Skip to main content

அமைச்சர் விவகாரத்தில் ஆளுநர் தலையிட முடியாது - இள. புகழேந்தி விளக்கம்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 Ela Pugazhendi Interview

 

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்தும் பல்வேறு கருத்துகளை ஆளுநர் பேசியது தொடர்பாகவும், பாஜக செயல் திட்டம் மற்றும் அண்ணாமலை பற்றியும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தியை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

சனாதனம் என்பது அனைவரும் சமம் என்பதாகும் அதில் தீண்டாமை ஒன்று இல்லவே இல்லை என்று தமிழக ஆளுநர் சமீபத்தில் கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

சனாதனத்தில் தீண்டாமை, பிறப்பால் உயர்வு தாழ்வு என்றெல்லாம் இருப்பதை தெரிந்து கொண்டே ஆளுநர் இப்படி பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல், பாஜக அமைச்சரவையில் இருக்கும் எல். முருகனை ஆளுநரின் வீட்டிற்கு வரவழைத்து உணவு கொடுப்பாரா?  சனாதனம் ஆளுநர் மனதில் எட்டிப் பார்க்கும் பட்சத்தில் அதை ஒரு நாளும் செய்யமாட்டார். மேலும், காஞ்சிபுரத்தில் இருக்கும் சங்கராச்சாரியார் வீட்டிற்கு சுப்ரமணியம், ஹெச். ராஜா போன்றோர் சென்றால் அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து பேசுகிறார். ஆனால், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சென்றபோது ஒரு சால்வையை தூக்கி எரிகிறார்கள். இப்படி மனிதர்களை பிரித்து வைப்பது தான் ஆளுநர் ஆர்.என். ரவி கூறும் சனாதனம்.

 

மேலும், ஆளுநர் இப்படி பேசுவது எங்களை ஏமாற்றுகிற வேலையாகத் தான் பார்க்க முடிகிறது. அதனால், அவர்களுடைய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் எடுத்து பேசினால் அதுதான் அவர்களுக்கு நல்லது. சனாதனத்தில் கூறப்படும் வர்ணாசிரமம், மனுதர்மம் போன்றவை ஆரியர்கள் உள்ளே வந்த பின் தான் வந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்குக்கேற்ப தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால், அந்த நிலையை மாற்றியது இவர்களுடைய வேலை. அதுமட்டுமல்லாமல் வைக்கத்தில் பிராமணர்களைத் தவிர அந்த தெருவில் யாரும் நடக்கக் கூடாது என்ற நிலையை தந்தை பெரியார் மாற்றினார். அப்படிப்பட்ட  தந்தை பெரியார் வழி வந்த திராவிட மாடல் அரசை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் சனாதனத்தை வேரோடு அழிப்பதனால் தான்.

 

திமுகவில் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை எதிர்க்கிறார்கள். ஆனால், திமுக ஆளுநரை மிகவும் மென்மையாகக் கையாளுகிறது என்ற விமர்சனம் வருகிறதே?

 

ஆளுநரை விரட்டுவதுதான் திமுகவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஆனால் விமர்சனம் வருகிறது என்றால் ஆளுநரை முதல்வர் கடுமையாக விமர்சித்தால் அதில் அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அதனால், இவர்களின் எண்ணம் ஒருபோதும் நடக்காது. அதே நேரத்தில் ஆளுநரை எந்த விதத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பது தெரியும். மேலும் ஆளுநர் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் மன்றம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால், ஆளுநரின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தட்டும். அதைத் தான் அமைதியாக இருப்பதின் மூலம் முதல்வர் செய்து வருகிறார்.

 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் பதவி விலக்குவதை தள்ளி வைக்கிறேன் என்றுதான் கூறுகிறார் ஆளுநர். பதவி விசயத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொன்ன பிறகும் ஆலோசனை செய்கிறேன் என்று கூறுகிறாரே?

 

அத்தனை சட்ட வல்லுநர்கள் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விலக்க முடியாது என்று கூறிய பிறகு உடனே வாபஸ் வாங்குகிறேன் என்று சொன்னால் அவமானமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் ஆலோசனை செய்கிறேன் என்று ஆளுநர் கூறுகிறார். அமைச்சர் விவகாரத்தில் ஆளுநர் தலையிட முடியாது என்று 1974 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறிவிட்டார்கள். முதல்வர் அறிவித்த அமைச்சர்களிடையே பதவிப் பிராமணம் செய்வதுதான் ஆளுநரின் வேலை. ஒருவேளை, முதல்வர் ஒரு அமைச்சரை நீக்கினால் அதற்கும் கையெழுத்து போட வேண்டும். ஒருவேளை இவர்களுக்கு அதிகாரம் இருந்தால் முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்குகிறேன் என்று கூறிவிடுவார்கள். இவர்களுக்கு இதுபோன்ற அதிகாரம் கிடைக்கக்கூடாது என்பதற்காகத் தான் அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு அதிகாரியாக ஆளுநர் இருப்பார் என்று குறிப்பிடுகிறார். அதனால், இதை மீறி செயல்படுவது தான் காவிகளின் வேலை.