தேசிய அரசியலில் இருந்தபடி, மாநில அரசியலுக்கான காய்களை நகர்த்தத் தொடங்கினார் வசுந்தரா. வசுந்தராவுக்காக ராஜஸ்தான் சிங்கம் பைரன்சிங் ஷெகாவத்தை ஓரம்கட்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தயங்கியது. வசுந்தராவின் மேலிட நெருக்கடி, பாஜகவின் மேல்மட்ட தலைவர்களின் சிபாரிசு போன்றவையால் பைரன்சிங் ஷெகாவத்தை ஓரம் கட்டியது. முக்கியமாக அப்பொழுது பாஜகவின் மத்திய தலைமையில் முக்கிய தலைவர்களாக இருந்த அத்வானி, சுஷ்மா, நிதின் கட்காரி என அனைவரிடமும் நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றிருந்தார். அந்த அன்பே வசுந்தராவின் ஆயுதமாக இருந்தது.
2003ல் வசுந்தராவுக்கு ராஜஸ்தான் மாநில கட்சித் தலைவர் பதவி தந்தது கட்சித் தலைமை. 2003ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வழியாக மீண்டும் நேரடி மாநில அரசியலுக்கு திரும்பினார். தோல்பூர் சட்டமன்ற தொகுதிக்கு பதில் ஜெகல்ட்ராபட்னம் என்ற சட்டமன்ற தொகுதியில் நின்றார் வசுந்தரா. அந்தத் தொகுதியில் நின்று வென்றபோது பாஜக மாநிலத்தில் பெரும் வெற்றி பெற்றுயிருந்தது. முன்னால் ராணியின் நீண்ட கால ஏக்கமாக இருந்த, தனது தாயால் அமர முடியாத, முதலமைச்சர் நாற்காலியில் வசுந்தரா முதல்முறையாக 2003 டிசம்பர் 8ந்தேதி அமர்ந்தார். 2008ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால் அதற்கடுத்த 5 வருடம் எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். 2013ல் மீண்டும் பாஜக மாநிலத்தில் வெற்றி பெற்றதால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார் வசுந்தரா.
சுமார் 10 ஆண்டுகளாக முதலமைச்சராக வசுந்தரா உள்ளார். அதற்கு முன்பு 3 முறையென 10 ஆண்டுகள் பைரன்சிங் ஷெகாவத் இருந்துள்ளார். ஆக 20 வருடங்கள் ராஜஸ்தானில் பாஜகவும், 50 ஆண்டுகள் காங்கிரஸும் ஆட்சியில் உள்ளன. 'வளர்ச்சி பெற வைக்க முடியாத காங்கிரஸ்க்கு பதில் எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள், மாநிலத்தை வளர்ச்சி பெற வைக்கிறோம்' எனச்சொல்லியே பாஜக வெற்றி பெற்றுவந்துள்ளது.
பாஜக சொன்னதை செய்துள்ளதா? மின்சார வசதியில் இந்தியாவில் கடைசி இடம் ராஜஸ்தானுக்குதான். குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் மாநிலமும் இதுதான். மணிக்கணக்கில் நடந்து சென்று தங்களின் குடும்பத்துக்கான குடிநீரை பெண்கள் கொண்டு வருகின்றனர். அதோடு, சாதி கட்டுமானம் பலமாக உள்ள வடமாநிலங்களில் இதுவும் ஒன்று, கல்வியில் பின்தங்கியுள்ளது. இந்தியாவுக்கு பளபளப்பான தரைக்கு டைல்ஸ், மார்பிள், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் ராஜஸ்தான் பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளது. இப்படி பல குறைபாடுகள் பாஜகவின் வசுந்தரா ராஜே ஆட்சியிலும் தீர்க்கப்படாமலேதான் உள்ளன. ஐபிஎல் அமைப்பை உருவாக்கிய லலித்மோடி, நாட்டை விட்டு தப்பி போனபின்பும் அவருடன் நெருக்கம், அவருக்காக வெளிநாட்டு அரசு முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவாக பேசினார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
பழைய ராணியாக இருந்தாலும் கட்டிப்பிடி வைத்தியத்தில் கைதேர்ந்தவர் வசுந்தரா. கட்சி நிகழ்ச்சிகளில் பழைய ராணி, தற்போதைய முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் என்கிற எந்த பந்தாவுமில்லாமல் ஜோவியலாக வலம் வரும் அவர் பிறரை அன்போடு கட்டிப்பிடிக்கும் புகைப்படங்கள் பல வெளிவந்துள்ளன. அதுபற்றி அவர் என்றும் கவலைப்பட்டதில்லை. அன்பை வெளிப்படுத்தும் ஓர்வழி என்பது அவரது பார்வை. ஆனால் மக்கள் கவலைப்பட்டனர். வாக்கு கேட்டு வரும் அதே வசுந்தரா மக்களை கட்டிப்பிடிப்பதில்லை. ராணியாக தன்னை இப்போதும் நினைத்துக்கொள்கிறார். (முதலமைச்சர் பதவி ஒருவிதத்தில் அப்படித்தான் என்றாலும்...). அதுபோல முத்த விஷயத்திலும் சர்ச்சைக்குள்ளானவர்தான் வசுந்தரா. 2015ஆம் ஆண்டு திடீரென ஒரு புகைப்படம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் வசுந்தரா ராஜே, பயோகான் நிறுவனத்தின் இயக்குனர் கிரண் மஜூம்தார் ஷா இருவரும் உதட்டில் முத்தம் தருவது போன்று இருந்தது. 2006ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு வர்த்தக சந்திப்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த புகைப்படம் போலியானது என பாஜக சார்பில் கூறப்பட்டது. புகைப்படத்தின் கோணத்தால்தான் அந்தப் பிரச்சனை என்றும் கூறப்பட்டது. உண்மையோ இல்லையோ அது இருவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும் அரசியலில் அது பேசப்பட்டது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை பாஜக கடும்போட்டியை சந்திக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ராஜஸ்தானில் பொதுப்பிரிவினர் 69 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டவர்கள் 18 சதவிதமும், பழங்குடியினர் 13 சதவிதமும் உள்ளனர். அதில் 6.5 கோடி இந்துக்கள், 63 லட்சம் முஸ்லிம்கள், 8.8 லட்சம் சீக்கியர்கள், 6.5 லட்சம் சமணர்கள், பிற சமயத்தினர் மீதியுள்ளனர். இதில் தலித் – பழங்குடி மக்களை நம்பி சிபிஐ – சிபிஎம், பழங்குடியினர் கட்சியான தேசிய மக்கள் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களை நம்பி பகுஜன் சமாஜ் கட்சி என அனைத்து கட்சிகளும் பெரிய கட்சிகளுக்குப் போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தும் முடிவில் உள்ளன. ஓட்டுக்கள் சிதறக்கூடாதென இந்த கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸும் ஆளும்கட்சியான பாஜகவும் பேசத்துவங்கியுள்ளன.
