Skip to main content

சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மாணவியின் இறுதிச் சடங்குகள் முடிந்தது. இதன் பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த செல்போன் பதிவில், மேலும் இரண்டு பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.   

 

incident



இந்நிலையில் ஐஐடி மாணவர் சங்கத்தினர் சென்னை ஐஐடி முன்பு இந்த சம்பவத்தில் உள்ள உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் உதவி ஆணையர் சுதாகர் இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது காவல் ஆணையர் விஸ்வநாதன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 4 பேராசிரியர்கள் உட்பட 22 பேரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. 

 

incident



 

professor



தேர்வில் தோல்வி மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறினாலும், உண்மையான பிரச்சனை என்ன என்று இதுவரை எந்த ஒரு வெளிப்படையான தகவல்களும் வருவதில்லை, இதில் அரசாங்கமும் எந்தவிதமான அக்கறையும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாக எழுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டும் இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதே தெரியவில்லை. இந்த நிலையில் 2016 முதல் வெளியான செய்திகளின் அடிப்படையில் 9 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதில் இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 2018ம் ஆண்டு மலப்புரத்தைச் சேர்ந்த ஷாகுல் கோர்நாத், வருகை பதிவேடு பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 2019ல் மட்டும் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 

incident



ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்டெக் மாணவர் கோபால் பாபு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக என போலீஸார் கூறியிருந்தனர். பின்னர் ஜார்கண்ட்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவர் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவின. 2018ம் ஆண்டு டிசம்பரில் அதிதி சிம்ஹா என்ற இயற்பியல் உதவிப் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.


அவர் இறப்பிற்கு காரணம் குடும்பப் பிரச்சினை என கூறப்பட்டது. இதுதவிர ஒரு ஆய்வு மாணவர், 2 பட்டதாரி மாணவர்கள், ஒரு ஊழியரின் மனைவி ஆகியோரும் சென்னை ஐஐடியில் 2016ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை வைத்து பார்த்தால் 2016 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 9 பேர் இறந்துள்ளனர். அதாவது 3 ஆண்டுகளில் 9 பேர் இறந்துள்ளது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை ஐஐடி கல்லூரியில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் பேராசிரியர்கள் மாணவர்களிடையே நடந்து கொள்ளும் விதம் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.