அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
Logo

நாவல் - தொடர்ச்சி...

ஃபாரூக்லாகா ஸாதறல்தீவான் கோல்செஹ்ரா

     மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த அமெரிக்கன் சுழலும் நாற்காலியில் ஃபாரூக்லாகா அமர்ந்திருந்தாள். இந்த ஐம்பத்தொன்றாவது வயதிலும் அழகானவளாகவும், நல்ல உடல் நலத்தைக் கொண்டவளாகவும் அவள் இருந்தாள். அது வசந்த காலம்... காற்றில் ஆரஞ்சு வாசனை தங்கி நின்றிருந்தது. ஃபாரூக்லாகா இடையில் அவ்வப்போது கண்களை மூடிக் கொண்டு, அந்த நறுமணத்தில் கவனத்தை மூழ்கச் செய்து, ஒரே சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய வாப்பா இப்போது உயிருடன் இருந்திருந்தால், வாசலின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மண் சட்டிகளில் இருக்கும் மண்ணை மாற்றிக் கொண்டிருப்பார். ஃபாரூக்லாகா நினைத்துப் பார்த்தாள். அவளுடைய வாப்பா மறைந்து, பத்து வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், இதோ நேற்று இறந்ததைப் போல தோன்றுகிறது. இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் சொன்னார்: "மகளே, மிகவும் கவனமாக வாழவேண்டும். என்னால் இவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.'

ஃபாரூக்லாகா ஒரு நிமிடம் மலர்களிடம் நறுமணத்தை மறந்து விட்டாள். மற்ற எல்லா விஷயங்களும் ஒன்றுமில்லை என்று ஆக்கக் கூடிய சக்தி, அவளுடைய வாப்பாவைப் பற்றிய நினைவுகளுக்கு இருந்தன. அவள் தன்னையே அறியாமல் முகத்தை மூடிக்கொண்டாள். இறந்து போனவர்களைப் பற்றிய நினைவுகளிலிருந்தும், அவை அளிக்கும் வார்த்தைகள் மூலம் விளக்கிக் கூறமுடியாத கவலைகளிலிருந்தும் தப்பித்து ஓட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

கோல்செஹ்ரா வரவேற்பறையில் இருந்தான். புராதனமான ஒரு நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவன் "டை' கட்டிக் கொண்டிருந்தான். வாசலில் ஒரு பகுதியையும், மொட்டை மாடியையும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ஃபாரூக்லாகாவையும் அவனால் கண்ணாடியில் பார்க்க முடிந்தது. இரண்டு நிமிடங்களில் செய்யக் கூடிய செயலை அவன் அரை மணி நேரம் எடுத்துச் செய்து கொண்டிருப்பான். அவ்வளவு நேரமும் தன் மனைவியை அவன் பார்த்துக் கொண்டிருக்கலாமே! அவளை முகத்திற்கு எதிரே தான் பார்க்கவேண்டும் என்றெல்லாம் அவனுக்கு இல்லை. காணும்போது வெறுப்புடன் புன்னகை செய்ய வேண்டும் என்று தான் தோன்றியிருக்கிறது. இப்படிப்பட்ட வெறுப்பு தோன்றியதற்கான காரணம் என்ன என்று அவனுக்கேகூட தெரியாது. உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- தூரத்தில் இருக்கும்போது இதே மாதிரி விலகி இருக்கும்போது ஈடுபாடு உண்டாகும். உலகத்தில் இருக்கும் மற்ற எல்லாரையும்விட... ஆனால், நேரில் காண நேரும்போது, பழைய வெறுப்பு வெளியேவர ஆரம்பிக்கும். கடந்த முப்பது வருடங்களாக அவனுக்கு இருக்கும் மனநிலை இதுதான்.

ஃபாரூக்லாகா தன் கைகளை நீட்டி விரித்து, முதுகை வளைத்துக் கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஒரு இனிய நினைவில் அவள் மூழ்கியிருந்தாள். விவியன் லெயிக்கின் "கான் வித் த விண்ட்'டை அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். அதில் ஒரு படுக்கையறை காட்சியில் இதே மாதிரி வளைந்து நெளியும் ஒரு காட்சி வருகிறது. விவியன் லெயிக்கைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ஃபக்ரூத்தீன் ஆஸாத் அவளுக்கு ஞாபகத்தில் வருவான். சமிரான் தோட்டத்தில்  வைத்து நடைபெற்ற இளவரசனின் விருந்து உபசரிப்புதான்    முதலில் ஞாபகத்தில் வந்தது. ஃபக்ருத்தீன் அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திருந்தான். அமெரிக்காவிலிருந்து சிலைகளையும் புகைப்படங்களையும் எல்லாருக்கும் காட்டுவதற்காக அவன் கொண்டு வந்திருந்தான். நியூயார்க்கின் புகைப்படங்கள் ஆச்சரியப்படும் வகையில் இருந்தன. ஃபாரூக்லாகா அதற்குப் பிறகு மூன்று முறை அங்கு சென்றிருக்கிறாள். ஆனால், புகைப்படங்களில் பார்த்த அளவிற்கு அழகு நியூயார்க்கை நேரில் பார்க்கும்போது அவளுக்குத் தெரியவில்லை. அது கோல்செஹ்ராவின் தவறால்தான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், ஃபக்ருத்தீனுடன் சேர்ந்து சென்றிருந்தால், ஆச்சரியமான நியூயார்க்கை தான் பார்த்திருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. நியூயார்க்கைச் சுற்றிக் காட்டுவதற்கு கோல்செஹ்ரா தயாராக இல்லை. மொத்தத்தில்- அவன் செய்தது என்ன? இந்திசாமி வந்து உணவிற்கோ திரைப்படத்திற்கோ கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கோ அழைத்துக்கொண்டு செல்லும்வரை ஹோட்டலின் ரெஸ்டாரெண்ட்டில் உணவைச் சாப்பிட்டுவிட்டு, ஹாலில் போடப்பட்டிருக்கும் ஸோபாவில் நேரத்தைச் செலவிடுவது.... இதைத்தான் அவன் செய்துகொண்டிருந்தான்.

"டை' கட்டி முடித்த அவன் வேறு ஏதாவது செய்வதற்கு இருக்கிறதா என்று தேடியவாறு, கண்ணாடிக்கு முன்னாலேயே நின்றிருந்தான். முகச் சவரம் செய்வதாக இருந்தால், இப்படி ஒரு மணி நேரம் கடந்து விடும் என்று தோன்றியது. குளியலறைக்குள் நுழைந்து இளம் வெப்பத்திலிருந்த நீரை ஒரு பாத்திரத்தில் நிறைத்தான். பாத்திரத்தையும் ஷேவிங் ப்ரஷ்சையும் க்ரீமையும் ரேஸரையும் எடுத்து வைத்துக்கொண்டு அவன் சவரம் செய்ய ஆரம்பித்தான்.

அவனையும் அழைத்துக்கொண்டு வெளியே செல்வதற்காக பொறுமையுடன் ஃபாரூக்லாகா காத்திருந்தாள். வேலையிலிருந்து விலகி பென்ஷன் பணம் வாங்க ஆரம்பித்த பிறகு, அவன் தினமும் சாயங்காலம் நடப்பதற்காகச் செல்வதுண்டு. காஃபி ஹவுஸில் காபி குடிப்பதும், பத்திரிகை வாசிப்பதும் முடிந்து ஒரு மணி நேரம் கழிந்த பிறகுதான் திரும்பி வருவான். அவன் செல்லும்வரை ஃபாரூக்லாகா பொறுமையுடன் காத்திருப்பாள். அவன் இல்லாத நேரங்கள்தான் அவளுக்கு உற்சாகம் நிறைந்ததாகவும் சந்தோஷமானதாகவும் இருக்கும். அவன் வீட்டில் இருக்கும்போது, அப்படி அவளால் இருக்க முடியாது. ஒரு மூலையில் அடக்கமாக சுருங்கிப் போய் அவள் உட்கார்ந்திருப்பாள். முப்பத்து இரண்டு வருடங்களாக அப்படி இருந்து இருந்து அவளுக்கு பழகிப் போய்விட்டது.

அவன் வாழ்க்கையின் பகுதியாக ஆகிவிட்டான். கோல்செஹ்ரா வெளியே செல்லும்போதுதான், தனக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் உண்டாகின்றன என்ற விஷயம் மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரியும். கோல்செஹ்ரா வேலைக்குச் சென்றிருந்த நாட்களில் உணவு சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் அவன் வரும் வரை எட்டு மணி நேரமும் அவள் சந்தோஷத்தில் திளைத்திருப்பாள். அந்தச் சமயங்களில் எப்போதையும்விட அவள் மகிழ்ச்சியில் மூழ்கிக் காணப்படுவாள். சில நேரங்களில் அவள் பாடவும் செய்வாள்.

அவன் வேலையிருந்து நின்றுவிட்ட பிறகு, அந்த சந்தோஷம்தான்  ஃபாரூக்லாகாவிற்கு இல்லாமல் போய்விட்டது. எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பான். அது மட்டுமல்ல- எப்போதும் அவன் கோபத்துடனே இருப்பான். பூச்சட்டிகளை ஒழுங்குசெய்வதற்கோ, தரையில் கிடக்கும் செங்கல்களைக் கொண்டு ஏதாவது செய்வதற்கோ எதற்கும் அவன் வர மாட்டான். செங்கல் சுவரிலிருந்து பெயர்ந்து வந்து கொண்டிருக்கும். பைஜாமாவை அணிந்துகொண்டு ஸோஃபாவிலோ தரையிலோ எந்த நேரமாக இருந்தாலும் படுத்த வண்ணம் இருப்பான். இல்லாவிட்டால் பிரயோஜனமற்ற தமாஷான விஷயங்களைப் பேசிக்கொண்டு  ஃபாரூக்லாகாவிற்குப் பின்னால் சுற்றி நடந்துகொண்டிருப்பான்.

"அந்த ""சிங்''கிற்குள் குனிந்து நின்றுகொண்டு சவரம் செய்யலாமே! கார்ப்பெட் நனைவதைப் பார்க்கவில்லையா?''

ஃபாரூக்லாகா கூறினாள்.

கோல்செஹ்ராவிற்கு சந்தோஷம் உண்டானது. அவன் ஷேவிங் ப்ரஷ்ஷை நீருக்குள் நுழைத்து அலசிக்கொண்டிருந்தான்.
""பேசாம இருடீ...''

ஃபாரூக்லாகா உதடுகளைக் கடித்தாள். அவளுடைய கவனம் வாசலை நோக்கித் திரும்பியது. கூற விரும்பிய விஷயங்கள் தலைக்குள் சுழன்று கொண்டிருந்தன. ஆனால், அவள் சுவாசத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் ஃபக்ருத்தீன் திரும்பவும் சிந்தனையில் வந்தான். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அவன் உதவிக்கு வந்திருக்கிறான்.

அந்த இரவு ஃபக்ருத்தீனுடன் அவள் அறிமுகமான முதல் இரவு.வ ஃபக்ரூத்தீன் அவளுக்கு அருகில் வந்தான். சவுக்கு மரத்திற்கு அடியில் அவள் நின்றுகொண்டிருந்தாள். அவன் பின்னால் நின்று கொண்டு அவளை அழைத்தான்: ""விவியன் லெய்க்!''

ஃபாரூக்லாகா திரும்பிப் பார்த்தாள். ஃபக்ருத்தீன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த முகம் இப்போதும் ஞாபகத்தில் வருகிறது. எத்தனையோ முறை முத்தம் தருவதற்கு  ஆசைப் பட்டிருந்தாலும், அந்த முதல் அனுபவத்தின் நினைவுகள்! அதன் விசேஷத்தன்மையே தனிதான்! தன்னுடைய தூய வெள்ளை நிறத் திலிருந்த வரிசையான பற்களை மறைப்பதற்காக அவன் தன் உதடுகளைச் சேர்த்து வைத்தான்.

""யார்? நானா?''

""விவியன் லெயிக்கின் சிறிய தங்கை... என்ன ஒரு உருவ ஒற்றுமை!''

கழுத்தை இடது பக்கமாக சற்று சாய்த்து வைத்துக்கொண்டு, ஓரக் கண்களால் அவனைப் பார்க்க வேண்டும்போல அவளுக்கு இருந்தது. அவளுடைய உம்மாவிடமிருந்து கிடைத்த பழக்கம்!

அப்படிப் பார்க்கும்போது தான் மேலும் சற்று அதிக அழகு கொண்ட பெண்ணாகத் தோன்றுவோம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், தலையைச் சாய்ப்பதற்கு முன்பே ஒரு நடுக்கம் உண்டானது. பயந்து அரண்டுபோன ஒரு பறவையைப்போல அவள் இருந்தாள்.

ஃபக்ருத்தீன் புன்னகைத்தான். ""ஃபாரூக், நம்புவாயா?  ஒவ்வொரு நாள் கடந்து செல்லும்போதும் நீ மேலும் மேலும் அழகானவளாக ஆகிக்கொண்டிருக்கிறாய். அதற்குக் காரணம் என்ன?''

அவள் குழம்பிப்போய் நின்றாள். இப்போது கழுத்தைத் திரும்பி பார்க்கலாம் என்று நினைத்தாள்: ""பத்து வருடங்கள் ஆகிவிட்டன அல்லவா?''

""நான் பார்த்தா? அது எப்படி?''

""பிறகு... எங்கே பார்த்தீங்க?''

ஃபக்ருத்தீன் தன் நெஞ்சைத் தடவிக்காட்டினான்: ""இதோ... இங்கே... நீ எதற்கு திருமணம் செய்து கொண்டாய்?''

""பண்ணியிருக்கக் கூடாதா?''

""பண்ணியிருக்கணுமா?''

ஃபாரூக்லாகா சற்று அதிர்ச்சியடைந்தாள். அவர்களுக்குள் எந்தவொரு வாக்குறுதி பரிமாறலும் நடைபெற்றிருக்கவில்லை.
அவன் முதல் முறையாக அமெரிக்காவிற்குச் செல்லும்போது,

அவளுக்கு பதின்மூன்று வயது நடந்துகொண்டிருந்தது.

அவனுடன் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி உணர்வுமயமான எந்தவொரு நெருக்கமும் தோன்றியதாக அவளுக்கு நினைவில்லை. ஆனால், இப்போது... இந்த நிமிடத்திலிருந்து... அப்படி எதோ இருப்பதைப்போல தோன்றுகிறது.

""வாழ்க்கை ஆச்சே! எல்லாரும் திருமணம் செய்து கொள்வார்கள்.''

ஃபாரூக்லாகா சொன்னாள்.

""அப்படித்தான் நீயும்... இல்லையா? உன்னைப் போன்ற அழகான பெண்கள் திருமணம் செய்து கொள்வதா? அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. தரிசிக்க வேண்டிய உரிமையை உலகத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் நீங்கள் அளிக்க வேண்டும்.''

ஃபாரூக்லாகா இதயபூர்வமாக புன்னகைத்துக்கொண்டு நின்றிருந்தாள். அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது சுவாரசியமான விஷயமாக இருந்தது. அவளுடைய சிரிப்பைப் பார்த்து அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். அது வரவில்லை. அதற்குப் பதிலாக அவன் மேலும் சற்று அருகில் வந்து நின்று கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் கோல்செஹ்ரா எங்கிருந்தோ அங்கு வந்தான். ஃபக்ருத்தீனைவிட அவனுடைய தலை அளவில் சற்று சிறியதாக இருக்கும்.

அந்த மனதில் வெறுப்பை உண்டாக்கக்கூடிய சிரிப்பும் சந்தேகம் கலந்த கூர்மையான பார்வையும் நான்கு வருடங்களாக ஃபாரூக்லாகாவை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன. ஃபக்ருத்தீன் சொன்னான்: ""நான் உங்களுடைய மனைவியிடம் "கான் வித் த விண்ட்'டைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ஈரானிற்குத் திரும்பி வருவதற்கு முன்னால் நான் அதைப் பார்த்தேன். திரைக்கு வந்த நாளன்று இரவு என்று நினைக்கிறேன். டிக்கெட் கிடைப்பதில் இருந்த சிரமத்தை மனதில் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. காலையில் ஐந்து மணிக்கு நான் வரிசையில் போய் நின்றேன். திரைப்படத்தின் கதாநாயகி விவியன் லெயிக்கைப்போலவே இவங்க இருக்காங்கன்னு நான் சொல்லிக்கொண்டு இருந்தேன்.''

""அப்படியா?''

கோல்செஹ்ரா சாதாரணமாகச் சொன்னான். எப்போதும் போல வெறுப்பு நிறைந்த சிரிப்பு. தோல்வி அடைந்தவனின் சிரிப்பு அது. ஃபக்ருத்தீனை விட தான் குறைவான உயரத்தைக் கொண்டவன் என்பதைப் புரிந்துகொண்டிருக்கக் கூடிய அறிவு அவனுக்கு இருந்தது. ""இங்கு வந்தால், கட்டாயம் பார்க்க வேண்டும். திரைப்படங்களில் அது மாஸ்டர் பீஸ். படத் தயாரிப்புகளிலேயே  மிகவும் செலவழித்து எடுக்கப்பட்ட படம் அது.''

ஃபாரூக்லாகாவின் மாமாவின் காரில்தான் அன்று இரவு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். மாமாவை மனதில் நினைத்துக் கொண்டு, பயணம் முழுக்க கோல்செஹ்ரா மிகவும் அமைதியாக இருந்தான். அவரை மரியாதையுடன் அவர் இருந்த இடம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் மெதுவாகத் திரும்பி வீட்டுக்கு நடந்தார்கள். திரும்பிவரும் நேரத்தில் ஃபாரூக்லாகா இந்த மாதிரி சிந்தித்தாள்:

"இந்த ஆள் ஒரு மணி நேரத்திற்குள் உறங்கிவிடுவான். எனக்கு தூக்கம் வருவதற்கு முன்னால், சிந்திப்பதற்கு நிறைய நேரம் இருக்கிறது!'

இரவில் நல்ல மூடில் இருந்தான் கோல்செஹ்ரா. அவன் "அந்த அப்பிராணி சின்னப்பயல்' சொன்ன "வீணாகப் போன' திரைப் படத்தைப் பற்றி அதுவும் இதுவும் கூறிக் கொண்டிருந்தான்.

அதேபோல மற்ற போரடிக்கும் திரைப்படங்களைப் பற்றியும் அவன் தான் கொண்டுவரும் விஷயங்களை தான் பார்க்கும் நபர்களின் தலையில் வைத்து... பிறகு, அதை புகைப்படம் எடுத்து நடந்துகொண்டு... அந்தக் கோமாளி தொப்பி அணிந்த இளைஞனை.... அவன் ஃபாரூக்லாகாவின் புகைப்படத்தையும் எடுத்து விட்டானே! ஃபாரூக்லாகாவிற்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. "பேசாம இருங்க...' அவள் சொன்னாள். உடனடியாக ஒரு விஷயத்தைவிட்டு இன்னொரு விஷயத்திற்கு மாறிக் கொண்டிருந்தானே தவிர, அதனால் எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. "அந்த அப்பிராணி சின்னப் பையனை' விட்டு விட்டு, இப்போது அவன் ஃபாரூக்லாகாவின் நீல நிற ஆடையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். "என்ன ஒரு கேவலமாக அது இருக்கிறது! உடலோடு ஒட்டிப்போய் கிடக்கிறது! அதைப் பார்க்கும்போது எல்லாருக்கும் வெறுப்புத்தான் உண்டாகிறது.' இப்படி அவன் என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தான்.

அவன் உள்ளே சென்று ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்தான். இரவில் இரண்டு மணிக்கு அதைத் தின்ன ஆரம்பித்தான். அவளையும் தின்னும்படி அவன் கட்டாயப்படுத்தி னான். அவளோ தான் தூங்குவதற்கு முன்னால் ஒரு அரை மணி நேரமாவது சிந்திப்பதற்கு நேரம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று மனதில் ஆசைப்பட்டுக்கொண்டே, இந்த மாதிரியான பொருத்தமற்ற விஷயங்களிலிருந்து விலகி நின்றுகொண்டிருந்தாள். வாழைப் பழத்தைச் சாப்பிட்டு முடித்தவுடன், வானொலியைக் கேட்டால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. பெர்லினிலிருந்து லண்டன்...அங்கிருந்து மாஸ்கோ... இப்படி ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தான். உலகத்தில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாமே! இறுதியில் தூங்குவதற்காக படுத்தபோது, அதிகாலை மூன்று மணியாகி விட்டிருந்தது. அது மட்டுமல்ல, தூங்குவதற்கு முன்பு அவனைப் பொறுத்த வரையில் உடலுறவு கொள்ள வேண்டும்.

அவள் அதற்குச் சம்மதித்தாள். அது முடிந்தவுடன், குளித்து கடவுளைத் தொழலாமென்று அவன் நினைத்தான். அவன் அவ்வப்போது செய்யக்கூடிய காரியம்தான் அது. அன்று இரவு முழுவதும் அவளுடைய இதயம் அவன்மீது கொண்ட வெறுப்பால் நிறைந்திருந்தது.

கோல்செஹ்ரா சவரம் செய்து முடித்தான். இப்போது அவன் மெதுவாக சவரம் செய்யப் பயன்படுத்திய பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். இவற்றைச் செய்வதற்கு தான் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறோம் என்பதற்கான காரணம் அவனுக்குக் கூட தெரியாது. தனக்கே திட்டவட்டமாகத் தெரியாத ஏதோ வொன்றை எதிர்பார்த்து, தான் செயல்பட்டுக் கொண்டிருப்ப தைப்போல அவனுடைய அந்தச் செயல் இருந்தது. அப்போது கதவின் மணி ஒலித்தது. முஸய்யப் கதவை நோக்கி நடந்தான். "வருவது யாராக இருக்கும்? எதற்காக வருகிறார்கள்?' என்ற ஆர்வத்துடன் ஃபாரூக்லாகா பொறுமையுடன் காத்திருந்தாள். கோல்செஹ்ராவும் மொட்டை மாடிக்குச் சென்று தன் மனைவியுடன் சேர்ந்து நின்றான். ஃபாரூக்லாகா தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவன்மீது கொண்டிருந்த வெறுப்பு அந்த ஒரு பார்வையிலேயே நன்றாகத் தெரிந்தது.

திடீரென்று கோல்செஹ்ரா இவ்வாறு கூறினான். ""அடுத்த மாதம் உனக்கு ஐம்பத்தொரு வயதாகிறது. ரத்தப் போக்கு நின்று விடுமே ஃபாரூகா!''

ஃபாரூக்லாகா அவனையே எதுவும் பேசாமல் பார்த்தாள். எப்போதும்போல கிண்டல் கலந்த ஒரு புன்சிரிப்புடன், அவள் மெதுவான குரலில் இப்படிச் சொன்னாள்: ""இங்கே பாருங்க... உங்களுடைய தமாஷ்களை எல்லா நேரங்களிலும் நான் ரசிக்க வேண்டுமென்று மனதில் நினைத்தால், அது நடக்காத விஷயம்...''

