படுத்தி எடுத்தார். 

அம்மா ரேசங்கடை கியூவுக்கு விரட்டிக்கொண்டு இருந்தாள். ஊர்ப் பெரிசுகள் சின்ன பெட்ரோமாக்ஸ் என நாமகரணம் சூட்டி எழவெடுத்தன. இறுதித் தேர்வை எழுதி இருந்தான்.

""டேய் தங்கவேலா, மரக்கடை மாமன் வீட்டுக்கு ஐந்து பெட்ரோமாக்ஸ் வேணுமா. எடுத்துட்டு ஓடு.'' ஏன் எதற்கு என கேள்வி கேட்காமல் ஓடினான். அங்கே வாழை இலைத் தோரணங்கள். கமலாவை நாற்காலியில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சம் அவளுடைய பட்டாடைகளில் பட்டு தேவதை மாதிரி தெரிந்தாள். அவள் கன்னத்தில் சந்தனக் கீற்றைத் தடவி, வெற்றிலை பாக்கில் மொய் பணத்தை வைத்து அவளிடம் கொடுத்த படி பெண்கள் நகர்ந்தார்கள். அவள் உதடுகள் நடுங்கியதை முதல்முறையாகப் பார்த்தான். மொய் வைத்துவிட்டு வெளியே வந்து அம்மாவைக் கேட்டான்.

""என்ன விசேஷம்?''

""கமலா வயசுக்கு வந்துட்டாயில்ல.''

""அப்படின்னா?''

""போடா முட்டாப்பயலே. அவ பெரியமனுஷி ஆயிட்டா.''

""டேய் சின்ன பெட்ரோமாக்ஸ், உள்ள வந்து கேஸ் அடீடா'' என்று ஒரு குரல் எழ...

அவள் அமர்ந்திருந்ததற்கு அருகில் இருந்த லைட்டுக்கு கேஸ் அடித்தான். வெளிச்சம் அவளைச் சூழ்ந்தது. மின்னி னாள்.

எலுமிச்சம் பழம் ஆரஞ்சுப் பழமாய் உருவெடுத்து இவன் புத்தியைக் கலக்கியது. அழகை ஆராதித்தான். வெளியே திண்ணையில் பச்சை ஓலை கட்டி இருந்தது. மூன்று நாள் அங்குதான் அவள் வாசம். மறுநாள் ஓலையைப் பிரித்துவிட்டு ""கமலா'' என்றான். அவளது கண்கள் மட்டும் அவனைப் பார்த்து மினுமினுத்தது.

""நீ பெரிய மனுஷி ஆயிட்டியா?''

""ஆமா'' என்றபடி ஒரு லட்டை அவனுக்கு நீட்டினாள்.

""பெரிய மனுஷினா என்ன?''

""அது வந்து...''

அப்போது கமலாவின் அம்மா வந்து, ""டேய் தங்கவேலு. இனிமேல் கமலா கிட்ட பேசற வேலை எல்லாம் வச்சுக்காத. ஊருக்குள்ள தப்பாப் பேசுவாங்க'' என்றாள் கறாராக.

மிகப்பெரிய குளம். நீர் நிரம்பினால் கடல்போல் அலைமோதும். கடலையே பார்க்காதவர்களுக்கு அதுதான் கடல். கரைமீது போகும் சாலை. மறு கரையில் குளத்து   நீர் ஓதம் ஊற்றாய்ப் பெருகும். அந்த வண்டல் மண் புதரில் கரைநெடுக தாழம்பூ புதர் மண்டிக் கிடக்கும். புதருக்குள் மலர்ந்து விரிந்து மணம் பரப்பும் தாழம்பூவின் வாசம் மயங்க வைக்கும். கமலா தோழிகளோடு துணி துவைத்து விட்டு வந்தாள். அந்த வாசத்தில் மயங்கிப்போய் நின்றாள். பந்தலில் பூத்த மல்லிகைப்பூ, கொடியில் படர்ந்த ஜாதி மல்லி- இவைகளே அவள் நாசியை மயங்க வைக்கும். கண்ணுக்குத் தெரியாத தாழம்பூ வாசம் அவள் நாசியை அடிமையாக்கி விலங்கு போட்டது.

