Skip to main content

டாஸ்மாக் டோக்கனின் ரகசிய பின்னணி!!! டாஸ்மாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியும் விதியை மதிக்காத தமிழக அரசு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

admk



அதிரடி வேகம் காட்டி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, அது தொடர்பான விதிகளை எல்லாம் காற்றிலே பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.


இந்த கரோனா காலத்தில், டாஸ்மாக்கை திறப்பது தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று உயர்நீதிமன்றம் தடைவிதித்தும்கூட, டாஸ்மாக்கை திறந்தே தீருவோம் என்று சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன எடப்பாடி அரசு, “டாஸ்மாக்கை திறப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று வாதிட்டு, கடைகளை திறக்க 15-ந் தேதி அனுமதி வாங்கியது.

அதே வேகத்தில் மறுநாளே, சென்னை, திருவள்ளூர் நீங்கலாக தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டுதான் உட்கார்ந்தது எடப்பாடி அரசு. டாஸ்மாக்கில் இவ்வளவு அவசரம் காட்டியவர்கள், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்றால், உதட்டை பிதுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நம்மிடம் பேசிய அந்த சமூக ஆர்வலர் “நீதித்துறையும் எடப்பாடி அரசும் தங்களுக்குள் ஒரு அண்டர் டீலிங்கை வைத்துகொண்டு, டாஸ்மாக் விஷயத்தில் சடுகுடு ஆடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், உச்சநீதிமன்றத்தில் 14-ந் தேதி இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டபோது, டோக்கன் முறையில், அதிலும் ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபானம் விநியோகிக்கப்படும்ன்னு நீதிமன்றத்திடம் வாக்குறுதி கொடுத்தது தமிழக அரசு. அதையொட்டி, 15-ந் தேதி உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த அன்று மதியமே, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டோக்கனை சப்ளை செய்துவிட்டது அரசு. தங்களுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என்பது எடப்பாடி அரசுக்கு எப்படித் தெரியும்?’’என்கிறார் அழுத்தமாக.

 

 

tasmac



ஏற்கனவே நீதிமன்றம் வரையறுத்த படி, குடிகாரர்கள் 6 அடி சமூக இடைவெளியுடன் வந்துதான் மதுபானத்தை வாங்க வேண்டும். அவர்களுக்குத் தலா நான்கு குவார்ட்டர் அல்லது இரண்டு ஆஃப் அல்லது ஒரு ஃபுல் பாட்டில் மதுபானம் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க, வாரத்தின் ஏழு நாளைக்கும், ஏழு நிறங்களில் தனித்தனி டோக்கன்கள் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டன. ஆனால் முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்திலேயே இப்படியான விதிகள் பின்பற்றப்படவில்லை. அதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளும் நடந்தது.


இது குறித்தெல்லாம் டாஸ்மாக் பணியாளர்களிடம் நாம் கேட்டபோது...’’'ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 70 டோக்கன் அளவுக்கு மதுபானங்களை கொடுக்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு மணி நேரம் கடையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் எங்கள் மேலதிகாரிகளோ, மதுப்பிரியர்கள் எத்தனை பாட்டில் கேட்டாலும் கொடுக்கச் சொன்னார்கள். ஒரு ஃபுல் மது பாட்டில் 1000 ரூபாய் என்றாலும் கூட, 500 பேருக்கு ஒரு ஃபுல் வீதம் விற்றால் சராசரியாக ஒரு கடையில் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகும். ஆனால் பெரும்பாலான கடைகளில் 10 லட்ச ரூபாயையும் தாண்டி சேல்ஸ் ஆகியிருக்கு. அதோடு மேலதிகாரிகளை கவனிக்கவேண்டும் என்பதால் பாட்டிலுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை உபரி விலை வைத்துதான் நாங்கள் சரக்குகளை விற்றோம். இங்கே யாரும் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. அரசு, பின்பற்றவும் விடவில்லை’’ என்கிறார்கள் ஆதங்கமாய்.

 

 

tasmac



இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனை இரவு 10 மணியளவில் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "மாவட்ட அளவில் எவ்வளவு ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆனது என்ற விவரம் இன்னும் முழுமையாக எனக்கு வரவில்லை. தேவைப்படும் அளவுக்கு சரக்குகளை விற்பனை செய்யலாம். கட்டுப்பாடுகள் என்று ஏதுமில்லை'' என்று முடித்துக்கொண்டார். எடப்பாடி அரசின் டாஸ்மாக்கே, நிர்வாக விதிகளை மதிக்காமல் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.