இந்தியா முழுக்க உள்ள கிராமங்கள் அனைத்தும் மோடி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் மின்சாரம் இல்லாமலா இருந்தன? சுருக்கென்று தைப்பதைப் போலத்தான் கேட்கிறார் ப.சிதம்பரம். ஆனால், மோடிக்கு உண்மையை ஒப்புக்கொண்டு பழக்கமே இல்லையே. அவருடைய ஆட்சியே பொய்களின் அஸ்திவாரத்தில்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பை வழங்கிவிட்டதாக பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்து மோடி அரசு பீற்றிக்கொண்டது. இதற்கு பதிலளித்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார். பொய்யைச் சொல்வாரே தவிர, அது பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் தான் சொன்ன பொய்யை திரும்பப் பெறும் பழக்கம் மோடிக்கோ, பாஜகவுக்கோ எப்போதும் கிடையாது.
'விடுதலைக்கு பிறகு தொடங்கிய மின்மயமாக்கும் திட்டத்தை காங்கிரஸ் மட்டுமின்றி, இடையில் வந்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டுவந்தன. முந்தைய அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களின் பலன்களையும் மோடி தனது கணக்கில் வரவு வைப்பது எப்படி நியாயமாகும்?' என்று சிதம்பரம் கேட்டுள்ளார். 'மோடி பதவியேற்கும்போது, 5 லட்சத்து 79 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்ததா இல்லையா? அந்த இணைப்புகளை வழங்கியது யார் என்று மோடி சொல்வாரா?' என்றும் அவர் கேட்டார். 'பெட்ரோல் மீதும் டீசல் மீதும் அளவுக்கதிகமான வரியை விதித்துவிட்டு, மக்களுடைய நலனுக்காகத்தான் வருமானத்தை அரசு திரட்டுவதாக கூறியிருக்கிறார், இவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் கிண்டல் செய்துள்ளார்.
இதனிடையே, எல்லா கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுத்துவிட்டதாக மோடி அரசு விளம்பரம் செய்திருப்பதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் அசாமில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அந்த மாநில பாஜக தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது கிராமத்தில் தனது வீட்டிற்கு மட்டுமே மின்சாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறைகூறியிருக்கிறார். இன்னொரு முதியவரோ தனது கிராமத்துக்கு மின்சார வசதி செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவி்ததிருக்கிறார்.
இவ்வளவுக்கும் பிறகு, பெரிய கிராமங்களுக்கு மட்டுமின்றி குக்கிராமங்களுக்கும், சிறு குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வசதி செய்துதரப்படும் என்று மத்திய அரசு புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.