நீச்சல் தெரியாதவனுக்கு தாமரைப்பூ வசப்படாதது மாதிரி அவள் அவனுக்கு வசப்படாமலேயே இருந்தாள். 

அவளைப் பின்தொடர்வதே அவனுக்குத் தலையாய பணியாக இருந்தது.

""கமலா, ஏன் இங்க நின்னுட்ட''

""தாழம்பூ வாசம் நகர விட மாட்டேங்குது.''

""இவ்ளோதானா'' என்றவன் வேகமாகப் புதரில் இறங்கினான்.

""அடப்பாவி, உள்ள ஏன்டா போறே... பச்சப் பாம்பு இருக்கும்டா!''

""அடியேய், அவனைப் பாம்பு கடிச்ச துன்னா பழி நம்பமேல விழும்'' என்று இடத்தைக் காலி செய்தார்கள் கமலாவின் தோழிகள். கமலாவுக்கு திக்கென்று இருந்தது. அவன் புதருக்குள் மறைந்து போனான். நிறைந்திருந்த குளத்தின் அலைகள் கரைகளில் மோதி "பளக் பளக்' என எழுப்பிய சப்தத்தை விட அவள் இதயம் எழும்பிய சப்தம் பேரிரைச்சலாய் இருந்தது.

தண்ணீர் கரைகளில் மோதுவது இரண்டு ஜடப்பொருட்களின் மோதல். அவர்களின் இதயங்கள் எழுப்பியதோ இரண்டு உயிர்களின் காதல். அவன் பத்திர மாகத் திரும்பி வரவேண்டும் என்பதில் அவளுக்கு பாதி உயிர் போய்விட்டது.

"விழியில் விழுந்து 

இதயம் நுழைந்து 

உயிரில் கலந்த உறவே'

என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய காதல் வரிகளாக அவள் கரையில் நின்றிருந்தாள். விந்தை என்னவென்றால் அவளுக்கு இது காதல்தான் என்று தெரியாது. தாழம்புதரைச் சுற்றிக்கொண்டு கைநிறைய தாழம்பூவுடன் ஓடிவந்தான் தங்கவேலு. அவன் மனம் மாதிரியே மடலுக்குள் மறைந்து கிடந்தது தாழம்பூ.

""ரொம்ப தேங்க்ஸ் தங்கவேலு'' என்று கைகுலுக்கினாள் கமலா. தாழம்பூ புதர் முட்கள் கிழித்த காயங்களுக்கெல்லாம் அந்தக் கை குலுக்கல் "ஆன்டிபயாட்டிக்காக' வேலைசெய்தது.

""நாளைக்கு பூ வச்சுக்குவியா?''

""நிச்சயமா.''

இரவு தூரத்தில் வைத்திருந்த மடல் பிரிக்காத தாழம்பூவைப் பார்த்தபடி அறுபது வாட்ஸ் பல்பில் படித்துக்கொண்டிருந்தாள். ஆந்திராவில் வெட்டி எடுக்கப்பட்டு, பல மன்னர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு, சர்வதேசக் கொள்ளையர்களான ஆங்கிலேயர்களின் மகாராணி கிரீடத்தை அந்த கோஹினூர் வைரம் அலங்கரிக்கின்ற வரலாற்றைப் படித்துக்கொண்டு இருந்தாள். உடனே அவள் கரங்கள் ஒரு கடிதத்தை எடுத்து எழுதியது.

"தாழம்பூ கிரீடம் வைத்ததற்கு நன்றி.'

கடிதம் கை மாறியது. "கிரீடத்தைச் செய்பவன் ஆசாரிதானே. சுமப்பவள் மகாராணி அல்லவா?' பதில் கடிதம் எழுதினான். கடிதம் இப்போதும் கைமாறியது ஆமாம்; கமலாவின் அம்மா கைகளுக்கு. பக்கத்து வீட்டுக்காரி பற்ற வைத்ததில் பொறி பறந்தது. கமலாவின் கன்னங்களில் கை விரல்களின் தடம். நிமிர முடியாத அளவுக்கு முதுகில் வலி.

