Skip to main content

ம.நடராசனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன் மரணம் என்ற செய்தியும், அவருக்கு தலைவர்களின் அஞ்சலி மற்றும் இரங்கல் செய்திகளும் பலருக்கு வியப்பை அளிக்கலாம்.

 

அரசியலிலோ, பொதுவாழ்க்கையிலோ பங்கேற்காத ம.நடராசனுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்ற கேள்விக்கு சற்று விரிவாகத்தான் பதிலளிக்க வேண்டும்.

 

m.natrajan

 

தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் பிறந்த இவரைப் பற்றிய குறிப்புகள் அனைத்துமே சசிகலா என்ற பெயருடனேயே இணைந்து வருகிறது.

 

ஆனால், மாணவப் பருவத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். 1965ல் தமிழகம் முழுவதும் பற்றியெரிந்த இந்தி எதிர்ப்பு போரை மாணவர் அமைப்பினர் கட்சி சார்பின்றி நடத்தினார்கள். அத்தகைய போராட்டத்தையே அன்றைய காங்கிரஸ் அரசு கொடூரமான அடக்குமுறையை பயன்படுத்தி ஒடுக்க முயன்றது. 500க்கு மேற்பட்ட மாணவர்களை கொன்று குவித்தது.

 

அந்தப் போராட்டத்தின்போது, மாநில அளவிலான போராட்டக்குழு தலைவர்களுடன் ம.நடராசனுக்கு தொடர்பு கிடைத்தது. இந்தத் தொடர்பு, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த அடிப்படையில் 1970ல் முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை ஏற்படுத்தி, நடராசன் உள்ளிட்ட 11 பேருக்கு வேலை கொடுத்தார் கலைஞர்.

 

இதையடுத்து, 1975 ஆம் ஆண்டு நடராசனுக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவுக்கும் கலைஞர் தலைமையிலேயே திருமணம் நடைபெற்றது.

 

natrajan sasikala

 

ஆனால், 1977ல் எம்ஜியார் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் வேலை கொடுத்த நடராசன் உள்ளிட்ட 11 பேரையும் டிஸ்மிஸ் செய்தார். இதையடுத்து நடராசனின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது. இவர் ஏபிஆர்ஓவாக வேலை செய்த அன்றைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா நடராசனுக்கு உதவ முன்வந்தார்.

 

எம்ஜியாரால் பதவிநீக்கம் செய்யப்பட்ட மற்ற 10 பேருக்காகவும் தனக்காகவும் வழக்காட சென்னைக்கு வந்தவர்தான் நடராசன் என்கிறார்கள். அத்தோடு, அன்றைக்கு அறிமுகமான விடியோ கேஸட் லெண்டிங் லைப்ரரி தொழிலை தனது மனைவிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

விடியோ கேஸட்டுகளை ஜெயலலிதா வீட்டுக்கும் கொடுத்து வாங்கினார் சசிகலா. இந்தச் சமயத்தில்தான், 1981ல் ஜெயலலிதா அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது, அவருடைய நிகழ்ச்சிகளையும், அரசு நிகழ்ச்சிகளையும் விடியோ படம்பிடிக்கும் அனுமதியை எம்ஜியாரிடம் பெற்றுத்தந்தார் சந்திரலேகா ஐஏஎஸ்.

 

இவரைத்தான் பின்னாளில் ஆஸிட் வீசி அழகைச் சிதைத்தார் ஜெயலலிதா என்பது மிகப்பெரிய சோகம்.

 

ஜெயலலிதாவுடன் சசிகலாவின் பழக்கம் நெருக்கமானது. எம்ஜியாருக்கு எதிராக ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளுக்கு சசிகலாவின் கணவர் நடராசனே காரணம் என்று சொல்லப்பட்டது. இதன்காரணமாக ஜெயலலிதாவையே கடைசி காலத்தில் எம்ஜியார் ஒதுக்கி வைத்தார். அந்தச் சூழ்நிலையில்தான் எம்ஜியார் மரணம் அடைந்தார்.

 

அதைத்தொடர்ந்து அதிமுகவை கைப்பற்றும் யோசனையை ஜெயலலிதாவுக்கு சொன்னதே நடராசன்தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொன்னார்கள். ஆனால், எம்ஜியார் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. அதன்பிறகு 1989ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதிமுக 27 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. திமுக வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் ரகளையை உருவாக்க முயன்றார். பின்னர், தன்னை மானபங்கம் செய்ய திமுகவினர் முயன்றதாக அப்பட்டமான ஒரு பொய்யை செய்தியாளர்களிடம் பரப்பினார்.

 

அதன்பிறகு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க எம்ஜியாரின் மனைவி ஜானகி ஒப்புக்கொண்டார். பதவிக்காக பணம் கொடுத்ததாக பலரும் ஜெயலலிதா மீது புகார்களை கொடுக்கத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில்தான், மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத்தேர்தலில் பிரச்சாரத்துக்கே வர ஜெயலலிதா மறுத்துவிட்டார். ஆனாலும், ஒருங்கிணைந்த அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

 

இந்த வெற்றிக்கு ம.நடராசன்தான் காரணம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறினார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு, திமுக ஆட்சியைக் கலைக்க சுப்பிரமணியசாமி உள்ளிட்டோருடன் திட்டம்தீட்டி அதில் வெற்றி பெற்றதும் நடராசன்தான் என்று கூறப்பட்டது.

