Skip to main content

இந்த மிரட்டலையெல்லாம் ஜெ. ஆட்சியிலேயே சந்திச்சிட்டோம்: அண்ணாமலை ஆவேசப் பேட்டி

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

                                                                           

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 28ஆம் தேதி மாலைக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
 

போராட்டம் தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் அகில இந்திய செயலாளர் (ஐபெட்டோ) வா.அண்ணாமலை.

 

annamalai


 

இந்தப் போராட்டத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக ஆளும் கட்சியினர் கூறுகிறார்களே?
 

அரசியல் பின்னணி எதுவும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். 
 

மாணவர்களின் பொதுத்தேர்வு நேரத்தில் உங்களின் போராட்டம் நியாயமானதா?
 

மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியது ஆசிரியர்கள். அந்த பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்து வைத்துவிட்டுத்தான் இந்த போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள். இந்த போராட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டது அரசுதானே தவிர, ஆசிரியர்கள் அல்ல.

 

jacto geo

                                                                            அரியலூர்

நீதிமன்றம் செல்லலாமே?

 

நீதிமன்றமே, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து அரசு அழைத்து பேச வேண்டும் என்று கூறியது. உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் கூட அழைத்து பேச முன்வராமல் இந்தப் போராட்டத்தை அலச்சியப்படுத்துவதன் காரணத்தினால்தான் ஒவ்வொரு நாளும் இந்த போராட்டத்தினுடைய வீச்சு அதிகமானது. இன்னொன்று அடக்குமுறையால் எந்த ஒரு போராட்டத்தையும் அடக்கிவிட முடியாது. இன்று மட்டும் வேலைநிறுத்தத்தில் ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்டனர். 10 லட்சம் பேர் வெளியில்தான் இருக்கிறார்கள். 
 

jacto geo

                                                                        செங்கல்பட்டு
 

அரசு ஊழியர்களிலேயே ஆசிரியர்களுக்குத்தான் ஊதியம் அதிகம். அப்படியிருந்தும் ஏன் பென்சன் கேட்கிறார்கள். விவசாயி உள்பட நாட்டில் எத்தனையோ தொழிலாளிகள் பென்சன் பெறுகிறார்களா? என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறதே? 
 

பொதுமக்களை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல. எல்லோருடனும் அன்றாடம் வாழ்ந்து வருபவர்கள். தொப்புள்கொடி உறவு உள்ளவர்கள். அதேபோல் மாணவர்கள் - ஆசிரியர்களுடனான உறவினையும் வேறு யாரும் பங்குபோட முடியாது. வேண்டுமானால் இந்த அரசு நாடகமாக அறிக்கைகள் மூலம் செய்யலாம். 
 

இந்த நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள். விவசாயிகள் போராடுகிறபோது, இந்த நாடே விவசாயிகள் பின்பு நின்றிருக்க வேண்டும். அப்படி நிற்கவில்லையே யாரும்? விவசாயிகளுக்காக விவசாயிகள்தான் போராடுகிறார்கள். அதேபோல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பென்சனுக்காக எந்த ஆட்சி வந்தாலும் போராட்டம் நடத்தி வருகிறோம். 

 

jacto geo

                                                                            புதுக்கோட்டை


ஊதியத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதம் இன்னும் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தரப்படவில்லை. அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கையில், 20 ஆண்டு காலம் பணியாற்றியவர்களுக்கு இருக்கக்கூடிய ஓய்வூதியத்தைத்தான் வெளியிட்டிருக்கிறாரே தவிர, ஒரு நேரடி நியமனமானவர்களுக்கானது இல்லை. நேரடி நியமனமானதில் ஊதியம் குறைவு என்று இடைநிலை ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள் வித்தியாசத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்குக் கூட 15 ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வருகிறது என்று சொல்லுகிறார்கள்.
 

சொல்லுகின்ற கருத்துக்களைவிட்டுவிட்டு மானாவாரியாக அறிக்கைகளை விடுகிறார் அமைச்சர் ஜெயக்குமார். கல்வி அமைச்சர் ஒன்று சொல்கிறார், முதல் அமைச்சர் ஒன்று சொல்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் வார்த்தை ஜாலத்தை காட்டுவதால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேரின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்கிறார்கள். 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். 

