கொரோனா காலத்தில் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்தனர். அப்போது கொரோனாவால் பலியாகும் மருத்துவர்களுக்கு 50 லட்சம் நிதி வழங்கப்படும், அந்த மருத்துவரின் வாரிசுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது மாநில அரசு.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ஈ.என்.டி. மருத்துவராகப் பணியாற்றிய விவேகானந்தன், கொரோனா இரண்டாவது அலையின்போது மரணத்தைத் தழுவினார். இதனை அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்தபின் மறைந்த மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தாருக்கு நிதியுதவி தந்தது. ஆனால் வாரிசுக்கு அரசு வேலை தரப்படும் என்கிற உத்தரவாதம் நிறைவேறவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணை அடிப்படையிலான வேலைக்கு முயற்சித்து வரும் திவ்யா நம்மிடம், “எனக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்காங்க. கொரோனா காலத்தில் என் மகன் கைக்குழந்தை. எங்களைப் பற்றி கவலைப்படாமல் கொரோனா டூட்டி பார்த்தார். அவர் இறந்ததும் நிராதரவாகிட்டோம். காஞ்சிபுரத்தில் என் தந்தையின் பராமரிப்பில் நானும் என் பிள்ளைகளும் இருக்கோம். எங்கப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் வாழ்கிறோம். நான் பொறியியல் பட்டதாரி என்பதால் தொடக்கத்தில் அதற்கான வேலை எதிர் பார்த்தேன். ஆனால் கடந்த ஓராண்டாக என் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு. ஏதாவது ஒரு வேலை கொடுங்கள் என அமைச்சரைச் சந்தித்து மனு தந்துவிட்டேன். ஆனால் இன்னமும் எனக்கு வேலை தரவில்லை. என் குழந்தைகளின் எதிர்காலம் முதலமைச்சர் கையில் தான் உள்ளது” என்றார் கண்ணீருடன்.
இதுகுறித்து மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு மாநில தலைவர் பெருமாள், “விவேகானந்தன் மனைவி தொடக்கத்தில் தனது படிப்புக்கு தகுதியான வேலை கேட்டது உண்மைதான். அதற்கு ரூல்ஸ் பேசினார்கள் எங்கள் துறை அதிகாரிகள். நாங்கள் அமைச்சர் மா.சு.விடம் நேரடியாக வலியுறுத்தினோம், இது ஸ்பெஷல் கேஸ், உடனே வேலை போடச்சொல்லி உத்தரவிட்டும் அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள். அரசு தரும் எந்த வேலையாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள் என திவ்யாவிடம் சொன்னோம். அவரும் அதனை ஒப்புக்கொண்டு மனு தந்துள்ளார். இதுகுறித்து அமைச்சரிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்றால் நாளையே வேலை போட்டுத்தருகிறேன்' என்றுள்ளார். கடந்த ஓராண்டாக எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்றே கேட்கிறார் திவ்யா. அதிகாரிகள் அதனை அமைச்சரிடம் மறைத்து தவறான தகவல்களைக் கூறுவதாலே அமைச்சர் இப்படி பேசுகிறார். அமைச்சரும், முதலமைச்சரும் மருத்துவரின் குடும்பத்துக்கு கருணை காட்டவேண்டும்” என்றார்.