Skip to main content

காவிரி பிரச்சனையில் மறுசீராய்வு அல்லது புதிய வழக்கு...: விஜயதாரணி பேட்டி

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

 

vijaya dharani


காவிரி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி காவிரி தீர்ப்பு பற்றி நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரின் அளவு 14.75 கன அடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இது வஞ்சிக்கப்பட்ட போக்காகவே பார்க்க முடிகிறது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்முறையீடு இல்லாவிட்டாலும் மறுசீராய்வு என்ற ஒன்று உள்ளது. எனவே தமிழக அரசு மறுசீராய்வுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், சட்டமன்றத்தில் மறுசீராய்வை விவாதப்பொருளாக்கி அனைத்து கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமித்த தீர்மானமாக்கி உச்சநீதிமன்றத்தில்  மறுசீராய்வுக்கு வழிசெய்யவேண்டும். 
 

ஐந்தாண்டு சூழ்நிலை அறிக்கை (weather report) மற்றும் வரப்போகும் இரண்டாண்டிற்கான நீராதார சூழ்நிலைகளை பற்றிய அறிக்கையை தயாரித்து காவிரி தீர்ப்பில் மறுசீரவாய்வு பற்றிய புரிதலை உருவாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதை விரைந்து அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் நடுநிலையாக செயல்பட்டு தமிழகத்திற்கான நலன்களை பெற்றுத்தரவேண்டும். மழைக்காலங்களில் பெறப்படும் உபரி நீரை உபரிநீராகவே காண்பிக்க வேண்டும், மழைக்காலங்கள் அற்ற சூழ்நிலையில் பாசனத்திற்க்கும்  குடிநீருக்கும் நீதிமன்ற தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ள உரிய அளவு நீரை வழங்கிடவேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் உரிய நீரை பெற்றுத்தர வழிசெய்ய வேண்டும் மற்றும் உறுதிப்படுத்த வேண்டும்.
 

இந்த பிரச்சனையை மறுசீராய்வின் மூலம் சரிசெய்ய முடியும். இல்லையெனில் புதிய வழக்கை அரசு தொடுக்கலாம், மேல்முறையீட்டுக்கான சாத்தியக்கூறுகள் இனி இல்லை. எனவே மறுசீராய்வு அல்லது புதிய வழக்கு மட்டுமே சாத்தியப்படும் என தெரிவித்துள்ளார்.