Skip to main content

கட்சி சின்னத்தில் கல்யாண தாலி! - அதிசய கிராமம்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd

 

தமிழர்கள் ஆதிகாலத்தில், பனை ஓலையைத் தாலியாகக் கட்டினார்கள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. பின்னர், அது மஞ்சள் கயிறாக மாறியது. காலப்போக்கில் தங்கத்தாலி வழக்கத்துக்கு வர, அதில் தங்கள் குலதெய்வங்களின் படத்தைப் பொறித்தார்கள். அது இப்போது குலம், கோத்திரம் என்று பல்வேறு வடிவங்களில், பெண்களின் கழுத்தில், இதயத்துக்கு நெருக்கமாகத் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில்தான், கட்சி சின்னத்தையே தாலியாக கட்டும் அதிசய கிராமம் பற்றி தகவல் வர... விருத்தாசலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், உள்ள மு.பட்டி எனும் கிராமத்திற்குச் சென்றோம். அரசியல் விழிப்புணர்வும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட திராவிட கிராமமாகக் திகழும் மு.பட்டியில் உள்ள தி.மு.க.வினர், தங்கள் குடும்பத் திருமணங்களில், உதயசூரியன் சின்னத்தைத் தாலியில் பொறித்துக் கட்டுவதை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறார்களாம்.

 

dddd

 

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் திருமணம், விருத்தாசலத்தில் நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். மு.பட்டி கருணாநிதி - கண்ணகி தம்பதியரின் மகன் வைகோவிற்கும், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - செந்தமிழ்ச்செல்வி தம்பதிகளின் மகள் இந்துமதிக்கும் விருத்தாசலத்தில் உள்ள சபிதா திருமண மண்டபத்தில் சுயமரியாதைத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கணேசன் முன்னிலையில், திருச்சி சிவா எம்.பி. அந்த சீர்திருத்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமகள் கழுத்தில் உதயசூரியன் தாலியை மணமகன் கட்டினார்.

 

தனது மகளின் புதுமனை புகுவிழாவில் தலைகாட்டிவிட்டு, இந்த சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த திருச்சி சிவா வாழ்த்தும்போது, “பல ஆண்டுகளாக கொள்கைப் பிடிப்போடு உள்ள கிராமம் மு.பட்டி. மணமகனின் தாத்தா சுப்பிரமணியன் திராவிட முன்னேற்றக் கழகத்தை அங்கே வேர் ஊன்றச் செய்தவர். அவரது மகன்களும், அவரது பேரப் பிள்ளைகளும் அதே வழியில் சுயமரியாதைத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து திராவிட உணர்வோடு திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் குடும்பம் மட்டுமல்ல, அங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பிடிப்புள்ள அனைத்து குடும்பத்திலும், இதே போன்ற சூரியத்தாலி திருமணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

 

dddd

 

மணமகனின் தந்தை கருணாநிதியிடம் நாம் கேட்டபோது, “எனது அத்தை ராசாயாள் என்பவரைத் திட்டக்குடி அருகில் உள்ள தொ.செங்கமேடு கிராமத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது எனது தந்தை சுப்பிரமணின் அடிக்கடி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவருவார். அங்கேயே சில நாட்கள் தங்கி அங்குள்ள விவசாய வேலைகளைக் கவனிப்பார். 1952-ஆம் ஆண்டு அந்த ஊரைச் சேர்ந்த தொ.பிச்சமுத்து என்பவர், அந்த ஊரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியதோடு, பல்வேறு கிராமங்களிலும் கட்சியைத் துவக்கினார். அதன் காரணமாக அவர் விருத்தாசலம் வட்டச் செயலாளராக பதவி வகித்தார். அவர் கலைஞரையும், கவிஞர் கண்ணதாசனையும் அந்த ஊருக்கு அழைத்துவந்து கூட்டம் நடத்தினார். அப்போதெல்லாம் பஸ் வசதி இல்லாத காலம். திட்டக்குடியில் இருந்து கட்டைவண்டியில் கலைஞரை அழைத்து வந்ததாக என் தந்தை கூறியுள்ளார். கலைஞரின் தமிழ் அவருக்குள் உணர்வை ஊட்டியது. ஊருக்குத் திரும்பியதும், முதல் வேலையாக எங்கள் ஊரில் தி.மு.க. கொடியை ஏற்றி, திண்ணைப் பிரச்சாரம் செய்தார்.

