மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் வைரமுத்து, மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அதில் வைரமுத்து பேசியதாவது; “தமிழ்நாடு மட்டுமே அவரை நினைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை வாங்கி கொடுத்ததற்காக தமிழ் மொழி என்றைக்கும் கலைஞரைப் பற்றி நினைத்து கொண்டிருக்கும். சமஸ்கிருதத்துக்கு பிறகுதான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு உண்மையை சொன்னால், மன்மோகன் சிங் அமைச்சரைவில் தமிழ் மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று கலைஞர் போராடி பெற்ற பிறகுதான், கோப்புகளை எடுத்து பார்க்கிறார்கள். அதில் சமஸ்கிருதத்துக்கு அப்படி ஒரு அந்தஸ்தே இல்லை என்பது தெரியவருகிறது. சமஸ்கிருதத்துக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்காமல் தமிழ் மொழிக்கு கொடுத்துவிட்டால், சமஸ்கிருதத்திற்கு முன்பே தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றது என ஆகிவிடும் என்றும், சமஸ்கிருத பண்பாடு நம்மை தூற்றும் என்று எண்ணியும் தமிழ் மொழிக்கு கொடுக்கும் போது சமஸ்கிருதத்துக்கு கொடுத்து விடுவோம் என்று கொடுத்து விட்டார்கள்.
இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் அனைவரும் சுதந்திர விழாவிலும், குடியரசு விழாவிலும் கொடி ஏற்றி விட்டு வணக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், அந்த வணக்கத்தை அவர்கள் இரண்டாவதாக செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்துகிற முதல் வணக்கம் கலைஞருக்காக இருக்க வேண்டும். ஏனென்றால் கோட்டையில் அனைத்து முதலமைச்சர்களும் கொடி ஏற்றுகிற உரிமையை வாங்கி கொடுத்த முதல் முதலமைச்சர் கலைஞர் தான்.
இலவச மின்சார திட்டம் என்று எப்படி வந்தது என்று கலைஞரிடம் நான் கேட்டேன். அதற்கு கலைஞர், மாடு வாங்கவும், அந்த மாட்டுக்கு தீவனம் வாங்க பணமும் அவர்களிடம் இல்லாத போது இலவச மின்சாரம் இருந்தால் உள்ளே இருக்கக் கூடிய நீரை வெளியே எடுத்து விவசாயம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் என்று நினைத்து தான் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்று அறிவித்தேன் என்று கூறினார். ஒரு விவசாயியின் மகன் என்ற முறையில் எங்கள் வீட்டுக்கு மின்சாரம் இல்லாத நேரத்தில் எங்களது தோட்டத்தில் மின்சாரம் வழங்கிய உங்களை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று கூறினேன்.
‘ஒருவன் திருவுடையவனாக ஆவது வேறு அதே போல் தெள்ளியவனாக இருப்பது வேறு. இரண்டும் இருவேறு துருவங்கள் இணைவது இல்லை’ என்று வள்ளுவன் சொன்னான். ஆனால், வள்ளுவன் கூற்றையே பொய்ப்பிக்கும் வகையில் திருவுடையவனும் நான் தான் தெள்ளியவனும் நான் தான் என்று மெய்ப்பித்தவர் கலைஞர். அதே போல், ஒவ்வொரு நூற்றாண்டுக்கு பிறகு 10 சதவீத மொழி அழிந்து விடுகிறது. அதற்காக தான் தமிழர்கள் பழந்தமிழை எப்படி தேடி படிப்பார்கள் என்று தெரிந்து கொண்டு திருக்குறள், சங்கத்தமிழ், தொல்காப்பியம் ஆகியவற்றுக்கு உரை எழுதி இருக்கிறார்” என்று பேசினார்.