Skip to main content

2.0 'பக்ஷிராஜன்' ஃபோனை பறக்கவிட்டார், நிஜ 'பேர்ட் மேன்' சலீம் அலி இப்போதிருந்தால் என்ன செய்திருப்பார்?   

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் 2.0 படத்தில் மனிதர்களுக்கு வில்லனாகவும் பறவைகளின் காதலனாகவும் வரும் 'பக்‌ஷிராஜன்' எனும் அக்‌ஷய் குமாரின் கதாப்பாத்திரம், வில்லன் என்பதைத் தாண்டி அவர் மேல் அன்பை வரவைக்கிறது. ரீலில் வரும் கதாப்பாத்திரமே இப்படி இருந்தால் ரியல் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்?

 

akshay salim ali



பக்‌ஷிராஜன் கதாப்பாத்திரம் பறவையியல் நிபுணர் சலீம் அலியை முன்மாதிரியாகக்  கொண்டுதான் வடிமைக்கப்பட்டுள்ளது. சலீம் அலி 92 வருடம் வாழ்ந்து இறந்தவர். இவரின் 92 வருட வாழ்வில் ஏறக்குறைய 65 ஆண்டுகாலத்தை  பறவைகளுக்காக அர்ப்பணித்தவர்.

சலீம் அலி 12 நவம்பர் மாதம் 1896-ம் ஆண்டு மும்பை, கேத்வாடியில் பிறந்தார். இவரின் இளம் வயதிலேயே இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அதன் பின் சலீம் அலி அவரின் மாமா வீட்டில் வளர்ந்தார். இவர் பறவைகளின் மீது காதல் கொண்டதன் காரணமாக  மூன்று விதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் மையப்புள்ளி ஒன்றுதான், இவரின் தோட்டத்தில் சிட்டுக்குருவி ஒன்றை  இறக்கும் நிலையில் கண்டுள்ளார். அதன் வலியை நேரில் பார்த்தது அவருக்குப் பறவையின் மீது காதல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இறந்த சிட்டுக்குருவியின் கழுத்துப் பகுதியில் ஏதோ மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கிறது. அது என்ன என்று தெரிந்துகொள்வதில் ஆரம்பமாகிறது அவரின் பறவைகள் மீதான தேடலும் ஆய்வும். அந்தப் பறவையின் கழுத்தில் இருந்தது என்னவென்று தெரிந்துகொள்வதற்காக தன் சித்தப்பாவின் மூலம்  சலீம் அலி, மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கௌரவச் செயலராக இருந்த டபிள்யு. எஸ். மில்லர்ட் என்பவரை அணுகினார். அவரின் மூலமாக பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படி பாதுகாப்பது போன்றவற்றை அறிந்துகொண்டார்.

 

salim ali



ஒரு கட்டத்தில் சலீம் அலி அவரின் அண்ணனுக்கு உதவுவதற்காக பர்மா சென்றார். அதன் பின் 1920-ல் மீண்டும் மும்பை திரும்பிய சலீம் அலிக்கு விலங்கியல் படிக்க வாய்ப்பு கிடைத்து அதனை அவர் சிறப்பாக முடித்தார். அதன் மூலம் சலீம் அலிக்கு மும்பை தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் வழிகாட்டி (கைடு) வேலை கிடைத்தது. பறவைகளின் காதலரான சலீம் அலிக்கு அந்த வேலை இன்னும் உதவிகரமாகவும், நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் உதவுவதாகவும் இருந்தது. இன்னும் பறவையியலில் அறிவை வளர்த்துக்கொள்ள ஜெர்மனிக்குப் பயணித்து அங்கு இர்வின் ஸ்ட்ராஸ்மேன் என்பவரிடம் பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார் சலீம் அலி. அவரின் தினசரி வாழ்க்கைக்கே போதிய வருமானம் இல்லாமல் சில நேரங்களில் இருந்தாலும் அவருக்குக் கிடைத்த விருது, பரிசுப் பணத்தை இயற்கையைக் காப்பதற்கு அளித்துள்ளார்.

இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அதில் மிக முக்கியமானது ’தி புக் ஆப் இந்தியன் பேர்ட்ஸ்’ மற்றும் தனக்கு பறவைகளின் மீது காதல் ஏற்பட காரணமாக இருந்த சம்பவத்திலிருந்து தொடங்கி தன் சுயசரிதையாக எழுதிய ‘ஃபால் ஆப் ஸ்பேரோ’ எனும் புத்தகமும்தான். இவரை  இந்திய அரசு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவில் ஆர்ணித்தாலஜி (ornithology) எனும் பறவைகள் குறித்த படிப்பும் ஆய்வும் இவரால்தான் பிரபலமானது. நிஜ 'பேர்ட் மேன்' சலீம் அலி, இப்போது இருந்திருந்தால் இந்த அறிவியல் வளர்ச்சியிலும் ரியல் எஸ்டேட் வெறியிலும் பறவை சரணாலயங்கள் அழிவதைக் கண்டு கண்டிப்பாக விஸ்வரூபமெடுத்திருப்பார்.