dddd

                                                                         கருணாநிதி

 

அவரது சமகால நண்பர்களோடு பல்வேறு கிராமங்களுக்கும் சென்று கட்சிக் கொடியேற்றி, கிளைக் கழகங்களை உருவாக்கினார். அந்த திராவிட உணர்வு எங்கள் ரத்தத்திலும், நாடி நரம்புகளிலும் கலந்துள்ளது. எனது அண்ணன்கள் செங்குட்டுவன், அறிவழகன், மூன்றாவது பிள்ளை கருணாநிதியாகிய நான், நான்காவதாக தம்பி ராஜேந்திரன் என எங்களின் பெயர்களைக் கூட, அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளின் பெயராகவே சூட்டினார். 2016-ல் அவர் மரணமடையும் வரை தி.மு.க.தான் உயிர்மூச்சு'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
 

dddd

                                                                       சுப்பிரமணியன்

 

அவரே தொடர்ந்து, “நான்காவது தலைமுறையாக சூரியத் தாலி திருமணத்தை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். அந்தத் தாலியில் திருமணத் தேதியும் இருக்கும். எங்கள் கிராமத்தில் எல்லோரும் வைதீகத் திருமணத்துக்கு இடம் கொடுக்காமல் சீர்திருத்தத் திருமணத்தையே கடைப்பிடிக்கிறோம். குழந்தைகளுக்கும் திராவிடத் தலைவர்களின் பெயர்களையே சூட்டுகிறோம். அந்த வகையில் இது முன்னோடி திராவிடக் கிராமம்’’ என்றார் உற்சாகமாக.

 

ஒரு தொண்டன், தான் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைப் பிடிப்பில் எந்த அளவிற்கு உள்ளான் என்பதற்கு உதாரணமாக, திருமணத்திற்கு வருகை தந்த மு.பட்டியைச் சேர்ந்த சிலர், ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது விருத்தாசலம் தொகுதியில் நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர், விருத்தாசலம் நகரில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். 

 

அப்போது மாவட்ட இலக்கிய அணி பொறுப்பில் இருந்தவர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்ததோடு, அவரோடு தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார். அதைப் பார்த்தப் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரது தந்தை இறந்துபோய் சடலமாக வீட்டில் படுத்திருக்க, தான் சார்ந்துள்ள கட்சியின் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளாரே, தந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாமா? என்று கட்சியினர் அவரிடம் கேட்டுள்ளனர். 

 

அப்போது அவர் கண்கள் கலங்கியபடி கூறினார், “என் தந்தை 64 வருடமாக கலைஞரே என் உயிர்; கழகமே என் உடல் என்று வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன்பு ‘கட்சிதான் முதலில், அதன் பிறகுதான் குடும்ப நிகழ்வுகள்’ என்று சொன்னவர். அவரது கொள்கையைக் கடைபிடிக்கும் நோக்கத்தில்தான் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்தேன். இனி ஊருக்குச் சென்று தந்தையின் இறுதி கடமைகளை செய்வேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய நிம்மதி இனி எனக்கு ஏற்படும்” என்றார். அவர்தான் மறைந்த சுப்பிரமணியனின் மகன், இங்கே மணமகனாக உள்ள வைகோவின் தந்தை கருணாநிதி என்றனர்.

 

திருமண அரங்கிலிருந்து கிளம்பும்போது “அழைக்கின்றார் அண்ணா...” என்ற நாகூர் ஹனீபாவின் பாடல் எங்கிருந்தோ காற்றில் மிதந்துவந்து மனதைத் தாலாட்டியது.