 

இப்படியாக தொடக்கத்திலிருந்தே, ஜெயலலிதாவை அரசியலில் நிலைநிறுத்துவதில் நடராசன்தான் முக்கிய பங்கு வகித்தார் என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து நடராசனை ஒதுக்கிவைத்து, எல்லாமே தான்தான் முடிவெடுப்பதாக ஜெயலலிதா ஒரு தோற்றத்தை உருவாக்கும்படி ஆனது.

 

நடராசனை விலக்கி வைக்க முடிவுசெய்தபோது, சசிகலா ஜெயலலிதாவுடனே தங்கினார். நடராசன் தனது பாதையை தனியாக வகுத்துக்கொண்டார். இருந்தாலும், 1991ல் ராஜிவ் கொலையிலும், அதைத்தொடர்ந்து அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைவதிலும் நடராசனுக்கு பங்கிருந்ததாக ஒரு சாரார் கூறுகிறார்கள்.

 

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் அதுவரை தமிழகம் கண்டிராத வன்முறை, அச்சுறுத்தல் நிறைந்த நிர்வாகத்திற்கு பின்னால் சசிகலா, நடராசன் மற்றும் அவருடைய கூட்டத்தினர் இருந்தனர் என்பதை அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் சொல்கின்றன.

 

இத்தனைக்கும் அதிமுகவில் நடராசன் இல்லை என்று சொல்லப்பட்டது. அவர் தனக்கென தமிழ் அரசி, புதியபார்வை என்ற பத்திரிகைகளை தொடங்கி அவற்றின் ஆசிரியராக மாறியிருந்தார். ஆனாலும் நடராசன் நினைத்த காரியமெல்லாம் அரசாங்கத்தில் நிறைவேறியது. இதை வெளியில் சொல்லக்கூட யாருக்கும் துணிச்சல் இல்லாமல் இருந்தது. அந்த அளவுக்கு தமிழகத்தை பயம் சூழ்ந்திருந்தது.

 

1991-96 மட்டுமின்றி, ஜெயலலிதா மரணமடையும் சமயம்வரை நடராசனின் செல்வாக்கு நீடிக்கவே செய்தது. ஆனால், அவருக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்பதை வெளிப்படுத்த ஜெயலலிதா அவ்வப்போது மன்னார்குடி குடும்பத்தை போயஸ்கார்டனிலிருந்து விலக்கி வைப்பதை வாடிக்கையாக்கி இருந்தார்.

 

Mullivaikal mutram

 

நடராசனின் தமிழுணர்வும், திராவிட இன உணர்வும்தான் இன்றைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் மரியாதையை பெற்றுத்தந்திருக்கிறது என்பதே உண்மை. ஈழப் போராட்டத்தில் உயிரிழந்தோருக்காக அவர் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவுச் சின்னத்தை ஜெயலலிதா இடித்துத் தள்ளினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடராசன் நடத்தினார்.

 

திமுகவுக்கு மாற்றாக, அதிமுகவின் வெற்றிக்காக 2016 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் அணிச்சேர்க்கையை உருவாக்கியதில்கூட நடராசனுக்கு பங்கிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

 

இந்நிலையில்தான், ஜெயலலிதா இறந்தபிறகு சசிகலாவை முதல்வராக்கும் முயற்சியும் நிறைவேறும் சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசெல்ல நேர்ந்தது.

 

அதைத்தொடர்ந்து நடராசனின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்பிறகு உடல்நலம் தேறிய அவர், சில மாதங்களிலேயே மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்கிழமை அதிகாலை 1.35 மணிக்கு மரணம் அடைந்தார்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால் ஜெயலலிதா பாணி அரசியல் என்பதை உருவாக்கியவரே நடராசன்தான் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

'அதில் நாங்கள் தலையிட முடியாது'- ஜெ.தீபா பேட்டி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
'We cannot interfere in it' - J. Deepa interview

ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் அதிமுக தொண்டர்களாலும், அதிமுக நிர்வாகிகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேநாளில் சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற பெயரில் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி இன்று குடியேறி உள்ளார். இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டெனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், ''ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் இன்று. அவர் எனது அத்தை. அவர் குடும்ப வழி உறவு என்பதால் பிறந்தநாள் விழாவிற்காக எங்களால் முடிந்த அளவிற்கு எளிமையான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் முறைப்படி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிறந்தநாள் கூட அவருக்கு நாங்கள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை. எல்லா பிறந்தநாளுக்கும் அத்தைக்கு நான் வாழ்த்து சொல்வேன். வேதா இல்லத்திற்கு எதிரே 'ஜெயலலிதா இல்லம்' என சசிகலா வீடு கட்டியுள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது.

இந்த ரோட்டில் நாங்கள் தான் இருப்போம் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய இல்லம். அங்கு அவர்கள் வீடு கட்டியுள்ளார்கள். அதில் குடியேறி உள்ளார்கள். என்னுடைய பர்சனலாக என்னுடைய நினைவெல்லாம் இங்கேதான். இந்த இடத்தில் தான் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன்'' என்றார்.