""அந்த பெட்ரோமாக்ஸ்கார நாய தெருப்பக்கம் பாத்தேன்- நான் கொலகாரியா மாறிடுவேன்!'' அம்மா ஆங்காரமாகக் கூச்சலிட்டாள்.

அம்மாவை கொலைகாரியாகப் பார்க்க மனம் இல்லாத கமலா, தங்கவேலுவுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டாள். ஆனாலும் வகுப்பறையில் ஒரு கடிதம் எழுதி தோழியிடம் கொடுத்தனுப்பினாள்.

"தங்கவேலு, ஊர் உலகம் வருமானத்தை வைத்துத்தான் மனிதனை எடை போடுகிறது. அது உனக்கு இல்லை என்பதைத் தவிர என் அம்மாவுக்கு வேறு குறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஊரில் இருந்தால் சின்ன பெட்ரோமாக்ஸாகவே உன் வாழ்க்கை கழிந்துவிடும். 

உனக்குள் இருக்கும் கனவுகளும் கற்பனைகளும் எனக்குத் தெரியும். நீ உயர்ந்த வாழ்க்கையுடன் இங்கு வருவாய். நமக்கான காலத்தை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் கமலா.'

கடல்காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. 

ஜோடிகளால் நிறைந்திருந்தது கடற்கரை. காந்தி சிலைக்கு அருகில் ஒற்றை மரமாக நின்றிருந்தான் தங்கவேலு. ஊரைவிட்டு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனையோ இயக்குநர்களை இவன் பார்த்துவிட்டான். ஆனால் எந்த இயக்குநரும் இவனைப் பார்க்கவில்லை. ஒலிம்பிக்கில்கூட இடம்பெற்று விடலாம். ஆனால் இந்த திரையுலக மாரத்தானில் கடைசியாகக்கூட வரமுடியவில்லை. இவனைத் தவிர கடற்கரையில் எல்லாருமே சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது தங்கவேலுவுக்கு. விரக்தியான மனதுடன் கடற்கரை கடைவீதியில் நடந்தான். எல்லாக் கடைகளிலும் பெட்ரோமாக்ஸ் லைட்டுகள்.

"இவை இல்லாத உலகமே இல்லையா? அல்லது இவை இல்லாத உலகம் எனக்கு இல்லையா?' என்ற நினைவோடு அவன் நடந்துகொண்டிருக்க, ""தங்கவேலு...''

யாரோ அழைத்த குரல் கேட்டுத் திரும்பினான்.

சொந்த ஊர்க்காரர். பி.டபிள்யூடி சோலையப்பன்.

""அண்ணா, எப்படி இருக்கீங்க?''

""அப்புறம், டேரக்டர் ஆயிட்டியா?''

""கூடிய சீக்கிரம் ஆயிடுவேன்.''

கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்கலாம்னு கேட்டேன். உங்க அப்பா உன்னோட அட்ரஸ் இல்லைன்டாரு. சென்னை வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. அண்ணன வந்து பார்க்கவே இல்ல.''

""எங்கண்ணே, இந்திப் படம் வேலை செய்யறதால சென்னை பக்கம் வரவே முடியறது இல்ல. பெரும்பாலும் பாம்பேலயே இருக்கேன்'' என கதை அளந்தான்.

""கல்யாண மேடையில பாக்கவேண்டிய அண்ணிய கடவீதில காட்டவேண்டியதா போச்சு. இவதாம்பா உன்னோட அண்ணி'' என ஒரு கடைநோக்கி சுட்டிக்காட்ட, தங்கவேலுவும் அந்த திசை பார்த்தான். குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தவர்களுக்கு அப்பால் அந்தக் காட்சி அவன் கண்களில் இடியாய் இறங்கியது. இவன் இறுதியாய் தாவணியில் பார்த்துவிட்டு வந்த கமலா, தாலியும் கழுத்துமாக பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் புடவையில் நின்றுகொண்டு இருந்தாள். இரண்டாவது முறையாக அடித்த சுனாமி, கடற்கரையில் எல்லாரையும் விட்டுவிட்டு அவனை மட்டும் கொண்டுபோனதுபோல் இருந்தது தங்கவேலுவுக்கு. நூற்றுக்கணக்கான பெட்ரோ மாக்ஸ்களுக்கு மத்தியில் தங்கவேலுவுக்கு முகம் கொடுக்க முடியாமல்- ஏன் முகமே இல்லாதவளாக நின்றிருந்தாள் கமலா. காதல் தோல்வி அடையும்போது அது காதலர்களின் இதயங்களை மட்டுமல்ல; முகங்களையும் தின்றுவிடுகிறது. காதலிக்கும்போது மட்டும் அல்ல; தோல்வியிலும் வார்த்தைகள் மௌனித்துவிடுகிறது.

