கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி போதிய இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் செப். 14 முதல் 3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கலைவாணர் அரங்கில் நடந்த சட்டப்பேரவைக் கூட்ட அனுபவம் பற்றி நக்கீரன் இணையதளத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி சுவாரஸ்யமான விஷயங்களுடன் விவரித்திருக்கிறார்.
''கடந்த 14.09.2020 அன்று கூடிய தமிழக சட்டசபை ஒரு புதிய அனுபவத்தை எங்களுக்கு தந்தது.
கோவிட் 19 காரணமாக நெருக்கடிகளும், எதிர்பார்ப்புகளும் சூழ்ந்திருந்தது.
மார்ச் 26 அன்று அவசர, அவசரமாக நிறைவு செய்யப்பட்ட சட்டசபை, 6 மாத கால அவகாசத்தில் மீண்டும் கூடியது. எல்லோரும் ஓரிரு மாதங்களில் கரோனா நிறைவடையும் என எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், பலரும் அச்சத்துடனேயே சென்னை வந்தனர்.
72 மணி நேரத்திற்கு முன்பு எல்லோரும் கோவிட் டெஸ்ட் எடுத்த சான்றிதழோடு வந்திருந்தனர். அதை காட்டி அடையாள அட்டை பெற்று, அதை கழுத்தில் மாட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
இம்முறை செயின் ஜார்ஜ் கோட்டையில் கூடாமல், கலைவாணர் அரங்கின் மூன்றாவது மாடியில் அவை நடைபெற்றது. இது ஒரு புதிய அனுபவம்.
எனினும் ஏற்கனவே இப்படி பலமுறை நடந்திருக்கிறது. கோடை கால கூட்டத் தொடர்கள் முன்பு ஊட்டியில் நடந்திருக்கிறது.
கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 2010ல், ஓமந்தூரார் தோட்டத்தில் அவர் கட்டிய, இப்போது பன்னோக்கு மருத்துவமனையாக செயல்படும் கட்டிடத்தில் கூட்டத் தொடர் நடைபெற்றிருக்கிறது.
இப்போது கரோனா நெருக்கடி காரணமாக சமூக இடைவெளியுடன் அமர வேண்டிய நிர்பந்தத்தில் இங்கு அவை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது எங்களுக்கு புதிய அனுபவத்தை தந்தது.
முதல் நாளில் நானும், தனியரசும் ஒரே காரில் கலைவாணர் அரங்கிற்கு சென்றோம்.
புதிய இடம் என்பதால் காலை 9.30 மணிக்கே எல்லோரும் வந்து விட்டனர். திமுக MLA க்கள் அனைவரும் BAN NEET என்ற வாசகம் பொறித்த முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே அவைக்குள் சென்ற வண்ணமிருந்தனர்.
எல்லோரும் வெப்பநிலை அறியும் சோதனைக்கு பிறகு, கிருமி நாசினியை கையில் தேய்த்தபடியே உள்ளே நுழைந்தனர்.
கீழ்தளத்தில் இருந்த மின் தூக்கி (LIFT ) வழியே பலரும், நீண்ட படிக்கட்டுகளில் ஏறி பிறகு நகரும் படிக்கட்டுகள் ( ESCALATOR) வழியே பலரும் உள் அரங்கினுள் நுழைந்தனர்.
கையெழுத்து போட்டுவிட்டு சபை நடைபெறும் மண்டபத்தில் நுழைந்ததும் ஒரு பிரம்மாண்டத்தை உணர முடிந்தது.
கோட்டையில் உள்ள தலைவர்களின் படங்கள் அச்சு அசலாக அதே போல் வைக்கப்பட்டிருந்தன.
சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டு வரிசைகள் அதிகப்படுத்தப்பட்டு, எல்லோரின் முகங்களும் தெரியும்படி தளத்தின் உயரங்கள் சீர் செய்யப்பட்டிருந்தது.
நான் நுழைந்த போது முன் வரிசை அமைச்சர்களில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,செல்லூர் ராஜ், காமராஜ், கருப்பணன் போன்றோர் முன்னதாகவே வந்தமர்ந்திருந்தனர்.
