சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்திய அளவில் சர்ச்சையான நிலையில், இது குறித்து நாம் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் கவிதா கஜேந்திரனை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டதை இங்கு தொகுத்துள்ளோம்...
“கடந்த செப்டம்பர் 2ம் தேதி த.மு.எ.ச.க சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அதில், அமைச்சர் உதயநிதி உட்பட நிறைய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். அதிலும், உதயநிதி ஸ்டாலின், " இதனை எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல்.... நல்லவேலை ஒழிப்பு என வைத்துள்ளீர்கள்" என பேச்சைத் தொடங்கினார். இதற்கு, அமெரிக்க கருப்பின புரட்சியாளர் ஏஞ்சலா டேவிஸ், "ஒரு ஒடுக்குமுறையை கண்டுபிடிப்பது மட்டும் நமது வேலை இல்லை. அதன் வேரை கண்டறிந்து பிடுங்கிப் போடுவது இடதுசாரிகளின் கடமை" என கூறியிருக்கிறார்.
இதுபோன்ற ஒடுக்குமுறைகள் நமக்கு இந்தியா மாதிரியான நாட்டில் நிகழும் போது. இதுவரை இந்தியாவை பற்றி வெளிநாட்டவர்கள் உட்பட நினைப்பது, இது ஒரு ஆன்மிக நாடு என்றும் பாரம்பரியம் மிக்கது எனவும் பிம்பம் உள்ளது. ஆனால், இந்தியா சாதி, மதம் என்ற கட்டமைப்பில் இருக்கிறது. மேலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கிறது. தொடர்ந்து மதமும் சாதியின் அடிப்படையில் இருந்து வருகிறது. எனவே, இவைகள் எல்லாம் பிணைந்து நம் தினசரி வாழ்வை இயக்குகிறது. இதன்மூலம், இதன் வேர் என்னவென்று பார்த்தால் சனாதனம், மனுநீதி, வர்ணாஸ்ரமம் போன்றவை இருக்கிறது. மனுநீதி தான் இவர்களின் விதியாகவும் உள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக மக்களின் சிந்தனையை நாம் பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லை. மாறாக, பார்ப்பனியம் அனைத்து இடங்களிலும் ஊடுருவிவிட்டது என்று தான் சொல்கிறோம். இன்றைக்கு நாம் நவீன பார்ப்பனர்கள் என சில மக்களை அழைக்கக் காரணம், அவர்களின் சிந்தனையும் அதே போன்று இருப்பதால். இவை அனைத்தையும் இந்து மதம், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் சேர்த்து நம்மீது சாதியையும் திணித்துள்ளனர்.
தொடர்ந்து, சனாதனத்தின் கொள்கைகள், முறைகள் என்னவென்று ஆராய்ந்தால். இது முழுக்க முழுக்க ஒரு சமூகத்தின் மீதும் ஒரு பாலினத்தின் மீதும் எவ்வாறெல்லாம் ஒடுக்குமுறையை ஏவ முடியும் என்றும், மேலும், பிறப்பால் சாதியை வைத்து அடையாளம் காணும், உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத முறை உள்ளது. இந்த முறைகளை தெரிவிக்கும் வழிகளை சனாதனம் சார்ந்த மனுநீதி நூல் வரிகளில் இருந்து தானே அவர்கள் எடுக்கிறார்கள். இதனால், இன்றைக்கும் பெண்கள் கோவில் கருவறையினுள் நுழைய முடியவில்லை. பெண்களின் பிரசவத்திற்கு முந்தைய மாதவிடாய் காலத்தைக் கூட தீட்டு என்று பெண்களையும் தீட்டு என அணுகும் செயல் எங்கிருந்து வருகிறது? சபரி மலைக்கு செல்லும் பொழுது இந்த பெண்களை பார்க்கக் கூடாது. கோவில் உள்ளே போகக் கூடாது. இது தீட்டு இதனை தொடக் கூடாது. மூன்று நாட்கள் தனியாக உட்கார வேண்டும். கணவர் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறவேண்டும் என சொல்லியதும் சனாதனம் தானே.
பிறப்பால் ஒருவரை தலித், சூத்திரர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கு கீழானவர்கள் எனவும் அவர்களே கடவுளுக்கு சமமானவர்கள் என்று சொல்வது மனுநீதி, சனாதனம் தானே. இவர்கள் தான் இந்த முறைகளை முன்வைத்தார்கள். இவ்வளவு ஆண்டுகாலமாக நாம் இந்த கோட்பாடுகளுக்குள் வாழ்ந்து வந்தோம். ஆனால், சில நூறாண்டுகளுக்கு முன் வள்ளலார் தொடங்கி பெரியார் வரை நமக்கு அறிவுறுத்தி சென்றுள்ளனர். மனுநீதி தான் நம்மை அடிமைப்படுத்துகிறது என பல தலைவர்கள் சொல்லிய பிறகு அதன் வேரை கண்டடைகிறோம். பின்னர், இது தான் சீழ் என உணர்ந்து அழிக்க முன்வருகிறோம். சமீபத்தில், நாங்குநேரியில், நன்றாக படிக்கும் தலித் சிறுவன் மீது தாக்கும் துணிவு ஏன் எழுகிறது. ஆக, இதற்கெல்லாம் காரணம் சாதி என்பதால் தான் உதயநிதி, கி.வீரமணி போன்றோர் பேசுகிறார்கள். எனவே, இந்த சனாதனத்தை ஒழிக்க முன்வரவில்லை என்றால் நாம் முன்னோக்கி செல்ல முடியாது என்ற பார்வையை உதயநிதி முன்வைத்துள்ளார். இதனடிப்படையில், இந்த கருத்தை நாம் ஆதரிக்க வேண்டும்” என்றார்.