Skip to main content

உலகநாயகனின் அடங்காப்பசி; கமல்ஹாசனால் தமிழ் சினிமா கண்ட தொழில்நுட்ப புதுமைகள்

Published on 23/05/2022 | Edited on 07/11/2022

 

kamalhaasan introduced new technology tamil cinema

 

கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டிற்கு மேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகை கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன். 6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 67 வயதை தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை  நடிப்பு எனும் சிறு வட்டத்திற்குள் மட்டும் சுருக்க முடியாது. நடிப்பை தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். கலைப்பசியை போலவே கமல்ஹாசன் கொண்டிருந்த இன்னொரு அடங்காப்பசி தொழில்நுட்பம் மீதானது. நாம் சமகாலத்தில்  கொண்டாடும், பயன்படுத்தும், புரிந்துகொள்ள திணறும் பல தொழில்நுட்பங்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்திய தீர்க்கதரிசி. அப்படிப்பட்ட இந்த ஆகச்சிறந்த கலைஞன் கமல்ஹாசன் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்திய சில தொழில்நுட்பங்களை பற்றி பார்ப்போம்...

 

விக்ரம் -  கம்பியூட்டரில் பாடல் பதிவு (computer song recording)

கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இந்திய சினிமாவில் முதல் முறையாக கம்யூட்டரில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

 

குணா - ஸ்டெடி கேமரா (steady camera)

கடந்த 1990 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் குணா. இந்த படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் காடுகள், மலைகளில் தான் படமாக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது, எல்லா இடத்திலும் கேமரா யூனிட்களை பயன்படுத்த முடியாது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், வேறு எவரின்  உதவியும் இல்லாமல் ஒளிப்பதிவாளர் மட்டுமே பயன்படுத்தும் ஸ்டெடி கேம் தமிழ் திரையுலகிற்கு இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

தேவர் மகன் - மேஜிக் சாப்ட்வேர் (movie magic software)

கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் - கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் மூவி மேஜிக் என்ற புதிய  சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார் கமல். இந்த சாப்ட்வேரை பயன்படுத்திதான் தேவர் மகன் படத்திற்கு முழு திரைக்கதையும் எழுதப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக சாஃப்ட்வேரை பயன்படுத்தி திரைக்கதை எழுதப்பட்ட முதல் படம் தேவர் மகன்.

 

குருதிப்புனல் - டால்பி அட்மோஸ் Dolby atmos (sound system audio)

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தில் நடிகர் கமல்ஹாசன் டால்பி அட்மோஸ் (Dolby atmos) என்ற சவுண்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் திரைப்படத்தின் ஆடியோவை தெளிவாக கேட்க முடியும். தமிழ் சினிமாவில் டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகபடுத்தியதும் கமலே.

 

மகாநதி- ஆவிட் எடிட்டிங் சாப்ட்வேர் (avid editing software)

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆவிட் என்ற எடிட்டிங் சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருப்பார். இதற்கு முன்பு பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெட்டி ஒட்டி தான் படத்தை எடிட் செய்து வந்தனர். ஆனால் 'மகாநதி' படம் ஆவிட் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்பட்டது . அதன் பிறகு வந்த படங்கள் தொடங்கி தற்போது வரை இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி படம் அல்லது வீடியோக்களை எடிட் செய்து வருகின்றனர் நம்மவர்கள்.

 

மும்பை எக்ஸ்பிரஸ் - டிஜிட்டல்  கேமரா (digital camera )

2005 ஆம் ஆண்டு வெளியான 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தில் முதல் முறையாக டிஜிட்டல் கேமரா (Red camera) பயன்படுத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்த புதிய ரக கேமராவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்திய  சினிமாவிலேயே முதல் டிஜிட்டல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

 

விஸ்வரூபம் - ஆரோ 3டி (auro 3d)

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் ஆரோ 3டி (auro 3d) சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியான இரண்டாவது திரைப்படம் விஸ்வரூபம். இந்த சவுண்ட் சிஸ்டத்தின் மூலம் தெளிவான மற்றும் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் பொழுது ஒரு புதிய கேட்டல் அனுபவத்தை கொடுக்க முடியும். இந்த சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் ரெட் டைல்ஸ் (Red tails)  என்ற ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.