Skip to main content

ட்விட்டர் கருத்து மோதல்... சச்சினுக்கு என்ன தகுதி இருக்கு? - எவிடென்ஸ் கதிர் கேள்வி!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

hk

 

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு இந்தியப் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக சச்சின் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு எவிடென்ஸ் கதிர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரின் கருத்து வருமாறு,

 

"டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தற்போது சர்வதேசப் பிரபலங்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்வர் முதலானவர்கள் எல்லாம் அந்தப் பிரபலங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. விவசாயிகளுக்கு ஆதரவாக எப்படி மற்ற பிரபலங்கள் இருக்கிறார்களோ அதைப் போல நீங்கள் வேண்டுமானால் மோடிக்கு ஆதரவாக இருக்கலாம். அதில், தவறு இருப்பதாக யாரும் நினைத்துவிடப் போவதில்லை. ஆனால், இந்திய இறையாண்மையில் அடுத்தவர்கள் எப்படித் தலையிடலாம் என்று ட்வீட் பதிவிடுகிறார் என்றால், அவருடைய அறிவு அவ்வளவுதான். 

 

எது இறையாண்மை என்ற கேள்வி இருக்கிறது. இந்திய இறையாண்மையை யார் மீறுகிறார் என்ற கேள்வி முதலில் நமக்கு எழுகிறது. ஒட்டுமொத்த விவசாயிகளும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், கொல்லப்பட்டு வருகிறார்கள், பட்டினி கிடக்கிறார்கள். இந்தியாவே செய்வதறியாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் யார் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு. நீங்கள் வேண்டுமானால் அதுபற்றி பேசாமல் இருங்கள். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக அவர்கள் என்ன செயல்பட்டார்கள். அப்படிப் பார்த்தால் சர்வதேச கருத்துரிமைக்கு எதிராக நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்கள் விவசாயிகளிடம் போய் நின்றீர்களா? உங்களுக்கு ஆட்சியாளர்கள் முக்கியம். அதையும் தாண்டி இங்கு பாஜக என்பது மட்டும் இந்தியா கிடையாது. இங்கே இந்தியா என்பது விவசாயிகள். இந்தியா என்பது தொழிலாளர்கள். இந்தியா என்பது இங்கே இருக்கின்ற அடித்தட்டு பெண்கள், இந்தியா என்பது இங்கே இருக்கிற தலித்துகள். உங்களைப் போன்ற சொகுசான நபர்களும், கார்ப்பரேட்டுகளும் இந்தியா கிடையாது. 

 

அங்கே விவசாயிகள் சோறு திங்காமல் கடும் குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அவர்களின் பிரச்சனை என்னவென்று முதலில் தெரியுமா? உங்களுக்கு விளையாடத் தெரிந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்கள். உங்களுக்கு எதுக்கு அரசியல். இதுக்கு மட்டும் எதுக்கு வாயைத் திறக்குறீர்கள். உங்களுக்கு இறையாண்மையைப் பற்றி கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது. இந்திய இறையாண்மை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது. ஆனால், தற்போது அவ்வாறு செயல்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. அப்படி இருக்கையில் உங்களுக்கு எந்தத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டு விவசாயிகள் பிரச்சனையில் கருத்துத் தெரிவிக்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.