Skip to main content

மத்திய மந்திரி பதவி அ.தி.மு.க.வுக்கு எந்த உறுதியும் மோடி தரவில்லை!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றி, மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும், பல்வேறு நெருக்கடிகளை கட்சிக்குள் எதிர்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 22 தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கும் 28-ந்தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத் தார் சபாநாயகர் தனபால். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் 29-ந்தேதி பதவியேற்கிறார்கள்.

 

admk



புதிதாக 9 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற வலிமை 123 ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல, 13 எம்.எல்.ஏ.க் களை தி.மு.க. கூடுதலாக பெற்ற நிலையில் தி.மு.க.வின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 8 எம்.எல்.ஏ.க் கள் இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் எம்.பி. தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் காங்கிரஸின் வலிமை 7 ஆனது. மற்றொரு தோழமைக் கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு 1 எம்.எல்.ஏ. இருக்கிறார். இவற்றை கணக்கில் கொண்டால் தி.மு.க.வின் சட்டமன்ற வலிமை தற்போது 109.
 

admk



ஒருவேளை 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் பேரவையின் வலிமை 222ஆக குறையும். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேர் தேவை. அந்தச் சூழலில் அ.தி.மு.க.வின் பலம் 112 (123-11) ஆக இருக்கும். தி.மு.க. கூட்டணியின் வலிமை 109. சுயேட்சையாக இருக்கும் தினகரன், எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தாலும் எதிர்வரிசையில் 110 பேர்தான் இருப்பர். 2 ஓட்டில் எடப்பாடி வெற்றிபெறுவார். பா.ஜ.க. ஆதரவும் டெல்லி லாபியும் இருக்கும் வரையில் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு அ.தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் இருக்கும்'' என சுட்டிக்காட்டுகிறார்கள். 
 

dmk



சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசியபோது, "சட்டமன்றம் துவங்கும் நாளில் கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். அன்றைய நாளில் இந்த   தீர்மானத்தை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது தீர்மானிக்கப்படும். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு  குறைந்தபட்சம் 35 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அந்த ஆதரவு இருக்கிறதா என உறுப்பினர்களை எழுந்து நிற்கச் சொல்வார். ஆதரவு இருந்தால் தீர்மானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து  அன்றைய தினமோ அல்லது அதிலிருந்து 7 நாட்களில் ஏதேனும் ஒரு நாளிலோ தீர்மானத்தின் மீது விவாதமும் ஓட்டெடுப்பும் நடக்கும். அப்போது துணைசபாநாயகர் சபையை நடத்துவார். ஓட்டெடுப்பில் தீர்மானம் வெற்றிபெற்றால் சபாநாயகரின் பதவி பறி போகும். தி.மு.க. கொண்டுவந்துள்ள நம்பிக்கை யில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய அனுமதி கிடைக்கும். ஆனால், தீர்மானம் வெற்றி பெறுமா என்பது ஓட்டெடுப்பில்தான் தெரியும். தற் போதைய அ.தி.மு.க.வின் வலிமையை வைத்துக் கணக்கிடும்போது அ.தி.மு.க.வினர் மாத்தி ஓட்டு போடவில்லை எனில் தி.மு.க.வின் தீர்மானம் தோற்றுப்போகும்'' என விவரிக்கின்றனர். 

 

speaker



இதுகுறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, "இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் தி.மு.க. ஜெயித்துவிடும் என்கிற நம்பிக்கையில்தான் சபாநாயகருக்கு எதிராக கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருப்பதை நாங்களும் உணர்கிறோம். இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிபெற வைக்க சில வியூகங்கள் எடுக்கப்படுகின்றன. அது சாத்தியமாகும் என நம்புகிறோம்'' என்கிறார்கள். அதாவது, சபாவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடக்கும் நாளில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரை லீவ் எடுக்க வைக்கவும் சிலரை மாத்தி ஓட்டுப்போட வைக்கவும் தி.மு.க. தரப்பில் முயற்சித்து வருகின்றனர். ஆனால், கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும் என்கிற பயம் அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே இருக்கிறது. 

