Skip to main content

திரிபுரா தீர்ப்பு எப்படி இருக்கும்? சிவப்பைத் தொட முடியுமா காவி?

Published on 16/02/2018 | Edited on 17/02/2018

நாளை மறுநாள் திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கப் போகிறது. அந்த மாநிலத்தில் 2013 சட்டமன்றத் தேர்தலில் 1.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது.

 

பாஜக அணுகமுறை என்றால் அது நேர்மையாகவா இருக்கும்? வழக்கம்போல பொய்யும் புனைச்சுருட்டும்தான் அதன் மூலதனமாக இருக்கிறது. கட்சியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சியையும், திரிணாமுல் காங்கிரஸையும் விலைக்கு வாங்கி தனது கட்சியாக்க பார்க்கிறது.

 

சட்டமன்றத்தில் ஒரு இடம்கூட இல்லாத பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, எதிர்க்கட்சி வேஷத்தை போட்டிருக்கிறது. இதற்காக அந்தக் கட்சி கொஞ்சம்கூட வெட்கமோ கூச்சமோ படவேயில்லை.

 

Manik

 

மாநிலத்தில் மூன்றுமுறை முதல்வராக இருந்தாலும் கையில் வெறும் ஆயிரத்து 500 ரூபாயை மட்டுமே வைத்திருக்கிற எளிமையான மக்கள் முதல்வரை வீழ்த்த, பணத்தை வாரியிறைக்கிறது பாஜக.

 

திரிபுரா கணக்குப்படி, 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 36 சதவீத வாக்குகளைப் பெற்று, 10 இடங்களை மட்டும் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 46 சதவீத வாக்குகளுடன் 50 இடங்களை கைப்பற்றியது. பாஜக 1.5 சதவீத வாக்குளைப் பெற்றிருந்தது.

 

இப்போது அந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று கூறுகிறது என்றால் எந்த நம்பிக்கையில் பேசுகிறது?

 

கார்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக பிரிவினை அமைப்பு ஒன்றை உருவாக்கி, பழங்குடியின மக்களை திசைதிருப்புகிறது. தேசபக்தி, தேசியவாதம் பேசும் பாஜக தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்பின் அரசியல் முகத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது.

 

பழங்குடி மக்களுக்கு பண ஆசை காட்டுகிறது. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களிடம் படாடோபத்தை புகுத்தி படமெடுத்து ஆட நினைக்கிறது. ஆனால், இதையெல்லாம் தனது அமைதியான பிரச்சார யுத்தியால், மக்களுடனான நெருக்கத்தால் முறியடிக்க முடியும் என்று முதல்வர் மாணிக் சர்க்கார் நம்புகிறார்.

 

1.5 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கத் தேவையான 31 இடங்களை பாஜக பெற முடியுமென்றால், அந்த வாக்குகள் எங்கிருந்து வரும். காங்கிரஸிலிருந்தா? திரிணாமுல் காங்கிரஸிலிருந்தா என்பது தெரியவில்லை.

 

பக்கத்து மாநில ஆட்களைக் கூட்டிவந்து கூட்டம் காட்டும் பாஜக, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திரிபுராவில் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, ஒடுக்கப்பட்ட உரிமையிழந்த மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி எழுப்பிய வரலாற்றை மாணிக் சர்க்கார் கூறுகிறார். பழங்குடியின பெண்களையும், ஆண்களையும் அவர் சக தோழர்களாக பாவித்து பிரச்சாரம் செய்கிறார். பாஜக என்பது ரத்தத்தை உறிஞ்சும் அடிப்படைவாதக் கொள்கையைக் கொண்ட கட்சி என்று கூறுகிறார். வசந்தகாலத்தில் வரும் அரிதான சில பறவைகளைப் போல இன்று வருவார்கள். பின்னர் அவர்களைத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி உங்களுக்கு மத்தியிலேயே இருக்கிற கட்சி என்று அவர் பேசுகிறார்.

 

நாள் ஒன்றுக்கு 5 கூட்டங்களில் பேசும் மாணிக் சர்க்கார் ஏற்கெனவே இருக்கிற வாக்கு வங்கியை தக்கவைத்தாலே, ஆட்சியையும் தக்கவைப்பார் என்பது உறுதி என்கிறார்கள்.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.