Skip to main content

"சளி பிடிச்சிருந்தால் போதும் கரோனாவென்று சொல்லி ஆஸ்பத்திரியில் போட்டுவிடுகிறார்கள்" - மன்சூர் அலிகான் பேச்சு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

g


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு, 
 

கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. விரைவில் கரோனா கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து வருகின்றது. மேலும் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்கள். இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

மத்திய அரசு இந்த லாக் டவுன் விஷயத்தில் பெரிய தவறு செய்துள்ளது. மிகப்பெரிய ஆற்றல் படைத்தவர்களை எல்லாம் வீட்டில் இரு என்று கூறியுள்ளது. நான் லாக் டவுன் வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் எப்போது அவர்கள் இதைக் கொண்டு வருகிறார்கள். ட்ரம்ப் இந்தியாவிற்கு 10 ஆயிரம் பேருடன் வந்தார். அவரை வைத்து லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, இரண்டு நாட்களுக்குக் கூட்டம் நடத்தினார்கள். பிறகு, இந்த ஈஷா யோகா மையம் நடத்திய கூட்டங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அதை எல்லாம் இவர்கள் விட்டுவிட்டார்கள். அதையும் தாண்டி பிப்ரவரி மாதம் பல்வேறு கோயில் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் எனப் பல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை எல்லாம் தடுக்கவில்லை. அப்போதே நூற்றுக்கணக்கான நாடுகளில் கரோனா பரவி இருந்தது. கரோனா விவகாரத்தில் பிரதமர் மாபெரும் தவறு செய்துள்ளார். இந்தியாவின் தட்ப வெப்ப நிலையே வேறு. நீங்கள் இந்தியாவில் கரோனா பரவி விட்டதே என்று கேட்கிறீர்கள். இதில் பெரிய அளவில் அரசியல் செய்கிறார்கள். மோடி இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 
 

http://onelink.to/nknapp


தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை என்று தமிழக அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதற்கான வாப்பு என்பது கிடையாது. உலக சுகாதார நிறுவனம் பேச்சை நாம் கேட்கக்கூடாது. அவர்கள் முட்டாள் தனமாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்திய நாடு எவ்வளவு பெரிய வல்லரசு நாடாக வேண்டியது. பொருளாதாரத்தில் எங்கோ இருக்க வேண்டிய நாடு லாக் டவுனில் சிக்கித் தவிக்கின்றது. அவர்கள் மட்டும் அனுமதித்திருந்தால் 10 லட்சம் கோடிக்கு மேல் மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு தமிழர்கள் இருந்திருப்பார்கள். தமிழகத்தின் பொருளாதாரத்தை எங்கோ கொண்டு சென்றிருக்கலாம். சளி பிடிச்சிருந்தா கரோனானு சொல்லி ஆஸ்பத்திரியில் போட்டுவிடுகிறார்கள். பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து நீ குணமடைந்து விட்டாய் எனச் சொல்லி வெளியில் விட்டுவிடுகிறார்கள். இதற்கு லாக் டவுன் எதற்கு? எதையாவது பேசினால் அமெரிக்காவைப் பற்றி பேசுகிறீர்கள். அமெரிக்காவின் தட்ப வெப்ப நிலை என்பது வேறு, இந்தியாவின் தட்பவெப்ப நிலை என்பது வேறு. அதையும் இதையும்  ஒன்றாக்க வேண்டிய தேவையில்லை. உலக சுகாதார நிறுவனம் நம்மை தப்பா வழிநடத்துகிறார்கள் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு, என்றார்.