Skip to main content

தேர்தல் களத்தில் ரசிகர்கள்! கண்காணிக்கும் ரஜினி!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

ddd

 

"2021 சட்டமன்றத் தேர்தல் போர்க்களத்தில் வீரர்களாக நிற்போம்'' என 2017இல் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2020 டிசம்பரில் தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி "நான் அரசியலுக்கு வரவில்லை' என அறிவித்துவிட்டார். இன்னமும் யார் பக்கமும் சாயாத அவரது ரசிகர்களை வளைக்க கட்சிகள், மன்றங்களை வட்டமிட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்களின் நிலைப்பாடு என்ன? ரஜினி என்ன நினைக்கிறார் என அறிய ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம்.

 

"தமிழகத்தில் மன்றத்துக்கு அதிக தொண்டர்களை இணைத்து ரஜினிக்கு பக்கபலமாக இருந்தது தென்சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், தஞ்சை, தூத்துக்குடி, புதுக்கோட்டை போன்ற மா.செ.க்கள்தான். 2021 தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டியைப் பலமாக அமைக்கச் சொல்லி தலைவர் உத்தரவிட்டார். 2019இல் தமிழகம் முழுவதும் 64 ஆயிரம் பூத் கமிட்டி இருந்தன. அதில் 42 ஆயிரம் பூத் கமிட்டிகளில் ஒரு கமிட்டிக்கு சராசரியாக 20 பேர் என 12 லட்சம் பேர் பட்டியலை தலைமைக்குத் தந்தோம்.

 

தமிழகத்திலேயே அதிக பூத் கமிட்டிகளை அமைத்து பக்காவாக இருந்தது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தொகுதி என ரஜினியே பாராட்டினார். சோளிங்கர் தொகுதியில் மட்டும் 320 வாக்குச்சாவடிகளில் ஒரு பூத்துக்கு 30 பேர் கொண்ட கமிட்டி, அவர்களின் குடும்பத்தினர் என 30 ஆயிரம் வாக்குகள் என ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் மன்ற உறுப்பினர்கள், நேரடியாக பூத் கமிட்டியில் உள்ளார்கள். இவர்களின் குடும்பத்தினர், தீவிர ரசிகர்கள் என சராசரியாக 40 லட்சம் வாக்காளர்கள் தோராயமாக உள்ளார்கள்.

 

பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவிலிருந்து எங்கள் மன்றத்துக்கு வந்து, தொடங்கப்படாத கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி, தலைவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தபின், மன்றத்தினர், பூத் கமிட்டி அமைப்பின் பலமறிந்து மன்றத்தினரைக் குறிவைத்தே தனிக்கட்சி தொடங்கி, ரசிகர்களைக் கவர திட்டமிட்டு எந்திரன் (ரோபோ) சின்னத்தையும் வாங்கினார். ஆனால் 5 சதவீதம் ரஜினி மன்றத்தினர்கூட அவர் பின்னால் செல்லவில்லை. இந்த விரக்தியிலேயே, "தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை” என அறிவித்து ஒதுங்கிக்கொண்டார்.

ddd

 

தலைவர் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டாலும், மன்றத்தினர் 80 சதவீதம் பேர் வேறு கட்சிகளுக்குச் செல்லவில்லை. இவர்கள் ரஜினி வாய்ஸ் யாருக்கு என காத்துள்ளார்கள். தலைவர் அமைதியாக இருப்பதால் இந்த வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., கமல் கட்சி வேட்பாளர்கள் ஆகியோர் எங்கள் மா.செ.க்களிடம் முட்டிமோதுகின்றனர். தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள், வேலூர் மா.செ. சோளிங்கர் ரவியை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல் தென்சென்னை சந்தானம், கிருஷ்ணகிரி சீனுவாசன், தஞ்சை தினேஷ், புதுக்கோட்டை முருகுபாண்டியன் போன்ற 20க்கும் மேற்பட்ட மா.செ.க்களிடம் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவு கேட்கிறார்கள்'' என்றனர் நிர்வாகிகள்.

 

ரஜினிக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "தலைவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை, ரசிகர்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் என அறிவித்தாலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், மன்ற உறுப்பினர்கள் யார், யார் எந்தக் கட்சிக்குச் செல்கிறார்கள் என்பதைத் தனக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளதால் அதுபற்றிய பட்டியல் மா.செ.க்களிடம் வாங்கி அவர்களுக்கு அந்தக் கட்சி தலைமை எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்கிற தகவலோடு தலைவருக்குப் போகிறது.

 

தி.மு.க.வில் மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளராக தூத்துக்குடி ஸ்டாலினை நியமனம் செய்ததைக் கூறினோம். தற்போது வேட்பாளர் அறிவிப்பின்போது, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளில் உள்ள தனது நண்பர்கள் யார், யாருக்கு சீட் தரப்பட்டுள்ளது என்பதை விசாரித்தவர், 2019இல் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மா.செ.வாக இருந்து தி.மு.க.வுக்குச் சென்ற மதியழகன், பர்கூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது ஆச்சர்யமானார். மதியழகன் வெற்றி வாய்ப்பு குறித்தும் விசாரித்தார். தங்களுக்கு வாய்ஸ் தரச்சொல்லி டெல்லியிலிருந்து அவருக்கு அழுத்தம் வருகின்றது, நேரடியாக வந்து சந்திக்கிறோம் என பா.ஜ.க. தேசியத் தலைவர்கள் கேட்கிறார்கள். அதனைத் தவிர்க்கவே அவர் ‘அண்ணாத்த' படப்பிடிப்பை தொடங்கச் சொல்லி கேட்க, அதுவும் தொடங்கப்பட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருந்தாலும் தேர்தல் களத்தைக் கவனித்தே வருகிறார். ஓட்டு அவுங்க விருப்பப்படி போடட்டும் என்கிற மனநிலையில் உள்ளார்'' என்றார்.

 

 

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.