 

jacto geo


                                                                      திருநெல்வேலி


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏறத்தாழ 20 லட்சம் பேர் இந்த அரசு வகுக்கின்ற அத்தனை திட்டங்களையும் மக்கள் மத்தியில் சேர்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இவர்கள் செயல்படுகிறார்கள். ஒரு வீட்டிற்கு 10 வாக்குகள் என்று வைத்துக்கொண்டால்கூட 2 கோடி வாக்காளர்கள்.  அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு இவர்களுடைய பிடிவாதத்தால் இந்த அரசுக்கு எதிராக எந்த தேர்தல் நடந்தாலும் அவர்கள் நிச்சயமாக வெறுப்புணர்வின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்றுதான் எங்களால் இதன் மூலமாக இந்த அரசுக்கு உணர்த்த முடியும்.
 

அரசு வருமானத்தில் 70 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்கிறது. மீதி உள்ள 24 சதவீதம் அரசு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம். மீதி உள்ள 6 சதவீதம் தான் ஏழை எளிய மக்களுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது என்கிறதே ஆளும் தரப்பு? 
 

நாட்டை வழிநடத்துபவர்கள், நாட்டின் நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடைய ஊதியம் அது. இதில் அமைச்சர்கள் ஊதியம், எம்எல்ஏக்கள் ஊதியம், ஐஏஎஸ் அதிகாரிகளின் ஊதியமும் உள்ளது. நாட்டை நடத்துகிற தலைமைச் செயலாளர் ஊதியமும் இருக்கிறது. இதில் பெறுகிற ஊதியம் மூலதனம்போலத்தான். 36 சதவீதம்தான். இந்த 36 சதவீதமும் தவிர்க்க முடியாத ஒன்று. முதலமைச்சர் ஊதியமும் இதில் அடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தவறான புள்ளிவிவரத்தை கொடுத்து மக்கள் மத்தியில் ஏமாற்ற வேண்டாம். 
 

எம்எல்ஏக்களுக்கு இரண்டு மடங்கு ஊதியத்தை உயர்த்தியிருப்பதை, அவர்களுக்கு பென்சன் இருப்பதை ஏன் முதல் அமைச்சர் சொல்லவில்லை. ஐந்தே கால் லட்சம் பேர் புதிய ஓய்வூதியத்திட்டத்தின்படி பணிக்கு சேர்ந்தவர்களிடம் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்கிறார்கள். அவர்கள் 10 சதவீதம் போடுகிறார்கள். இந்தத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இந்த நலத்திட்டங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து செலவிடுகிறார்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம். எந்த பதிலும் இல்லையே? ஓய்வூதிய அமைப்பிற்கு தமிழக அரசின் தொகை இன்னும் வந்து சேரவில்லை என்கிறது மத்திய அரசு. இப்படி
இருந்தால் எங்கள் நிலைமை என்ன? காடு வரையிலான உறவு பென்சன் உறவுதான். 
 

jacto geo

                                                                                ஈரோடு
 

ஓராண்டு எம்எல்ஏவாக இருந்தாலே முழு ஓய்வூதியம் என்கிறபோது, 2003ல் வேலைக்கு வந்து 2019 வரை 16 ஆண்டுகாலமாக ஓய்வூதியமே இல்லாமல் இருக்கிறார்களே. இதையெல்லாம் கேட்கத்தானே சங்கம் இருக்கிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் எங்கள் பணம் எங்கே போனது? அதற்கு பதில் சொல்ல வேண்டும். இறந்துபோனவர்களுக்கு உடனே பணம் கொடுக்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கு உடனே பணம் செட்டில்மெண்ட் பண்ணவில்லையே. 
 

2016 தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்துவதாக ஜெயலலிதா எங்களிடம் சத்தியம் செய்தார். அம்மா அரசு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே. ஏன் அம்மா சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

 

jacto geo

                                                                            சென்னை
 

 நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்போல நாங்களும் கேட்க ஆரம்பிப்போம். எங்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் என்ன சொத்து விவரம்? அன்றைக்கு எப்படி இருந்தார்கள். இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள். கடந்த கால வரலாறு என்ன? அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறவில்லை என்று சொல்ல முடியுமா? உயர்கல்வித்துறையில் இல்லாத ஊழல் இருக்கிறதா? நாங்கள் அறிக்கையை எடுத்து வீச ஆரம்பித்தோம் என்றால் உங்கள் எதிரிகளைவிட அதிகமாக சொல்லமுடியும். போதுமான ஆதாரங்கள் எங்களிம் இருக்கிறது. அதையெல்லாம் வீதிக்கு கொண்டு வருவோம். 
 

