Skip to main content

காலத்தால் அழியாத தீரன் சின்னமலை 'பன்ச்'!

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

 

1756ஆம் ஆண்டு கொங்குநாட்டைச் சேர்ந்த  ஈரோடு அருகே உள்ள காங்கேயம், மேலைப்பாளையத்தில் தீர்த்தகிரி சர்க்கரை என்பவர் பிறந்தார். இவர் வளரும் போதே போர் கலைகளான வில்வித்தை, சிலம்பாட்டம், வாள் பயிற்சி, மல்யுத்தம்  ஆகிய அனைத்திலும் கைதேர்ந்தவராக திகழ்ந்தார். அப்போது கொங்குநாடு, மைசூர் அரசரான ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹைதர் அலியின் திவான் முகமது அலி கொங்கு நாட்டில் உள்ள பொது மக்களிடம் வரிப்பணம் வசூல்செய்து, மைசூர் அரசரிடம் கொடுத்து வந்தார். பொது மக்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் வரியின் அளவு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்கு இருந்துள்ளது. கோபமடைந்த தீர்த்தகிரி இதற்கு ஒரு வழிசெய்ய வேண்டுமென்று, வசூலித்த வரியை சங்ககிரி மலை வழியாக மைசூருக்கு எடுத்துச்செல்லும்போது அதை வேட்டையாடி ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார். திட்டம் போட்டதுபோன்றே பல மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மக்களின் வரிப்பணத்தை தனது நண்பர்களுடன் வேட்டையாடினார் தீர்த்தகிரி. அப்போது திவான் முகமது அலி," யார் நீ?" என்று தீர்த்தகிரியிடம் கேட்க, அதற்கு அவரோ,"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னன் ஹைதர் அலியிடம் போய் சொல்" என்று கூறியுள்ளார். அத்தருணத்திலிருந்து கொங்கு நாடு முழுவதும் மக்களுக்கு பரிச்சயமான பெயர்தான் சின்னமலை. அன்றே அவர் கூறியதாகச் சொல்லப்படும் இந்த வாக்கியம் இன்றும் தமிழகமெங்கும், முக்கியமாக கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்றது. பெற்றோரால் தீர்த்தகிரி சர்க்கரை என்று வைக்கப்பட்ட பெயர் தீரன் சின்னமலையாக மாறியது இந்த சங்ககிரிமலை கோட்டையில்தான்.

 

theeran

 

பின்னர், ஆங்கிலேயர்களின் கை தமிழகத்தில் ஓங்க ஆரம்பித்தது. தமிழகத்தில் ஒவ்வொரு மூலையிலும் சிற்றரசர்கள் பகையின் காரணமாக ஒன்றுகூடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறுபடைகளுடன் போரிட்டனர். அதே பகையின் காரணமாக ஆங்கிலேயர்களுடன் கைகோர்க்கவும் செய்தார்கள் சில சிற்றரசர்கள். இப்படியெல்லாம் செய்யும்போது தீரன் சின்னமலை மட்டும் யோசிக்காமல் திப்பு சுல்தானுடன் கூட்டணி வைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். சின்னமலையாக மாறியதற்குக் காரணமாக இருந்தவர் ஹைதர் அலி அரசர், திப்பு சுல்தானின் தந்தைதான் இவர். பழைய பகையை நினைக்காமல் இவர்கள் இருவரும் தங்களின் ஒரே எதிரி ஆங்கிலேயர்கள்தான் என்று முடிவு செய்து கூட்டணி வைத்து போர் செய்தார்கள். இந்தக் கூட்டணி மூன்று மைசூர் போர்களில் தொடர்ச்சியாக வெற்றிகண்டது. 1799ஆம் ஆண்டு மே நான்காம் நாள் நடந்த நான்காம் மைசூர் போரில் துரதிர்ஷ்டத்தால் வீரமரணமடைந்தார் மைசூர் அரசர் திப்பு சுல்தான். அவர் மரணமடைந்த பின்  சின்னமலை, கொங்கு நாட்டிலுள்ள ஓடாநிலையில் பலமான ஒரு கோட்டையை அமைத்து சிவன்மலை வனத்தில் இராணுவ பயிற்சி அளித்துவந்தார். ஆங்கிலேயர்களை தோற்கடிக்க வலுவாக இருந்தவர்களை சேர்த்து தன்னுடைய படையை வலு சேர்த்தார். பீரங்கிகளைவைத்து போர் செய்ய பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டணி வைத்தார். 1800ஆம் ஆண்டு கோவை கோட்டையை தகர்க்க முடிவு செய்தார். இறுதியில் இத்திட்டம் சொதப்ப தோல்வியில் முடிந்தது. 1801, 1802,1803 ஆகிய வருடங்களில் கொங்கு நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆங்கிலேய படைகளுடன் போரிட்டு வெற்றிகண்டார். ஆங்கிலேயர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். 

 

fort

 

இதுபோன்ற மாவீரர்களை கவிழ்ப்பதற்கு என்றே ஒரு திட்டம் ஆங்கிலேயர்களால் அக்கால கட்டத்தில் வகுக்கப்பட்டிருந்தது. அது சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம். என்னதான் அனைத்து தற்காப்பு மற்றும் போர் கலைகளில் சிறந்து விளங்கியிருந்தாலும் அவரால் துரோகம் என்னும் ஆயுதத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியவில்லை. தீரன் சின்னமலையின் சமையல்காரர் நல்லப்பனுக்கு ஆங்கிலேயர்களால் ஆசை வார்த்தைகள் காட்டினார்கள். அதற்கு அவரும் மயங்கினார். மயங்கியவுடன், சின்னமலை தன்னுடைய தம்பிகளுடன் பழனிமலை காடுகளில் இருப்பதாக ஆங்கிலேயர்களுக்கு தெரிவித்திருக்கிறார். உடனடியாக ஆங்கிலேயர்கள் மொத்த படையையும் அழைத்துக்கொண்டு சென்று, அந்த வனத்தில் இருந்த சின்னமலையையும் அவரின் தம்பிகளையும் கைது செய்தனர். கைது செய்த பின்னர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆங்கிலேய படை 1805ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீரன் சின்னமலையையும், அவரது தம்பிகளையும் தூக்கிலட திட்டமிட்டு, மலையின் மேல் இருக்கும் கோட்டையில் ஒரு தூக்குமேடை அமைத்தது. தீரன் சின்னமலை என்று பெயர் வர காரணமாக இருந்த சங்ககிரி மலையிலேயே அவரது உயிரும் பறித்துச்செல்லப்பட்டது. என்னதான் அவருடைய உயிர் பிரிந்தாலும் மக்களுக்காக அவர் செய்த தொண்டும், இந்த நாட்டிற்காக அவர் செய்த போர்களும் வரலாற்றால் அழிக்கமுடியாத ஒன்று.