""தமாஷ் எதுவும் கூறவில்லை... ரத்தப் போக்கு விஷயத்தை தமாஷாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.''

ஃபாரூக்லாகா நீண்ட பெருமூச்சை விட்டாள். முஸய்யப் பத்திரிகையுடன் வந்து அவளின் கால்களுக்கு அருகில் கொண்டு வந்து வைத்தான். வெள்ளிக்கிழமை நடைபெறும் விருந்திற்காக நஸ்ருல்லாவிடம் மாமிசம் வாங்குவதற்கு கடை வீதிக்குப் போவதாகச் சொன்னான். ""கடை வீதியில் ஒரு பூந்தோட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!'' ஃபாரூக்லாகா தன் ஆசையை வெளியிட்டாள்.

""ரத்தப் போக்கு நின்றுவிட்டாலும், பூந்தோட்டத்தைப் பார்த்து ரசிக்க முடியும் என்றா நீ கூறுகிறாய்?''

பத்திரிகையின் முதல் பக்கத்தின்மீது தன் பார்வையை ஃபாரூக்லாகா ஓட்டிக்கொண்டிருந்தாள். "பிணப் பெட்டிக்குப் பின்னால் நடப்பதற்கு சதைப் பிடிப்பு கொண்ட யாராவது இளம் பெண்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற ஏதாவது எண்ணம் இருக்கிறதோ? அந்தக் காரணத்தால்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் நீங்கள் உதிர்க்கிறீர்களோ?''

""இல்லை என்று கூறுவதற்கில்லை. ஆனால், அதற்கு ராணி நீ சம்மதிக்க மாட்டியே!''

""சரி... போய் கட்டிக்கோங்க... நீங்க உண்மையாகவே மிகவும் மோசமான மனிதன்...''

ஃபாரூக்லாகாவின் கவனம் பத்திரிகையில் இல்லை. கோல்செஹ்ரா அதை அபகரித்துக்கொண்டான். ஃபாரூக்லாகா வாசலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முஸய்யப் மேலாடையையும் ஷுக்களையும் அணிந்துகொண்டு கதவை நோக்கி நடந்தான். பூந்தோட்டத்திலிருந்த குளத்திற்கு அருகில் சென்றபோது, அவன் உரத்த குரலில் கேட்டான்: ""வேறு ஏதாவது வேண்டுமா?''

""நல்ல பாதாம் இருந்தால், கொஞ்சம் வாங்கிக் கொண்டு வா.''

முஸய்யப் எதுவும் பேசாமல் நடந்து சென்றான். கோல்செஹ்ரா சாளரத்திற்கு அருகில் அமர்ந்து பத்திரிகையையே பார்த்துக் கொண்டிருந்தான். "கடவுளே! இந்த ஆள் இன்னும் ஏன் போக வில்லை?' ஃபாரூக்லாகா நினைத்தாள்: "போன பிறகுதான், என் கற்பனை உலகத்தில் நான் மூழ்க வேண்டும்!'

ஃபக்ருத்தீன் தன்னுடைய அமெரிக்க மனைவியைப் பார்ப்பதற் காக போன நாள் ஞாபகத்தில் வந்தது. கணவன் வந்து ஆறு மாதங்கள் கடந்து சென்றதற்குப் பின்னால் டெடி, ஜிம்மி என்ற குழந்தைகளுடன் அவள் வந்திருந்தாள். கடவுளே, வித்தியாசமான பெயர்கள்தான்! அன்று அவள் அனுபவித்த மனரீதியான இறுக்கத்தை எப்படி

மறக்க முடியும்? தலைமுடியைச் சுருட்டிக் கட்டி, நீல நிற மலர்களைக் கொண்ட உடுப்பை அணிந்துகொண்டு, பவுடரையும் உதட்டுச் சாயத்தையும் பூசிக் கொண்டு வந்து நின்றதைப் பார்த்து கோல்செஹ்ரா கேலி பண்ணினான். பைஜாமாவின் சுருக்கங்களைச் சரி பண்ணுவதற்கு அவளுக்கு நீண்ட நேரமானது. இறுதியில் கண்ணாடிக்கு முன்னால் போய் ஒரு வட்டம் போட்டு சுற்றிக்கொண்டே தன்னைப் பார்த்தாள். அனைத்தும் ஒரு வகையில் ஒழுங்காகவே இருந்தன. அதற்குப் பிறகும் அவள் வரவில்லை. இதற்கு முன்பு அவள் அமெரிக்கப் பெண்களைப் பார்த்தது இல்லை. விவியன் லெயிக்கின் "கான் வித் த விண்ட்'டைப் பார்த்திருக்கிறாள். அவ்வளவுதான். நடிகை அவளைவிட மோசமில்லை. தங்களுக்குள் ஒற்றுமை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. எனினும், ஃபக்ரூத்தீன் கூறியதைப்போல ஒற்றுமை இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தோட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்து சொந்த வீட்டின் வேலைகள் முடியும் வரையில் ஃபக்ருத்தினும் அவனுடைய மனைவியும் சரீம்மீர்ஸாவின் வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். ஐந்து வாசல்களைக் கொண்ட வரவேற்பறையின் கதவிற்கு அருகில் அந்த அமெரிக்கப் பெண், விருந்தாளிகள் அனைவருக்கும் கை கொடுத்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். பேச முடியவில்லை. அவள் வெறுமனே புன்சிரிப்பை வெளிப்படுத்த மட்டும் செய்துகொண்டிருந்தாள்.

அசாதாரணமான உயரத்தைக் கொண்ட ஒரு பெண்... தங்க நிறத்தில் தலை முடி... கைகள் முழுக்க சுருக்கங்களும், எழுந்து நின்றுகொண்டிருக்கும் நரம்புகளும்... நிறமே இல்லாதவை என்பதைப்போல இருந்த சிறிய கண்கள்... அருகில் சென்று பார்த்தால்தான் அவை நீல நிறத்தில் இருக்கின்றன என்பதையே தெரிந்துகொள்ள முடியும். ஃபக்ருத்தீனுக்கு நீல நிறமென்றால் மிகவும் பிடிக்குமே! ஃபாரூக்லாகா கதவிற்கு அருகில் நின்றுகொண்டு அவளுக்குத் தன் கையைக் கொடுத்தாள்.

அந்த அறையில் ஒரு பெரிய நிலைக் கண்ணாடி இருந்தது.

அந்தக் கண்ணாடியில் தன்னுடைய உருவத்தை அவள் சிறிது நேரம் பார்த்தாள். கறுத்து இருண்டு போய் காணப்பட்ட கண்களும், ஆடைகளில் குத்தப்பட்டிருந்த நீல நிற மலர்களும்... அவற்றையே அவள் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். கண்ணாடியில் ஃபக்ருத் தீன் தெரிந்தான். அவன் கேட்டான். நீ எதற்கு திருமணம் செய்தாய்?'

அவனிடமும் ஆட்கள் இதே கேள்வியைக் கேட்டிருப்பர்.

ஆனால், அந்தக் கேள்வி அவளிடம் ஒரு இனம் புரியாத அனுபவத்தை உண்டாக்கியது. அவன் கண்ணாடியில் தெரிந்த அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் சற்று வெளிறிப் போய் தெரிவதைப்போல ஃபாரூக்லாகாவிற்குத் தோன்றியது.

"நீலநிற மலர்கள் இருக்கும் இந்த வெள்ளை நிற ஆடை உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.'

அவன் வேகமாக தன் மனைவி இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றான். அந்த இரவு முழுவதும் அவர்கள் அந்த வகையில் நெருக்கமாக இருந்தார்கள். ஒரு சக்தி அவர்கள் இருவரையும் அவ்வாறு பிடித்து இழுத்து நெருங்கி இருக்கச் செய்வதைப்போல இருந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு இளவரசனின் பூந்தோட்டத்தில் அமர்ந் திருந்தபோது ஃபாரூக்லாகா, அதீலா ரிஃபா அத்திடம் அந்த இரவைப் பற்றிக் கூறினாள். ரிஃபாத் ஒரு நல்ல பெண். அவள் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தாள். காதலிக்கக் கூடிய உரிமை பெண்களுக்கு இருக்கிறது என்று அவள் மனதில் நினைத்தாள். அந்தக் காதல்தான் உண்மையிலேயே இருப்பது. கோல்செஹ்ராவின் நடவடிக்கைகளை அவள் குறை சொன்னாள். ஃபாரூக்லாகாவின் மூத்த மகளும், அதீலாவின் மகனும் அந்த நேரத்தில் பூந்தோட்டத்தில் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள்.

அதீலாவிற்கும் சாஸ்தாவிற்குமிடையே உள்ள சில விஷயங்களைப் பற்றி ஃபாரூக்லாகாவும் கேள்விப்பட்டிருந்தாள். சில காதால் கேட்ட விஷயங்கள்... தன்னைப் பற்றிய சில விஷயங்களை அவளிடம் கூறியதற்குக் காரணம்கூட அதுதான். அவள் மனதிற்குள் சிறிது சலனம் அடைவாள் அல்லவா? அது நடந்தது. அதீலா அழுகை சகிதமாக எல்லாவற்றையும் மனம் திறந்து கூறினாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஃபாரூக்லாகா கூறினாள்: ""எட்டு வருடங்கள் கடந்தோடி விட்டன. புதுமை நிறைந்த எட்டு வருடங்கள்!''

""போர்க்காலம் முழுவதும் நான் காதல்வயப்பட்டு இருந்தேன். நல்ல விஷயம்!''

"ஃபாரூக்லாகா கொட்டாவி விட்டவாறு நிமிர்ந்து உட்கார்ந்தாள்: "போர் நடைபெற்ற எட்டு வருடங்கள்!

எந்தவொரு காரணமும் இல்லாமல் கோல்செஹ்ரா மிகவும் கோபத்துடன் அமர்ந்திருந்தான். திடீரென்று அவன் கேட்டான்: ""ரத்தப் போக்கு நின்று விட்டால், அதற்குப் பிறகு பெண்களின் உணர்ச்சியில் மாறுதல் வருமா?''

""எனக்கு தெரியாது, சத்ரீ!''

""மாறுதல் இருக்கும். அதனால்தான் அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய அனுமதி ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரத்தப் போக்கு நின்று போய்விட்ட பெண்ணைச் சகித்துக்கொண்டு படுத்திருக்க வேண்டிய அவசிய மில்லையே!''

""ஒருவேளை அப்படி இருக்கலாம்...''

கோல்செஹ்ரா தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைப் பற்றி மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். அவளுடைய பெயரும் ஃபாரூக்லாகா என்றுதான் இருந்தது. போர்க் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண்... பாரசீக மொழி தெரியாத ஒரு போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்... ஃபாரூக்லாகா என்றுதான் அவளை அவனும் அழைத்தான். அவள் மது விற்பனை செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். பாரூக்லாகா என்று அழைத்ததும்,

அவள் சிரிப்பாள். அவளுக்கு அந்த வார்த்தையை உச்சரிக்க தெரியாமல் இருந்தது. கேட்டால், தமாஷாக தோன்றும். போர் முடிந்தவுடன்,

அவள் சொன்னாள்: "ஃபாரூக்லாகா ஐரோப்பாவிற்குச் செல்கிறாள்.' இதைக் கூறிவிட்டு, அவள் சிரித்தாள். அடுத்த வாரமே அவள் மதுக் கூடத்திலிருந்து இல்லாமல் போனாள்.

கோல்செஹ்ரா கேட்டான்: ""நான் இன்னொரு திருமணம் செய்துகொண்டால், உனக்கு கோபம் வருமா?''

அதற்கு ஃபாரூக்லாகா பதில் கூறவில்லை. தன் கவனத்தை பூந்தோட்டத்தின் பக்கம் திருப்பி விட்டாள். இறுதியாக ஃபக்ருத்தீனைப் பார்த்த சம்பவத்தை அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள்.

அவர்கள் இருவரும் அவனுடைய வீட்டில் இருந்தார்கள். ஒரு அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டார்கள். திரைச் சீலையை இழுத்து விட்டார்கள். அறைக்குள் இருட்டு.... - அந்த இருட்டில் அவனுடைய கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

""நான் குழந்தைகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.''

அவன் சொன்னான்.

அவளுக்கு அழுகை வந்தது.

""நான் திரும்பி வருவேன். சத்தியமாக...''

போர் முடிவடைந்தவுடன், டெடியையும், ஜிம்மினையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கப் பெண் திரும்பிச் சென்றாள்.

அவள் மிகவும் குழப்பத்தில் இருப்பதைப்போல தோன்றினாள். விருந்து நடைபெற்ற நாளன்று அவள் உரத்த குரலில் கத்தினாள்:  ""நீங்கள் எல்லாரும் மன நோயாளிகள்...'' அவள் குடித்திருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்க வேண்டும்.

பத்து நாட்கள் கழித்து அவள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விட்டாள்.

என்ன காரணத்தாலோ- ஃபக்ருத்தீன் திரும்பிவர மாட்டான் என்று ஃபாரூக்லாகாவின் மனம் கூறியது.

அவன் திரும்பி வரவில்லை. ஐந்து மாதங்கள் கடந்து சென்ற பிறகு, அவன் ஒரு வாகன விபத்தில் மரணமடைந்து விட்டான். பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த தன்னுடைய சொந்த பிரச்சினைகளுக்கும் கோல்செஹ்ராவும் மட்டுமே ஃபாரூக்லாகாவிற்கு மீதமாக இருந்தன. குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வளர்ந்து, கிளம்பிப்போய் விட்டார்கள். எந்தக் காலத்திலும் அங்கு பிறக் காதவர்களைப்போல அவ்வளவு வேகமாக.

கோல்செஹ்ரா வாசித்து முடித்துவிட்டு, பத்திரிகைகளை கீழே வைத்தான். ஃபாரூக்லாகா அதைக் கேட்டாள் என நினைத்துக் கொண்டே, அதற்குப் பிறகுதான் மீண்டும் ரத்தப் போக்கினைப் பற்றியோ வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றியோ தான் பேச ஆரம்பிக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். உண்மையிலேயே இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் அப்படிப்பட்ட ஒரு செய்தியைக் கேள்விப்பட்டான். கேட்டவுடன், தன் மனைவியை ஒருவழி பண்ணவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஃபாரூக்லாகா எதுவும் கூறவில்லை. கோல்செஹ்ரா ஏமாற்றமடைந்து விட்டான். இறுதியில் அவன் கேட்டான்: ""பத்திரிகை வேண்டாமா?''

ஃபாரூக்லாகா எதுவும் கூறாமல் தன் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் பத்திரிகையை நீட்டினான். ஃபாரூக்லாகா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தாள்.

""நீ புகை பிடிக்கக் கூடாது... குறிப்பாக ரத்தப் போக்கு நின்று போய்விட்ட இந்த வயதில்...''

அவன் சொன்னான்.

""என்ன, நடப்பதற்காகப் போகவில்லையா? அது தினமும் நடக்கக் கூடிய ஒரு விஷயம்தானே?''

ஃபாரூக்லாகா கேட்டாள்.

""இன்று என்ன காரணத்தாலோ- ஒரு ஆர்வம் உண்டாகவில்லை.''

தான் அவ்வாறு கேட்டதற்காக ஃபாரூக்லாகா மனதிற்குள் வருத்தப்பட்டாள். தான் வெளியே செல்வதுதான் அவளுக்கு சந்தோஷம் அளிக்கும் விஷயம் என்ற உண்மையை அவன் அறிய நேர்ந்தால்,

அதற்குப் பிறகு அவன் அந்த விஷயத்தையே நிறுத்தி விடுவான். ""சரிதான்... வீட்டில் இருப்பதுதான் நல்லது.'' அவள் சொன்னாள்.

""நான் புறப்படுகிறேன்...''

அவன் எழுந்தான். என்ன காரணத்தாலோ- அதற்குப் பிறகு "வேண்டாம்' என்று நின்று விட்டான். ஏதோ சில காரியங்கள் நடக்கப் போகின்றன என்பதைப்போல... அவன் ஃபாரூக்லாகாவிற்கு முன்னால் போய், ஒரு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஒரு நிமிடம் அவன் நினைத்துப் பார்த்தான்- முப்பத்து இரண்டு வருடங்களாக அவளைப் பார்த்து இந்த மாதிரி புன்னகைக்க வேண்டிய சூழ்நிலை தனக்கு உண்டானதே இல்லை. உண்மையிலேயே சில நேரங்களில் அவளைப் பார்த்து அவன் அப்படி நடந்துகொண்டிருந்தால், அது அவளுடைய ஆச்சரியப்பட வைக்கும் அழகிற்கு எதிரான ஒரு பாதுகாப்பு கவசம் என்ற வகையில்தான்... அப்படி நடந்து கொள்ளாமல் போயிருந்தால் அவளுக்கு முன்னால் இதற்குள் தான் ஜடத்திற்கு நிகரானவனாக ஆகிவிட்டிருப்போம் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தான் அவள்மீது எந்த அளவிற்கு ஆசை வைத்திருக்கிறோம் என்ற உண்மையை அவள் எந்தச் சமயத்திலும், ஒரு நிமிட நேரத்திற்குக்கூட தெரிந்து கொள்ள கூடிய சூழ்நிலை வரவேகூடாது என்றும் அவன் மனதிற்குள் ஆசைப்பட்டான். ஆனால், இப்போது திடீரென்று அவனுக்குள் ஒரு விருப்பம்.. அன்று ஃபாரூக்லாகா என்று அவன் போலந்து நாட்டுப் பெண்ணை அழைத்தவாறு பார்த்துக்கொண்டு நின்றதைப்போல, அவளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு ஆவல். என்ன செய்வது? ரத்தப் போக்கு நின்று விட்டதே! இப்போது அவளுடைய கண்களுக்கு அந்தப் பழைய பிரகாசம் கிடையாது. இரவு வேளைகளில் இனிய கனவுகள் தோன்றுவதும் நின்று போய் விட்டன. சீக்கிரமே அவன் போய் படுத்து விடுகிறான். சில நேரங்களில் குறட்டை விடவும் செய்வான். ஏதோ ஒரு வெறுப்பு இல்லாமல், முன்பு மாதிரி அவனால் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க முடியவில்லை.

""அன்புள்ள ஃபாரூக்லாகா...''

ஃபாரூக்லாகா அதிர்ச்சியடைந்து விட்டாள். அவன் எந்தச் சமயத்திலும் தன்னைப் பார்த்து இந்த மாதிரி அழைத்ததே இல்லை. இதே மாதிரி புன்னகைத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில்கூட "ஃபாருகா' என்றே அவன் அழைத்திருக்கிறான். இப்போது அந்தக் கண்களில் புன்னகையைப் பார்க்க முடியவில்லை.

அவன் அவளை அன்பு மேலோங்க பார்த்துக் கொண்டிருந்தான். ஃபாரூக்லாகா பயந்து போய்விட்டாள். இதற்குப் பின்னால் ஏதோ கெட்ட நோக்கம் இருக்கிறது என்பதை மட்டும் அவளால் உறுதியாக நினைக்க முடிந்தது. அவன் தன்னைக் கொன்று விடுவானோ!

அவள் பயந்தாள்.

ஃபாரூக்லாகா அவனுடைய வயிற்றின்மீது பலமாக ஒரு அடி கொடுத்தாள்- தலையணையின்மீது அடிப்பதைப்போல. அது எதிர்பாராத ஒரு சம்பவமாக இருந்தது. கால் இடறி, அவனுடைய சமநிலை தவறியது. சமநிலையை மீண்டும் அடைய முடியாமல் அவன் தட்டுத் தடுமாறி, மாடியிலிருந்த படிகளில் போய் விழுந்தான்.

அவள் ஒரு நிமிடம் நாற்காலியின் முன்னால் போய் நின்றாள். படிகளைப் பார்க்கக்கூடிய தைரியம் அவளுக்கு இல்லாமலிருந்தது.

அவன் ஒரு சத்தம் கூட எழுப்பவில்லை.

மூன்று மாதங்கள் கடந்த பிறகு, ஒருநாள் அவள் கருப்பு நிற ஆடை அணிந்துகொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அப்போது முஸய்யப் ஒஸ்தாவரியின் ஒரு தகவலுடன் அங்கு வந்தான். வீட்டை விற்கும் எண்ணம் இருந்தால், தன்னை மறந்து விடக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் ஒஸ்தாவரி என்ற சொத்துகளை விற்கவும் வாங்கவும் பாலமாக இருக்கும் தரகன் எழுதியிருந்தான். இரண்டாவது முறை மீண்டும் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஃபாரூக்லாகாவிற்கு உண்டாகவில்லை. அவள் தைரியமாக, சிறிதும் தடுமாறாமல், முஸய்யப்பிடம் சொன்னாள்: "வீட்டை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு முக்கியமான இடத்தில் ஒரு பூந்தோட்டத்தை ஏற்பாடு செய்து தருவேன் என்ற நிபந்தனையுடன் வீட்டை விற்பதில் எனக்கு சம்மதம்தான் என்ற தகவலை ஒஸ்தாவரியிடம் போய் கூறு.' ஒஸ்தாவரி பூந்தோட்டத்தைத் தேடி புறப்பட்டான்.

திருமதி ஃபாரூக்லாகா ஸாதறல்தீவான் கோல்செஹ்ரா வீட்டை விற்றுவிட்டு, பூந்தோட்டத்தை விலைக்கு வாங்கி, அங்கு அவள் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாள்.

ஸரீன்கோலா

இருபத்தாறு வயது கொண்ட ஒரு விலைமாது... அவள்தான் ஸரீன்கோலா. புதிய நகரத்திலிருக்கும் தங்க அக்ரமின் வீட்டில்தான் அவள் வேலை செய்கிறாள். தங்கத்தாலான ஏழு பற்கள் இருக்கும் காரணத்தால் ஆட்கள் அவளை "அக்ரம் ஏழு, என்றுதான் அழைப்பார்கள். நல்ல இளம் வயதிலேயே அவள் வந்து விட்டாள். ஆரம்பத்தில் தினமும் மூன்றோ நான்கோ வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இருபத்தாறு வயதானபோது, அது தினமும் இருபது, இருபத்தைந்து... சில வேளைகளில் முப்பது என்று ஆனது.

அவளுக்கு வெறுத்துப் போய் விட்டது. பல முறைகள் அதைப்பற்றி அவள் அக்ரமிடம் கூறவும் செய்தாள். அப்போதெல்லாம் அவள் சத்தம் போட்டுக் கத்துவாள். பல நேரங்களில் ஆரவாரம் நிற்கும்வரை அவள் அமைதியாக நின்று கொண்டிருப்பாள்.

