Skip to main content

பெட்ரோலை ஓவர்டேக் செய்த டீசல்!!!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

 

பெட்ரோல், டீசல் நம் வாழ்வில் இன்றியமையாத பொருள், அதை சுற்றிதான் ஒட்டுமொத்த வணிகமும் இயங்கி வருகிறது, ஏதோ ஒரு வகையில். மே 2014ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்தது. அப்போது சென்னையில் பெட்ரோல் விலை ரூ.69.45, டீசல் விலை ரூ. 60.5. 2017, ஜூன் 16 வரை 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றப்படும். ஜுன் 16, 2017 முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படும்போது விலை கூடினால் கண்டனங்கள், போராட்டங்கள் ஆகியவை நடக்கும் அவையெல்லாம் தினசரி விலைமாற்றத்தின்பின் காணாமல்போனது. தினமும் விலை கூடியபோதும் பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. 
 

ஜூன் 16, 2017 அன்று பெட்ரோல் ரூ.68.02க்கும், டீசல் ரூ.57.41க்கும் விற்கப்பட்டது. தினமும் விலை உயர்வு, குறைவு என மாறி, மாறி வந்தது. சில வேளைகளில் தொடர்ந்து கூடியதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ரூ.84.64க்கும், டீசல் ரூ.79.22க்கும் விற்பனை ஆகிறது. ஏறக்குறைய ஒன்றரை வருடங்களில் பெட்ரோல் விலை ரூ.16.62, டீசல் விலை ரூ. 22.81 கூடியுள்ளது. இவ்வளவு அபரிவிதமான விலை உயர்வு அதுசார்ந்த அனைத்து பொருட்களின் விலைகளையும் ஏற்றியது. 
 

ஒருபுறம் காலமாற்றம், விலையேற்றம் என நியமான காரணங்கள் இருந்தாலும், மற்றொருபுறம் நிர்வாக திறனற்ற நிலை, தொலைநோக்கு பார்வை இல்லாதது ஆகியவைகளும் உள்ளன. இந்த அபரிவிதமான விலையேற்றத்திற்கு தோல்வியடைந்த திட்டங்கள் முக்கிய காரணமாகும். இதுவரை நடந்திராத ஒரு அதிசயமும் நடந்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக டீசல் விலை, பெட்ரோல் விலையைவிட அதிகமாகியுள்ளது. ஒரிஷாவில்தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. ஒரிஷாவில் பெட்ரோல் ரூ.80.68க்கும், டீசல் ரூ.80.76க்கும் விற்பனை ஆகிறது. இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் வண்டிகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, நடந்து அல்லது சைக்கிளில்தான் செல்ல வேண்டும் என புலம்புகின்றனர் மக்கள்.