அரபிக் கடலின் மத்தியில் சிதறிக்கிடக்கும் குட்டி தீவுக்கூட்டம்தான் லட்சத்தீவு (லக்ஷத்வீப் என்றால் மலையாளத்தில் லட்சக்கணக்கான தீவுகள் என்று அர்த்தம்). மொத்தம் 36 தீவுகளைக் கொண்ட இந்த லட்சத்தீவில் தற்போது 35 தீவுகள்தான் உள்ளன. ஒரு குட்டி தீவான பாராலி, சில காலங்களுக்கு முன்னர் கடல் அரிப்பின் காரணமாகக் கடலுக்குள் மூழ்கிவிட்டது. கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த குட்டி தீவுக்கூட்டத்தில் மனித குடியேற்றம் நடைபெற்றது குறித்து பல கதைகளும் வரலாறுகளும் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், ரோம சாம்ராஜ்யத்துடன் அப்போதைய தென்னிந்திய மன்னர்கள் வணிகம் செய்வதற்கு இந்த தீவு பெரும் பங்காற்றியுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
இந்தியாவின் மிகச் சிறிய நிலப்பரப்பு கொண்ட யூனியன் பிரதேசமாக இருக்கும் லட்சத்தீவுக்கு என்று இயற்கையாகவும் அத்தீவுகளில் வாழும் மக்களாலும் பல தனிச் சிறப்புகள் இருக்கின்றன. இந்த தீவுக்கூட்டத்தில் பத்து தீவுகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். 65,000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில் 98 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள், அதிலும் பெரும்பாலானோர் பேசுகின்ற மொழி மலையாளமாக இருக்கிறது. தொடக்கக் காலங்களிலிருந்தே லட்சத்தீவுக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவென்பது வலுவானதாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. மலையாள மொழி மட்டுமின்றி ஆங்கிலமும் அதிகளவில் பேசப்படுகிறது. அதனுடன் திவேகி, ஜெசெரி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும் மீன் பதப்படுத்தும் தொழிலையும், சுற்றுலாவையும் நம்பிதான் இங்கு இருக்கின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் இந்த ஒன்றியத்தில் குற்றச்செயல்கள் என்பவை பெரும்பாலும் காணக்கிடைக்காதவையே.
நமது பள்ளிக்காலங்களில், இந்திய வரைப்படத்தில் அரபிக்கடலின் மத்தியில் சிறு சிறு புள்ளிகளாக நாம் பார்த்துப் பழகிய இந்த லட்சத்தீவு, கடலின் இயற்கை சமநிலையைக் காக்கும் எண்ணற்ற பவளத் தீவுகளையும் கொண்டிருக்கிறது. தீவின் தனிச்சிறப்புகளான இப்படிப்பட்ட இயற்கை வளங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் உண்டு. அது வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, உள்நாட்டவராக இருந்தாலும் சரி. இங்கு செல்வதற்கே அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பின்புதான் சுற்றுலா செல்ல முடியும். அப்படி பொக்கிஷம் போலப் பாதுகாக்கப்பட்ட லட்சத்தீவை, அண்மைக்காலமாக வளர்ச்சி என்கிற பெயரில் மத்திய அரசு சீரழிக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவு பகுதி, மத்திய அரசால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வழக்கமாக ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை ஓர் அரசியல்வாதி இப்பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதே இந்த பிரச்சனையின் தொடக்கப்புள்ளி. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் தினேஷ்வர் சர்மா திடீரென உயிரிழக்க, அவருக்குப் பதிலாக பிரஃபுல் கோடா படேல் என்பவரை இப்பொறுப்பில் நியமித்தது மத்திய அரசு. 2010ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருக்கும்போது அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் பிரஃபுல் கோடா படேல். இவர்தான் தற்போது லட்சத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாகப் பார்க்கப்படுபவர்.