பிரகாசமான முகத்தைக் கொண்ட ஒரு இளம் பெண்ணாக ஸரீன்கோலா இருந்தாள். வாடிக்கையாளர்கள் மூன்று பேராக இருந்தாலும், நான்காக இருந்தாலும்... முப்பது பேர்களாக இருந்தாலும், அவள் எப்போதும் பிரகாசம் நிறைந்தவளாகவே காணப்பட்டாள். குறைகளைக்கூட தமாஷாகத்தான் கூறுவாள். மற்ற பெண்களுக்கும் அவளை மிகவும் பிடித்திருந்தது. எல்லாரும் உணவு சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கும்போது, ஸரீன்கோலா நகைச்சுவையாக பேச ஆரம்பிப்பாள். பிறகு சாப்பிடும் மேஜையைச் சுற்றி நடந்துகொண்டே நடனம் ஆடுவாள். அதைப் பார்த்து அங்கிருக்கும் மற்றவர்கள் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

சில நேரங்களில் அங்கிருந்து வெளியேறினால் என்ன என்று

அவளுக்குத் தோன்றும். ஆனால், மற்ற பெண்கள் விடவேண்டாமா? அவள் போய் விட்டால், மரணம் நடந்த வீட்டைப்போல இந்த இடம் ஆகிவிடும் என்று அவர்கள் கூறுவார்கள். சில நேரங்களில் அவர்கள் பலவற்றையும் கூறி அக்ரம் ஏழை வைத்து அடி கிடைக்கும்படிச் செய்வார்கள். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை. இந்த வீட்டை விட்டுப் புறப்பட்டால், போய்ச் சேர்வது இதே மாதிரியான இன்னொரு வீடாகத்தான் இருக்கும். பத்தொன்பது வயது நடந்தபோது, ஒரு திருமண ஆலோசனை வந்தது. வீட்டை விட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பம்... கற்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டுமென்ற கனவுடன் நடந்து திரிந்துகொண்டிருந்த ஒரு கட்டட வேலை செய்யும் இளைஞன்தான் மாப்பிள்ளை. நன்கு கஷ்டப்பட்டு உழைக்கக் கூடிய ஒரு மனைவி அவனுக்குத் தேவையாக இருந்தது. அதிர்ஷ்டக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்- காரியங்கள் அவ்வளவு சரியாக நடந்துகொண்டிருப்பதற்கு மத்தியில் யாருடனோ சண்டை போட்டு, அவனுடைய மண்டை ஓடு மண்வெட்டியால் வெட்டி பிளக்கப்பட்டு விட்டது என்ற தகவலை அவள் கேட்டாள்.

இடையில் எப்போதாவது ஒருமுறை குறை சொன்னாலும்,

அவள் விதியை ஏற்றுக்கொண்டிருந்தாள். ஆனால் சமீபகாலமாக, ஆறு மாதங்களாக சிந்தனைகள் எதுவும் சரியான முறையில் அவளுக்குள் ஓடவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை உறங்கி எழுந்த பிறகுதான் பிரச்சினைகளே ஆரம்பமாயின.

அக்ரம் ஏழு அழைத்தாள்: ""ஸரீன், ஒரு பார்ட்டி வந்திருக்கு... ரொம்ப அவசரமாம்...''

மிகவும் அதிகாலையில் பொதுவாக வாடிக்கையாளர்கள் அங்கு வருவது வழக்கத்தில் இல்லை. இரவில் தங்கிவிட்டு காலையில் வெறுப்பை உணர்பவர்கள்தான் பொதுவாக அந்த நேரத்திற்கு வருவார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை. இதோ ஒரு ஆள் வந்திருக்கி றான்! ஸரீன்கோலா நினைத்தாள்: "அதற்கு?' சத்தம் போட்டு கூறவேண்டும் என்று அவள் நினைத்தாள்: "அதற்கு?' ஆனால் அக்ரம்  உரத்த குரலில் கத்தினாள்: ""ஸரீன், உன்னிடம்தான் சொன்னேன்- ஒரு பார்ட்டி வந்திருக்கு!''

அவள் காலை உணவைப் போதுமென்று நிறுத்தி விட்டு கோபத்துடன் எழுந்து, அறைக்குள் சென்றாள். கட்டிலில் படுத்துக் கொண்டு, கால்களை விரித்து வைத்தாள். ஆள் அறைக் குள் வந்தான். தலையே இல்லாத ஒரு ஆள். உரத்த குரலில் சத்தம் போடுவதற்கான தைரியம்கூட இல்லாதவளாக ஸரீன்கோலா இருந்தாள். தேவை நிறைவேறியவுடன், தலை இல்லாத ஆள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினான்.

அன்றிலிருந்து வருபவர்கள் யாருக்கும் தலையே இல்லை. இந்தச் சம்பவத்தை யாரிடமும் கூறுவதற்கான தைரியமும் ஸரீன்கோலாவிற்கு இல்லை. அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. என்று அவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள். பேய் பிடித்திருக்கும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியும். தினமும் இரவு எட்டு மணி ஆகிவிட்டால்,

அவள் சத்தம் போட்டுக் கத்த ஆரம்பிப்பாள். வாடிக்கையாளர்கள் பயந்துபோய், அந்த வழியே வருவதையே நிறுத்திக்கொண்டார்கள். இறுதியில், அவர்கள் அவளை மிதித்து வெளியேற்றினார்கள்.

தினமும் இரவு நேரத்தில் ஸரீன்கோலா இப்படித்தான் பாட ஆரம்பித்தாள். பாட்டுப் பாடினால், பிறகு... அந்த பெண்ணைப் போல சத்தம் போட்டு கத்த வேண்டியதில்லையே! இந்த விஷயம் ஆறு மாதங்கள் தொடர்ந்தது. கஷ்ட காலம்... அவளுடைய குரல் சரி இல்லாமலிருந்தது. கிட்டார் வாசிக்கும் ஒருவன் அவளிடம் சொன்னான்.

""அடியே, நாயே! பாடுவதற்கான குரல் இனிமையே இல்லையே! நீ மற்றவர்களுக்கு தலைவலியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறாய்...''

அதைக் கேட்டபிறகுதான், அவள் குளியலறைக்குள் நுழைந்து பாட ஆரம்பித்தாள்... அரை மணிநேரம் அங்கிருந்து கொண்டு பாடுவாள். "அக்ரம் ஏழு' அதை கேட்பதுபோல காட்டிக் கொள்வது இல்லை. எது எப்படி இருந்தாலும்- ஒவ்வொரு நாளும் முப்பது பேர்களின் விஷயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவள் ஆயிற்றே! எனினும், உஷாராக இருப்பாள். இல்லாவிட்டாலும்- அவள் எப்போதும் உஷார்தான்...

நிலைமை அப்படி இருக்கும்போது, ஒருநாள் அவள் ஒரு ஏழை இளம்பெண்ணை அங்கு அழைத்துக்கொண்டு வந்தாள். ஒருநாள் ஸரீன்கோலா அவளை அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்று, இவ்வாறு கூறினாள்:

""மகளே, நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். யாரிடமாவது அதை மனம் திறந்து கூறவேண்டும். இல்லாவிட்டால் எங்கே பைத்தியம் பிடித்துவிடுமோ என்று தோணுகிறது. ஒரு ரகசியம் என்னை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது!''

அப்போது அந்த இளம்பெண் சொன்னாள். ""ரகசியத்தை வைத்திருப்பவர்கள், அதை மற்றவர்களிடம் கூறிவிடுவது நல்ல விஷயம்தான். என் பாட்டி இமாம் அலியைப் பற்றி சொல்லுவாங்க.... யாரிடமும் எதையும் கூறவில்லை... பிறகு, பாவம்... பாலைவனத்திற்குச் சென்று, கிணற்றுக்குள் தலையை நுழைத்து மனதில் இருக்கும் கவலைகள் எல்லாவற்றையும் கூறுவாராம்...''

""உண்மைதான். நான் அதை உன்னிடம்தான் கூறப்போகிறேன். நான் பார்க்கும் எந்தவொரு ஆளுக்கும் தலை இல்லை. பெண்களுக்கு அல்ல.. ஆண்களுக்கு யாருக்குமே தலை கிடையாது..''

அந்த இளம்பெண் மிகவும் கவனத்துடன் கேட்டாள்: ""உண்மை யாகவா? தலையே இல்லாமல் ஆட்களைப் பார்க்கிறீர்களா?''

""ஆமாம்...''

""அப்படியென்றால், தலை இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.''

""உண்மையிலேயே தலை இல்லாதவர்களாக இருந்தால், மற்ற பெண்களும் அதை பார்க்க வேண்டாமா?''

""அது சரிதான்... அவர்களும் தலை இல்லாதவர்களைத்தான் பார்க்க வேண்டும். ஒருவேளை உங்களைப்போல வெளியே கூறுவதற்கு தைரியமில்லாமல் இருப்பார்கள்.''

இறுதியில்,  இருவரும் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். தலையில்லாத ஒரு ஆளைப் பார்த்தால், ஸரீன்கோலா அதை அந்த இளம் பெண்ணிடம் கூறுவாள். அந்த இளம்பெண் பார்க்க நேர்ந்தால், அதை ஸரீன்கோலாவிடம் கூறவேண்டும்.

ஸரீன்கோலா ஆண்களை தலை இல்லாமல் பார்த்தாள். அதே ஆட்களை அந்த இளம்பெண் தலையுடன் பார்த்தாள்.

மறுநாள் அந்த இளம்பெண் அவளிடம் சொன்னாள்: ""ஸரீன்கோலா, கடவுளைத் தொழுது பரிகாரம் தேடவேண்டும். ஒருவேளை -மண்டை ஓட்டைப் பார்க்க முடியலாம்...''

இரண்டு நாட்களுக்கு விடுமுறை எடுத்து,விட்டு, ஸரீன்கோலா குளியலறைக்குள் சென்றாள். எப்போதும் செய்வதைப் போல, எல்லாரும் போகக் கூடிய பொது இடத்திற்குப் போவதற்குப் பதிலாக, இந்த முறை தான் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு அறைக்குள் அவள் நுழைந்தாள். அங்கு இருந்தால், மற்றவர்களுடன் அரட்டை அடிக்கவோ தமாஷாக பேசிக் கொண்டிருக்கவோ வேண்டியதில்லை. முதுகைத் தேய்த்து விடுவதற்கு ஒரு பணிப்பெண்ணை ஏற்பாடு செய்தாள். அவள் தலையிலிருந்து கால்வரை நீர் ஊற்றிக் குளித்தாள். பிறகு பணிப்பெண்ணிடம் அழுத்தி முதுகைத் தேய்த்து விடும்படி கூறினாள். பணிப்பெண் ஸரீன்கோலாவின் முதுகைத் தேய்த்து விட்டுக்கொண்டிருந்தாள். அதற்குப் பிறகும் ஸரீன்கோலாவிற்கு திருப்தி உண்டாகவில்லை. கடவுளைத் தொழுவதற்கு அந்த சுத்தம் போதாது...

இறுதியில் அந்த பணிப்பெண் குலுங்கிக் குலுங்கி அழுதாள்: ""பெண்ணாகப் பிறந்தவளே! உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு!''

ஸரீன்கோலா அவளை சந்தோஷப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தாள். அவள் தன்னைப் பற்றி மற்றவர்களிடம் கூறிக் கொண்டு திரியக்கூடாதே! உடலுறவு முடிந்த பிறகு, பின்பற்ற வேண்டிய உடல் சுத்தம் சம்பந்தமான விஷயங்களை அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

பணிப்பெண் போன பிறகு, உடலைச் சுத்தம் செய்வதில் ஸரீன்கோலா ஈடுபட்டாள். ஒரு ஐம்பது முறைகள் அவள் அதையே செய்திருப்பாள். உடலை திரும்பத் திரும்ப  தேய்த்ததன் காரணமாக அது பயங்கரமாக எரிந்தது.

ஆடையை மாற்றி அணிந்துகொண்டு, "ஷா அப்துல் ஆஸி' மிற்கு போக ஆரம்பித்தபோது, திடீரென்று கடவுளைத் தொழ வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டானது. அவள் நிர்வாணமாக தொழுகையில் ஈடுபட்டாள். ஆனால், அதை எப்படிச் செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. இமாம் அலி பாலைவன நாட்டிற்குச் சென்று கிணற்றுக்குள் பார்த்து தன்னுடைய மனக் கவலைகளைக் கூறி, அதற்கு தீர்வு கண்டிருந்தால், அவளுடைய விஷயம் ஒரு பிரச்சினையே இல்லை. குளியலறைக்குள் நிர்வாணமாக முழுமையான தொழுகையில் ஈடுபட்ட அவள் இவ்வாறு வேண்டினாள்:

"அலீ, அலீ, அலீ, அலீ, அலீ, அலீ, அலீ, அலீ, அலீ, அலீ....................................'

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவள் அழ ஆரம்பித்தாள். அவள் அலியை அழைத்தவாறு உரத்த குரலில்
அழுதாள்.

யாரோ கதவைத் தட்டினார்கள். பிறகு சத்தம் எழுப்பியவாறு தட்டினார்கள். ஆன்மிக உணர்விலிருந்து விடுபட்ட அவள் கேட்டாள்.

""யார் அது?''

குளியலறையின் பணிப்பெண்... குளியலறையை அடைப்பதற்கான நேரமாகி விட்டது என்று அவள் சொன்னாள்.

நல்ல, சுத்தமான ஆடைகளை அணிந்துவிட்டு, பழைய துணிகளை ஸரீன்கோலா பணிப்பெண்ணிற்குத் தந்தாள். பிறகு அவள் வெளியே வந்து நேராக "ஷா அப்துல் ஆஸிம் மஹா'மை நோக்கி நடந்தாள்.

இரவு நேரம் ஆகிவிட்டதால், மஹாமை மூடிவிட்டிருந்தார்கள். அவள் நிலவு வெளிச்சத்தில் வாசலின் ஒரு மூலையில் உட்கார்ந்து,

அமைதியாக அழுதாள்.

காலையில் மஹாமைத் திறந்தபோது, அவளுடைய கண்கள் அழுது வீங்கிக் காணப்பட்டன. அழுகையை நிறுத்தி விட்டிருந்தாலும், அவள் உள்ளே செல்லவில்லை. உடல் வைக்கோலைப்போல நடுங்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.

அவள் ஒரு கடைக்குள் நுழைந்து காலை உணவைச் சாப்பிட்டாள். அவள் கடைக்காரனிடம் விசாரித்தாள்: ""கோடைக் காலத்தில் குளிர்ந்த நீரைப் பருக வேண்டும் என்று தோன்றினால், எங்கு போக வேண்டும்?''

அவளுடைய அழுது வீங்கிய கண்களைப் பார்த்தபோது, கடைக்காரனுக்கு இரக்கம் தோன்றியது.

""கரஜ் மோசமில்லை...''

அவன் சொன்னான்.

ஒரு காலத்தில் விலைமாதுவாக இருந்தாள் என்ற எந்தவொரு அடையாளத்தையும் இப்போது அவளுடைய முகத்தில் பார்க்க முடியாது. இப்போது அவள் கடலைப் போன்ற ஒரு மிகப் பெரிய இதயத்தைக் கொண்டிருக்கும் இருபத்தாறு வயது உள்ள ஒரு இளம்பெண்... அவள் "கர'ஜை நோக்கிப் புறப்பட்டாள்.


தெருவில் இரண்டு இளம்பெண்கள்


ஒரு சாயங்கால வேளை. இளம்பெண்கள் இருவர் "கர'ஜுக்குச் செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தார்கள். ஒருத்திக்கு இருபத்தெட்டு வயது இருக்கும். இன்னொருத்திக்கு முப்பத்தெட்டு வயது இருக்கும். இருவரும் கன்னிப் பெண்கள்.

அவர்களுக்கு அருகில் ஒரு ட்ரக் வந்து நின்றது. அதற்குள் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். ஓட்டுநரும் அவனுடைய உதவியாளரும் இருவரும் குடித்திருந்தார்கள். பயணியான மூன்றா வது ஆள் மது அருந்தியிருக்கவில்லை. விபத்தைத் தவிர்ப்பதற்காக அவன் அவ்வப்போது ஸ்டியரிங்கைத் தன் கையில் வாங்கி திருப்பிக் கொண்டிருந்தான். பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்தபிறகு, அவன் எல்லாவற்றையும் விதியின் கையில் ஒப்படைத்து விட்டு அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

ஓட்டுநர் வண்டியை நிறுத்தினான். பயணி வண்டியில் உட்கார்ந்து கொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

ஓட்டுநரும் அவனுடைய உதவியாளரும் இளம்பெண்களை நோக்கி நகர்ந்தார்கள். ""எங்கே நடந்து செல்கிறீர்கள், பெண்களே?'' ஓட்டுநர் கேட்டான்.

அதற்கு இருபத்தெட்டு வயது கொண்ட பெண் (அவளுடைய பெயர்: ஃபாஇஸா) பதில் சொன்னாள். ""உழைப்பிற்கு பலன் பெறுவதற்கு... ஆண்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கு... நாங்கள் "கர'ஜிற்குச் சென்றுகொண்டிருக்கிறோம்.''

ஓட்டுநர் மனதிற்குள் என்னவோ சிந்தித்துக்கொண்டு சிரித்தான். ""உண்மையாகவா?''

அவன் அவளுடைய "சாடோ' ரைப் பிடித்துக் கிழித்தான் அவள் உதவிக்காக உரத்த குரலில் அழுதாள்.

சிறிய ஒரு போராட்டத்திற்குப் பிறகு, அவன் அவளை அடக்கினான். உதவிக்காக சத்தம் போட்டுக் கத்திய அவளுடைய வாயை அவன் பலமான கைகளால் அழுத்திப் பிடித்தான். இன்னொரு பெண் (அவளுடைய பெயர்: முனீஸ்) நடைபெற்ற சம்பவங்கள் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தச் சம்பவம் பதினைந்து நிமிடங்களுக்குமேல் நீடிக்கவில்லை. ஆண்கள் எழுந்தார்கள். அங்கு யாரும் வரமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, ஆடையிலிருந்த அழுக்கை மெதுவாகத் தட்டிவிட்டார்கள். பெண்கள் தரையில் கிடந்தார்கள். ஃபாஇஸாவிற்கு அழுகை வந்தது: ""முடியட்டும்...''

ஆண்கள் தட்டுத் தடுமாறி புறப்படுவதற்கு தயாரானார்கள். உதவியாளனுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று தோன்றியது. ""அது ஒரு அசத்தல் சரக்குடா, இஸ்மாயில்!''

""உனக்குக் கிடைக்க வேண்டியது உனக்குக் கிடைத்தது. மற்ற சரக்கு ஒரு போக்கிரிப்பெண்!''

இருவரும் உரத்த குரலில் சிரித்தார்கள். பெண்களிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் ட்ரக்கை நோக்கி நடந்தார்கள். ""ஏதாவது நடந்ததா?'' பயணி கேட்டான். ""நீ உன்னுடைய வேலையைப் பார்.'' ஓட்டுநர் சொன்னான். ""சரி... இருக்கட்டும்... ஏதோ சந்தேகம் தோன்றியது. அதனால் கேட்டேன்...'' பயணி சொன்னான்.

""நீ யார் விசாரிக்கிறதுக்கு? நீ என்ன போலீஸா?''

""இல்லை... நான் ஒரு தோட்டக்காரன். ஆட்கள் எல்லாரும் என்னை நல்ல தோட்டக்காரன் என்று அழைப்பார்கள்.''

ஓட்டுநர் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்: ""நல்ல தோட்டக்காரா! நாங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினோம்..''

ஓட்டுநரும் அவனுடைய உதவியாளரும் உரத்த குரலில் சிரித்தார்கள். உரத்த சிரிப்பு மேலும் பயங்கரமானதாக ஆனபோது. ஓட்டுநரின் கையிலிருந்து வண்டியின் கட்டுப்பாடு இல்லாமல்போனது. ட்ரக் இரண்டு முறைகள் வட்டமடித்து, எதிரில் வந்துகொண்டிருந்த மெர்ஸிடஸ்ஸை விடவில்லை. பிறகு பாதையின் ஓரத்திலிருந்த மரத்தை நோக்கி வேகமாக அது பாய்ந்து சென்றது. முதலில் ஒரு மரத்தில் மோதியது. அதற்கு அந்த அளவு வயது இல்லை. அதற்குப் பிறகு சற்று அதிகமான வயதைக் கொண்ட மரத்தை நோக்கிப் பாய்ந்து சென்று, மல்லாந்து விழுந்தது. பக்கவாட்டு கதவு திறந்து, ஓட்டுநரின் உதவியாளர் கவிழ்ந்து கொண்டிருந்த ட்ரக்கிற்குக் கீழே அழுத்தப்பட்டுக் கிடந்தான். விண்ட்ஷீல்டின் வழியாக தூக்கி எறியப்பட்ட ஓட்டுநர் ஆகாயத்தில் கத்தியவாறு பறந்து கொண்டிருந்தான். விண்ட்ஷீல்டின் வழியாக விட்டெறியப்பட்டாலும், மிகவும் அருகில் உற்பத்தி நடந்து கொண்டிருந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த வைக்கோல், குப்பைகள் ஆகியவற்றுக்கு நடுவில் பயணி விழுந்து தப்பித்துக் கொண்டான்.

காற்றில் பறந்து கொண்டிருந்த ஓட்டுநர் ஒரு மின்சார கம்பியைப் பாய்ந்து பிடித்தான். தொடர்ந்து சிறிய அளவில் நடனம் ஆட ஆரம்பித்தான். நல்ல சம்பவம்தான்! சற்று சத்தம் போட கூட சந்தர்ப்பம் கிடைக்கமால் போன ஓட்டுநரின் உதவியாளரின் உடல், "ட்ரக்'கின் அடியில் சிக்கி, சிதைந்து போனது. பயணி தன் ஆடையில் ஒட்டியிருந்த வைக்கோலையும், அழுக்கையும் தட்டிவிடுவதில் ஈடுபட்டிருந்தான். இரண்டு இறந்த உடல்களையும் பார்த்து, அவன் இவ்வாறு கூறினான்.

"என்ன ஒரு பைத்தியம் பிடித்த உலகம்!'

அழுக்கை நீக்குவதைவிட நல்லது ஒரு குளியல் போடுவதுதான் என்று அவன் நினைத்தான். கழன்று போய் விட்டிருந்த ஷுவை வலது காலுக்குள் நுழைத்து சரி பண்ணிவிட்டு, அவன் "கர'ஜை நோக்கி நடந்தான்.



