Skip to main content

நீதியரசர்களின் சீற்றத்தை கண்டும் வாய் மூடி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி! பதவியில் தொடர்ந்தால் விசாரணை சீர்குலையும்... சிவசங்கர் கண்டனம்

Published on 30/06/2020 | Edited on 01/07/2020
jayaraj

 

“இந்திய போலீஸ் வரலாற்றில் நடக்காத சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரும், துணை வட்டாட்சியரும் 12 மணி நேர டியூட்டியில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் பணித்துள்ளது. தமிழக காவல்துறைக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரும் தலைகுனிவு இது.

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, ஜெயராஜ், மகன் பெணிக்ஸ் கொலை நடந்த உடனேயே மனசாட்சியோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் அந்த கொலை கும்பல் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எஸ்.பிக்கு தகவல் சொல்ல என்றே உளவுத்துறை காவலர் ஒருவர் இருப்பார். மாவட்டத்துக்குள் ஒரு சிறு அசைவு இருந்தாலும், எஸ்.பி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

 

சில வழக்குகளின் போது ஆய்வாளர்கள், "எஸ்.பி ஆபிஸுக்கு தகவல் போயிடுச்சி. நான் ஒன்னும் பண்ண முடியாது", என்று கை விரிப்பார்கள். அதாவது வழக்கின் விபரம் எஸ்.பி கான்ஸ்டபிள் மூலமாக எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று விட்டது என்று அர்த்தம். சட்ட ஒழுங்கு பிரச்சனை பெரிதாகாமல் தடுக்க எஸ்.பி காவலர்களின் பணி அவசியம். இங்கே ஒட்டு மொத்தமாக காவல் நிலையத்தில் இருப்போரே நிகழ்த்திய கூட்டு வன்முறை எனும்போது மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தெரியாமல் இருக்காது, அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

 

ஆனால் எஸ்.பி அது குறித்து அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இல்லை என்றால், தெரிந்தே தப்பிக்க விட்டிருக்க வேண்டும். அதனால் தான் சாத்தான்குளத்தை சுற்றி பல சிறைகள் இருக்க, மாவட்டத்தின் இன்னொரு கோடியில் இருக்கும் கோவில்பட்டி சிறைக்கு சென்றிருக்கிறார்கள். ஜெயராஜ், பெணிக்ஸ் இருவர் இறப்பிற்கு பிறகாவது எஸ்.பி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காததால் தான் தொடர் சந்தேகங்கள் எழுகின்றன. 

 

edappadi palanisamy ss sivasankar

 

அடுத்து, இது குறித்த தகவல்கள் முதல்வருக்கு உடனடியாக வந்திருக்கும். நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து, சென்னை டி.ஐ.ஜி அலுவலகத்தில் இருக்கும் எஸ்.எஸ்.பிக்கு வந்து சேரும். அவர் டி.ஜி.பிக்கு தகவல் தெரிவித்து, முதல்வரை அந்தத் தகவல் அடையும். உளவுத்துறை ஐ.ஜி மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தினம் காலை முதல்வருக்கு தகவல் தர வேண்டும் என்பதும் விதிமுறை. அதனால் குறைந்தபட்சம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த பிறகாவது முதல்வருக்கு தகவல் சென்றிருக்கும். முதல்வர் எடப்பாடி தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய அவமான சம்பவம் காவல்துறைக்கு நடந்திருக்காது. 

 

அதை எல்லாம் விட்டுவிடலாம். இவ்வளவுக்கும் பிறகு, நேற்று போலீஸ்காரர் மகராஜன், "உன்னால ஒன்னும் புடுங்க முடியாது", என்று நீதிபதியை பார்த்து பேசியது யார் துணிச்சலில். எஸ்.பி இருக்கும் துணிச்சலில் தான், முதலமைச்சர் இருக்கும் துணிச்சலில் தான். 

 

தனக்கு மேல் இருப்போர் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும், தைரியமும் இருந்தால்தான் ஒரு காவலர் பொதுவெளியில் அவ்வளவு திமிராக பேசி இருக்க முடியும். கேமரா கொண்டு ஒளிப்பதிவு செய்யப்படும் இடத்தில் இப்படி பேசுவது என்பது உச்சக்கட்ட திமிர்.

 

அந்த திமிர் யார் கொடுத்தது? 

 

"நீதிபதியையே மிரட்டினாலும் பரவாயில்லை, தடயங்கள் கிடைக்காமல் பார்த்துக் கொள். விசாரணை நடைபெற முட்டுக்கட்டை போடு. காப்பாற்றி விடுவோம்", என்று உச்சக்கட்ட அதிகாரத்தில் உள்ள யாரோ தான் தைரியம் கொடுத்திருக்க வேண்டும். அந்த முரட்டுத் துணிச்சலில் தான், மகராஜன் கொழுப்பெடுத்து பேசி மாட்டிக் கொண்டது. 

 

இவர்கள் வீழ்த்திய காவல்துறையின் மானத்தை ஒரு பெண்காவலர் தான் காப்பாற்றி இருக்கிறார். மனதில் பயம் இருந்தாலும், நடந்த விஷயங்களை மனசாட்சியோடு அவர் தான் சொல்லி இருக்கிறார். கொலைகார கும்பலால் காவல்துறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்துள்ள அவரை காவல்துறையினர் கொண்டாட வேண்டும். ஆனால் அவருக்கும் பாதுகாப்பு போட வேண்டிய நிலை தான் உள்ளது. 

 

நீதித்துறை நேரடியாகத் தலையிட்டு விசாரித்து, நீதிபதி அவமானப் படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்திய பிறகு தான், எஸ்.பி அருண் பாலகோபாலனை பணியிட மாற்றம் செய்கிறார்கள். எஸ்.பியை மாற்றாமல் இருந்ததற்கும், மகராஜனது துணிச்சலுக்கும் காரணம் அவர்கள் இந்த அரசை நிர்வகிப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருப்பது தான்.

 

எனவே ஒட்டு மொத்தமாக இந்த கொலைகளுக்கு, அதை மறைக்க நடந்த முயற்சிகளுக்கு, நீதிபதியை அவமதித்தமைக்கு எல்லாம் பொறுப்பு காவல்துறையின் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பதவியில் தொடர்ந்தால், இந்த வழக்கின் விசாரணையை சீர்குலைக்க எல்லா முயற்சிகளும் நடக்கும்.

 

அப்படி இல்லாவிட்டாலும், இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டும்.

 

எடப்பாடி தலைமையிலான காவல்துறை மீது நம்பிக்கை இழந்து, அதன் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையத்தை, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் வழங்கி விட்டது உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தின் நம்பிக்கையை இழந்த காவல்துறையின் அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். 

 

கொலை செய்த எஸ்.ஐ.கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தது போல், டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, எஸ்.பி என தவறுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை மாற்றம்  செய்தது போல், அந்த துறை அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி செய்ய மாட்டார். செய்ய வைக்க மக்கள் தான் திரள வேண்டும். நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும்.”

 

-எஸ்.எஸ்.சிவசங்கர்
அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்