சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ரஜினி, பள்ளிதிறப்பு, வேல் யாத்திரை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் சற்று காட்டமாகவே பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு,
"ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வெளிநாடுவாழ் இந்தியவர்கள் விரும்புகிறார்களே என்று என்னிடம் கேட்கிறீர்கள், அதற்கு என்னிடம் சரியான பதில் இருக்கிறது. இன உணர்வும், மான உணர்வும் இருக்கும் யாரும் அவரிடம் இப்படி கேட்கமாட்டார்கள். அவருடைய ரசிகர்கள் அவரிடம் இப்படி கேட்கலாம். அதை நாம் ஒன்றும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் அவ்வாறு கேட்டால் நாம் அதுதொடர்பாக கருத்து சொல்வது சரியாக இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக அவர்கள் ரசிகர்கள் செய்வதற்கெல்லாம் நம்மால் பதில் சொல்ல முடியாது. நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது டாஸ்மாக் கடைகளை 10 மணி வரை அதிகரித்துள்ளதை போல இதையும் கடந்து போக வேண்டும். இதில் மட்டுமாவது அவர்கள் பாஸ் மார்க் வாங்கட்டும் என்பதை நினைத்துக்கொண்டு நாம் சென்றுவிட வேண்டும். அரசாங்கம் மற்ற விஷயங்களில் ஆவது பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு பள்ளிகளை 16ம் தேதி திறப்போம் என்று அறிவித்துள்ளார்கள்.
கரோனா காரணமாக இன்னைக்கு தமிழக அமைச்சர் ஒருவரை கூட இழந்து நிற்கிறோம். இதை பற்றியெல்லாம் அவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். எல்லோரும் தேர்ச்சி பெற்றார்கள் என்று அறிவித்தால் இந்த தேசத்தில் என்ன குடியா முழுகிப்போய்விடும். மாணவர்களின் மனநிலையில் இருந்து சிந்தித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். நீதியரசர்கள் வலையொளி வாயிலாக வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்குகிறார்கள். அந்த பாதுகாப்பை நாம் மதிக்கின்றோம். அதை போலத்தான் மாணவர்களும். ஒரு அறையில் எந்த பயமும் இன்றி மாணவர்கள் அமர்ந்து எப்படி வகுப்பை கவனிப்பார்கள். அவர்களின் அச்ச உணவர்வை போக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு அதிகம் இருக்கின்றது. முன்பு போல் பழைய நிலைக்கு அனைத்தும் வரும் வரையில் பள்ளிகள் திறப்பு என்பது மாநிலத்தில் சாத்தியப்படாது என்பதே எங்களுடைய நிலைப்பாடாக உள்ளது.
பாஜகவினர் வேல் யாத்திரை மேற்கொள்வதை பற்றி கேட்கிறீர்கள், அதை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த வழியும் கிடையாது. ஆனால் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் இருப்பது மதம் மட்டுமே. எனவே அதை வைத்தாவது அரசியல் செய்யலாமா என்று பார்க்கிறார்கள். மு.மேத்தா அடிக்கடி ஒன்று கூறுவார், மனிதனுக்கும், யானைக்கும் மதம் பிடித்தால் நாடு குட்டிசுவராகிவிடும் என்று. அந்த வழியில் தற்போது தமிழ்நாட்டையும் ஆக்கலாம் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதற்கெல்லாம் தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை ராஜா. நான் கட்சி ஆரம்பிக்கும் முன்பே பாஜக இருக்கிறதா இல்லையா? இவ்வளவு நாள் தொடங்காமல் இப்போது என்ன வேல் யாத்திரை தொடங்குகிறார்கள். எனக்கு பயந்துகொண்டுதான். நான் வேல் தூக்கி சென்றபோது எவ்வளவு இழிவுப்படுத்தினார்கள். அப்போதெல்லாம் யாராவது வாய் திறந்து பேசினார்களா? எல்லோருமே அமைதிகாத்தார்களே அது ஏன்? தற்போது மட்டும் எதற்காக வேலை தூக்கிக்கொண்டு எனக்கு முன்பு ஓடுகிறீர்கள். முருகா என்றாலே மக்களுக்கு என முகம்தான் ஞாபகத்துக்கு வரும். எனவே அவர்கள் பாச்சா எல்லாம் தமிழகத்தில் செல்லுபடியாகாது" என்றார்.