Skip to main content

இந்த இனத்திற்காக பல புலிக்குட்டிகள் தயாராகி வருகின்றன - சத்யராஜ் ஆவேசப்பேச்சு 

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான 'நீட்' தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு, சென்னை காமராசர் அரங்கத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

saththya raj speech

 

இது மாதிரி இன்னொரு மேடை அமையுமா என்பது தெரியவில்லை. இதுபோன்ற மேடையை அமைத்துக்கொடுத்தற்கு உலக தமிழ் கூட்டமைப்புக்கும், இயக்குனர் கௌதமன் மற்றும் அவரது தம்பிகள் இளம் சிங்ககளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழைப்பவர்கள் அழைத்தால் அனைவரும் வருவார்கள் என்பது தெரிகிறது. இது என்ன ஒரு அருமையான மேடை. ஒருவருக்கொருவர்  உணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள  மொழி  ஒரு தடை அல்ல. வங்கத்து சிங்கம் சட்டர்ஜி  எவ்வளவு அருமையாக பேசினார். அவர் வங்கத்து மொழியில்தான் பேசினார் அதனை தோழர். தியாகு மொழிபெயர்த்தார். நாமெல்லாம் எவ்வளவு அருமையாக உள்வாங்கி ரசித்தோம். அந்த உணர்வுள்ளவர்கள் இதேபோல் எதிர்காலத்தில் அகில இந்திய அளவில் இதுபோல் ஒரு மேடை உருவாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நீதி அரசர் ஹரி பரந்தாமன் பேசுகையில் சொன்னார் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டு ஒரு விஷயத்தை நடத்துவார்கள் அது சட்டமாக இருந்தாலும் சரி, திட்டமாக இருந்தாலும் சரி ஏற்கனேவ முடிவு செய்யப்பட்டுவிடும்.

சினிமாவில் கூட கதை எழுதிவிட்டு அதற்கு க்ளைமாக்ஸ் இது தான் என்று முடிவு செய்துவிடுவோம். நீதியரசர் அதைத்தான் சொன்னார் சினிமாவில் கூட க்ளைமாக்சில் கதைப்படி கடைசியில் ஹீரோதான் ஜெயிப்பார் என்று திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஆனால் இங்கு வில்லனுக்கு கதை எழுதிவிட்டு அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைப்பதுதான் இங்கு மிகவும் கொடுமையாக உள்ளது. இங்கு அனைத்து தோழர்களும் அதைத்தான் புட்டு, புட்டு வைத்தார்கள். நான் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை கூறுகிறேன். நான் அனிதாவின் துயர சம்பவம் நடைபெற்றபொழுது  படப்பிடிப்பில் இருந்தேன். வந்தபிறகு  தம்பி பேரறிவாளன் அவர்களின் வீட்டிற்கும், அங்கிருந்து நேராக அனிதாவின் வீட்டிற்கும் சென்றேன். அங்கு அனிதாவின் தந்தையும், அண்ணன் மணிரத்தினமும் இருந்தார்கள். 


அங்கு ஒரு சோகமான சூழ்நிலை இருந்தது அந்த தருணத்திலும் அவர்களது மன உறுதியும், கொள்கைப்பிடிப்பும் எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த சோகமான சூழலில் மணிரத்தினம் என்னிடம் வந்து அண்ணா அனிதாவிற்கு இந்தப் புத்தகத்தைதான் அளித்தேன் என்று காண்பித்தார். அதை திறந்தவுடன் கடவுள் இல்லை என்று பெரியாரின் தத்துவத்தை எழுதி வைத்துள்ளார்கள். அது காலம்காலமாக கடவுள் இல்லை என்று நிரூபணம் ஆகித்தான் வருகிறது. தற்போது காஷ்மீரில்இல்லவே இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. 


என் அனுபவத்தில் சொல்கிறேன் நான் நான்காவதுதலைமுறை  என் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் கற்றேன். நல்ல மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக தேர்ச்சிபெற்று கல்லுரியில் ஆங்கில வழியில் கற்கவேண்டிய சூழல். சேர்ந்தபோது முதல் மாணவனாக இருந்தவன் ஜஸ்ட் பாஸ் ஏன் தேர்ச்சியில் தோல்வியும்  அடைந்தேன். இவ்வளவு வசதியான குடும்பத்திலிருந்து வந்த நான் இவ்வளவு பெரிய பின்னடைவு அடைந்துள்ளேன் என்றால். தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அனிதாவினால் எப்படி போட்டிபோட முடியும். ஒரு மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பரீட்சை எழுதச் சொல்வது என்பது, தமிழ் சினிமா வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் பொழுது அங்கு தெலுங்கு படமாக இருந்தால் என்ன செய்வது அதுபோலதான். 


நாம் படித்த பாடத்திலிருந்து வரும் என நம்பி தேர்வெழுத சென்றால் அங்கு அது இல்லை. அதற்கு என்ன வழி அதற்கென்று தனி டியூசன் சென்டர் உள்ளது ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள். தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் கல்வி பெறவேண்டும் என்பதால்தான் பெருந்தலைவர் காமராஜர் சத்துணவு திட்டமெல்லாம் கொண்டுவந்தார். எப்பொழுதும் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடும் சமூகம்தான் நல்ல பண்பட்ட சமூகம். இல்லை கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடாமல்  மேலும், மேலும் மிதிப்பது  நாகரிகமான சமூகமா. இதுபோன்ற ஒரு மேடையில் அனைத்து பேச்சாளர்களும் அருமையாக பேசினார்கள். செந்தமிழன் சீமான் அமைதிப்படையில் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தில், அந்தப் புலி இன்னும் எந்த அளவிற்கு வேகமாக இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். இந்த இனத்திற்காக பல புலிக்குட்டிகள் தயாராகி வருகின்றன.