""உங்க அண்ணி மூணு மாசம் முழுகாம இருக்கா. ஊருக்கே வேலையை மாத்திக் கேட்டிருக்கேன். ஊர்ல போயிதான் அப்பனாகறதுன்னு ஒரு முடிவோட இருக்கேன்.''

வறட்சியாக சிரித்தான் தங்கவேலு.

""நேரமிருக்கும்போது வீட்டுக்கு வா'' என்று கூறிவிட்டு முகவரியைத் தராமலே நகர்ந்து சென்றனர். போகும்போது அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை மன்னிப்பா? கோபமா? குற்ற உணர்வா? புரிந்துகொள்ள முடியவில்லை இவனால். நாட்களை மாதங்கள் விழுங்கிக் கொண்டிருந்தன. தோல்விகள் இவனைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பாண்டி பஜார் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர் நண்பன் தேடிவந்தான்.

""உங்க அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லயாம். 

எனக்கும் ஒரு கடுதாசி வந்திருக்கு. தயவு செஞ்சு ஊருக்குப் போ'' என்று சொல்லி இருநூறு ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றான்.

எல்லாவற்றிலும் தோற்றுவிட்ட அவனுக்கு இனி சென்னையில் என்ன வேலை?

கடைதிறந்து பல மாதங்கள் ஆகியிருந்தது. அப்பா பக்கவாதத்தில் பாதி இளைத்துப் படுத்திருந்தார்.

""தங்கவேலு, இதுக்கு மேல் என்னால முடியலடா. இந்த பத்து சைக்கிளும் பதினைஞ்சு பெட்ரோமாக்ஸ் லைட்டும் தான் நம்ம சொத்து. இத வச்சுத்தாண்டா பொழைக்கணும். இனி நீதாண்டா குடும்பத்தப் பாக்கணும்.''

அப்பாவின் கண்ணீர் தோய்ந்த வார்த்தைகள் இவனை உருக்கின. பெட்ரோமாக்ஸ்களை எடுத்து பளபளப்பாகத் துடைத்தான். சைக்கிள்களை எடுத்துத் துடைத்து நிறுத்தி, கடையை ஆரம்பித்தான். எப்போதும் பிறர் தோல்வியில் மகிழும் சமூகம் நக்கல் வார்த்தைகளால் அவன்மீது சேறு பூசியது.

அந்தி கரைந்து இருள் பரவத்தொடங்கிய நேரம். ஐந்து பெட்ரோமாக்ஸ்களுக்கு ஆர்டர் வந்தது. அக்கம்பக்கத்து சிறுவர்களை பிடித்து லைட்டுகளைக் கொடுத்தனுப்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் மேலும் இரண்டு லைட்டு களுக்கு ஆர்டர் வந்தது. அவற்றை எடுத்துக்கொண்டு தானே கிளம்பினான். சாவுக்கு வந்தவர்கள் இங்கும் அங்குமாக நின்று கொண்டிருக்க, கொண்டுபோன பெட்ரோமாக்ஸ்களை திண்ணைமீது வைத்து கேஸ் அடித்துக்கொண்டு இருந்தான்.

""சனிப்பொணம் தனியாப் போகாது. வச்சுக்கிட்டு இருக்காதிங்கப்பா. எத்தன நேரம் ஆனாலும் ராத்திரியே எடுத்துரணும்.''

இவன் காதுகளில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை.

""சொந்த பந்தமெல்லாம் இன்னும் எத்தன சனம் வரணும்?''

""அட வர்றவங்க வரட்டும், எடுத்துடுவோம்.'' வாக்குவாதத்தின் முடிவில் உடல் வெளியே எடுத்துவரப்பட்டு பெஞ்சிலே கிடத்தப்பட்டது.