காலை 9.50 அளவில் துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வருகை தர, அடுத்து முதல்வர் வருகை தந்தார். எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்தி, புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.
சரியாக 10 மணிக்கு சபாநாயகர் வந்ததும் வணக்கம் தெரிவித்து விட்டு, குறளை வாசித்தார்.
"நேற்று இருந்தவர் இன்று இல்லாமல் இறந்து போனார் என்று சொல்லப்படும் நிலையற்ற தன்மை உடையது இவ்வுலகம் "என்று பொருள்படும் குறளை வாசித்தார். அன்றைக்கு அது பொருத்தமாகவே இருந்தது.
மறைந்த சமகால உறுப்பினர் ஜெ.அன்பழகன், சமகாலத்தில் இங்கு பணியாற்றிவிட்டு பிறகு நாடாளுமன்றம் சென்ற வசந்தகுமார் MP உள்ளிட்டவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பு நடந்தது.
எல்லோரும் எழுந்து நின்று சில நிமிடங்கள் மெளன மரியாதை செலுத்தினர். சமகால சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்த காரணத்தால் அவை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.
எல்லோரும் வெளியேறினாலும் பலர் அங்கேயே சுற்றி, சுற்றி நின்றனர்.
சபாநாயகர் அமரும் மாடம் இங்கு எடுத்து வரப்பட்டு அதில் தான் அவர் அமர்ந்திருந்தார். அந்த மேடை தளத்தை சற்று உயரமாக அமைத்திருக்கலாம் என பலரும் கருத்து பகிர்ந்தனர்.
பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் அமரவும் தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
முதல்வர் உள்ளிட்ட முக்கிய VVIP களுக்கு, ஆலோசனை நடத்த தனி அறைகள் அமைக்கப்பட்டிருந்தது.
அதை விட இந்த அவை விசாலமாக, தனித்தனி நாற்காலி வசதியுடன் நன்றாகவே இருக்கிறது என ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசிக் கொண்டதை கேட்க முடிந்தது.
இரண்டாவது நாள் அவை கேள்வி - பதிலுடன் தொடங்கியது.
அவை தொடங்கும் முன்பு, வெளியே BAN NEET என்ற அட்டையை ஏந்தி நான் மஜக வின் நிலைபாட்டை வெளிப்படுத்தினேன். காட்சி ஊடகங்கள் அதை முதன்மைப்படுத்தின.
அன்று நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் எழுந்து நீட் தேர்வு குறித்து விவாதிக்க கோரினார். சபாநாயகர் அனுமதியளித்தார்.
அப்போது அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசிய சில கருத்துகள், அவையில் திமுக உறுப்பினர்களால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது விமர்சனம் வைக்க, அவர்கள் பொங்கியெழுந்தனர்.
தங்கள் கட்சி மீது வைத்த விமர்சனங்களை அவை குறிப்பிவிருந்து நீக்கக்கோரி, சபாநாயகரின் இருக்கை முன்பு கூடி ஆட்சேபித்தனர்.
தொடர்ந்து அவர்கள் அதே நிலைபாட்டிலிருக்க, அவர்களை கூண்டோடு வெளியேற்ற ஆணையிட்டார் சபாநாயகர்.
அன்று அவைக்கு உள்ளேயும், வெளியேயும் இதுதான் 'ஹாட் நியுஸ் ' ஆனது.
நான்கு விஷயங்களுக்கு நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தேன்.
நீட் ரத்து, தேசிய கல்வி கொள்கை, ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை, டெல்டா மாவட்டங்களில் ONGC நிறுவனம் புதிய குழாய் பதிப்பு ஆகியவை குறித்து பேச அனுமதி கேட்டிருந்தேன். ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே அனுமதி என்றனர்.
நான் சபாநாயகரிடம் இரண்டில் பேச வாய்ப்பு கேட்டேன்.
அவர் சூழலை விளக்கினார். நேரம் இல்லை, நாட்கள் குறைவாக உள்ளது, நிறைய உறுப்பினர்கள் நிறைய கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்துள்ளனர். எனவே நீங்கள் தேசிய கல்வி கொள்கையை பற்றி பேச அனுமதிக்கிறேன் என்றார்.
