Skip to main content

தமிழக உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை! நடந்தது என்ன? 

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
Governor consults with Tamil Nadu high officials!

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயரதிகாரிகளை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசின் சார்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 
                   

இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’கொரோனா பரவல் குறித்து தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறது தமிழக கவர்னர் மாளிகையான ராஜ்பவன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாமல் இருப்பதாக நாங்கள் கருதினால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடம் எனவும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இது குறித்த தங்களின் விளக்கத்தை 30-ந்தேதி தாக்கல் செய்யவிருக்கிறது தேர்தல் ஆணையம். 
                     

இந்த நிலையில், அரசு நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பும் கடமையும் ராஜ்பவனுக்கு இருப்பதால் உயரதிகாரிகளை தனது மாளிகைக்கு அழைத்து விசாரித்திருக்கிறார் கவர்னர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். 
                    

அந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி, தடுப்பூசிகளின் கையிருப்பு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைக்களின் விபரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்திருக்கிறார்.   இரவு நேரங்களிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் தொற்று பரவல் சற்று குறைந்திருப்பதை அதிகாரிகள் விவரித்திருக்கிறார்கள். மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை டிஜிபி தெரிவித்துள்ளார். 
                  

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என நீங்கள் சொன்னாலும், பல மாவட்டங்களில் தடுப்பூசி இல்லைங்கிற தகவலே எங்களுக்கு வருகிறது என கவர்னர் சுட்டிக்காட்டியபோது, தமிழகத்துக்கான தேவைகளை மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறோம். ஆனால், தேவைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. கிடைக்கிற எண்ணிக்கைக்கேற்ப மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மே மாதம் 1 -ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
                    

அதேசமயம், மே 1 முதல் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திடமே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்து விட்டதால், 1 கோடியோ 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்திருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.   
                    

இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் கவர்னர். அப்போது, தேர்தல் முடிவுகளையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் கவர்னர். அது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார் டிஜிபி திரிபாதி. மேலும், சனிக்கிழமையும் ஊரடங்கை அமல்படுத்துவது, இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முழு ஊடரங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ‘’ என்று சுட்டிக்காட்டுகிறது தலைமைச் செயலக வட்டாரம் !