எல்.கே.ஜி. வகுப்புகளை தொடங்குகிறார்கள். அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதில் ஏன் தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர்களை போட வேண்டும். இந்த துறை வேறு. அந்த துறை வேறு. எங்கள் விருப்பத்தை கேட்காமலேயே ஏன் செய்ய வேண்டும். எங்கள் விருப்பத்தை கேட்காமலேயே செய்வதற்கு விதிகளில் இடமிருக்கிறதா? ஏன் உத்திரப்பிரதேசம், குஜராத் அரசை பின்பற்றுகிறீர்கள். அந்த கல்விமுறை நமக்கு தேவையில்லை. தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கட்டுமே.
 

காமராஜர் ஆட்சியில் பள்ளிக்கூடங்களை திறந்தார்கள். இப்போது பள்ளிகளை மூடுகிறார்கள். இணைப்பதும், மூடுவதும் ஒன்றுதான். 25 சதவீதம் இலவச கட்டாய கல்வியில் எந்த தனியார் பள்ளியில் வேண்டுமானாலும் சேரலாம் என்கிறார்கள். அதனால் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இலவச கல்வி கிடைக்கிறது என்று போய் சேருகிறார்களே.

 

jacto geo


 

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
 

எங்களைப்போன்ற தலைவர்கள் எங்கள் பிள்ளைகளை முற்றிலும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆசிரியர்களை மட்டுமே ஏன் சொல்ல வேண்டும். அதேபோல் கலெக்டர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும். 
 

இந்த சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று சொல்லும்போது அதிகாரிகளும், மந்திரிகளும் தங்களுக்கு ஏதேனும் வந்தால் அரசு மருத்துவமனைக்குத்தானே போக வேண்டும். ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறீர்கள். தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஏன் அரசு மருத்துவமனையை மந்திரிகள் நம்பி செல்வதில்லை. அப்போ ஆளுக்கொரு நீதியா? அரசுப் பள்ளியைமுதலில் கலெக்டர், எம்எல்ஏக்கள், மந்திரிகள் நம்புங்கள். அதேபோல் அரசு மருத்துவமனையை நம்புங்கள். 
 

இன்னொன்று தனியார் பள்ளிகளை நடவத்துவது அரசியல்வாதிகள்தான். மறைமுகமாக அரசு பள்ளிகளை தேயவைத்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கத்தான் இந்த ரகசிய திட்டங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். புத்தகம் கொடுத்தார்கள். நோட்டு கொடுக்கவில்லை. இலவசம் என முலாம் பூசப்பட்ட இவர்கள் கொடுத்த சைக்கிள்களை ஓட்ட முடியுதா? பள்ளிக்கு தரக்கூடிய பொருள்கள் ஒவ்வொன்றும் தரமானதாக தருகிறார்களா? அடிப்படை கல்வியை கொடுப்பதற்கான வசதியை அரசு ஏற்படுத்தி தரவில்லை. 

 

jacto geo


தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தொடங்கிவிட்டார்களே?
 

இது எங்களை மிரட்டுவதற்காக செய்வது. பணமே இல்லை என்கிறார்கள். பிறகு எப்படி தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் தருவார்கள். ஏமாற்று வேலை. இந்த மிரட்டலையெல்லாம் 2003ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே சந்தித்தோம். ஒன்றே முக்கால் லட்சம் பேரை நிரந்தர பணிநீக்கம் செய்தார்கள். அத்தனைப் பேரையும் வேலையில் உட்கார வைத்து அந்த போராட்டக்காலத்திற்கும் ஊதியம் பெற்றுத்தந்த அமைப்புத்தான் ஜாக்டோ ஜியோ. 
 

ஒரு ஜனநாயக அரசு செய்யக்கூடிய வேலையா இது. எம்.ஜி.ஆர். அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். கலைஞர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆசிரியர்கள், பணியாளர்கள், அரசு ஊழியர்கள், இந்த நாட்டில் உள்ள அத்தனை பங்களிப்புகளிலும் பணியாற்றக்கூடியவர்களை முதல் அமைச்சர் அழைத்து பேச வேண்டும். பிரச்சனையை கேட்க வேண்டும். 19 லட்சம் பேர் போராட்டத்தில் உள்ளார்கள். அவர்களை அழைத்து இந்த முதல் அமைச்சர் பேசவில்லை என்றால் இந்த ஆட்சியை, அரசை அலட்சியப்படுத்துகிறார்களா? எந்த காலத்திலேயும் சங்கங்கள் நிலைத்து நிற்கும். ஆனால் ஆட்சியில் நிரந்தரமாக இருந்தவர்கள் என்ற வரலாறு எவருக்கும் இல்லை. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்