Skip to main content

நீங்கள் அமைதியானவர்... அரசியல் ஆட்டம் உங்களுக்கு வேண்டாம் -ரஜினிக்கு சீமான் அறிவுரை!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020
hjk

 

ரஜினி அரசியல் வருகை தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில் இதுதொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். அதற்கு என்னிடம் பதில் இல்லை. எங்களை மாதிரியான பிள்ளைகள் அவரின் ரசிகர்களாக உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவர் எங்களை விட அரசியல் குறித்து அதிகம் கவனித்து வருகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் அவருக்கு நிறைய அரசியல் ஆலோசகர்கள் உண்டு. இது ரொம்ப மோசமான ஆட்டமாக இருக்கின்றது. அவர் நினைப்பதெல்லாம் இந்த ஆட்டத்திற்கு சரியாக இருக்கும் என்று அவர் நினைக்கக்கூடாது. அவரை இறக்கி விடுபவர்களே நாளை அவரை இழிவாக பேச வாய்ப்பு இருக்கிறது. விமர்சனங்களை அவரால் தாங்க முடியாது. ஏனென்றால் புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் அவர். அவரால் அரசியல் ஆட்டத்தில் ஈடுகொடுக்க முடியாது. அவருக்கு தேவை ஓய்வு, நிம்மதி. அவர் இளம் வயதாக இருக்கும் போதே ஓய்வுக்காக இமயமலை சென்று வந்தவர். அவருக்கு தற்போது அரசியலில் ஈடுபடும் தேவை எங்கிருந்து வருகிறது. 

 

இந்த காலகட்டம் ஒரு கொடூர சூழலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாதிய, மத சூழ்நிலைகள் தலை விரித்தாடுகின்றது. அரசியல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சி இதுதானே அடிப்படை. இதில் ஒரு கவர்ச்சி மட்டும் உங்களிடம் இருக்கிறது. மற்றதெல்லாம் பேராபத்தாக உங்களிடம் உள்ளது. தப்பாக உள்ள செய்தியை அவர் பொதுவெளியில் முன்வைக்கலாம். அதைவிடுத்து நான் இறங்கித்தான் ஆழம் பார்ப்பேன் என்பதெல்லாம் முடியாத இயலாக காரியம். சீமான் செய்வது தவறு, அவர் செய்வது சரி, இல்லை சீமான் செய்வது நன்றாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டி கொண்டு இருப்பது என்பது அவருக்கு நல்ல அணுகுமுறையாக இருக்கும்.  இனி வரும் காலம் என்பது அவர் அமைதியாக பொழுதை கழிக்க வேண்டிய காலகட்டம்.  தற்போது நாம் எல்லாம் எந்த சூழ்நிலைகளில் பொழுதை கழித்து வருகிறோம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

 

எனவே நாம் அவருடைய நலனில் அக்கறை கொண்டுதான் இதனை சொல்கிறோம். அவருடைய உடல்நலன் இதற்கெல்லாம் ஒத்துழைக்குமா என்றால் அவருடைய வயதின் காரணமாக அதில் சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே அவர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருக்கிறது. சினிமாவில் அவர் எங்களுக்கெல்லாம் மூத்தவர். ஆனால் அரசியலில் நான் மூத்தவன் இன்னும் சொல்ல போனால் கமலுக்கெல்லாம் மூத்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன், இந்த ஆட்டம் மிக கடினமான ஒன்று. இதை ஆடிபார்க்க முயலாதீர்கள் என்று ஒரு ரசிகராகவும் நலம் விரும்பியாகவும் கேட்டுக்கொள்கிறேன். அதுவே உங்களின் உடல்நலத்துக்கு உகந்ததாகவும் இருக்கும்" என்றார்.