ஃபாரூக்லாகாவின் பூந்தோட்டம்

ஃபாரூக்லாகா காரின் கருத்த பின்னிருக்கையில் அமர்ந்தி ருந்தாள். ஒஸ்தாவரியும் முஸய்யபும் ஓட்டுநரும் முன் இருக்கையில் இருந்தார்கள். சாயங்காலம் நான்கு மணிக்கு அவர்கள் பூந்தோட் டத்திற்கு வந்தார்கள். ஒஸ்தாவரி சற்று பதைபதைப்புடன் காணப் பட்டான். அந்த மரத்தைப் பார்த்து, விருப்பப்படாமல் தன்னைப் பார்த்து அவள் கோபப்படுவாளோ என்ற குழப்பத்தில் அவன் இருந்தான்.

அந்த ஒரு மரத்தைப் பற்றிய விஷயத்தைத் தவிர, பூந்தோட்டத்தைப் பற்றிய மற்ற அனைத்து விஷயங்களையும் அவன் ஏற்கெனவே அவளிடம் விளக்கி கூறியிருந்தான்.

ஓட்டுநர் கேட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினான். ஒஸ்தாவரி வேகமாக இறங்கி, ஓட்டுநர் செய்வதற்கு முன்பே ஃபாரூக்லாகாவிற்கு கதவைத் திறந்து விட்டான். ஓட்டுநர் வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகிறான். அவனுடைய இறுதி வேலை நாள் அது. உண்மை யிலேயே அன்று அவன் வேலை செய்ய வேண்டிய தேவையே இல்லை. ஆர்வமும் ஃபாரூக்லாகாவிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் அதற்குக் காரணங்கள்...

""நல்ல... தங்கத்தைப் போன்றே இடம்...'' ஒஸ்தாவரி சொன்னான்.

ஃபாரூக்லாகா எதுவும் கூறாமல் ஒஸ்தாவரி, முஸய்யப் இருவருடனும் சேர்ந்து கேட்டை நோக்கி நடந்தாள். கேட்டுக்கு அருகில் வந்ததும், இடது தோளின் வழியாக கழுத்தைச் சற்று திருப்பிப் பார்த்துக் கொண்டே (உம்மாவிடமிருந்து கிடைத்த பழக்கம்) ""இதுவா?'' என்று அவள் கேட்டாள்.""ஆமாம்...'' என்றான் ஒஸ்தாவரி. அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு பெரிய சாவியை வெளியே எடுத்தான்.

அவன் கேட்டைத் திறந்து விட்டு ஒதுங்கி நின்றான். கவனத்துடன் படியின்மீது ஏறி நின்ற ஃபாரூக்லாகா சந்தோஷத்தால் திகைத்துப் போய் நின்றாள். உடன் இருக்கும் ஆண்கள் அதைத் தெரிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை. சரளைக் கற்கள் பரப்பப்பட்ட நடைபாதையின் வழியாக அவள் மெதுவாக நடந்தாள். அவளுடைய கண்கள் பூந்தோட்டம் முழுக்க பயணித்தது.

ஒஸ்தாவரி அங்கு வந்தான். ""தேடிக் கொண்டிருந்த விஷயம் இதுதான்! சில சிறிய ரிப்பேர் வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும்.''

ஃபாரூக்லாகா தலையை ஆட்டினாள். அந்த சரளைக் கற்கள் பரப்பப்பட்டிருந்த பாதை ஒரு வீட்டின் முன்பகுதிக்குச் சென்றது.

அங்கு ஒரு பெரிய குளம் இருந்தது. அதற்கு அருகிலேயே ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது. சுற்றிச் சென்ற பாதை, அந்த வீட்டை நோக்கிச் சென்ற- பல வகையான உருளைக் கற்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட படிகளில் போய் முடிந்தது. வீடு அந்த அளவிற்கு அழகானதாக இல்லை. விலை குறைவானதைப்போல அது தோன்றியது. ஃபாரூக்லாகாவிற்கு ஒரு நிமிடம் அதிருப்தி தோன்றியது.

""சாயம் தேய்த்து பளபளப்பு ஆக்கினால், புத்தம் புது வீட்டைப் போல இருக்கும்.'' ஒஸ்தாவரி சொன்னான்.

ஃபாரூக்லாகா மனதிற்குள் எண்ணிப் பார்த்தாள். ஐடியா அப்படி யொன்றும் மோசமில்லை. எது எப்படி இருந்தாலும் சாளரம் மிகவும் சிறியதாக இருந்தது. அந்த பகுதியில் நிலவிக் கொண்டிருந்த சீதோஷ்ண நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

ஒஸ்தாவரி இன்னொரு சாவியை எடுத்து வீட்டின் கதவைத் திறந் தான். விசாலமான மூன்று அறைகளும் சமையலறையும் குளியலறையும் உள்ள ஒரு தளத்திற்கு அது இட்டுச் சென்றது. அறைகளிலிருந்த சாளரங்கள் பூந்தோட்டத்தை நோக்கித் திறந்தன. சமையலறையின் சாளரமும் குளியலறையின் சாளரமும் வாசலை நோக்கி இருந்தன. ஃபாரூக்லாகா, ""சமையலறை பரவாயில்லை... ஒரு குளியலறைதான் இருக்கிறது. மூன்று அறைகள் போதாது. எனக்கு விருந்தாளிகள் நிறைய இருக்கிறார்கள்'' என்றாள்.

""இங்கே பாருங்க...'' ஒஸ்தாவரி சொன்னான். ""அது நான் முதலிலேயே சொன்ன விஷயம்தான். நல்ல பலமான தரை. சுவர்களில் இரும்பாலான தூண்கள் இருக்கின்றன. இன்னொரு மாடியும் கட்டலாம். அங்கு செல்லக்கூடிய படிகளை இந்த இடத்தில் உண்டாக்கலாம்.'' அவன் ஒரு மூலையைச் சுட்டிக்காட்டி சொன்னான். "தேவைப்பட்டால் இங்கு ஒரு மரத்தை நடலாம். அது வளர்ந்து இரண்டாவது மாடிக்கும் மேல் கூரைக்கும் செல்லும். அப்போது ஒரு அரண்மனையைப்போல பார்ப்பதற்கு இருக்கும்.''

வாழும் இடத்திற்குள் ஒரு மரத்தை வைத்து வளர்க்கும் விஷயத்தை நினைத்து அவள் ஆச்சரியப்பட்டாள். பெருமையால் ஒஸ்தாவரிக்கு மூச்சுவிட முடியாத நிலை உண்டானது. ""அது என்னுடைய ஐடியா...'' அவன் சொன்னான்.

""ஆனால். ஈரமாகி... ஈரமாகி தரை ஒரு வழி ஆகிவிடும்...'' அவள் சொன்னாள்.

வீடு பிடித்திருந்தாலும், ஃபாரூக்லாகா அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஒஸ்தாவரிக்கு முன்னால் அதை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு அவள் படாதபாடு பட்டாள். எனினும், அவள் பகல் கனவு காண ஆரம்பித்தாள். அவள் ஒரு இரண்டாவது மாடியைக் கட்டுவாள் என்பதென்னவோ உறுதி. சமூகரீதியான செயல்கள் பல நிறைந்த சுறுசுறுப்பான வாழ்க்கையே அவளுடைய மனதிற்குள் இருந்தது. டெஹ்ரானில் உள்ள தோழிகள் தன்னை பார்ப்பதற்கு வருவார்கள் என்று அவள் மனதில் நினைத் தாள். அப்படியொன்றும் தோழிகள் அதிகமாக இல்லை. சூடாக இருப்பவனும் தனிமை விரும்பியுமான ஒரு மனிதனுடன் சேர்ந்து வாழ்ந்த முப்பது வருட வாழ்க்கை அவளை பலரிடமிருந்து விலகி இருக்கும்படி செய்து விட்டது. இனி தோழிகளை உண்டாக்கி அழைத்துக் கொண்டு வரவேண்டும். இலக்கிய விஷயங்களில் ஆர்வம் கொண்ட சில நல்ல தோழிகளுடன் பழக வேண்டும். வீட்டை இலக்கிய கூட்டம் நடக்கும் இடமாக மாற்ற வேண்டும். புதினங்களில் ஃபெரஞ்ச் பெண்கள் செய்வதைப்போல...

ஒஸ்தாவரி அவளுக்கு பூந்தோட்டத்தைச் சுற்றிக் காட்டினான். பூந்தோட்டத்தை அக்கறையுடன் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு தோட்டக்காரனை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வருட காலம் சரியான கவனிப்பே இல்லாமல் அது கிடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அவன் அவளுக்கு ஒவ்வொரு மரத்தையும் சுற்றி நடந்து காட்டினான். அவற்றைப் பற்றிய தகவல்களையும் அவளுக்கு விளக்கிக் கூறினான்.

கரஜில் இதைவிட சிறந்த ஒரு பூந்தோட்டத்தைப் பார்க்க முடியாது. அது மட்டும் உறுதி. நல்ல நல்ல தோட்டங்களும் வீடுகளும் இருக்கின்றன. ஆனால், இந்த விலைக்கு இது மிகச்

சிறந்தது. சிறிய சிறிய மெருகேற்றும் வேலைகளைச் செய்த முடித்து விட்டால், இது சொர்க்கத்தைப்போல இருக்கும்!

அவன் வெறும் ஒரு விற்பனை செய்யும் மனிதன் என்ற விஷயம் ஃபாரூக்லாகாவிற்கு நன்கு தெரியும். அதனால் அவன் கூறிய எதையும் அவள் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. வீடு, பூந்தோட்டம்- இரண்டுமே ஒரே பார்வையில் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டன. அவனுடைய விற்பனை சம்பந்தமான தந்திரங்கள் எதுவும் இனிமேல் அவளுக்குத் தேவையில்லை.

இறுதியில் அவர்கள் ஆற்றின் கரைக்கு வந்தார்கள்.

ஒஸ்தாவரி சொன்னான்: ""பார்த்தீர்கள் அல்லவா? இந்தப் பக்கம் சுற்றுச்சுவர் இல்லை. ஆறுதான் எல்லை. நன்கு நீர் ஓடிக் கொண்டிருப்பதால், யாராவது வந்து விடுவார்களா என்ற பயப்பட வேண்டியதில்லை. பிறகு.. இந்த பகுதிகளில் எந்த இடத்திலும் திருடர்களின் தொந்தரவு இல்லை... தெரியுதா?''

""அப்படியா?''

ஃபாரூக்லாகா அங்கு ஒரு மரத்தைப் பார்த்தாள். உண்மையிலேயே இருக்கக் கூடிய மரம்தானா என்று அவளால் உறுதியாகக் கூற முடியவில்லை. "அது யார்?' அவள் கேட்டாள்.

அதற்குப் பிறகு கூறி விடுவதுதான் நல்லது என்று ஒஸ்தாவரி தீர்மானித்தான். ""அது... உண்மையிலேயே அது ஒரு மனிதன்... வாழ்க்கையில் இதுவரை பார்த்தவர்களிலேயே மிகவும் அமைதியான ஒரு மனிதன்...''

""ஓ! அது அங்கு எதை எடுத்துக் கொண்டிருக்கிறது?''

ஒஸ்தாவரி கூறினான்: ""நான் என்ன சொல்வது? இந்த காரணத்தால்தான் அவர்கள் இந்த பூந்தோட்டத்தை குறைவான விலைக்கு விற்கிறார்கள். இந்த விலைக்கு இப்படிப்பட்ட ஒன்று கிடைப்பதென்பது நடக்கக்கூடிய விஷயமல்ல. பிரச்சினையாக இருக்காது என்று நானும் நினைத்தேன். குறிப்பாக கூறுவதாக இருந்தால்- நீங்களும் ஒரு பெண்தானே? பாவம்... இந்த மரம் உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று எனக்குத் தெரியும்.''

ஃபாரூக்லாகா தயங்கித் தயங்கி முன்னோக்கி வந்தாள். ""இது மரம் இல்லையே! ஒரு மனிதானாச்சே!''

""சரிதான்... உண்மையாகக் கூறுவதாக இருந்தால் பூந்தோட்டத்தின் முந்தைய உரிமையாளரின் சகோதரிதான் இந்த அப்பிராணி மரம்.''

""ஆச்சரியமாக இருக்கிறது...''

""சரிதான்... மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மரமாகி பூமியில் தன்னைத்தானே நட்டுக் கொண்டாள்.''

""அப்படி கூறியது சரி அல்ல. மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், மனநல மருத்துவமனைக்கல்லவா கொண்டு சென்றிருக்க வேண்டும்?''

""அங்குதான் பிரச்சினையே... கடந்த மழைக் காலத்தின்போது இவள் காணாமல் போய் விட்டாள். நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேடினார்கள். பார்க்க முடியவில்லை. இறுதியில் கடந்த கோடைகாலத்தின்போது சிறிது சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காக இவள் பூந்தோட்டத்திற்குள் வந்தாள். வந்தவுடன், முட்டாள் பெண் குழி தோண்டி அதில் இறங்கி நிற்பதை எல்லாரும் பார்த்தார்கள். பைத்தியம் பிடித்த பெண் என்பது உறுதியாகி விட்டது. எது எப்படி இருந்தாலும் கற்ற விஷயங்கள் அனைத்தையும் பயன்படுத்தியும், இவளை குழிக்குள் இருந்து எடுக்க முடியணுமே!''

ஒஸ்தாவரி ஒரு பெரிய துணியை எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். ஃபாரூக்லாகாவிற்கு கவலை உண்டானது. ""கேட்கிறேன் என்று வருத்தப்படக் கூடாது. இவள் உனக்கு  சொந்தமா, ஒஸ்தாவரி?''

""இல்லை... உண்மையாகவே. நான் அழுது கிட்டதட்ட இருபது வருடங்கள் இருக்கும். ஏனென்று தெரியவில்லை- இந்த பாவம் பிடித்த... பெண்ணைப் பார்க்கும்போது அழுகை வந்துவிடும்... எவ்வளவு முயற்சி செய்தும் இவளைச் சிறிதுகூட அசைக்க முடியவில்லையே! அந்தச் சமயங்களில் இவள் அவர்களிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்வாள்- "கடவுளை மனதில் நினைத் துக்கொண்டு, என்னை முறித்து விடாதீர்கள். நான் கொஞ்சம் முளைத்துக் கொள்கிறேன்' என்று.''

""அப்படியென்றால் இலைகள் எதுவும் முளைத்தது மாதிரி தெரியவில்லையே!''

""இல்லை... இல்லை... ஆனால், வேர்கள் பிடித்து விட்டிருக்கின்றன. அடுத்த வருடம் ஆகும்போது, இலைகளும் உண்டாகும்.''

""இவளுடைய குடும்பத்தின் நிலை என்ன?''

""என்ன சொல்வது? அவர்கள் எல்லாரும் வெட்கம் கெட்டுப் போய் விட்டார்கள். மற்றவர்களிடம் என்ன கூறுவது? என் மகள், ஒரு மரமாக ஆகி விட்டாள் என்று கூற முடியுமா? யாரிடமும் கூறக்கூடிய விஷயமில்லையே இது! இறுதியில் இந்த விஷயத்தைக் கூறிக்கொண்டு என்னைத் தேடி வந்தார்கள். "கிடைக்கிற விலைக்கு பூந்தோட்டத்தை விற்றுவிட வேண்டும். பெயரை வெளியே சொல்லக் கூடாது.' அவர்கள் போட்ட ஒரே நிபந்தனை இதுதான். நான் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் இந்த விலை எது எப்படி இருந்தாலும், உங்களுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறுவேன்!''

""இதில் என்ன வெட்கக் கேடு இருக்கிறது? மரமாக ஆகி விட்டதில் வெட்கப்படுகிற அளவிற்கு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை...''

""இதில் வெட்கக் கேடு இல்லாமல் வேறு என்ன இருக்கிறது? நிலையான புத்தி இருக்கும் யாராவது இந்த மாதிரி செய்வார்களா? இவளைப் போன்ற போலந்துக்காரிகளைத் தவிர... இவளுடைய சகோதரன் அழுதுகொண்டே என்னிடம் சொன்னான்- "எந்த நிமிடத்திலும் ஆட்கள் மரமான விஷயத்தைத் தெரிந்துகொள்வார்கள். அதற்கும் பிறகு எங்களைப் பற்றி தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேச ஆரம்பிப்பார்கள். அந்த மரத்தின் ஆட்கள், அந்த மரத்தின் பிள்ளைகள் என்று. பிறகு குடும்பத்தைப் பற்றி ஒவ்வொன்றையும் கற்பனை பண்ணி எழுதுவார்கள். ஒரு நூற்றாண்டின் பெயரும் பெருமையும் அத்துடன் இல்லாமல் போகும்' என்று. அவர்கள் பெரிய நிலைமையையும் மதிப்பையும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உறவுகளில் ஒருத்தி மரமாக ஆகி விட்டாள் என்ற விஷயத்தை மற்றவர்களிடம் எப்படிக் கூறுவார்கள்? அரசாங்க அதிகாரியாகவோ மக்களின் பிரதிநிதியாகவோ இருந்தால், ஒரு சின்னமாக ஆக்கி பெருமையாகக் கூறிக் கொண்டு திரியலாம். ஆனால், ஒரு மரமாக ஆகிவிட்டாள் என்ற விஷயம் அப்படிப்பட்டதா? பாவம்... இவளுடைய சகோதரன் சொன்னான்- "இவள் ஒரு வெண்ணெய் தயாரிப்பவளாக இருந்திருந்தால்கூட பிரச்சினையே இல்லை. அது விஷயம் வேறு

ஆனால், மரம்... என்ன சொல்வது என்று எனக்கே தெரியவில்லை...' என்று''

மரத்தைச் சுற்றி ஃபாரூக்லாகா நடந்து பார்த்தான். முஸய்யப்பும் ஓட்டுநரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தூரத்தில் நின்றிருந்தார்கள். அருகில் செல்லக் கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லாமலிருந்தது.

இருபத்தேழு, இருபத்தெட்டு வயது வரக்கூடிய ஒரு பெண்ணாக அது இருந்தது. கிழிந்து போன துணிகளைச் சுற்றிக் கொண்டு, முழங்கால் வரை மண்ணில் புதைந்து கிடந்தது. ஃபாரூக்லாகாவையும் ஒஸ்தாவரியையும் பார்த்துக்கொண்டே எந்தவித சலனமும் இல்லாமல் அது நின்று கொண்டிருந்தது. தான் இப்போது அந்த மரத்தை விரும்ப தொடங்கியிருக்கிறோம் என்று ஃபாரூக்லாகாவிற்குத் தோன்றியது.

ஒஸ்தாவரி தன் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ""நான் இவளுடைய சகோதரனிடம் சொன்னேன்- "நீங்கள் கவலைப் படாதீர்கள். நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு அருமையான பெண்ணை எனக்கு தெரியும். பாவம் மஹ்தொகத்திற்கு பூந்தோட்டத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவங்க பார்த்துக் கொள்வாங்க. வெளியே யாரிடமும் விஷயத்தைக் கூறவும் மாட்டாங்க. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதால், ஒரு குடும்பத்தின் உயர்வான தன்மையைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்' என்று.''

ஃபாரூக்லாகா அவனுடைய பேச்சை கவனம் செலுத்திக் கேட்கவில்லை. திடீரென்று அவளுக்கு ஒரு மிகப் பெரிய எண்ணம் தோன்றியது. இந்த அபூர்வமான மரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி அவள் மிகவும் ஆழமாக அப்போது சிந்தித்துக் கொண்டிருந்தாள். இலக்கியக் கூட்டம் மட்டுமல்ல... ஒரு அரசாங்க அதிகாரியாகவோ, மக்களின் பிரதிநிதியாகவோகூட ஏன் ஆகக் கூடாது? மனித மரத்தைச் சொந்தத்தில் வைத்திருக்கும் ஒரு ஆளைப் பற்றி யாரும் காதால்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஒஸ்தாவரி சொன்னான்: ""நான் ஏற்கெனவே கூறியபடி இன்னொரு மரத்தையும் வீட்டிற்குள் நடவேண்டும். சுற்றிலும் இருக்கும் பகுதியை சுவர் கட்டி மறைத்து விட்டால், அதற்குப் பிறகு வெட்கக் கேடு பிரச்சினையும் இல்லாமல் போய்விடும்.''

ஃபாரூக்லாகா இப்படி சிந்தித்தாள்.

மனிதமரம் இருக்கும் பட்சம், வீட்டிற்குள் இன்னொரு மரத்திற்கான தேவை இல்லை. தன்னுடைய மனமும் சிந்தனையும் உடலும் வேறு யாரிடமும் இருப்பதைவிட சிறந்தவை என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். இந்த அபூர்வமான மரத்தின் அர்த்தம் எதுவும் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. அவளுக்கே

அதைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால், அந்த மரம் தனக்கு புகழைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று அவளுடைய உள் மனம் கூறிக் கொண்டிருந்தது.

""மிஸ்டர் ஒஸ்தாவரி... வீட்டில் இன்னுமொரு மரம் வேண்டாம். இது இப்போது இருப்பதைப்போலவே இதே இடத்தில் இருக்கட்டும். நான் இதே நிலையில் அதை ஏற்றுக் கொள்கிறேன்.''

""நிம்மதி...'' ஒஸ்தாவரி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான்: ""நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்றுதான் இவ்வளவு நேரமும் நான் எதிர்பார்த்தேன். அப்படியொரு சூழ்நிலை உண்டானால், நானே வாங்கிக் கொண்டால் என்ன என்றுகூட சிந்திக்காமல் இல்லை.

ஆனால், எனக்கு ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். பிள்ளைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மரத்தை வேரோடு பிடுங்காமல் இருக்க மாட்டார்கள்.''

ஃபாரூக்லாகா கேட்டை நோக்கி நடந்தாள். ஒஸ்தாவரி கூறியது எதையும் அவள் கவனம் செலுத்திக் கேட்கவில்லை. அவள் நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் அழைத்து சொன்னாள். ""முஸய்யப்,

அக்பர் நகரத்திற்குச் சென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வா.''

""இன்று இரவு இங்கு தங்கப் போகிறீர்களா?'' முஸய்யப் கேட்டான்: ""சும்மாத்தானே கிடக்குது!''

""அதனால் பரவாயில்லை...'' ஃபாரூக்லாகா சொன்னாள்: ""இன்று இரவிலிருந்து நான் இங்குதான் தங்கப் போகிறேன். வேலைகளை கவனிப்பதற்கு ஒரு மேற்பார்வை வேண்டும். மிஸ்டர் ஒஸ்தாவரி, இங்கு எங்காவது கொஞ்சம் பணி செய்யும் ஆட்கள் கிடைப்பார்களா? நாளைக்கு வேலைகள் ஆரம்பிக்க வேண்டும்.''

ஒஸ்தாவரிக்கு ஆச்சரியமாக இருந்தது. ""ஏன் இவ்வளவு அவசரம்? நகரத்திலேயே தங்கிக் கொண்டிருங்கள். நான் மேற் பார்வை பார்த்துக் கொள்கிறேன். உதவிக்கு முஸய்யப் இருக்கிறான் அல்லவா?''

