Skip to main content

இனி அசல் 'தேன்' சாத்தியமா? - பிரபல பிராண்டுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஆய்வு முடிவுகள்!

Published on 02/12/2020 | Edited on 03/12/2020

 

Is real honey possible anymore?

 

இயற்கையின் வரப் பிரசாதமாகக் கருதப்படும் தேனில், மிகச் சிறந்த மருத்துவக் குணங்கள் இருப்பதால், தற்பொழுது வரை சந்தையில் உண்மையான 'அசல்' தேன் எது என்பதற்கான போட்டிகள், எப்பொழுதுமே இருந்து வருகிறது. தேன் என்பது அனைவராலும் உட்கொள்ளக் கூடிய மிகச்சிறந்த உணவுப் பொருளாகும். ஆதிகாலம் தொட்டே சித்த மருத்துவ முறைகளில் கூட, சில மருந்துகளைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவதற்கான அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்குவர். அந்த அளவிற்கு, தேனிற்கு மருத்துவத்திலும், உடல்நலத்திலும் மிகப் பெரிய பங்கு உண்டு.

 

இந்நிலையில், இந்தியாவில் உண்மையான அசல் தேன் எனப் பிரபல நிறுவனங்களால் விற்கப்படும் தேன்களில், 13 பிராண்டுகளை ஆய்வு செய்ததில், அவற்றில் 8 பிராண்ட்களில் சர்க்கரை பாகு கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் சி.எஸ்.இ எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், புகழ் பெற்ற 13 பிராண்டுகளின் தேன்களைப் பரிசோதனை செய்துள்ளது. அதில், 8 பிராண்டுகளில் சர்க்கரை பாகு கலக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

'அணுகாந்த ஒத்ததிர்வு' என்ற நவீன சோதனை முறைப்படி சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றை உட்கொள்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு மேலும் அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது சி.எஸ்.இ

 

இது ஒரு பக்கம் இருக்க, இந்தச் சோதனை முடிவுகள் பிரபல நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஆய்வு முடிவுகளை, அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்கள் மறுத்துவருகிறது. குறிப்பாக, 'டாபர்' நிறுவனம், இந்த ஆய்வு அறிக்கை உள்நோக்கம் கொண்டது. எங்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவே வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது. இந்திய அரசின் உணவுத் துறை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்குட்பட்டே நாங்கள் தேன் தயார் செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் 'ஜண்டு' நிறுவனமும் தங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுப் போலியானது, உள்நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ளது. அதேபோல், 'பதஞ்சலி' நிறுவனமும், அவர்கள் மீதான புகாரை மறுத்துள்ளது. இயற்கை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தங்களைக் கலங்கப்படுத்த தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சதி இது எனக் கூறியுள்ளது. 

 

cnc

 

என்ன இருப்பினும் உண்மையான தேன் என விளம்பரங்கள் மூலம் வீடுகளை எட்டிய பிரபல பிராண்டுகளின் தேன்கள், உண்மையிலேயே 'அசலா?' அல்லது 'போலியா?' எனக் குழப்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளது, இந்த ஆய்வு. சி.எஸ்.இ ஆய்வின்படி பார்த்தால், இனி அசல் தேன் சாத்தியமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது!

 

 

 

சார்ந்த செய்திகள்