மூன்றாவது நாள் கேள்வி-பதில் நிகழ்வு தொடங்கிய போது கருணாஸ் எழுந்து அவர் தொகுதி கோரிக்கையை பேசினார்.
நான் என் தொகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற கேள்வியை எழுப்ப, அமைச்சர் CV.சண்முகம் அது பற்றி பரிசீலிக்கப்படும் என சாதகமான பதிலை கூறினார்.
அமைச்சர்களில் அவர் வித்தியாசமானவர். குறிப்புகளை எழுதி வைத்து பேசாமல், நினைவாற்றலுடன் தெளிவாக பேசும் திறன் பெற்றவர். அதை எதிர்கட்சி உறுப்பினர்களும் சிலாகிப்பார்கள்.
அன்று தேசிய கல்வி கொள்கை தொடர்பாக திமுகவினர் சிறப்பாக பேசினர். அதிமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியோரின் குரலும் இதில் ஒரே அலைவரிசையில் எதிரொலித்தது.
நான் இது குறித்து பேசும் போது, முதல்வர், துணை முதல்வர் எதிர்கட்சி தலைவர், ஆகியோர் என்னை உற்று நோக்கி, உரையை கூர்ந்து கவனித்தனர்.
அன்று இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டு மீண்டும் அவைக்கு வந்தனர்.
வழக்கம் போல் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அடிக்கடி முக்கிய பிரச்சனைகள் குறித்து தனக்கேயுரிய பாணியில் பேசி கலகலப்பூட்டினார்.
அவை அன்று பரபரப்பாக இருந்தது. அன்று மட்டும் 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இது ஒரு வகையில் சோர்வை ஏற்படுத்தியது என்பதே உண்மை.
இவ்வளவு நெருக்கடியில் ஏன் அவையை நடத்த வேண்டும்? குறைந்தது 5 நாட்களாவது நடத்தியிருக்கலாமே...என பல உறுப்பினர்களும் புலம்பினர்.
கரோனா காரணமாக உள்ளே உணவு பொருட்கள் அனுமதியில்லை.
அவைக்கு வெளியே உறுப்பினர்கள் அமரும் ஒய்வு இடத்தில் பசுமை தேநீர் (Green tea), வறுத்த முந்திரி, தண்ணீர் குடுவை மட்டுமே கிடைத்தது.
அவையானது இரண்டு நாட்களும் இடைவெளியின்றி தொடர்ந்ததால், மதிய உணவு இன்றி பலரும் அவையில் பங்கேற்றனர்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களும், மூத்தவர்களும் சற்று சிரமப்பட்டனர் என்பதே உண்மை.
எதிர் வரிசையில் இருந்த அமைச்சர்கள் காமராஜ், கருப்பணன் ஆகியோர் எனக்கும், தனியரசுக்கும் தாங்கள் கொண்டு வந்த கடலை மிட்டாயை கொடுத்தனுப்பினர்.
முன்பெல்லாம் அவையில் ஒரே வரிசையிலிருக்கும் நானும், தனியரசு, கருணாசு, அபுபக்கர், விஜயதரணி ஆகியோரும் அவையில் அதிகம் உரையாடுவோம். கருத்துகளை பரிமாறிக் கொள்வோம்.
இம்முறை சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்ததால் எங்களுக்குள் உரையாடும் வாய்ப்பு குறைந்து போனது.
எங்களுக்கு பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர் நேரு வழக்கமான கலகலப்புடன் எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தார்.
மூன்று நாள் கூட்டத் தொடர் முடிந்து எல்லோரும் புறப்பட்டப் போது ஒரு இறுக்கம் நிலவியது. அது கரோனா குறித்த அச்சமாகவும் இருக்கலாம்.
இன்னும் ஓரே ஒரு கூட்டத் தொடர் ஜனவரியில் நடக்கும். அதற்கு பிறகு தேர்தல் என்பதால் கூட இருக்கலாம்.
அடுத்த கூட்டத் தொடர் இங்கு நடக்குமா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்குமா? தெரியவில்லை.
அது கரோனாவை வைத்தே முடிவாகும் என்பதே உண்மை''.