""வேண்டாம்... இங்கேயே தங்கிக் கொள்கிறேன். ஒரே மாதத்தில் வேலைகளை அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.''
யாரோ கேட்டைத் தட்டும் சத்தம் கேட்டது. ஃபாரூக்லாகாவிற்கு முன்பே முஸய்யப் கேட்டை நோக்கி நடந்தான்.

""இப்போது இங்கு தங்கக் கூடாது. கிராமத்தைச் சேர்ந்தவர்கள்... எந்த இடத்தையும் வாசனை பிடித்து போய்க் கொண்டிருப்பவர்கள். பார்த்தீர்கள் அல்லவா? அவர்கள்தான் கேட்டைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.''

""பிரச்சினையில்லை... தொந்தரவு செய்வதைப் பற்றி நான் அவர்களுக்குக் கூறி புரிய வைக்கிறேன்.''

முஸய்யப் கேட்டைத் திறந்தான். அங்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள். ஆண் கேட்டான்.

""மன்னிக்க வேண்டும். உங்களுக்கு தோட்ட வேலை செய்யும் ஆள் தேவையா?''

ஃபாரூக்லாகா முஸய்யபிற்குப் பின்னால் வந்து நின்றாள்.

அவன் பதில் கூறுவதற்கு முன்பு அவள் கேட்டாள். ""என்ன? நீதான் தோட்ட வேலை செய்யும் ஆளா?''

""ஆமாம் இத்தா.. நான்தான்...'' அவன் சொன்னான். ""ஆட்கள் எல்லாரும் என்னை நல்ல தோட்டக்காரன் என்று அழைப்பார்கள். கைராசி இருக்கிறது என்று கூறுவார்கள். நான் ஒரு கொம்பைத் தொட்டால், அது நூறு கொம்புகளாக ஆகும், ஒவ்வொன்றிலும் நூறு மலர்கள் மலரும் என்றெல்லாம் ஆட்கள் கூறிக் கொண்டிருக்கி றார்கள்.''

தன் மனதிற்குள் என்னவோ காட்சிகள் ஓடிக் கொண்டிருப்பதைப் போல ஃபாரூக்லாகாவிற்குத் தோன்றியது. முதலில்- மனிதமரம். இப்போது... இதோ... கைராசி கொண்ட தோட்ட வேலைக்காரன்.

""கட்டட வேலை தெரியுமா?'' அவள் கேட்டாள்.

""எல்லா வேலைகளும் எனக்குத் தெரியும்... எல்லா வேலைகளும்...''

""இது யார்? மனைவியா?'' ஃபாரூக்லாகா கேட்டாள்.

உடன் நின்று கொண்டிருந்த பெண்ணைச் சற்று பார்த்து விட்டு தோட்டக்காரன் சொன்னான். ""இல்லை... கரஜிற்குச் செல்லும் வழியில் எனக்கு இவள் கிடைத்தாள். ஒரு பருவப் பெண்ணைப்போல நின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், உரத்த குரலில் சத்தம் போட ஆரம்பித்தாள். கால்களில் விழுந்தாள். பிறகு... அழ ஆரம்பித்தாள். நான் ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன். எதுவும் பேசாமல் கால்களைத் தடவிக் கொண்டிருந்தாள். இறுதியில் கூறுகிறாள்- ஆறு மாதங்களாக அவள் பார்க்கும் தலை உள்ள ஒரு மனிதன் நான்தான் என்று''.

""பைத்தியம் பிடித்திருக்குமோ?'' ஃபாரூக்லாகா கேட்டாள்.

""இல்லை என்றுதான் தோன்றுகிறது. நான் நடந்து வரும்போது, என்னுடனே சேர்ந்து வந்து விட்டாள். பெயர்- ஸரீன்கோலா. ஒரு முறை கேவலமாக நடந்து கொண்டிருக்கிறாள். இப்போது அதை நினைத்து வருத்தப்படுவதாகக் கூறுகிறாள்.''

""ஸரீன்கோலா, உனக்கு சமையல் பண்ணத் தெரியுமா?''

""தெரியாது, இத்தா.''

""பெருக்கிச் சுத்தம் பண்ணுவதற்கு?''

""தெரியாது...''

""சாப்பாடு பரிமாறத் தெரியுமா''

""தெரியாது...''

""பிறகு... என்ன தெரியும்?''

""எல்லாவற்றையும் நான் கற்றுக் கொள்கிறேன். எனக்கு கதை சொல்லத் தெரியும். நிறைய பாட்டுகள் தெரியும். பிறகு... மற்ற விஷயமும் தெரியும். வயது குறைவுதான். இருந்தாலும், நல்ல பழக்கம் இருக்கிறது...''

ஃபாரூக்லாகா தோட்டக்காரனின் பக்கம் திரும்பினாள். ""உன்னுடைய பெயர் என்ன?''

""பெயரைத் தெரிந்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எல்லாரும் என்னை "தோட்டக்காரன்' என்றுதான் அழைப்பார்கள். நீங்கள் அப்படியே அழைக்கலாம்.''

""உன்னை நான் வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். அப்படியென் றால், இந்தப் பெண்ணை என்ன செய்வது?''

""வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், இத்தா. சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொள்வாள். எல்லாவற்றையும் கற்றுத் தெரிந்து கொள்வாள்.''

நல்ல ஒரு வேலைக்காரியாக அவளை மாற்றிவிட முடியும் என்பதை ஃபாரூக்லாகாவும் நம்பினாள். தனி கிராமத்துக்காரியாக தோன்றினா லும், பார்க்கும்போது மோசமில்லை என்று பட்டது. தொடர்ந்து அவள் முஸய்யப், ஓட்டுநர் இருவரையும் நோக்கித் திரும்பினாள்: ""போய் முடிந்தவரைக்கும் சாமான்களை எடுத்துக் கொண்டு வாருங்கள்... பெட்டிகளும் கார்ப்பெட்களும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு "ட்ரக்'கை ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும். அதுதான் நல்லது.

இன்று இரவுக்குள் சாமான்கள் அவ்வளவையும் இங்கு கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும். மிஸ்டர் ஒஸ்தாவரி, தோட்டக்காரனை அழைத்துக் கொண்டு சென்று கட்டடம் கட்டுவதற்குத் தேவைப்படும் பொருட்களை வாங்குங்க...''

""இத்தா, ஆறு மணி ஆகிவிட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.''

""பேச்சை நிறுத்துங்க மிஸ்டர் ஒஸ்தாவரி. குறிப்பாக- நமக்கிடையே ஒரு ரகசியம் இருக்கிறது அல்லவா? உதவி என்பது இரண்டு பக்கங்களிலும் இருக்க வேண்டும்.''

""சரி... சரி..''

ஃபாரூக்லாகா, ஸரீன்கோலாவின் பக்கம் திரும்பினாள். ""இங்கேயே இரு. தெரியுதா?''

""சரி, இத்தா.''

அவர்கள் சென்ற பிறகு, கதவை யாரோ தட்டுவது காதில் விழுந்தது. ஃபாரூக்லாகா சென்று கதவைத் திறந்தாள். பர்தாவால் மூடியவாறு மிகவும் களைத்துப்போய் காணப்பட்ட இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். ""என்ன வேணும்?'' ஃபாரூக்லாகா அங்கு வந்திருந்த பெண்களிடம் கேட்டாள். கேட்டதுதான் தாமதம், அவர்களில் ஒருத்தி அழ ஆரம்பித்து விட்டாள். வயது சற்று அதிகமாக இருந்த இன்னொரு பெண் அழுகை நிற்பதை எதிர்பார்த்து பொறுமையுடன் காத்திருந்தாள்.

""என்ன வேணும்னு சொல்லுங்க.''

அப்போது அதுவரை எதுவுமே பேசாமல் நின்றிருந்த இரண்டாவது பெண் இவ்வாறு கூறத் தொடங்கினாள்:

""இத்தா, நலமாக இருக்கிறீர்களா? நான்... முனீஸ்- இது என்னுடைய  சினேகிதி- ஃபாஇஸா. நாங்கள் எவ்வளவோ தூரத்திலிருந்து வருகிறோம். மிகவும் களைத்துப் போய் இருக்கிறோம். எங்களுக்கு மோசமான பல விஷயங்களும் நடந்து விட்டன. அனுமதித்தால், நாங்கள் இன்று இரவு இங்கு தங்க விரும்புகிறோம். நாளை வருவது அதன் விருப்பப்படி வரட்டும்.''
""இங்கே பாருங்க... நான் இதோ... இப்போதுதான் இங்கே வந்திருக்கிறேன். ஃபர்னிச்சர்கள் எதுவும் இல்லை. உங்களைப் போன்ற இரண்டு பெண்கள் எங்கும்... எந்த இடத்திலும் பார்க்க முடியாத அளவிற்கு நடப்பதைக் காணும்போது வினோதமாக இருக்கிறது. பார்க்கும்போது நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி யாகத் தெரிகிறது. ஏன் இப்படி தனியாக திரிந்து கொண்டிருக்கிறீர்கள்?''

அப்போது முனீஸ் சொன்னாள்: ""அது ஒரு நீளமான கதை... பிரச்சினை என்னவென்றால்... குடும்ப வாழ்க்கை என்ற இருண்ட குகைக்குள்ளிருந்து விடுதலை பெறவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து நாங்கள் பல இடங்களிலும் சுற்றி பயணித்தோம். புனித இடங்களுக்குச் சென்றோம். கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்- முதலில் நாங்கள் "கரஜ்'ஜைத் தேர்ந்தெடுத்தோம். அங்கு இருக்கும்போது அது நடந்து விட்டது...''

ஃபாரூக்லாகா ஆர்வமாகி விட்டாள். ""வாங்க... இரவில் ஃபர்னிச் சர்கள் வந்து சேர்ந்து விடும். வாங்க... என்ன நடந்தது என்று சொல்லுங்க...''

உள்ளே நுழைந்தவுடன், வந்திருந்த இருவரும் பூந்தோட்டத்தின் குளத்திற்கருகில்  போடப்பட்டிருந்த பெஞ்சில் போய்   உட்கார்ந்தார் கள். ஃபாஇஸா சற்று விசும்பிக் கொண்டிருந்தாள்.

""இப்படி அழக் கூடாது. ஏதாவது நோய் வந்திடும்.' ஃபாரூக் லாகா சொன்னாள். அப்போது ஸரீன்கோலா சொன்னாள்: ""உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அது நல்லது இத்தா. நான் நேற்று பன்னிரண்டு மணி நேரம் அழுதேன். என்னுடைய கண்கள் உண்மையிலேயே இப்போது இருப்பதைப் போல இல்லை. கண்கள் எவ்வளவு பெரியவையாக இருந்தன தெரியுமா? இறுதியில் அழுது

அழுது... இப்போது கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. அழட்டும்....''

""ஃபாஇஸா, உனக்கு என்ன ஆச்சு? ஏதாவது சொல்லு...'' ஃபாரூக்லாகா சொன்னாள்.

அதற்குப் பிறகும் ஃபாஇஸா அழுது கொண்டேயிருந்தாள். அப்போது முனீஸ் சொன்னாள். ""நான் கூறட்டுமா? நாங்கள் இந்தியாவையும், சீனாவையும் போய் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டோம். உலகம் முழுவதையும் பார்க்க வேண்டும். பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அது என்ன, இது என்ன என்று கூறுவதைக் கேட்டு, வாழ்நாள் முழுவதும் வெறுமனே ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு கழுதைகளாக இருக்கக் கூடாது என்று நினைத்தோம்.. அறியாமை மிகப் பெரிய  சுகம் என்று பொதுவாகக் கூறுவார்கள். எது நடந்தாலும், அப்படி இருக்கக் கூடாது.... அறிவியலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். சாலையின் வழியாக நடப்பது ஆபத்தானது என்ற விஷயம் தெரியும். விபத்தை இல்லாமல் செய்வதற்கான தைரியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறுதியில் திரும்பிச் செல்வது ஆட்டுக்குட்டியைப்போல கூட்டத்திற்குத்தான். இனி திரும்பிச் சென்றால்கூட நாய்சொறி பாதித்ததைப்போல விலகி நிற்கச் செய்து விடுவார்கள். அந்த நேரத்தில் முன்னால் இருந்தது இரண்டே சாத்தியங்கள்தான். வெறுத்தொதுக்கி விலகி நிற்கச் செய்பவர்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்வது... இல்லாவிட்டால் பொறுத்துக் கொள்ளாமல் இருப்பது... அதைத் தொடர்ந்து நமக்கென்றிருக்கும் வாழ்க்கையை முடித்துக் கொள்வது...

இறுதியில்- இந்த பழைய சினேகிதி என்னுடைய சகபயணியாக ஆனாள். இவளைத் தனியாக விட்டுச் செல்வதற்கு எனக்கு பயமாக இருந்தது. ஏதாவது ஆபத்தை உண்டாக்கி வைத்து விடக்கூடாதே என்ற பயம்தான். டெஹ்ரானிலிருந்து வெளியேற வேண்டும் என்று திட்டமிட்ட நான் ஏன் கரஜுக்குச் சென்றேன் என்பதற்கான காரணம் உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. டெஹ்ரானைத் தாண்டி மெஹராபாத், ராயி, ரியாவரன் என்று பல இடங்கள் இருந்தனவே என்பதை இப்போதுதான் நான் சிந்தித்துப் பார்க்கிறேன். உண்மையிலேயே அடுத்தடுத்து ஓராயிரம் ஊர்கள் இருக்கின்றன. எனினும், கரஜ் மட்டும்தான் என் மனதில் ஞாபகத்தில் வந்தது. அதைத் தொடர்ந்து சாலையின் வழியே நடந்து சென்று கொண்டிருந்த எங்களுக்கு முன்னால் ஒரு "ட்ரக்'கை நிறுத்திவிட்டு, வெளியில் இறங்கிய ஓட்டுநர்கள் இரண்டு பேரும் எங்களை பலாத்காரம் செய்தார்கள். நான் இதில் பெரிய அர்த்தங்கள் இருப்பதைக் காண்கிறேன். முதலிலேயே இப்படிப்பட்ட போராட்டங்களைச் சந்திக்கக் கூடிய ஏதாவதொரு திறமையை நான் எனக் கென்று கொண்டிருக்க வேண்டும். எனக்கு பதிலாக பாவம்... ஃபாஇஸா சீரழிக்கப்பட்டாள். அந்த நேரத்திலிருந்து இவள் அழுது கொண்டேயிருக்கிறாள். அந்த பலாத்காரச் செயலைத் தொடர்ந்து நான் சில தீர்மானங்களுக்கு வந்திருக்கிறேன். பயணத்தின்போது நடைபெற்ற மிகவும் கசப்பான

அனுபவமாக அது இருந்தது. நான்  நினைத்தேன்- எவ்வளவு இலட்சம் பேர் மூழ்கி இறந்திருக்க, ஒரு ஆள் நீச்சல் கற்றிருப்பான்! ஆட்கள் இப்போதும் மூழ்கி இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியப்பட வைக்கும் உண்மை அதுதான்.  சரி... இருக்கட்டும்... இதைக் கூறியதால் எந்த விதத்திலும் ஃபாஇஸாவிற்கு பிரயோஜனம் உண்டாகப் போவதில்லை!''

ஃபாஇஸா தேம்பித் தேம்பி அழுதாள்: ""நான் ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தேன்... நான் ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தேன்... நான் திருமணம் செய்து கொள்ள வேண்டியவளாச்சே! பெயர் கெட்டுப்போய் விட்டதே! இத்தா, நான் என்ன செய்வேன்?'

அப்போது முனீஸ் சொன்னாள்: ""கேட்டீர்களா? நானும் கன்னிப் பெண்தான். போய் வேலையைப் பார்க்கச் சொல்லுங்க... நாங்கள் ஒரு நேரத்தில் கன்னிப் பெண்களாக இருந்தோம். இப்போது இல்லை. இதில் அழுது கூப்பாடு போடுவதற்கு எதுவுமே இல்லை.''

""தங்கமே! உங்களுக்கு முப்பத்தெட்டு வயது ஆகிவிட்டது. கன்னிப் பெண் அது இதுவென்ற பிரச்சினையெல்லாம் தேவையே இல்லை.

எனக்கு இருபத்தெட்டு வயதுதானே நடக்கிறது! ஒரு கணவனைத் தேடிப் பிடிப்பதற்கு எனக்கு இன்னும் காலம் இருக்கிறது!''

""என்ன ஒரு மரியாதை கெட்டவள்! சினேகிதியின் வயதைப் பற்றி இப்படியா பேசுவது?'' ஃபாரூக்லாகா கூறினாள்.

அப்போது முனீஸ் சொன்னாள்: ""மரியாதை கெட்டவள்

அல்ல! மனதை வாசித்துத் தெரிந்து கொள்ளக்கூடிய திறமை எனக்கு இருக்கிறது என்ற விஷயம் சிலருக்குத் தெரியும். இவள் சிந்திக்க ஆரம்பிக்கும்போதே, அது என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியத் தொடங்கி விடும். விவரம் உள்ளவள்... திறந்த மனதைக் கொண்டவள்!''

""உனக்கு முகம், கண்கள் ஆகியவற்றின் அமைப்பை மாற்றத் தெரியும் அல்லவா? பிறகு ஏன் பழிவாங்கவில்லை?'' ஃபாஇஸா கேட்டாள்.

""ஃபாஇஸா, மனதை வாசிக்கக் கூடிய திறமைதான் எனக்கு இருக்கிறது. பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது.''

""எப்படி!''

""சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தாண்டி, அவர்களுடைய "ட்ரக்' தலைகீழாகக் கவிழ்ந்து விட்டது. பிறகு எதற்கு நான் பழிவாங்க வேண்டும்?''

""அது பொய்... நீ என்ன சொல்கிறாய்? "ட்ரக்' தலைகீழாக கவிழ்ந்து விட்டதா?''

""தங்கமே! மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக மலைகளில் இருக்கும் எளிய வழிகளில் அல்லவா அதற்குப் பிறகு நாம் பயணம் செய்தோம்! எனினும் அந்த ட்ரக் தலைகீழாகக் கவிழ்ந்து விட்டது என்ற விஷயம் எனக்குத் தெரியும்.''

""எப்படித் தெரியும்?''

""அது அப்படித்தான்... மனதை வாசிப்பதற்கு எனக்குத் தெரியும்.''

""மனதை சரியாக வாசிப்பேன் என்கிறாயா?'' ஃபாரூக்லாகா கேட்டாள்.

""ஆமாம், இத்தா. உதாரணத்திற்குக் கூறுகிறேன்- நீங்கள் ஒரு மக்களின் பிரதிநிதியாக ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

அந்த பாவம்... நேற்று வரை ஒரு விலை மாதுவாக இருந்தாள். இப்படி.. எதுவுமே என் கணிப்பிலிருந்து விடுபட்டுபோய்விடாது.''

""இங்கே ஏன் தங்கக் கூடாது?'' ஃபாரூக்லாகா கேட்டாள்.

""கட்டாயம்... கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்- பெண்களால் தனியாக பயணம் செய்ய முடியாத காலமாக இது இருக்கிறதே! ஒன்று உருவமே இல்லாமல் நடந்து திரிய வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். வீட்டிற்குள் கதவை அடைத்துக் கொண்டு என்னால் இருக்க முடியாது. எனினும், பெண் என்ற வகையில் சில நேரங்களில் அந்த மாதிரி இருக்க வேண்டியதிருக்கும். கொஞ்சம் நடப்பேன்... பிறகு, ஏதாவதொரு வீட்டிற்குள் நுழைந்து தங்குவேன். பிறகும் நடப்பேன்... பிறகு... வேறொரு வீட்டில் தங்குவேன்... இந்த விதத்தில் மிகவும் வேகமாக உலகம் முழுவதையும் சுற்றித் திரிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த காரணத்தால்தான் உங்களுடைய அழைப்பை சந்தோஷத்துடன் நான் ஏற்றுக் கொண்டேன்.''

ஃபாரூக்லாகாவிற்கு அளவற்ற சந்தோஷம் உண்டானது. ""கேட்டீர்களா, பெண்களே! இந்த வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. கட்டடம் கட்டும் வேலைகள் தனக்கு நன்கு தெரியும் என்று தோட்டக்காரன் கூறியிருக்கிறான். நாங்கள் இங்கு தங்கவைக்கிற ஒரே ஒரு ஆண்- அவன் மட்டுமே. வீடு உண்டாக்கும் வேலைகள் அனைத்தையும் நாமே செய்வோம்.''

""மிகவும் நல்ல ஐடியா... இதைப் பற்றி எனக்கு முன்பே தெரியும். கடவுள் உதவியுடன் எல்லா காரியங்களும் சிறப்பாக நடக்கும்.'' முனீஸ் கூறினாள்.

ஃபாஇஸா அழுது கொண்டிருந்தாள்.

""இனி என்ன பிரச்சினை?'' ஃபாரூக்லாகா கேட்டாள்: ""கன்னித்தன்மை இல்லையென்றால், உன்னால் வாழமுடியாது என்று நினைக்கிறாயா? கடந்த முப்பத்து இரண்டு வருடங்களாக அப்படியொன்று இல்லாமலே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''

""அப்படியென்றால் எனக்கென்றிருந்த நல்ல பெயர் என்ன ஆவது, இத்தா?'' ஃபாஇஸா கேட்டாள்: ""என்னுடைய உறவினர்களிடமும் கணவனிடமும் நான் என்ன கூறுவேன்? திருமணம் முடிந்த பிறகு, முதலிரவின்போது நான் என்ன செய்வது?''

அப்போது முனீஸ் கூறினாள்: ""திருமணம் முடிந்து, நடந்த விஷயம் கணவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வதற்கு நான் பொறுப்பு. அதைப்பற்றி நினைத்து மனதில் கவலைப்பட வேண்டாம். முகத்தை வேறு மாதிரி ஆக்கக்கூடிய திறமையும் எனக்கு இருக்கிறது என்ற விஷயம் உனக்குத் தெரியுமல்லவா?''

""பிறகு எதற்கு நீ பிசாசுகளான அந்த "ட்ரக்' ஓட்டுநர்களுக்கு முன்னால் அதைக் காட்டவில்லை?''

""தங்க ஃபாஇஸா, இரண்டு முறை மரணமடைந்தும், மீண்டும் உயிருடன் வந்தவள் நான். நான் காரியங்களை வேறொரு வகையில் பார்க்கிறேன். நான் இதை உனக்கு எப்படிக் கூறி புரிய வைப்பேன்? உண்மையாகவே கூறுகிறேன். எனக்கு சிறகுகள் இருந்திருந்தால், நான் பறந்து போயிருப்பேன். கெட்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும்- இரண்டு முறை இறந்தும், என்னுடைய ஆன்மா இப்போதும் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கடவுளின்மீது சத்தியம் பண்ணி கூறுகிறேன். என்னை நம்பு. இந்த கன்னித்தன்மை விஷயமெல்லாம் பெரிய விஷயமே இல்லை. உண்மையாகவே கூறுகிறேன். கணவனைக் கண்டுபிடித்து திருமணம் நடத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. அது வராமல் பார்த்துக் கொள்வதற்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.''

ஃபாஇஸா மனதிற்குள் சாந்தமானாள். ஃபர்னிச்சர்களும், பெட்டிகளும், கட்டடம் கட்ட பயன்படும் பொருட்களும் காத்துக் கொண்டிருக்க, பெண்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கைக் கதைகளை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொண்டார்கள்.


பூந்தோட்டம்

வசந்த காலம் வந்தவுடன், பூந்தோட்டம் உண்மையாகவே பூங்காவனமாக மாறியது. தோட்டக்காரன் கூறியது எந்த அளவிற்கு உண்மை! அவனுக்கு உண்மையிலேயே கைராசி இருக்கத்தான் செய்கிறது. அவன் ஒரு மரக் கொம்பைத் தொட்டால் போதும்,

அந்தக் கொம்பில் ஓராயிரம் மலர் மொட்டுகள் விரிந்து கொண்டிருந்தன.

அவர்கள் வீட்டின் சிறிய சிறிய குறைபாடுகளைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். ஃபாரூக்லாகா வேலை எதுவும் செய்யவில்லை. ஆலோசனைகள் கூறிவாறு அவள் இளவேனிற்காலம் முழுவதும் பூந்தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தாள். தோட்டக் காரன் பெண்களுக்கு வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தான். ஸரீன்கோலா மண்ணைக் குழப்பினாள். முனீஸ் சாயத்தைச் சுமந்து கொண்டு சென்றாள். ஃபாஇஸா கட்டைகளை அடுக்கி வைத்தாள். தோட்டக்காரன் எல்லா வேலைகளையும் மேற்பார்வை பார்த்தான். அந்த மழைக்காலம் முடியும்போது, ஆறு அறைகளும் மூன்று குளியலறைகளும் கொண்ட வீடு தயாராகி விட்டது.

நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்த நாளன்று ஃபாரூக்லாகா வேலைகளைப் பார்த்தவாறு குளத்தின் கரையில் அமர்ந்திருப்பாள். சில நேரங்களில் ஸரீன்கோலாவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைத் தெருவிற்குச் செல்வாள். ஃபாரூக்லாகாவின் ரசனைக்கேற்றபடி வீடு கட்டப்பட்டது.
அவள் ஆலோசனைகள் கூறுவாள். தோட்டக்காரன் அதைச் செயல் படுத்துவான்.

இளவேனிற்காலம் முடிந்ததுடன், வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் முடிவடைந்தன. ஃபாரூக்லாகா, முனீஸுக்கும், ஃபாஇஸாவிற்கும் சேர்த்து ஒரு அறையைக் கொடுத்தாள். பெண்கள் இருவரும் ஃபாரூக்லாகாவுடன் நல்ல நட்புடன் இருந்தார்கள். அவர்கள்தான் வீட்டுக்குள் இருந்த வேலைகளைச் செய்தார்கள். ஃபாஇஸா உணவைச் சமைத்தாள். மற்ற வேலைகளை முனீஸ் செய்தாள். வீட்டுக்குள் செய்யவேண்டிய அலங்காரங்களை ஃபாரூக்லாகா பார்த்துக்கொண்டாள். பூந்தோட்டத்தின் ஒரு மூலையில் சிறிய ஒரு கூரை வீட்டைக் கட்டிக்கொள்வதற்கான அனுமதியை அவள் தோட்டக்காரனுக்குக் கொடுத்தாள். ஸரீன்கோலா உதவினால், தான் அதைக் கட்டி முடிப்பதாக அவன் சொன்னான்.

அந்த வகையில் மஹ்தொகத் மரத்திற்கு எதிரில் தோட்டக்காரன் ஒரு குடிலை உண்டாக்கினான்.

மரத்தில் அப்போதும் காய், கனிகள் எதுவும் உண்டாக ஆரம்பிக்கவில்லை. ஃபாரூக்லாகா குழப்பத்துடன் காணப்பட்டாள். ஆனால், வசந்த காலம் வரும்போது ஏராளமான  பூக்கள் மலரும் என்று கூறி தோட்டக்காரன் அவளைச் சமாதானப்படுத்தினான். ""இதை மற்ற மரங்களைப்போல நினைத்து விடாதீர்கள். இது மனித மரம். மனித முலைப்பால் குடித்து இதை ஊட்ட வேண்டும்''

என்றான் அவன்.

மனித முலைப் பால் எங்கு கிடைக்குமென்று ஃபாரூக்லாகாவிற்கு தெரியவில்லை. தோட்டக்காரன் அவளைச் சமாதானப்படுத்தினான். "கவலைப்படாமல் இருங்க. நான் ஸரீன்கோலாவைத் திருமணம் செய்துகொள்கிறேன். அவள் என்னுடைய குழந்தையைப் பெற்றெடுப்பாள். அப்போது... அந்தப் பாலைக் கொண்டு போய் நான் மரத்திற்குப் புகட்டுவேன்' என்றான் அவன்.

ஒரு "மொல்லாக்காக'வைக் கொண்டு வந்து "நிக்காஹ்' சடங்குகளைச் செய்யவேண்டும் என்று ஃபாஇஸா ஆசைப்பட்டாள். ஆனால், தோட்டக்காரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவை அனைத்தையும் தானே கூறுவதாகவும், அதற்காக ஒரு "மொல்லாக்கா'வின் தேவை இல்லை என்றும் அவன் கூறிவிட்டான். ஃபாஇஸா அந்தச் சடங்கை திருமணமாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

முனீஸ் எதுவும் பேசவில்லை. மனதை வாசித்ததன் மூலம் தான் தெரிந்து கொண்ட விஷயத்தை அவள் யாரிடமும் கூறவில்லை.

அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி ஃபாரூக்லாகா பிரச்சினையை அங்கேயே முடிவுக்குக் கொண்டு வந்தாள். மஹ்தொகத் மரத்திற்கு பால் வேண்டும். தோட்டக்காரன் அதை ஸரீன்கோலாவிடமிருந்து பெற்றுத் தருவதாக பொறுப்பேற்றிருக்கிறான். அப்படி விஷயம் முடிந்து விட்டது!

ஸரீன்கோலா எல்லா நேரங்களிலும் தோட்டக்காரனுடன் தான் இருப்பாள். வேலை செய்வதுகூட அவனுடன் சேர்ந்துதான். கட்டட வேலை, பூந்தோட்டத்தைச் சீர்படுத்துதல், சமையல், தையல் தொடங்கி பலவிதப்பட்ட வேலைகளையும் அவன் இதற்குள் அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தான். அவள் எப்போதும் பூந்தோட்டத்தில் பாட்டு பாடிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்... எதுவுமே கிடைக்கவில்லை. இது ஃபாஇஸாவிற்கு ரசிக்கக் கூடியதாக இல்லை. தான் தரம் தாழ்ந்த ஒருத்தி என்பதாகவும், சிரிப்பது அவ் வளவும் மற்றவர்களைக் கவர்வதற்காக செய்பவை என்பதாகவும் அவள் நினைத்தாள். அவ்வாறு பழக்கப்பட்டவள் அல்ல ஃபாஇஸா. வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவள் சந்தோஷம் நிறைந்தவளாகவே இருந்தாள். எனினும், அமீரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கடினமான துக்கம் மனதில் தோன்றும். அவனுடைய மனைவியாக ஆவது குறித்து அவளுக்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. இப்போது பழைய காதல் தோன்றவில்லை. ஒரு கணவன் வேண்டும் என்றும் தோன்றவில்லை. அது அவளுடைய வெற்றிதான். அவனுடைய மனைவியாக ஆக வேண்டுமென்று மனதில் நினைப்பது கூட அவனை வெற்றிபெற வேண்டும் என்பதற்கு மட்டும்தான்.

ஃபாரூக்லாகா தான் ஒரு மக்களின் பிரதிநிதியாக ஆவதைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள். வேலைகள் அனைத்தும் முடியும்வரை அவள் பொறுமையுடன் காத்திருந்தாள். அது முடிந்த பிறகுதான் முக்கியமான விருந்தாளிகளையெல்லாம் வீட்டிற்கு வரவழைக்க வேண்டும். முனீஸுடன் கலந்து ஆலோசனை செய்ததில் அவள் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். சமூக சேவை செய்யவேண்டு மென்றால், புகழ் பெற்றவராக அந்த நபர்  இருக்க வேண்டும். கவிதைகள் எழுதி பத்திரிகைகளில் அவற்றைப் பிரசுரிக்க வேண்டும் என்பதும் முனீஸின் கருத்தாக இருந்தது. முனீஸின் கருத்து ஃபாரூக்லாகாவிற்கு நல்லதாகப் பட்டது. அவள் இரவும் பகலும் கவிதை எழுதுவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

குளிர்காலம் ஆரம்பிக்கும்போது, வீட்டு வேலைகள் அனைத் தையும் முடிவுக்குக் கொண்டுவந்து, பெண்கள் வசிக்க ஆரம்பித்தார் கள். பார்ட்டி ஹாலை ஃபாரூக்லாகா குஷன்களையும் முத்துவிளக்கு களையும் கொண்டு அலங்கரித்தாள். கவிதைகள் கொண்ட ஐம்பது புத்தகங்களுக்கு அவள் ஆர்டர் கொடுத்தாள். அவற்றை பார்ட்டி ஹாலில் அடுக்கி வைத்தாள். விருந்தாளிகளை சந்தோஷப்படுத்து வதற்காக பட்டாம் பூச்சிகளின் தோற்றத்திலிருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்களை வாங்கி வைத்தாள். பொருட்கள் வைக்கும் அறையில் ஒயின், வோட்கா ஆகியவற்றை வாங்கி வைக்கும்படி கூறினாள். விருந்தாளிகள் மதுபானம் அருந்துவதில் எந்தவித பிரச்சினையும் இருக்கக்கூடாது.

இறுதியாக ஃபாரூக்லாகா விருந்தாளிகளை அழைத்தாள். அவர்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் காலையிலிருந்து இரவு நீண்ட நேரம் ஆகும் வரை அங்கு இருந்தார்கள். வெள்ளிக்கிழமைகளில் ஃபாரூக்லாகா ஒவ்வொரு ஆடுகளாக அறுத்தாள். கசாப்புக்காரன் தோலை உரித்து, சிறு சிறு துண்டுகளாக ஆக்கி, கொத்தி, நறுக்குவான். முனீஸும் ஃபாஇஸாவும் சமையல் செய்வார்கள். ஸரீன்கோலா

அந்த இடத்தைச் சுத்தம் செய்தவாறு, அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள்.

அந்த வீடு எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது. ஃபாரூக்லாகா, மஹ்தொகத் என்ற மரத்தைப் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. இலை முளைக்கும் வரை யாரிடமும் அதைப்பற்றி எதுவும் கூறக் கூடாது என்ற தோட்டக்காரனின் வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு அதற்காக அவள் காத்திருந்தாள்.

பிப்ரவரி மாதம் வந்தவுடன் ஸரீன்கோலா அந்த வீட்டுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டாள். தோட்டக்காரனின் குடிலிலேயே அவள் இருக்க ஆரம்பித்தாள். ஃபாரூக்லாகா அதைப் பற்றி தோட்டக்காரனிடம் விசாரித்தாள். ""ஸரீன்கோலாவுடன் சேர்ந்துதான் நான் தினமும் காலையில் மஹ்தொகத் மரத்தை நனைப்பதற்கான பனித்துளிகளைச் சேகரிப்பதற்காகச் செல்கிறேன். இதுவரை அவள் கர்ப்பிணி ஆகவில்லை, அதனால் முலைப்பால் இன்னும் கிடைக்க ஆரம்பிக்கவில்லை'' என்றான் அவன்.

தோட்டக்காரனின் மனதை வாசிப்பதற்கு இயலாமலிருந்த முனீஸ் அவனுடன் சேர்ந்து உதவிக்காகப் புறப்பட்டாள்.

அதைத் தோட்டக்காரனும் ஏற்றுக் கொண்டான். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூவரும் சேர்ந்து தோட்டத்திலிருந்த மரங்களிலிருந்தும் செடிகளிலிருந்தும் பனித்துளிகளைச் சேகரித்துக்கொண்டு வருவதில் ஈடுபட்டார்கள். தோட்டக்காரன் ரகசியமான ஏதோ ஒரு வழியின் மூலம் அதை மஹ்தொகத் மரத்திற்குக் கிடைக்கும்படி செய்தான்.

மார்ச் மாதம் பிறந்ததும் மரம் பூப்பூக்க ஆரம்பித்தது. பறவை களுடன் சேர்ந்து அது பாட்டுகளைப் பாடியது. பூந்தோட்டம் இசை மயமாக ஆனது. விருந்தாளிகளுக்கு மரத்தைக் காட்ட வேண்டும் என்ற ஃபாரூக்லாகாவின் ஆசை தோட்டக்காரனுக்குச் சரியானதாகப் படவில்லை. ""அதற்கான நேரம் வரவில்லை'' என்றான் அவன்.

அந்த மரத்தைப் பார்க்கக்கூடிய அனுமதி ஃபாரூக்லாகாவிற்கும் கிடைக்கவில்லை. அந்த விஷயத்தில் அவளுக்கு பல நேரங்களில் வெறுப்பும் தோன்றியிருக்கிறது. எனினும், தோட்டக்காரன் கூறியதை அப்படியே அவள் பின்பற்றினாள். அவன் கட்டாயம் தேவைப்படும் காலகட்டம் அது.

கவிதை இயற்றுவதில் ஆர்வம் உள்ளவளாக ஃபாரூக்லாகா இருந்தாள். வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களும், கவிஞர்களும், ஓவியர்களும், எழுத்தாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் அவளின் வீட்டிற்கு வந்தார்கள். எனினும், கவிதை எழுதி வாசித்து புகழ்பெற ஃபாரூக்லாகாவால் முடியவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் முனீஸ் அவளிடம் தன்னுடைய இரக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தையும் தூரப்பார்வையுடன் ஃபாஇஸா பார்த்துக்கொண்டிருந்தாள் உண்மைதான்- முனீஸ் மனதிற்குள் இருப்பதை எங்கே வாசித்து தெரிந்து கொள்வாளோ என்ற சந்தேகத்தின் காரணமாக அவளால் இப்போது சிந்திப்பதற்குகூட பயமாக இருந்தது. எனினும், மனதை வாசிப்பாள் என்ற பயமில்லாத தூர இடம் எதற்காவது முனீஸ் போயிருந்தால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தெளிவாக அவள் சிந்தித்துப்  பார்த்துக்கொண்டிருப்பாள். இறுதியில், எல்லா விஷயங்களும் வெறும் முட்டாள்தனமானவை என்ற முடிவுக்கு அவள் வந்து சேருவாள். கவிதை எழுத வேண்டும் என்ற ஆசையே அந்த வட்ட முகக்காரி முனீஸின் திட்டம்தான். முகத்தை நீளமாக்கிக் கொண்டதிலிருந்து எவ்வளவோ விஷயங்கள் நடந்து முடிந்தும், இப்படிப்பட்ட விலைகுறைவான செயல்களில் அவள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.

ஏப்ரல் மாதம் முடிந்தது. அதற்குப் பிறகும் ஃபாரூக்லாகா கவிதை எழுதவில்லை.

திடீரென்று ஒருநாள் காலையில் பத்து மணிக்கு கூட்டமாக விருந்தாளிகள் பூந்தோட்டத்திற்குள் வேகமாக நுழைந்தார்கள். வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக வரக்கூடியவர்கள்தான்.

ஆனால், இவ்வளவு அதிகமான ஆட்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஃபாரூக்லாகாவிற்கு மொத்தத்தில் பதைபதைப்பு உண்டாகி விட்டது. அவள் முனீஸிற்கும் ஃபாஇஸாவிற்கும் ஒவ்வொரு பொறுப்புகளை ஒப்படைத்தாள். "ஸரீன்கோலாவைத் தேடி பூந்தோட்டத்திற்கு நூறு பேர் வந்திருக்கிறார்கள். அந்த மடத்தனமான பெண் அங்கு... ஒரு இடத்தில் இருந்துகொண்டு தின்று கொண்டிருப்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!' ஃபாரூக்லாகாவிற்கு கோபம் வந்தது. அவள் பைத்தியம் பிடித்தவளைப்போல தோட்டக்காரனை சத்தம் போட்டு அழைத்தாள். இதற்கிடையில் தோட்டக்காரன் எங்கிருந்தோ வந்து நின்றான்.

""உன்னுடைய அந்த மனைவியிடம் இங்கு வந்து உதவியாக இருக்கும்படி சொல்லு. இவர்கள் ஒவ்வொருவரும் வேலை செய்து... வேலை செய்து... முதுகு ஒடிவதைப் பார்க்கிறாய் அல்லவா?''

""முடியாதே, இத்தா... அவள் நேற்று கர்ப்பம் தரித்திருக்கிறாள். விரலைக்கூட அசைக்கக் கூடாது என்கிறார்கள்...''

இப்போதுதான் உண்மையாகவோ ஃபாரூக்லாகாவிற்கு பைத்தியமே பிடித்தது.

""முதலில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உன் மனைவிக்கு கர்ப்பம் தரித்திருக்கிறது என்ற விஷயம் நேற்று இரவு உனக்கு எப்படித் தெரிந்தது? இந்த விருந்தாளிகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?''

""கவலைப்படாதீங்க. மரத்தை வைத்து நாம் பாட்டு பாட வைப்போம். விருந்துக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் பேசாமல் இருந்து விடுவார்கள். அவர்கள் பசியை மறந்து விடுவார்கள். அந்த வகையில் உணவு மிச்சமாகும். இப்போதிலிருந்து கவிதை எழுதும் வரை இனிமேல் யாரையும் அழைக்காதீர்கள். அவர்கள் இங்கே வந்து உங்களுடைய உணவைச் சாப்பிட்டுவிட்டு, எந்தவொரு பயனும் இல்லாமிருந்தால்... அதனால், என்ன பிரயோஜனம்?''

தோட்டக்காரன் சென்றதும், மரம் பாடலைப் பாட ஆரம்பித்தது. பூந்தோட்டத்தில் இருந்த விருந்தாளிகள் மிகவும் அமைதியானவர்களாக ஆனார்கள். ஒரு நீர்த்துளி சொட்டுச் சொட்டாக விழுவதைப்போல அது இருந்தது. எல்லா ஆட்களும் அந்த ஒரு துளியில் அடங்கியிருந்தனர். அது ஒரு கடலாக மாறியது.

அந்த நீர்ப்பெருக்கு பூமியின் தூரத்திற்குள் கீழே இறங்கிச் சென்றது.

அங்கு அது மண்ணின் ஆழத்திற்குள் இரண்டறக் கலந்தது. மண்ணிலும் நீரிலும் கலந்து விட்ட விருந்தாளிகளின் பல லட்சம் கண்ணீர்த் துளிகள் நடனமாட ஆரம்பித்தன. எந்தச் சமயத்திலும் நிற்காத நடனம்... கைகள், கால்கள் ஆகியவற்றின் தாளங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரே தாளமாகி விட்டதைப் போன்ற வேகமான நடனம்... அதனால் பாதிக்கப்பட்ட வேர்கள், மரங்களின் தாளத்திற்கேற்ப அசைய ஆரம்பித்தன. ஆகாயத்தின் மேற்பரப்பிலிருந்து கயிறுகளைப்போல தொங்கிக் கொண்டிருந்த மரங்களின் வேர்கள்...

முனீஸ் ஃபாரூக்லாகாவின் காதில் முணுமுணுத்தாள். ""இங்கே பாருங்க... ஆகாயம் நம்மைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? இதோ வேறொரு ஆகாயம்... ஆகாயத்திற்குள்... ஒரு ஆகாயத்திற்குள்... ஒரு ஆகாயத்திற்குள்... ஒரு ஆகாய....''

கண்கள் மூடியிருப்பதையும், கண்களின் இடைவெளி வழியாக தான் ஆகாயத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதையும் ஃபாரூக்லாகா உணர்ந்தாள். அற்புத பரவசத்தில் மூழ்கிவிட்டிருந்த விருந்தாளிகள் எல்லையற்று நீண்டு போய்க்கொண்டிருந்த மரங்களின் தொடர்ச்சி என்பதைப்போல பின்தொடர்ந்து போவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த காட்சியை ஃபாரூக்லாகா தன் கால்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு ஆனந்தப் பெருக்குடன் பார்த்துக் கொண்டிருந்தாள்... அதோ! இப்போது பச்சை நிறத்தில் மாய காட்சி ஆரம்பமாகிறது.

அங்கு கூட்டமாக அமர்ந்திருந்தவர்கள் பச்சை நிறத்தால் சூழப்பட்டார்கள். இப்போது ஆகாயமும் பூமியும் பச்சை நிறத்தில்... பல வண்ணங்களிலும் பச்சை நிறம் இறங்கியது... ஆட்கள் மூடுபனியில் சிதறிச் சென்றனர். இறுதியாக கலந்து, இல்லாமல் போனார்கள். கடைசியாக- இலைகளின் நுனியில் பனித் துளிகளாக மாறி சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தனர். சாயங்காலம் வரை இது தொடர்ந்தது. இறுதியில்- மனம் அமைதியாக இருந்தது. மரத்தின் இசையால் பைத்திய நிலையில் இருந்த விருந்தாளிகள் சொற்களை இழந்தவர்களாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதற்குப் பிறகு ஃபாரூக்லாகா யாரையும் வீட்டுக்கு அழைக்க வில்லை. தன்னுடைய கவிதையை இயற்றும்வரை, இனி யாரையும் தான் அழைப்பதாக இல்லையென்று அவள் தீர்மானித்தாள். தினமும் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருந்தவாறு கவிதை எழுதுவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

தோட்டக்காரனுடனும், அவனுடைய மனைவியுடனும்தான் முனீஸ் தன்னுடைய அதிக நேரத்தையும் செலவிட்டாள். கர்ப்பிணியாக ஆனபிறகு, ஸரீன்கோலா பேசுவதையே நிறுத்திக் கொண்டிருந்தாள். எப்போதும் சாளரத்திற்கு அருகில் எதுவுமே பேசாமல் ஆற்றைப் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருப்பாள். தினமும் காலையில் முனீஸும் தோட்டக்காரனும் பனித்துளிகளைச் சேகரிப்பதற்காக கிளம்புவார்கள். மரத்திற்கு புகட்டுவதற்கு மத்தியில் ஸரீன்கோலாவிற்கும் கொடுப்பார்கள். படிப்படியாக ஸரீன்கோலாவிடம் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. வீங்கி... வீங்கி வருவதற்கு மத்தியில் அவளுடைய நிறத்திலும் சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவள் மெலிந்து...