 

admk



இந்த நிலையில், இடைத்தேர்தலில் ஆட்சியை தக்க வைத்திருக்கும் நிலையில் எடப்பாடியை அவரது வீட்டில் சந்தித்த தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், "மந்திரிசபையை மாத்துங்கள். அதுவும் நடப்புக் கூட்டத்தொடரிலேயே மாத்துங்கள். மந்திரிகள் யாருமே எங்களை மதிப்பதில்லை. எல்லோரும் ஏகத்துக்கும் சம்பாதித்துவிட்டனர். அதனால் எங்களை கண்டுகொள்வதில்லை.

பல அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் இருக்கிறது. அதை பிரித்துக் கொடுங்கள். கடந்த 4 மாதங்களாக எதுவும் வரவில்லை. அம்மா இருந்திருந்தால் நாங்களெல்லாம் அமைச்சர்களாகியிருப்போம். அமைச்சர்கள் பலர் எங்களுடைய கோரிக்கையை ஏற்பதே இல்லை. அதிகாரிகள் மூலமாக "கோரிக்கையை நிறைவேற்ற வழியில்லையே' என சொல்ல வைக்கின்றனர் அவர்கள். அதனால் அமைச்சர்களாக இருப்பவர்களே தொடர்ந்து சம்பாதிக்க வேண்டுமா?  மந்திரிசபையை மாத்தவில்லை எனில் நாங்களும் மாத்தி யோசிக்க வேண்டியதிருக்கும்'' என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு, அமைச்சரவையை மாத்தியமைக்கணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால், மாற்றினால் குழப்பமும் பிரச்சனையும்தான் வரும். உங்களுக்கான தேவைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறது'' என சமாதானம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ஆனால், எம்.எல்.ஏ.க்களோ சமாதானமாகாமல், "தி.மு.க. தரப்பிலிருந்து எங்களுக்கு நிறைய ஆஃபர் வருகிறது. அதனால் அமைச்சரவையை மாற்றியமையுங்கள்'' என கடுமையாகவே வலியுறுத்தினர்.


அமைச்சர் பதவி கிடைக்கவில்லையெனில் தி.மு.க.வோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்கிற மிரட்டல் தொனியிலேயே அவர்களது வலியுறுத்தல்கள் இருந்ததால்,  மூத்த அமைச்சர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி. எம்.எல்.ஏ.க்களின் ஆவேசத்தையறிந்த அமைச்சர்களும் டென்சனாகியிருக்கிறார்கள். "யாரை மாத்துவது? அமைச்சரவையிலிருந்து யாரை தூக்கினாலும் பிரச்சனைதான்' என சொல்லியிருக்கிறார்கள். மந்திரி பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் தரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார் எடப்பாடி என சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க.வினர். 

மேலும், எம்.எல்.ஏ.க்களின் நெருக்கடி ஒருபுறமிருக்க, எம்.பி.க்கள் சிலரும் எடப்பாடியை நெருக்கி வருகின்றனர். மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் பதவி வாங்கித்தருமாறு  எடப்பாடியை வலியுறுத்தி வருகிறார். அடுத்த மாதம் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் எம்.பி.யாகி விடலாம் என்பதால் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வேணுகோபால் உள்ளிட்ட சிலரும் மத்திய அமைச்சர் பதவிக்காக எடப்பாடியிடம் மல்லுக்கட்டுகிறார்கள். இந்தச் சூழலில், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கேட்டு அமித்ஷா லாபி மூலம் ஓ.பி.எஸ். முயற்சித்து         வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரும் தனது மகன் ஜெயவர்த்தனை ராஜ்யசபாவுக்கு அனுப்பி, மந்திரி பதவி வாங்க முயற்சித்து வருகிறார். ஆனால், மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வை சேர்த்துக்கொள்ள எந்த உறுதியும் மோடி தரவில்லையே என சொல்லி வருகிறார் எடப்பாடி. ஆக, மாநில அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்களும், மத்திய அமைச்சர் பதவி கேட்டு எம்.பி.க்களும் தரும் நெருக்கடி  எடப்பாடியை டென்சன் படுத்தியபடி இருக்கிறது'' என்கின்றனர்.