""ஏ எங்கப்பா பெட்ரோமாக்ஸ்? இங்க கொண்டு வாப்பா. கடைசியா மொகம் பாக்கறவங்க பாப்பாங்கல்ல.''

வேகமாக ஒரு லைட்டை எடுத்துக்கொண்டு அருகே சென்றான் தங்கவேலு.

""எப்பா, லைட்ட கொஞ்சம் மேல தூக்கிக் காட்டுப்பா. மொகம் பாக்கணுமில்ல.''

லைட்டை உயர்த்திப் பிடித்தான் தங்கவேலு. மஞ்சள் பூசப்பட்டு குங்குமம் இடப்பட்டு மங்கலம் குறையாமல் இருந்தது கமலாவின் முகம்.

""இந்தப் பச்சப் புள்ளைய உட்டுப்புட்டுப் போவ எப்படி மனசு வந்துச்சு உனக்கு'' எனக் கதறியது ஒரு பெண் குரல்.

கதறி அழத் தோன்றியது இதயம் வெடித்த தங்கவேலுவுக்கு. ஆனால் எந்த உரிமையில் என்ன உறவில் அழுவது? வெடித்து வந்த அழுகையை அடக்கிக்கொண்டான். கமலாவின் அம்மா இவன் முகத்தைப் பார்த்ததும், 

""அய்யோ தங்கவேலு! கமலா நம்மளையெல்லாம் விட்டுப்புட்டு போயிட்டாளேடா!'' எனக் கட்டிப்பிடித்துக் கதறினாள். அந்த நேரத்தில் கொஞ்சம் அழுதுகொண்டான்.

ஊர்வலம் காடு நோக்கி நடந்தது. கடிதங்கள் பரிமாறிக் கொண்ட பிள்ளையார் கோவில் சந்தைக் கடந்தது. ஊரைக் கடந்து தண்ணீர் வற்றிப் போன குளக்கரையையும் காய்ந்து போன தாழம்புதரையும் தாண்டிக்கொண்டு இருந்தது. இந்தப் புதரில் அவளுக்காக பூமடலைப் பறிக்கையில் ஒரு பாம்பு எகிறிப் பாய்ந்தது. அதை அவளிடம் அன்று மறைத்துவிட்டான். அன்றே கடிபட்டு செத்திருக்கலாமோ என்று தோன்றியது.

சுடுகாட்டை அடைந்துவிட்டார்கள். தூக்கி மேடையில் வைத்தனர்.

""வாய்க்கரிசி போடுறவங்க எல்லாம் போடுங்க.''

எல்லாரும் புறங்கையில் அரிசியை மூன்று முறை தெளித்தார்கள்.

""லைட்டை கிட்ட புடியப்பா.'' லைட்டை முகத்தருகே நீட்டினான். தாழம்பூநிற தளிர்மேனி கறுப்படித்துப்போய்க் கிடந்தது.

""பாக்கறவங்க எல்லாம் பாத்துட்டீங்களா.''

கேட்டுக்கொண்டே முகத்தை சந்தனக் கட்டைகளால் மூடினார் முக்கந்தர். அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் ஊருக்கு வந்த பி.டபிள்யூடி பிரசவத்திலேயே துணையைப் பறிகொடுத்துவிட்டு கொள்ளிவைத்தார். காதல் நெருப்பை மூட்டியவள் நெருப்பில் எரிந்துகொண்டு இருந்தாள்.

"கமலா, இந்தக் கொடுமையைப் பார்க்கவா ஊருக்குத் திரும்பினேன்' என அவன் இதயம் அழுதது.
""திரும்பிப்  பாக்காம கிளம்புங்கப்பா'' என்றார் முக்கந்தர்.

""லைட்ட வச்சுக்கிட்டு இங்க என்னடா பண்ணுற... 

முன்னாடி போ...''

ஊரை நோக்கி நடந்தது கூட்டம். காற்றுக்குப் போராடி மினுக்கியது பெட்ரோமாக்ஸ்.

எரிந்துகொண்டு இருக்கும்

அவள் சடலம் வெந்து தணியும்.

வெந்துகொண்டு இருக்கும் இவன்

இதயம் தணியுமா...?

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :