Skip to main content

வாக்குகள் பாதுகாப்பாக இருக்குமா? - அமைதிக் களத்தில் அடாவடி!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

dddd


 
வேளச்சேரி தொகுதியில் வி.வி.பேட் இயந்திரத்துடன் மூன்று இ.வி.எம் இயந்திரங்களைத் தூக்கிச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஓட்டு மெஷின்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

 

திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் கனியாம்பூண்டி கிராமத்தில் நடந்த வாக்குப் பதிவில்... "உதயசூரியன் சின்னத்துக்கான பொத்தானை அழுத்தினால் அந்த ஓட்டு இரட்டை இலைக்கே பதிவானது' என தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டதுடன் சாலை மறியலிலும் இறங்கினர். தி.மு.க. வேட்பாளர் அதியமான் அவசர அவசரமாக ஸ்பாட்டுக்கு வந்தார்.

 

dddd

 

"இயந்திரக் கோளாறு' என்ற விளக்கத்துடன் அந்த மிஷின் அகற்றப்பட்டு, 1 மணி நேரத்திற்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தத் தொகுதியில் அதியமானை எதிர்த்து நிற்பவர் பணபலம் பொருந்திய அ.தி.மு.க. சபாநாயகர் தனபால்.

 

'தொண்டாமுத்தூர் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளில் சரியான முறையில் வாக்குப்பதிவு நடக்கிறதா?' என தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி 127, 127-ஆ சாவடிகளை ஆராய்ந்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்.

 

dd

 

அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அடியாட்களும், வேறுசில நபர்களும், வேலுமணியின் சகோதரர் அன்புவும், சிவசேனாதிபதியை கெட்ட வார்த்தையில் திட்டினர். நன்கு முகமறிந்த நபர் ஒருவர்... "மினிஸ்டரை எதிர்த்தா நிற்கிறாய்? உன் தலையை வெட்டாமல் விடமாட்டேன்' எனச் சொல்லி ஆக்ரோஷமாய் சிவசேனாதிபதியை அடிக்க முற்பட, தி.மு.க.வினர் அவரை பத்திரமாய் வாகனத்தில் ஏற்றியனுப்பினர்.

 

காரை அங்கிருந்து கிளப்பும்போதும்... போலீஸ் லத்தியை வைத்து காரின் பின்புறத்தில் கொலைவெறியோடு தாக்கினர். "தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினரும், பி.ஜே.பி.யினரும் தன் மீதும் தன் காரின் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகவும் இதையெல்லாம் காவல் அதிகாரிகள் சிலம்பரசன், ஜெயக்குமார் வேடிக்கை பார்த்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்...' என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார் சிவசேனாதிபதி.

 

கோவை தெற்குத் தொகுதியில் பி.ஜே.பி.யினர் டோக்கன் சிஸ்டம் மூலம் பண வினியோகம் செய்துகொண்டிருப்பதாய், காங்கிரசின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது. உடனே அங்கே விரைந்த மயூரா ஜெயக்குமார், டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த 3 பேரை விரட்டிப் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவர்களை வண்டியிலேற்றிய தேர்தல் அதிகாரிகள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்... அந்த மூன்று பேரையும் இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்