மத்திய அரசு பிரஃபுல் படேலுக்கு லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பொறுப்பினை வழங்குகிறது. பதவிக்கு வந்தவுடனேயே கோவிட் தடுப்புக்கு வைத்திருந்த விதிமுறைகளில் கைவைத்தார் அவர். அதாவது கடந்த வருடம் இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்க, லட்சத்தீவில் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதே இவர் பதவியேற்ற 2020 டிசம்பருக்கு பின்புதான். அதுவரை லட்சத்தீவுக்குள் செல்ல 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பின் ஆர்டி பிசிஆர் சோதனை எடுத்து, அதில் நெகட்டிவ் வர வேண்டும். ஆனால், இவர் பதவிக்கு வந்த பின் லட்சத்தீவுக்குள் நுழைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரேயொரு ஆர்டி பிசிஆர் சோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற்றால் போதுமானது என விதிமுறையை தளர்வுப்படுத்தினார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் டிசம்பரில் இந்த விதிமுறைகளை தளர்வுப்படுத்த, ஜனவரி முதல் லட்சத்தீவில் கரோனா தோற்று அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மே 24க்குள் கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுகள் அங்கு ஏற்பட்டுள்ளன.
இந்த ஒரு நிர்வாகத் திறனற்ற செயல் மட்டுமே, "அவர் பதவி விலக வேண்டும், லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும்" என்று மக்களை கோஷமெழுப்ப வைக்கவில்லை. அவர் லட்சத்தீவை மேம்படுத்தப் போகிறோம் என்று அந்த மக்களுக்குக் கொடுத்த அடுத்தடுத்த ஷாக்கள் தான் இவற்றிற்கான காரணம். மேம்படுத்துதல் என்றால் மக்கள் ஏன் தடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். பிரஃபுல் கொண்டுவந்துள்ள லட்சத்தீவு மேம்பாட்டு வரைவுத் திட்டத்தில் மக்களின் வாழ்வை அசைத்துப்பார்க்கும் வகையிலான பல திட்டங்களுள்ளன; அரசுக்குத் தேவை என்றால் யார் வைத்திருக்கும் நிலங்களையும் கையப்படுத்தலாம் என்பது உட்பட. கிட்டத்தட்ட அங்கிருக்கும் நிலங்கள் அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்குச் சொந்தமானது. இதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் அலுவலகங்களில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களைப் பலரை திடீரென வேலையைவிட்டுத் தூக்கிவிட்டு, குஜராத்தைச் சேர்ந்த பலருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கேரளாவுக்கும் இந்த தீவுக்கும் நிறையத் தொடர்பு உண்டு என்று மேலே சொல்லியிருந்தோம், அந்த தொடர்புகளுள் ஒன்று ஃபீப்; அதையும் தடை செய்ய பிரஃபுல் படேல் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
பள்ளி, அங்கன்வாடிகளில் கொடுக்கப்பட்ட அசைவ உணவு நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் படகுகள், வலைகள், படகுகளைப் பராமரிக்கத் தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றைக் கடல் பாதுகாப்புப் படையினர் சூறையாடியுள்ளனர். சுற்றுலா செல்வதற்கே அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்த லட்சத்தீவை சுற்றுலா தளமாக மாற்றத் திட்டமிட்டு, அதற்காக மது பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு லட்சத்தீவில் மதுவுக்கு அனுமதி இல்லை. அதேபோல, குற்றம் ரேட் மிகவும் சொற்பமாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசத்தில் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்தி சிஏஏ-வுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களை அடக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். கேரள பெய்பூர் துறைமுகத்துடன் வணிக தொடர்பு வைத்திருந்த லட்சத்தீவை தற்போது மடைமாற்றி பாஜக ஆளும் கர்நாடகாவின் மங்களூருக்கு திருப்பிவிட்டுள்ளது இந்த புதிய நிர்வாகம். அதேபோல, இரண்டு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் யாரும் இந்த தீவில் நடைபெறும் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற ஒவ்வொரு காரணமும் லட்சத்தீவின் இயற்கையில் தொடங்கி பண்பாடு, கலாச்சாரம் வரையில் அனைத்தையும் அழிக்க அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளது. "மத்திய அரசு ஒவ்வொரு சமூகத்தையும் இனத்தையும் சரிக்குச் சமமாக நடத்துகிறோம் என்கிறது. அதே அரசுதான் இதுபோன்று செயல்பாடுகளால் மக்களை வஞ்சிக்கிறது" எனக்கூறும் இப்பகுதி மக்களுக்கு, தற்போது அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இப்படி, இவர்கள் ஒவ்வொருவரின் ஆதரவும், தங்கள் கலாச்சாரத்தையும், இயற்கையையும் காப்பதற்கான அம்மக்களின் அரசியல் போராட்டத்திற்கு தினந்தினம் உயிரூட்டிக்கொண்டிருக்கிறது.