மெலிந்து... வந்து கொண்டிருந்தாள். காலப் போக்கில் பிரகாசமாக ஆகிக்கொண்டிருந்த அவளுடைய இன்னொரு பக்கம் நன்றாக தெரிந்தது.

சில நேரங்களில் முனீஸ் பின்னால் போய் நின்றுகொண்டு அவளுடைய உடலின் வழியாக ஆற்றைப் பார்த்துக் கொண்டிருப்பாள். எந்த நேரத்திலும், அவள் ஆற்றின் நீரோட்டத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

பூந்தோட்டத்தின் இன்னொரு மூலையில் ஃபாஇஸா தனிமையில் இருப்பதைப்போல ஆனாள். அவள் உண்டாக்கிய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதற்கோ, பாராட்டவோ விருந்தாளிகள் வருவதில்லை. அந்தப் பகுதியில் எங்கும் முனீஸே இல்லை. தோட்டக் காரன் எங்கோ மறைந்து இருக்கிறான். அவனிடம் சிறிது பேசக்கூட முடியவில்லை. எல்லா நேரங்களிலும் வேலைகளிலேயே அவன் மூழ்கியிருந்தான். தனியாக இருப்பது என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக அவளுக்கு இருந்தது. சில நேரங்களில் அவள் டெஹ்ரானிற்குச் சென்று சற்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவாள். அமீரின் வீட்டுக்கு அருகில் செல்வதைப்போல அவளுடைய பயணம் இருக்கும். கடந்து செல்லும்போது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து தலைகளை ஆட்டிக்கொள்வார்கள்.

கோடை காலத்தின் இறுதியில் கவிதை எழுதுவதிலும் தாளத்திலும் சில வளர்ச்சி நிலைகள் ஃபாரூக்லாகாவிடம் தெரிய ஆரம்பித்தன. அது ஆகஸ்ட் மாதம்... மூன்று மாதங்கள் கடந்த பிறகு ஒருநாள் அவள் அறையைவிட்டு வெளியே வந்தபிறகு, குளத்தின் கரையில் போய் உட்கார்ந்திருந்தாள். முனீஸ் பூச்செடிக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். அப்போது தான் எழுதிய கவிதையை வாசித்துக்காட்டுவதாக கூறி ஃபாரூக்லாகா அவளைத் தான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வரச்சொன்னாள்.

ஃபாரூக்லாகா சொன்னாள்: ""விஷயங்களெல்லாம் சரிதான்.. முனீஸ், கேட்கிறாயா? நன்றாக இருக்கிறது என்று கூறுவதற்கில்லை. எனினும், முயற்சி பண்ணினால் சில வருடங்களில் முதல் தரமான கவிதையைப் படைக்க முடியும்.''
கவிதையைக் கேட்க வேண்டும் போல முனீஸுக்கு இருந்தது.

""கேட்கிறாயா? கவிதை சிறப்பானதாக இல்லை. விருத்தத்தையும் தாளத்தையும் கொண்டு வருவதற்கு ஒரு முயற்சி... அவ்வளவுதான்...''

முனீஸின் வற்புறுத்தல் அதிகமானது.

ஃபாரூக்லாகாவின் உதடு வெட்கத்தால் சிவந்தது. அவள் கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்.

கவிதையை வாசித்து முடித்ததும், ஃபாரூக்லாகா மிகவும்

அமைதியாக இருந்தாள். எதுவும் பேசாமல் முனீஸ் தன் பாதத்தில்  பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தாள். ஃபாரூக்லாகா பதைபதைப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இறுதியில் ஃபாரூக்லாகா சொன்னாள்: ""என்ன தோன்றுகிறது? கவிதை தவறாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், இதற்கு முன்பு நான் கவிதை எழுதியதே இல்லை. முதல் முறையாக எழுதுகிறேன்...''

""அதை இங்கு தாங்க... வாசித்துப் பார்க்கிறேன். வாசித்துக் கேட்டபோது, புரிந்துகொள்ள முடியவில்லை.''

ஃபாரூக்லாகா தாளை அவளுக்கு நேராக நீட்டினாள். முனீஸ் அதை மிகவும் கவனம் செலுத்தி மனப்பாடம் பண்ண ஆரம்பித்தாள். ஃபாரூக்லாகாவின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. கவிதையில் முனீஸுக்கு அப்படியொன்றும் ஈடுபாடு இல்லை என்ற விஷயம் தெரியும். எனினும் மனதை வாசிக்கக்கூடிய திறமை இருக்கிறதே! சில நல்ல விஷயங்கள் இருப்பதைப் பார்க்கவில்லை என்று வெறுமனே தடிக்க முடியாது. அவள் குழப்பத்துடன் இருந்தாள். மரத்தையும் குளத்திலிருந்த நீரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இறுதியில் முனீஸ் கூறினாள்: "சர்க்கரை இல்லாத சர்க்கரைப் பாத்திரம் என்று ஆரம்பத்தில் எழுதியிருப்பதற்கான காரணம் என்ன?''

ஃபாரூக்லாகா இந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந் தாள். அவள் சிறிது புன்னகைத்தாள்: ""உண்மைகளை நான் மிகுந்த கவனத்துடன் பார்க்கிறேன். சர்க்கரைப் பாத்திரமும் அப்படிப் பட்ட ஒன்றுதான். சர்க்கரை இல்லாத சர்க்கரைப் பாத்திரம் பரிதாபத்திற்குரியது...''

முனீஸ் தலையை ஆட்டினாள்: ""ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால், இந்த இரும்புக் கல் இல்லாத செருப்பு குத்தி என்ற வார்த்தை சற்று வினோதமாக இருக்கிறது. இரும்புக் கல், கொல்லனுடன் சம்பந்தப்பட்டது என்று தோன்றுகிறது. செருப்பு தைப்பவனுடன் அல்ல...''

ஃபாரூக்லாகா வாயைப் பிளந்து நின்றுகொண்டிருந்தாள். ""இல்லை... அதற்கு செருப்பு தைப்பவனுடன்தான் தொடர்பு' என்று கூறவேண்டும்போல அவளுக்கு இருந்தது. ஆனால், உறுதியாக அவளால் அதை நினைக்க முடியவில்லை. ""உண்மையாகவா?'

அவள் கேட்டாள்.

""எது எப்படியோ... கொல்லனுடன் தொடர்பு உள்ளது அது என்பதுதான் என் கருத்து...''

""அப்படியென்றால், செருப்பு தைப்பவன் பயன்படுத்தும் பொருளுக்கு என்ன கூறுவது?''

முனீஸ் சிந்தித்தாள். நல்ல ஞாபகசக்தி இருந்தாலும், இப்போது அதைப்பற்றி நினைப்பதாக இல்லை: ""கடவுளே... எனக்குத் தெரியாது.''

""ம்... செருப்பு தைப்பவனை கொல்லனாக மாற்றினால், மொத்தத்தில் குழப்பம் வந்துவிடும்.''

""கொல்லனாக ஆக்கினால், என்ன குழப்பம் வந்து விடப் போகிறது? இப்போது பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளுக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை. உப்புப் பாத்திரம் இல்லாமல் சிரமப்படுபவன், பட்டாசுக்காக ஏங்குவது, கொடுக்கல்- வாங்கல் எந்த வார்த்தையும் ஒன்றோடொன்று சேரவில்லை. இரும்பு வேலை செய்பவனுக்குப் பொருந்துகிற மாதிரி கவித்துவ அழகு கொண்ட வேறு ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்தலாம். அடுத்தது... பாலைவன பிரதேசத்தில் பாம்பு இதயம் கொண்ட உயிரினத்தைப் பற்றிக் கூறும் இடத்தில் பாருங்க... உண்மையிலேயே வாசிப்பவர்களுக்குப் பிடிக்காமல் இருக்காது. எனினும், எனக்கு புரியவில்லை இனி... இப்போது நடனமாடும் இதயத்தைக் கொண்டிருக்கும்  ஆளாக இருந்தாலும்,

அப்படித்தான்...''

ஃபாரூக்லாகா மொத்தத்தில் நொறுங்கிப் போய்விட்டாள். அவளுடைய கனவுகள் இடிந்து போய்விட்டன என்ற விஷயம் முனீஸுக்கு தெரியும்.

""கவிதையைப் பற்றி நினைத்து கவலைப்படக் கூடாது. திறமையை வெளிப்படுத்துவதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. இங்கு நேற்று வந்திருந்த ஒரு ஓவியனின் மனதை நான் வாசித்தேன். உங்களை ஓவியமாக வரைய வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருக்கிறது. வரையட்டும்... நல்ல தொகையைக் கொடுத் தால், உண்மையாகவே அவன் வரையாமல் இருக்க மாட்டான். அதன் மூலம் புகழ்பெற்றவர்களின் உறவைப் பெற முடியும்.

அதைத்தான் சாதித்தாகி விட்டதே! ஆட்களை உண்மையான இதயத்துடன் அணுகவேண்டும். தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கும்  விஷயத்தை அவர்களிடம் கூறுங்கள்... உதவிக்கு இருக்க மாட்டார்கள்.

நொறுங்கிப் போய்விட்ட கனவுகளில் வாழ்ந்து கொண்டிருப் பதை ஃபாரூக்லாகா நிறுத்திக்கொண்டாள். தொடர்ந்து முனீஸ் கூறிய அறிவுரைகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள்.

அடுத்த வாரமே பார்ட்டிகளை ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது. அவள் சொன்னாள்: ""முஸய்யப், அக்பர்- இருவரை யும் வருமாறு கூறு. விருந்து  வேளையில் வேலைக்காரர்கள் இருக்கவேண்டும்.''

அதைத் தொடர்ந்து அது நடந்தது. அடுத்த வாரத்திலிருந்து விருந்தாளிகளின் வரவு ஆரம்பமானது.

உறவினர்களும் நண்பர்களும் தினமும் வர ஆரம்பித்தார்கள். தன் சகோதரியைப் பார்க்க வருவதாகக் கூறிக்கொண்டு அமீர் பல முறை வந்தான். ஆனால், பெரிய ஆளாக ஆவதற்கு அவன் சிறிதும் முயற்சிக்கவில்லை. அவன் மனைவியை தன்னுடன் அழைத்து வரவில்லை. என்ன ஒரு மரியாதை!

""அமீர், ஏன் மனைவியை அழைத்துக்கொண்டு வரவில்லை?'' ஃபாஇஸா கேட்டாள்.

""அவசரமாக வந்தேன்... அது மட்டுமல்ல- இப்படிப்பட்ட விஷயங்களில் அவளுக்கு ஆர்வமும் இல்லை. இல்லத்தரசியாக இருக்கிறாளே!''

""இந்த இல்லத்தரசிகளை நான் பார்க்க விரும்புவதே இல்லை. இல்லத்தரசிகள் சோஷியலாக இருக்க வேண்டும். அவர்கள்தான் தங்களுடைய கணவர்களை சமூகரீதியாக உயர்த்திக்கொண்டு வரவேண்டும். சமையலறைக்குள்ளேயே இருக்க வேண்டியவள் அல்ல. உங்களுடைய விஷயத்தையே பாருங்களேன்...! இப்படி அலுவலகத்தில் ஒரே வேலையை எவ்வளவு காலம் செய்துகொண்டிருப்பீர்கள்? இறுதியில் உயர்வு என்ற ஒன்று வேண்டாமா? முக்கியமான நபர்களுடன் நட்பு உண்டாக்கிக் கொள்வதுதான் அதற்கான வழி. இப்போது நான் நினைத்ததைவிட அதிகமான பெரிய மனிதர்கள் எனக்கு பழக்கமாகி இருக்கிறார்கள். காரியம் நடப்பதற்கு நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும்...''

""உனக்கு அத்தர்சியானைத் தெரியுமா? சென்ற வாரம் இங்கே வந்திருந்தான். உயரம் குறைவான, சிவந்த முகத்தைக் கொண்ட, வழுக்கைத் தலையன்...'' அமீர் கேட்டான்.

""மொனகபியுடன் வந்த அந்த கஞ்சா புகைக்கும் நண்பனைப் பற்றி நீ கூறுகிறாய். அவன் எப்போதும் இங்கேதான்...''

அமீரின் கண்கள் ஒளிர்ந்தன. ஃபாஇஸாவைப் பார்க்கும்போதெல் லாம் அவன் அத்தர்சியானைப் பற்றி விசாரிப்பான். அவனுடன் என்ன தொடர்பு இருக்கிறது என்று அவளும் கேட்பாள். அவ்வாறு வெறுமனே உதவக்கூடிய குணத்தைக்கொண்டவள் அல்ல அவள்.

ஃபாரூக்லாகா ஓவியனின் மாடலாக ஆனாள். எல்லா செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக்கிழமையும் அவளுடைய ஓவியத்தை வரைவதற்காக அவன் பூந்தோட்டத்திற்கு வருவான். அதன்மூலம் ஃபாரூக்லாகாவே பல்வேறு மாறுபட்ட கோணங்களில் இருந்து வரைந்த ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சியை நடத்துவது என்று அவன் தீர்மானித்தான். அந்த வகையில் பத்து கண்காட்சிகள் நடத்துவதாகக் கூறியவுடன், அவனுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது.

பனித்துளிகளைச் சேகரிப்பதற்காக பூந்தோட்டத்தின் ஒரு மூலையில் தோட்டக்காரனுக்கு முனீஸ் உதவியாக இருந்து கொண்டி ருந்தாள். முஸய்யப்பும் அக்பரும் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பெண்களுக்கு வேலை எதுவும் இல்லாத சூழ்நிலை உண்டானது.

குளிர்காலம் வந்தவுடன், பெண்களை அங்கிருந்து அனுப்பி விடுவதைப் பற்றி ஃபாரூக்லாகா சிந்திக்க ஆரம்பித்தாள். காரியங்கள் அனைத்தையும் செய்வதற்கு இப்போது அவளால்தான் முடியும். நவம்பர் மாதத்தில் ஓவியக் கண்காட்சி நடத்துவதாக முடிவு செய்யப் பட்டுவிட்டது. டெஹ்ரானில் ஒரு வீடு ஏற்பாடு செய்து விட்டால், கோடை காலத்தில் பூந்தோட்டத்திலும் குளிர்காலத்தில் நகரத்திலும் தங்கிவிடலாம் என்று அவள் நினைத்தாள். பெண்கள் அவளுக்கு உண்மையிலேயே ஒரு தலைவலியாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.

ஒரு குளிர்கால இரவு வேளையில் பூந்தோட்டம் பிரகாசமாக இருந்தது. முனீஸ் சாளரத்திற்கு அருகில் படுத்துத் தூங்கிக் கொண்டி ருந்தாள். கண்களைத் திறந்தபோது வெளிச்சம். ""அவள் பிரசவித்துக் கொண்டிருக்கிறாள்.'' அவள் உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள்.

முனீஸ் ஆடையை எடுத்து அணிந்துகொண்டு அந்தப் பகுதியை நோக்கி நடந்தாள். பூந்தோட்டம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது. வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்தது. ஒரு உலகத்தின் பிறவி என்பதைப்போல...

பிரகாசமயமாக ஆகிவிட்டிருந்த ஸரீன்கோலாவிடமிருந்துதான் வெளிச்சம் புறப்பட்டிருந்தது.

தோட்டக்காரன் சுவரின்மீது சாய்ந்து அமர்ந்தவாறு க்யான்வாஸ் ஷுவைச் சரி செய்துகொண்டிருந்தான்.

""நாம் போய் பார்ப்போம்...''

முனீஸ் அவனிடம் சொன்னாள்.

""பிரசவம் தனியாக நடக்கும். ஒரு சரியான பெண்ணுக்கு பிள்ளை பெறுவதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை.'' அவன் சொன்னான்.

நேரம் புலர்ந்தபோது, அவள் ஒரு லில்லியைப் பெற்றெடுத்தாள். தோட்டக்காரன் லில்லியைக் கையில் எடுத்துக்கொண்டு ஆற்றின் கரையை நோக்கி நடந்தான். அவன் அங்கு காலையிலேயே ஒரு சிறிய குழியைத் தோண்டி வைத்திருந்தான். குழியில் இருந்த நீர் குளிர்ந்துபோய் மரத்துப் போகச் செய்யும் நிலையில் இருந்தது.

அவன் லில்லியை எடுத்து அந்தப் பனியில் இறக்கி வைத்தான்.

""குளிரில் செத்துப் போய்விடும்.'' முனீஸ் சொன்னாள்.

""சாகாது... வேர் பிடிக்கும்.'' அவன் சொன்னாள்.

ஸரீன்கோலா அறைக்குத் திரும்பி வந்தாள். அவள் படுக்கையில் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். இப்போது அவள் பிரகாசமானவளாக இல்லை. தோட்டக்காரன் அணைத்துக் கொண்டே அவளுடைய தலைமுடியில் தன் விரல்களால் வருடினான். கைகளை முத்தமிட்டான். பாதங்களைத் தடவினான்.

அவன் அவளிடம் ஒரு பாத்திரத்தைத் தந்தான். அவள் அதில் பாலை நிறைத்துக் கொடுத்தாள்.

""இனி நன்றாக கொஞ்சம் தூங்கு...'' தோட்டக்காரன் அவளிடம் சொன்னான். அவன் பாத்திரத்தைக் கையில் எடுத்தான். அவனும் முனீஸும் பூந்தோட்டத்திலிருந்த மஹ்தொகத் மரத்தை நோக்கி நடந்தார்கள். ""மரத்துப் போயிருக்கிறது.'' அவன் சொன்னான்: ""நல்லது. இது தூங்கிக்கொண்டிருக்கும் காலம்... வசந்த காலம் வந்துவிட்டால், பார்த்துக் கொள்... இந்தப் பிறவி அப்படியொன்றைப் பார்த்திருக்காது...''

தோட்டக்காரன் சூரியன் உதயமாகும்வரை மரத்தின் கீழ்ப்பகுதியில் பாலைத் துளித் துளியாக ஊற்றிக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் குடிலை நோக்கி நடந்தான். முனீஸும் மரங்களுக்கு மத்தியில் வீட்டை நோக்கி திரும்பிச் சென்றாள். இரண்டு முறைகள் இறந்தவள்... இப்போது எதைப் பார்த்தும் அவளுக்கு வியப்பு உண்டாகவில்லை. போகும் வழியில் ஒரு மரத்தைப் பார்த்து சற்று குனிந்தாள். ""கொஞ்சம் உதவணும்...'' அவள் சொன்னாள்.

அவளுக்கு விலைமாதுமீது பொறாமை. அவள் எவ்வளவு வேகமாக காரியத்தை நிறைவேற்றியிருக்கிறாள்! ஒரு சிரிப்பை வெளிப் படுத்துவதைப்போல அவ்வளவு எளிதில் அவள் வெளிச்சமாக மாறியிருக்கிறாள். அதன் ரகசியத்தை முனீஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் கேட்டாள்: ""பிரகாசமாக ஆவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?''

அதற்குப் பதில் வரவில்லை.

ஒரு மரமாக ஆகமுடியும் என்ற நினைப்பு எதுவும் அவளுக்கு இல்லை. அது அவளுக்குக் கூறப்பட்டதல்ல. அவள் பிரசவிக்கப் போவதில்லை. தான் இறந்துபோனவள் என்பது அவளுக்குத் தெரியும். காத்திருந்ததன் விளைவை பிரகாசமான அனுபவத்திற்கு கொண்டு போய் சேர்ப்பது காதலே என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

அவள் எந்தச் சமயத்திலும் காதலித்தது இல்லை. அப்போதெல்லாம் பைத்தியம் பிடித்தவளைப்போல இருந்தாள். ஆனால், காதல் என்பது தூரத்திலிருக்கும் ஒரு கடல்... தூரத்தில் இருப்பது... அதே நேரத்தில் அது அருகிலும் இருக்கிறது. ஒரு மரத்தை விரலின் நுனியைக் கொண்டு தொட்டால், சற்று அழுத்தித் தொட்டால், காதல் பிறக்கும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அந்தப் புத்துணர்ச்சியை, தொட்டுப் பார்ப்பதற்கு முன்பே அவள் அறிந்துகொண்டிருக்கிறாள். அவள் அதில் விழவில்லை. எனினும், அது என்னவென்று அவளுக்குத் தெரியும்.

அங்கு... கரஜின் அமைதியில் கட்டுப்பாடு இல்லாத பார்வையை அவள் தெரிந்துகொண்டிருக்கிறாள். அதிர்ஷ்டக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்- அனுபவிப்பதற்கு முன்பே அவள் நடக்கப் போவதை அவள் அறிந்துகொண்டிருப்பாள். அனைத்தும் ஒரு வகையான இனம் புரியாத தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதுதான் பிரச்சினையே. அதனால் அவமான பயத்தால், உண்மையாக உண்டாகப் போகிற சந்தோஷத்தை அழித்து ஒன்றுமில்லாமல் செய்வதுதான் நடந்து கொண்டிருந்தது. ஒரு சாதாரண பெண்ணாக ஆவது எப்படி என்பதுகூட தெரியாத அளவிற்கு சாதாரண பெண். பட்டினி என்றால் என்னவென்று அவளுக்குத் தெரியாது. அதனால் இதற்கு முன்பு சம்பாதிக்கவும் இல்லை; இனி சம்பாதிக்கவும் தேவையில்லை. மண்ணில் இருக்கும் இரைகள் அவளுக்கு பிடிக்காது. ஒரு காய்ந்த இலையின் முன்புகூட அவள் மிடுக்குடன் நின்று கொண்டிருந்தாள். தூக்கணாங்குருவியின் பாட்டுக்கேற்றபடி அவள் தொழுவாள். மலையில் ஏறுவாள். சூரியன் மறைவதை பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள், மறைந்துவிட்ட சூரியனை இரவில் சென்ற பொழுது புலரும் வரை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். அவளுக்கு மண்ணும் கழிவும் ஒரே மாதிரிதான். எனினும் எது ஆகாயம், எது பூமி என்பதை அவள் புரிந்துகொண்டிருந்தாள். அதனால்தான் ஆகாயத்தை பூமியிலும், பூமியை ஆகாயத்திலும் அவள் தேடவில்லை. இறந்து போக வேண்டும் என்ற ஆசை எப்போதும் தன்னுடன் இருந்து கொண்டே இருக்கும் விஷயத்தை அவள் தெரிந்துகொண்டிருந்தாள். அதனால்தான் அவள் இந்த மாதிரி சீரழிந்து கொண்டிருக்கிறாள். அவள் சிந்தித்தாள்: "இந்தக் குழந்தைத்தனம் நிறைந்த அறிவைக் கொண்டு என்னால் என்ன செய்ய முடியும்? எப்படித் தப்பிக்க முடியும்?'

