சனாதன தர்ம சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை அரசியல் களச் செயற்பாட்டாளர் ‘மனிதி’ செல்வி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முதலில் அதை பெண்கள் மனதில் தான் ஏற்றுவார்கள். அப்படித்தான் சனாதனமும். சனாதனத்தை எதிர்த்து உதயநிதி குரல் கொடுப்பதை நாம் வரவேற்கிறோம். கருத்தியல் ரீதியாக மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கோட்பாடு தான் சனாதனம். இதுகுறித்து பெண்களிடமும் நாம் உரையாட வேண்டும். சனாதன தர்மப்படி இந்த நாடு இன்றுவரை இருந்திருந்தால், பெண்களால் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க முடியாது. தனியாக ஒரு பெண்ணால் வாழ முடியாது என்றும், தகப்பன், கணவன் என்று ஆணின் துணையுடன் தான் வாழவேண்டும் என்றும், கணவன் இறந்தால் மனைவியும் இறக்க வேண்டும் என்றும் சனாதனம் சொன்னது.
பொய்யான புராண கட்டுக் கதைகள் மூலம் சனாதனம் இன்று நிலைத்து நிற்கிறது. சனாதனத்துக்கு ஆதரவாகப் பேசும் பெண்கள் தங்களுடைய மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு தான் பேசுகிறார்கள். பல ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக பெண்களுக்கான உரிமைகள் கிடைத்திருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சமத்துவ திட்டத்தைக் கொண்டு வந்தால், அதை எதிர்த்து சனாதனிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். இன்றும் சனாதனம் உயிரோடு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிய பதவிக்கு வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் உரிமை வடநாட்டு மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. விவாதங்களும் தர்க்கங்களும் உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் பொய்களை மட்டுமே சொல்வார்கள். அவ்வாறுதான் உதயநிதி பேசியதை இன்று திரித்து பரப்புகிறார்கள். தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காகத் தான் இன்று உதயநிதி பேசியதை பேசுபொருளாக்குகிறார்கள். இதனால் ஏற்பட்ட கெட்ட பெயரை மறைக்கத்தான் இட ஒதுக்கீடு அவசியம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகிறார்.
பிறப்புக்கு விதிக்கப்பட்ட தொழிலைத் தான் ஒருவர் செய்ய வேண்டும் என்கிறார் அண்ணாமலை. யார் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று இன்னொருவர் முடிவு செய்வது தான் சனாதனம். யார் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தான் சமூகநீதி. மலம் அள்ளுவது உயர்ந்த தொழில் தான் என்று பேசியவர் மோடி. எனில், அந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டியது தானே? முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் சனாதனக் கூட்டம்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்கில் காணலாம்...