தேர்தல் குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் கூறும்போது, "கடந்த 4 வருட கால பாஜக ஆட்சி மீது மக்கள் வைத்த நம்பிக்கை குலைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. முதல்வர் வசுந்தரா மற்றும் அவரது மகனான பாஜக எம்பி துஷ்யந்த் சிங் ஆகியோரது தொகுதிகள் அடங்கியுள்ள பாரான் மாவட்டத்திலும் பெரும் பின்னடைவை பாஜக சந்தித்துவிட்டது, காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம், ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது" என்கிறார்.
கடந்த ஏப்ரல் 15ந்தேதி ராஜஸ்தானில் பிரபலமான சர்புஜாநாத் கோயில் முன்பிருந்து விகாஸ் யாத்ரா (வளர்ச்சி சுற்றுப்பயணம்) தொடங்கினார் முதல்வர் வசுந்தரா ராஜே. ஆனால் அவரது அமைச்சரவை சகாக்களே இவர் ஊழல் ஆட்சியைதான் செய்தார் என விமர்சனம் செய்கிறார்கள். மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் பழைய ராணியே முதல்வராக தொடர்வார் என்கிற நிலையே நிலவுகிறது. எனக்கு முதல்வர் பதவி வேண்டுமென பைரன்சிங் ஷெகாவத் மருமகனும், ராஜஸ்தான் மாநில பாஜகவின் துணை தலைவராகவும், தற்போது சுகாதாரத்துறை அமைச்சராகவுமுள்ள நர்பத் சிங் ராஜீவன் கேட்கிறார். பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும் ராணி பக்கம் நிற்கின்றன.
காங்கிரஸ், கட்சியில் ராஜஸ்தான் மாநில தலைவராகவுள்ள சச்சின் பைலட்டை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்துகிறது. முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் எனக்கே மீண்டும் பதவி வேண்டும் என கேட்கிறார். ஆனால், தேசிய அரசியலில் இருந்த அசோக் கெலாட்டை மாநில அரசியலுக்கு அனுப்பியது கட்சித் தலைமைதான். அப்படி வந்தவருக்கு 1998ல் முதல்வர் பதவி கிடைத்தது. இரண்டாவது முறையாக 2008ல் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தியது காங்கிரஸ் தலைமை. பதவியில் இருந்த காலத்தில் சம்பாதித்ததை கறுப்பு பணமாக வைத்திருந்துள்ளார். உலக அளவில் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் பனாமா பேப்பர்ஸ் என்கிற பெயரில் வெளிவந்தபோது, அதில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட் பெயரும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார். இதனால் அவருக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைப்பது சிரமம் என்கின்றனர்.
ராஜஸ்தானின் கோட்டை கொத்தளங்கள்தான் பளபளப்பாக உள்ளன. பிகானேரில் நடைபெறும் ஒட்டகத் திருவிழா, 18 நாள் திருவிழாவான மேவார் திருவிழா, ஜெய்பூரில் நடக்கும் காங்கூர் சித்திரைத் திருவிழா, கைலா தேவி விழா, ராஜஸ்தானிய பாலைவனத்திருவிழா, ஒட்டகத் திருவிழா, மாநிலத்தின் பாரம்பரியமிக்க கோமார் நடனம் போன்றவற்றை காணும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மெய்மறந்து ரசித்து ஆச்சர்யப்படுகின்றனர். ஆனால், மக்கள் தங்களை ஆளும் ஆட்சியாளர்களை ஆச்சர்யமாக பார்க்கும் அளவுக்கு முந்தைய ஆட்சியாளர்களுமில்லை, மன்னர் குடும்பத்தில் இருந்து வந்துள்ள இப்போதைய ஆட்சியாளரருமில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.
முந்தைய பகுதி:
கொடைக்கானல் கான்வென்ட் டூ ராஜஸ்தான் கோட்டை! - முதல்வரைத் தெரியுமா #8