ஃபாரூக்லாகா கண் விழித்தாள். அவள் ஒரு கம்பளி ஆடையை அணிந்துகொண்டு வீட்டின் முன்னால் வந்து நின்றாள். முனீஸைப் பார்த்ததும் சொன்னாள்: ""உள்ளே தாங்க முடியாத அளவிற்கு குளிர்- கதவைத் திறந்து வைத்துவிட்டு போய்விட்டாய்... இல்லையா?''

""மன்னிக்கணும்...'' அவள் சொன்னாள்.

தங்கள் அனைவரையும் வெளியே போகச் செய்ய வேண்டும் என்பது ஃபாரூக்லாகாவின் விருப்பம் என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். ""முன்கூட்டியே தெரிந்துகொள்ளக்கூடிய என்னுடைய இந்த குழந்தைத்தனமான திறமையைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' அவள் கேட்டாள்.

""குழந்தைத் தனமான என்ன திறமை?''

""இதோ... இதுதான்... உதாரணத்திற்கு கூறுகிறேன்- நாங்கள் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதை நான் எப்படித் தெரிந்துகொண்டேன்?''

ஃபாரூக்லாகா தோள்களைக் குலுக்கினாள். முனீஸை எப்படி கையாள்வது என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். மனதை வாசிக்கக் கூடிய அவளுடைய திறமையைப் பார்த்து இனிமேல்

அவளுக்குப் பயமில்லை. அது அவளுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அந்தத் திறமையைப் பயன்படுத்துவதற்கு அந்தப் பெண்ணுக்கு தெரியவில்லை. அதனால் வாழ்க்கையில் சிரமங்கள்தான் உண்டாகியிருக்கின்றன.

""நான் இன்று நகரத்திற்குச் செல்கிறேன்...'' ஃபாரூக்லாகா கூறினாள்: ""வாடகைக்கு ஒரு வீடு எடுத்திருக்கிறேன். எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும், நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்கலாம். அடுத்த கோடை காலத்தில்தான் நான் திரும்பி வருவேன். சாவியை தோட்டக்காரனிடம் கொடுத்துவிடுங்கள். அவன் என்னிடம் தந்து கொள்வான்...''


மஹ்தொகத்

ஒரு பனிக்காலத்தில்தான் மஹ்தொகத் ஆற்றின் கரையில் மரமாக மாறி தன்னைத்தானே நட்டுக்கொண்டாள். குளிர்காலம் முழுவதும் மிகுந்த துயரத்தை அவள் அனுபவித்தாள். கால்கள் மெதுவாக மண்ணில் ஊன்றின. அணிந்திருந்த ஆடைகள் நார் நாராக கிழிந்தன. கிழிந்த துணியில் பாதி நிர்வாண கோலத்தில் அவள் இருந்தாள். மழைக்காலம் வருவது வரை குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். பிறகு... மரத்துப் போனாள். கண்கள் நீரைப் பார்த்துக்கொண்டு எப்போதும் திறந்த வண்ணம் இருந்தன. வசந்தத்தின் ஆரம்பத்தில் உடலிலிருந்த பனி உருகியது. விரல்களில் தளிர் இலைகள் முளைப்பதை
அவள் உணர்ந்தாள். கால் விரல்களிலிருந்து வேர் இறங்கியது. வசந்த காலத்தில் வேர்கள் பூமியின் சக்தியைப் பிடித்து எடுப்பதையும், அது உடல் முழுவதும் பயணிக்கும்போது உரத்து கேட்கும் சத்தத்தையும் அவள் கேட்டாள். வேர்களின் வளர்ச்சியை இரவு, பகலாக அவள் கவனித்தாள்.

இளவேனிற் காலத்தில் பச்சை நிறத்திலிருந்த நீரைப் பார்த்தாள்.

குளிர்காலத்தைத் தொடர்ந்து, மழைக்காலம் வந்தது. அதற்குப் பிறகு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. வேர்கள்
அசைவதை நிறுத்திக்கொண்டன. வளர்ச்சி நின்றது.

குளிர்காலத்தில் பனித்துளிகள் உணவாகக் கிடைத்தன. மரத்துப் போயிருந்தாலும், நீரைப் பார்க்க முடிந்தது- நீலம் கலந்த பச்சை  காலமாக இருந்தது. அவள் நீர்ப் பாடல்களைக் கற்றாள். பாட முயற்சித்தபோது, இதயத்தில் மெதுவாக சந்தோஷம் வந்து நிறைந்தது. அதை அவள் தளிர் இலைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாள். இலைகள் பசுமை பிடித்து பசுமை பிடித்து... வளர்ந்தன.

கோடை காலத்தில் நீருக்கு ஒரு நீல நிறம் உண்டாகும். மீன்களைக் காணலாம்.

பனிக்காலத்தில் குளிர் நிலவியது. ஆகாயம் இருட்டானது. இதயம் சந்தோஷத்தில் திளைத்தது. இதயம் மரத்தின் இயற்கைத் தன்மையாக ஆகிவிட்டிருந்தது. அவள் எல்லாவற்றையும் அங்கு மாற்றிவிட்டாள்.

மழைக்காலம் ஆரம்பமானபோது, முலைப்பால் பருகினாள். இன்பத்தின் ஒரு மிகப் பெரிய அனுபவம் நிறைந்து நின்றது. வசந்தம் முடிவடையவில்லை. எனினும், உடலில் பனிக்கட்டிகள் பிளந்து கொண்டு வந்தன. வேதனையாக இருந்தது. வெடித்துச் சிதறி விடுவதைப் போன்ற ஒரு நிலை அவளுக்கு. கண்களை இமைக்காமல் நீரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். இப்போது நீரோட்டம் நின்று விட்டிருக்கிறது. துளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது. துளிகள்  அசையும்போது, மஹ்தொகத்திற்கு வேதனை... மஹ்தொகத் நீரில் கலந்துவிட்டிருக்கிறாள். இப்போது ஒவ்வொரு துளியின் இதயத் துடிப்பையும் தன்னுடைய உடலில் அவள் உணர்கிறாள். மூன்று மாத காலமாக அவள் மனிதப் பாலைப் பருகிக்கொண்டிருக்கிறாள்.

வசந்த காலத்திற்கு இடையில் எப்போதோ அவளுக்குள் இருந்த மரம் வெடித்துச் சிதறியது. அந்த வெடிப்பு எதிர்பாராத ஒன்றாக இல்லை. அது சாதாரணமாக நடந்தது. உடலின் ஒவ்வொரு உறுப்புகளும், ஒன்று இன்னொன்றை விட்டுப் பிரிவதைப் போன்ற அனுபவம்... மெதுவாக, கவலையுடன் ஒவ்வொரு உறுப்பும் பிரிந்து சென்றது. நிரந்தரமான உருவம்... கடின வேதனை... பிறவிக்கான நேரம் நெருங்கி விட்டதைப்போல... கண்கள் வெறித்துப் பார்த்தன.... இப்போது நீர், துளியாக அல்ல. கலந்து வரும் பொருட்கள்...

அவற்றை மஹ்தொகத்தால் பார்க்க முடிகிறது. நீரில் கலந்திருக்கும் பொருட்களுடன் சேர்ந்து, பிடித்துக்கொண்டு மஹ்தொகத் செல்கிறாள்.

இறுதியில் எல்லாம் முடிந்தது. மரம் முழுமையான வித்துக்களாக... பரிணமித்தது. வித்துக்களின் ஒரு மலை... பலமான காற்று மஹ்தொகத்தின் வித்துக்களை நீரில் கொண்டுபோய் சேர்த்தது.

மஹ்தொகத் நீருடன் சேர்ந்து பயணித்தாள். அவள் அனைத்து உலகத்தையும் சுற்றி வந்தாள்.


ஃபாஇஸா

மழைக்காலத்தில் காற்று மிகவும் சுத்தமானதாகவும் நிர்மலமானதாகவும் இருக்கும். பதினொரு மணிக்கு இருக்கும் அந்த நடை சுவாரசியமாக இருக்கும். ஃபாஇஸாவும் அமீரும் கிட்டத்தட்ட பதினொரு மணி ஆகும்போது, நகரத்தில் நெருக்க நெருக்கமாக இருக்கும் தெருக்களின் வழியாக நடப்பதற்காகச் செல்வார்கள்.

ஃபாஇஸா தினமும் காலையில் கரஜில் இருந்து வருவாள். இருபத்து நான்கு, இஸ்ஃபாந்த் தெருவில் வைத்து இருவரும் ஒன்று சேர்வார்கள். அவன் தன் மனைவியைப் பற்றிய பல குறைகளைக் கூறுவான். அவள் எதுவும் பேசாமல் பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்க மட்டும் செய்வாள். உணவு சமைக்கத் தெரியாது. மிகவும் அலட்சிய குணம், குழந்தையை சரிவர கவனித்து பார்க்கக்கூட அவளுக்குத் தெரியவில்லை. இப்படி...

ஃபாஇஸாவிற்கு அவன்மீது பரிதாபம் உண்டு. அவள் அதை அவனிடம் கூறவும் செய்வாள். பிறகு, சில அறிவுரைகளையும் கூறுவாள்.

குளிர்காலத்தில் ஒருநாள் வேலைக்கு வரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி கம்பெனி பதினைந்து நாட்களுக்கான சம்பளத்தை வெட்டிக் குறைத்தது. அமீர் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அதைத் தொடர்ந்து அவன் சந்திப்பதை சாயங்காலம் ஐந்து மணிக்கு ஆக்கினான்.

கரஜில் இருந்து தினமும் அவள் இருபத்து நான்கு, இஸ்ஃபாந்த் தெருவிற்கு வருவாள். பிறகு பேசிக்கொண்டு நடக்கவோ, திரைப்படத்திற்குச் செல்லவோ, ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிடவோ செய்வார்கள். அந்த விஷயம் அதிக நாட்கள் நீடிக்க வில்லை. வாழ்க்கை மிகவும் வெறுப்பைத் தர ஆரம்பித்தது.

அவர்களுக்குள் இனிமேல் கூறுவதற்கு எதுவுமில்லை என்ற நிலை உண்டானது.

ஒருநாள் அமீர் அவளிடம் சொன்னான்: ""கூறக் கூடாதது என்று தெரியும்... தினமும் நீ கரஜில் இருந்து இந்த மாதிரி வந்து போவது அவ்வளவு நல்லதல்ல. ஏதாவது நடந்து விடுமோ என்பதுதான் என்னுடைய பயமே... கரஜுக்கு பெண்கள் சாலை வழியே பயணிப்பது அந்த அளவிற்கு நல்லது அல்ல...''

""பிறகு, என்ன செய்ய வேண்டும்?''

""தங்குமிடத்தை டெஹ்ரானுக்கு மாற்றிவிட வேண்டும்.''

""யாருடைய வீட்டில்?''

""பாட்டியின் வீட்டில்...''

""அவங்க அனுமதிப்பாங்கன்னு தோன்றுகிறதா? நம்முடைய இப்போதைய வாழ்க்கை முறை எதுவும் கூறினால்கூட அவர்களுக்குப் புரியாது. நான் ஏதோ கெட்டுப்போய்விட்டேன் என்று அவங்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் நடவடிக்கை முன்பு இருந்ததைவிட மோசமாக இருக்கும்.''

""உனக்காக ஒரு அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருவது நல்லதாக இருக்கும்.''

""அமீர், அது என்ன ஒரு மாதிரியான பேச்சு! நான் எப்படிப்பட்ட பெண் என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?''

""சரி... அப்படியென்றால், நாம் தற்காலிக திருமணம் செய்து கொண்டால் என்ன? அப்படிச் செய்தால், ஒரு பிரச்சினையும் இல்லை.''

ஃபாஇஸாவிற்கு தற்காலிக திருமணம் என்ற விஷயம் பிடிக்க வில்லை. எனினும், பதிலெதுவும் கூறவில்லை.

தற்காலிக திருமணம் செய்துகொள்வதற்காக அவர்கள் ஒரு நாள் நோட்டரி பப்ளிக்கின் அலுவலகத்திற்குள் சென்றார்கள். நோட்டரி பப்ளிக் இப்படிக் கூறினார். ""நாங்கள் தற்காலிக திருமணம் நடத்தி தருவதில்லை. நிரந்தர திருமணம் மட்டுமே.'' அதைத் தொடர்ந்து அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். நிலைமை அப்படி இருக்கும்போது, மனைவியைப் பற்றி தேவைப்படும்போது அமீர் அறிவிப்பதற்கு கால அவகாசம் இருக்கிறது அல்லவா?

அன்று இரவு அவர்கள் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள்.

திருமணத்திற்கு மறுநாள் காலையில் அமீர் மிகவும் பதை பதைப்புடன் காணப்பட்டான். அவன் வெறுமனே ஒரு கைக் குட்டையைத் தேடிக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்று தெரியாததைப்போல மனைவியும் நடித்தாள். அமீர் எதுவும் கூறவில்லை. அவன் சாளரத்தின் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க மட்டும் செய்தான். அவன் தன்னுடைய விதியை நினைத்துக் கவலைப்பட்டான். யாரிடம் தன் குறையைக் கூறுவது என்றும் அவனுக்கு தெரியவில்லை.

""நமக்கு இங்கே எங்கேயாவது ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.''

ஃபாஇஸா சொன்னாள்.

""கொஞ்சம் இரு... நான் என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.''

""கடவுளே! இதுதான் சிந்தனையா? சக்களத்தியுடன் வசிப்பதற்கு நான் வருவேன் என்று நினைத்தீர்களா? இல்லவே இல்லை...''

ஃபாஇஸா வீட்டுக்கான தேடலை ஆரம்பித்தாள். ஸல்ஸபீல் சாலையில் உள்ள ஒரு பெரிய கட்டடத்திற்கு அருகில் அவள் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தாள். அமீர் வேலை தேடி அலைந்தான்.

அதைத் தொடர்ந்து  அவனுக்கு ஒரு கம்பெனியில் வேலையும் கிடைத்தது. மோசமில்லாத சம்பளம். புதிய ஒரு வீடு வாங்குவதற்கு அது போதுமானது. ஃபாஇஸா மிஸ்டர் அத்தர்சினை அறிமுகப் படுத்தி வைப்பாள் என்ற எதிர்பார்ப்பில்தான் அனைத்தும்...

அவர்களுடைய வாழ்க்கை நல்லதாகவோ மோசமானதாகவோ இல்லாமலிருந்தது. அது அந்த வகையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.


முனீஸ்

முனீஸ் மூன்று மாதகாலம் தோட்டக்காரனுக்கு உதவியாக இருந்தாள். மரத்திற்கு ஸரீன்கோலாவின் முலைப்பாலைக் கொண்டு ஒன்று சேர்ந்து புகட்டினாள். ஏப்ரல் மாதத்தில் மரத்தைப் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தது.

ஒருநாள் அவள் கவனித்தாள். மரம் முழுமையான வித்துக்களாக பரிணமித்திருந்தது. காற்று வீசியது. காற்று வித்துக்களை நீரில் சிதறச் செய்தது.

தோட்டக்காரன் அவளிடம் சொன்னான்: "முனீஸ், மனிதனாக ஆவதற்கு உனக்கு நேரம் வந்துவிட்டது.''

""நான் வெளிச்சமாக ஆகவேண்டும். வெளிச்சமாக எப்படி ஆவது?'

""இருட்டை ஏற்றுக்கொள்ளும்போது... மற்றவர்களைப்போலவே உனக்கு "ஒத்துப் போவது' என்றால் என்ன என்று தெரியவில்லை. இருட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்... அதுதான் அடிப்படை. வெளிச்சமாக ஆகக்கூடாது... ஒரே நிலையான வடிவம் அது... உன் சினேகிதியைப் பார். தான் ஒரு மரமாக ஆகவேண்டும் என்று அவள் நினைத்தாள். அப்படி ஆகவும் செய்தாள். ஆகியே தீரவேண்டும் என்று சிந்திப்பது கூட சிரமமான விஷயமாக இருக்கவில்லை. கஷ்ட காலத்திற்கு அவள் மனிதனாக இல்லை. மரமாக ஆகிவிட்டாள். பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு ஒரு மனிதனாக வருவதற்காக அவள் இப்போதே முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். இருட்டைத் தேட வேண்டும். ஆரம்பத்தில், ஆழத்தில், வானத்தின் விளிம்பின் ஆழத்தின் ஆழத்தில், உனக்குள், நீ மட்டும்... ஒரு மனிதனாக ஆவதற்கான வழி அது. போய் மனிதனாக ஆகு.''

கண்களை மூடித் திறப்பதற்கு மத்தியில் முனீஸ் ஆகாயத்தை நோக்கி பறந்து சென்றாள். ஒரு கருத்த காற்று அவளை வீசி எடுத்தது. தான் எல்லைகள் இல்லாத பாலைவன பிரதேசத்தில் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

ஏழு வருடங்கள் கடந்து சென்றன. இதற்கிடையில் அவள் ஏழு பாலைவனங்களைத் தாண்டிச் சென்றாள். அவள் களைப்படைந்து, மெலிந்து போனாள். எதிர்பார்ப்பு கையை விட்டு நழுவியது. அவள் அனுபவங்கள் நிறைந்தவளாக ஆனாள்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு அவள் நகரத்திற்கு வந்தாள். குளித்து, நல்ல... சுத்தமான ஆடைகளை அணிந்தாள். ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியையாக வேலையில் சேர்ந்தாள்.


ஃபாரூக்லாகா ஸாதறல்தீவான் கோல்செஹ்ரா

ஃபாரூக்லாகா குளிர்காலம் முழுவதும் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்தாள். ஓவியன் பெரும்பாலும்  அங்கு அடிக்கடி வரக்கூடிய ஆளாக ஆனான். இருபத்து ஐந்து வயது. நிறைய கனவுகள் இருக்கும் பருவம். ஃபாரூக்லாகாவிடம் அவன் தன்னுடைய கனவுகளைப் பற்றி கூறுவான்.

இளவேனிற் காலத்தில் ஃபாரூக்லாகாவின் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க நாள் இரவன்று ஏராளமான கூட்டம். ஆட்கள் நேரில் பார்த்து பாராட்டுகளைத் தெரிவிப்பதற்காகச் சென்றார்கள். "பிரமாதம்' என்றார்கள். அடுத்த நாள் கண்காட்சி நடைபெற்ற இடம் காலியாக கிடந்தது.

ஓவியனின் தன்னம்பிக்கை இழக்கப்பட்டது. குளிர் காலம் முழுவதும் ஃபாரூக்லாகா அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள். வசந்த காலத்தின் வருகையுடன் அவனுடைய அழுகையையும் முனகலையும் கேட்டு அவளுக்கே வெறுப்பாகிவிட்டது. அவனை குருக்களிடம் சேர்ந்து ஓவியக் கலையை கற்றுக்கொள்வதற்காக பணம் கொடுத்து பாரீஸுக்கு அனுப்பி வைத்தாள்.

ஓவியன் சென்றதைத் தொடர்ந்து மீண்டும் அவள் தனியே இருந்தாள். வெறுப்பு உண்டானது. பூந்தோட்டத்திற்கே திரும்பிச் சென்றால் என்ன என்றும் அவள் நினைத்தாள். ஆனால், அங்குள்ள பெண்களுடன் ஒத்துப் போகக்கூடிய பொறுமை அவளுக்கு இல்லாமலிருந்தது.

மரைஹி (ஃபக்ரூத்தீன் ஆஸாத்தின் ஒரு பழைய நண்பன்)

அவளைப் பார்ப்பதற்காக வந்தான். ஃபக்ருத்தீனுடன் அவனுக்கு இருக்கும் நெருக்கம் அவளுக்கு நன்கு தெரியும். இரண்டு பேரும் நாட்கணக்கில் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். ஃபாரூக்லாகா மீது அவனுக்கு மதிப்பு இருந்தது. அவளிடம் இதுவரை தெரிந்திராத ஏதோ ஒரு அபூர்வ திறமை இருப்பதை அவன் பார்த்தான்.

திருமணம் செய்துகொண்டால் என்ன என்று ஒரு எண்ணத்தை அவன் ஃபாரூக்லாகாவின் முன்னால் வைத்தான். அப்படியொரு நிலைமை வந்தால், சமூகரீதியான நன்மைக்காக ஃபாரூக்லாகாவிற்கு தன்னால் உதவ முடியும் என்றான் அவன். அதை ஃபாரூக்லாகா ஏற்றுக்கொண்டாள். அதைத் தொடர்ந்து இருவரும் சமூக காரியங்களில் ஈடுபட்டார்கள். மரைஹி ஒரு மக்களின் பிரதிநிதியாக ஆனான். ஃபாரூக்லாகா அனாதைகளுக்கு உதவுவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாள். மரைஹிக்கு ஒரு விருது கிடைத்தது. ஃபாரூக்லாகா ஒரு அனாதை ஆலயத்தின் அறங்காவலராக நியமிக்கப்பட்டாள். மரைஹி தன்னுடைய செயல்படும் இடத்தை ஐரோப்பாவிற்கு மாற்றினான். ஃபாரூக்லாகா அவனுடன் சேர்ந்து அங்கு சென்றாள்.

அவர்களுடைய இல்லற உறவு சந்தோஷப்படும் வகையில் இருந்தது- வெப்பமோ குளிரோ இல்லாமல்.

ஸரீன்கோலா
ஸரீன்கோலா

தோட்டக்காரனைத் திருமணம் செய்துகொண்டாள்.

அவள் கர்ப்பம் தரித்தாள்.

ஒரு லில்லியைப் பெற்றெடுத்தாள்.

அவள் குழந்தையின்மீது அன்பு செலுத்தினாள்.

அது ஆற்றின் கரையிலிருந்த ஒரு குழியில் வளர்ந்தது.

ஒரு கோடைகால நாளன்று கணவன் சொன்னான்:

""ஸரீன்கோலா, நாம் ஒரு பயணம் சென்றால் என்ன?''

ஸரீன்கோலா வீட்டைப் பெருக்கி சுத்தமாக்கினாள்.

பெட்டியைக் கட்டி தயார் பண்ணி வைத்தாள்.

அவளுடைய கணவன் சொன்னான்:

""ஸரீன்கோலா, நமக்கு ஆடைகள் தேவையில்லை.

உன்னுடைய நகைகளை அங்கேயே வைத்துவிடு.''

நகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவள் கணவனின் கரங்களைப் பிடித்தாள்.

அவர்கள் ஒன்றாகச் சென்று லில்லிக்கு அருகில் இருந்தார்கள்.

லில்லி அவர்களை இதழ்களுக்குள் மூடியது.

புகையாக மாறிய அவர்கள்

ஆகாயத்தில் உயர்ந்து சென்றார்கள்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :