Skip to main content

சேகுவேரா வாழ்க என்றால் போதுமா? வாழ்ந்து பார்க்க முடியுமா? 

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

“அப்பா நான் டாக்டருக்கு படிக்கப் போகிறேன்”
 

che 1

 

அதுவரை என்ஜினியராக போவதாக கூறிவந்த குவேரா, திடீரென்று டாக்டராகப் போவதாக சொன்னதும், எர்னஸ்டோவுக்கு மட்டுமல்ல, தாய் செலியாவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
 

“ஏண்டா திடீர்னு இந்த முடிவுக்கு வந்த? என்றாள் அம்மா.
 

“இதில் என்னோட சுயநலமும் இருக்கும்மா. நானே ஒரு நோயாளி. எனக்கே தினமும் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கு. வீடுகள், தொழிற்சாலைகள் கட்டுவதைக் காட்டிலும் மனுஷனோட நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தாம்மா போதுமான அளவுக்கு ஆள் இல்ல.”
 

மகனின் பேச்சு தாய்க்கு நிம்மதி அளித்தது. தனக்காக மட்டுமின்றி, பிறருடைய நிலையையும் இணைத்துப் பார்க்கும் பக்குவமான சிந்தனை அதில் வெளிப்பட்டதைப் புரிந்துகொண்டாள்.
 

வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்பாவுக்கு அளவிட முடியாத சந்தோஷம். ஏனென்றால், குவேராவின் படிப்பார்வம், அவனுடைய நடவடிக்கைகள் அவருக்குள் புரியாத புதிராகவே இருந்தன. வயதுக்கு மீறிய அமைதி, பொறுப்புணர்வு எல்லாவற்றையும் அவர் கவனித்திருந்தார்.
 

அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தில், 1948 ஆம் ஆண்டு  மருத்துவ மாணவனாக குவேரா நுழைந்தான்.
 

தனது செலவுக்கு தானே சம்பாதிக்கும் உறுதி அவனுக்குள் இருந்தது. அதற்காக எந்த வேலையையும் செய்யும் பக்குவம் பெற்றிருந்தான்.
 

அவனுக்காகவே குடும்பத்தினரும் பியூனஸ் ஏர்ஸில் குடியேறினர். முதலில் வாடகை வீட்டில்தான் எல்லோரும் வசித்தனர்.
 

தனது மேட் தேயிலை தோட்டத்தை விற்றுவிட்டு, அதில் வந்த பணத்தைக் கொண்டுவந்து செலியாவிடம் கொடுத்தார். அதைக் கொண்டு கல்லே அரோஸ் என்ற இடத்தில் 2180 ஆம் எண்ணுள்ள வீட்டின் முதல் தளத்தை விலைக்கு வாங்கினார் செலியா.
 

பியூனஸ் ஏர்ஸில் என்ன வேலை செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினான். பிசானி என்பவரின் மருத்துவமனையில் உதவியாளராகச் சேர்ந்தான். நகரின் எண்ணெய் தொழிற்சாலைக்குச் சென்று அவ்வப்போது வேலை செய்தான்.
 

அண்ணன் காட்டிய வழியில் வயதுக்கு வந்த மற்ற தம்பி, தங்கைகளும் தங்களுடைய செலவுகளைச் சமாளிக்கும் வகையில் கிடைத்த வேலையை செய்தனர்.
 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் தனக்குத் தேவையான உடைகள், புத்தகங்ககள் ஆகியவற்றை வாங்கிக் கொள்வான்.
 

பியூனஸ் ஏர்ஸ் நகராட்சிக்கு சொந்தமான கறி வெட்டும் கூடத்தில் கூடுதல் சம்பளம்  தருவதாக கேள்விப்பட்டு அங்கே போய் கொஞ்சநாள் வேலை செய்தான். கடைசியில் பல்கலைக்கழக நூலகத்தின் உதவியாளராகவும் வேலையில் சேர்ந்தான்.
 

மருத்துவ வகுப்பில் அவனுடன் படித்தவர்களில் மூன்று  பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் ஒருவரின் பெயர் டிட்டா. மன உளைச்சல் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்வதற்கு அவள்தான் வடிகால். இடதுசாரிச் சிந்தனை மிக்கவள். தனது தோழனை நன்றாக புரிந்து கொண்டவள்.
 

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பல்கலைக்கழக இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தில் சந்தித்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஏராளமான விஷயங் களைப் பகிர்ந்து கொள்வார்கள். தனது ஆசைகளை வெளிப்படையாக அவளிடம் மட்டுமே கொட்டித் தீர்ப்பான். அவனுக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற வெறியை அவள் ஊக்குவிப்பாள்.
 

che


அந்த ஆண்டு அர்ஜென்டினா ராணுவத்திற்கு கட்டாய ஆள்சேர்ப்பு நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் குவேரா கலந்துகொண்டான். ஆனால், அவனுக்கு இருந்த ஆஸ்த்மா தொந்தரவைக் காரணம் காட்டி, தேர்வு செய்ய மறுத்துவிட்டனர்.
 

அவனுக்குள் ஒரு குறுகுறுப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் உறைந்து போயிருந்தது. பரந்த இந்த உலகத்தை சுற்றிவர வேண்டும். புத்தகங்களில் படித்த சக மனிதர்களின் வாழ்க்கையை நேரில் காண வேண்டும் என்ற ஆசை  அவனை வதைத்துக் கொண்டே இருந்தது.
 

ஆனால், ஒன்றுக்குமே உதவாமல் வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலை தொற்றிக்கொண்டது.

20 வயதில் அடியெடுத்து வைத்த குவேரா தனது நோட்டுப்புத்தகத்தில் எழுதிய கவிதை வரிகள் அவனுடைய இலக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியது.
 

“எனக்கு அது தெரியும், எனக்கு அது தெரியும்.
இங்கிருந்து வெளியேறினால், அந்த நதி என்னை விழுங்கிவிடும்.
அது எனது விதி ; இன்று நான் கட்டாயம் மரிக்க வேண்டும்.
ஆனால், அனைத்திலிருந்தும் மீள என்னிடம் ஆற்றல் இல்லை
தடைகளே அவைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
வெளியே வர எனக்கு விருப்பமில்லை.
ஒருவேளை நான் மரிக்க நேர்ந்தால்,
இந்த குகையிலேயே அது நிகழட்டும்.
 

துப்பாக்கி ரவைகள்...அந்த ரவைகள் என்னை என்ன செய்துவிடப் போகின்றன?
ஆற்றில் மூழ்கியே சாகவேண்டும் என்பது என் விதி.
ஆனால், நான் விதியிடமிருந்து மீளப் போராடப்போகிறேன்.
விதியை மதிநுட்பத்தால் வெற்றிகொள்ள முடியும்.
இறந்துவிடு, ஆம், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டு...
துப்பாக்கியின் நுனியில் உள்ள கத்திகளால் கிழிக்கப்பட்டு...
அப்படி இல்லையேல், மூழ்கிவிடாதே, விடாதே...
போராடு, இறுதிவரை போராடு.”
 

அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, அவனைப்போலவே ஊர்சுற்ற வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும்  ஆல்பர்ட்டோதான். அவனும் இப்போது, பட்டம் பெற்று கோரோடோபா மாநிலத்தின் வடக்குப் பகுதி நகரமான சான் பிரான்சிஸ்கோ டெல் சனாரில் உள்ள தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறான்.
 

இலக்கு இல்லாத பயணமாக வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. மருத்துவப்படிப்பும் முக்கியம் தனது கனவை நனவாக்குவதும் முக்கியம். எப்படா கல்லூரி விடுமுறை வரும் என்று காத்திருந்தான் குவேரா.
 

1948ல் கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டவுடன் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான்.
 

“அப்பா... எனக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வேண்டும்” என்ற குவேராவை ஆச்சரியமாகப் பார்த்தார் எர்னஸ்டோ.
 

“சைக்கிளிலா போகப்போகிறாய். சான் பிரான்சிஸ்கோ எவ்வளவு தூரம் தெரியுமா? இங்கிருந்து 870 கிலோமீட்டர்.”
 

“தெரியும் அப்பா. நான் அந்தச் சைக்கிளில் மேலும் அதிக தூரம் செல்ல விரும்புகிறேன்” என்றான் குவேரா.
 

19 வயது மகனின் இலக்கு எதுவென்று புரியாத அப்பா, அவனுடைய விருப்பப்படியே ஏற்பாடு செய்து கொடுத்தார்.
 

ஆல்பெர்ட்டோவின் வீட்டுக்குச் சென்றபோது அவன் குவேராவை ஆரத்தழுவி வரவேற்றான்.  இருவரும்  சான் பிரான்சிஸ்கோ நகரின் அழகை ரசித்தார்கள். நிறைய பேசினார்கள்.
 

அர்ஜென்டினாவின் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் மெஸ்டிஸோ மக்களின் சீரழிந்த வாழ்க்கையை  நேரில் பார்த்தால்தான் போராட்ட உணர்ச்சி அணையாமல் இருக்கும் என்பதை ஆல்பெர்ட்டோ தெளிவுபடுத்தினான்.
 

ஸ்பானிய மற்றும் அர்ஜென்டினாவின் பூர்வகுடியினர் இணைந்து உருவான இனம் மெஸ்டிஸோ என்று அழைக்கப்படுகிறது. தென்அமெரிக்காவிலேயே அர்ஜென்டினாவில்தான் பூர்வகுடிமக்கள் வேரோடு அழிந்துபோயிருந்தனர். இன்னமும் கிராமப்புறங்களில் அந்த மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளைப்போல வாழ்வதாக ஆல்பர்ட்டோ சொன்னபோது, குவேராவும் ஆமோதித்தான்.
 

che

 

 

“நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னமும் ஏராளமாக இருக்கிறது குவேரா. உன் படிப்பை விரைவில் முடி. நாம் திட்டமிடுவோம்.” ஆல்பெர்ட்டோ உறுதியுடன் கூறினான்.
 

“ஆமாம் சே. நாம் ஒரு நீண்ட பயணத்திற்கு திட்டமிட வேண்டும்” என்றான் குவேரா.
 

நெருங்கிய தோழர்களை சே என்று அழைப்பது குவேராவின் வழக்கம். சே என்றால் அர்ஜென்டினா மொழியில் தோழர் என்று அர்த்தம்.
 

ஒருவழியாக எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கும் நிலையை நெருங்கிவிட்டனர்.
 

பின்னர், அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாக பியூனஸ்ஏர்ஸ் வரை கிராமப்புறச் சாலைகளில் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அவன் தனது பயணத்தை முடித்தபோது சுமார் 4 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்திருந்தான்.
 

வீட்டுக்குத் திரும்பிவந்து தனது அனுபவங்களைச் சொன்னபோது, தனது பிரதியாக மகன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார் எர்னஸ்டோ. அவரும் இப்படித்தான் ஊர்சுற்றுவதில் விருப்பம் கொண்டிருந்தார்.
 

தாய் செலியாவும் தம்பி தங்கைகளும், குவேராவின் சாகசக் கதைகளை திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
 

(ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள "அணையா பெருநெருப்பு" என்ற தலைப்பில் சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் ஒரு அத்தியாயம்...)