கலைஞர், 80 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். பல போராட்டக் களங்களைக் கண்டவர். தமிழகத்தின் தலைப்புச் செய்தியாய் எப்போதும் இருந்தவர். 5 முறை முதல்வர் பொறுப்பேற்றவர். தமிழகத்தை சகல தளங்களிலும் உயர்த்திக் காட்டியவர். 13 முறை சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து, அனைத்திலும் வெற்றி பெற்ற சாதனையாளர். தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை 50 ஆண்டுகாலம் தலைவராக இருந்து கட்டிக்காத்தவர். அவரது மறைவு தமிழகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பு! 2018 ஆம் ஆண்டு கலைஞர் மறைந்தபோது, நக்கீரனின் இனிய உதயம் இதழுக்காக, அவரது மகளும் தி.மு.க.வின் மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கவிஞர் கனிமொழியிடம் பேசினோம். தந்தைக்கும் மகளுக்குமே உரிய உணர்வுப்பூர்வமான தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கனிமொழி.
”எதைச் சொல்வது என்று தெரியவில்லை. நெஞ்சமெங்கும் நினைவின் அலைகள் எழுந்து எழுந்து அடங்குகின்றன. ஒரு துயரச் சூறாவளியை எதிர்கொண்ட நிலையில் பல்வேறு உணர்வுக் கலவைகளோடு நிற்கிறேன். அன்புமிகும் அப்பாவாய், நாடறிந்த கலைஞராய், மாபெரும் இயக்கத்தின் தலைவராய், சுயமரியாதைச் சுடரொளியாய், பெரியார், அண்ணாவின் மறுவடிவாய், மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கிறது அந்த மகத்தான உருவம்.
அப்பா இல்லை என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் என் அருகில் அவர் இருப்பதுபோல, அவரிடம் நான் விவாதிப்பதுபோல, ஒரு உணர்வு எனக்குள் இருந்துகொண்டே கிறது. அவர் இல்லை என்பதை முழுமையாக நான் உணர்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம் எனத் தோன்றுகிறது. ஒருவித வெறுமை சூழ்ந்திருந்தாலும், "அதை எல்லாம் வீழ்த்தும் வலிமை உன்னிடம் இருக்கிறது. உனக்குள் நான் இருக்கிறேன்" என அப்பா எனக்குள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில், ஒரு மகளாகவும் கட்சியின் ஒரு தொண்டராகவும் அப்பாவின் மறைவு எனக்குப் பெரிய இழப்புதான்.
எண்பதாண்டு காலம் தமிழக அரசியலின் மையப் புள்ளியாகவும், அச்சாணியாகவும் இருந்த அப்பாவின் அரசியலில், பேச்சும் எழுத்தும் முதன்மையாக இருந்தன. அப்படிப்பட்டவர் கடந்த ஒன்றரை ஆண்டு காலம் மௌனத்தை கடைப்பிடித்தது மிகப் பெரிய வலி. ஒருவேளை அவருடைய மௌனத்தை நாங்களெல்லாம் பழகிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் அப்படி இருந்தாரோ தெரியவில்லை. இருப்பினும் அவரது முதுமையை வைத்து அவரது நிசப்தத்தை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டாலும் மனது என்னவோ ஏற்கமறுத்தது. அந்த விரலாலும் குரலாலும் அவர் எவ்வளவு சாதித்திருக்கிறார். நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
அவரது பேசா நாட்களில் அவரது அருகில் அமர்ந்துகொண்டு பேசுவோம். அதைக் கேட்டு அவரால் பதில் சொல்ல முடியாமல் போனாலும் கூட, அவரது உதடுகள் அசையும். பதில் சொல்வதுபோல வார்த்தைகளை உதிர்ப்பார். கைகளை நீட்டி எங்களது கரங்களைப் பற்றிக்கொள்வார். மகிழ்வையும் நெகிழ்வையும் அதிலேயே உணர்த்துவார். பேசமுடியாத நேரத்திலும் 2ஜி வழக்கில் விடுதலையானதை அப்பாவிடம் சொன்னபோது, "ரொம்ப சந்தோஷம்மா! பேராசிரியர் எங்கே?" எனக் கேட்டார். அந்த 4 வார்த்தைகளை தொடர்ச்சியாக அவர் சொன்னபோது எங்களுக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்பாவின் முதுமை, அவரது சிந்தனையை, பாதித்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை அவரிடம், "அப்பா, கடவுள் இருக்கிறாரா?' என்று கேட்டேன். பேசமுடியாத அந்த நிலையிலும், இல்லை என்று தலையை அசைத்து மறுத்தார். அவர் மௌனம் கூட பகுத்தறிவு பேசியதைக் கண்டு வியந்தேன்.
வழக்கிற்காக அடிக்கடி நான் டெல்லிக்குச் செல்ல வேண்டியிருந்தது. இயல்பாகவே விமானப் பயணத்தை விரும்பாதாவர் அப்பா. தவிர்க்க முடியாத சூழலில் தான் விமானப் பயணத்தை ஏற்றுக்கொள்வார். விமானப் பயணத்தை விரும்பாதவர் என்பதாலோ என்னவோ, டெல்லியில் நான் இறங்கியதும் முதல் ஃபோன் அவரிடமிருந்து வரும். "பத்திரமாகச் சென்றுவிட்டாயா?" என்பார். ஒவ்வொரு முறையும் அதே கேள்வியைக் கேட்பதால், ஒரு முறை, "நான் என்ன சின்ன குழந்தையாப்பா?" எனக் கேட்டு கோபித்துக்கொண்டேன். எனது கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, "எப்போதும் எனக்கு நீ குழந்தைதான்!" என அவர் சொன்னபோது, ஒரு மாபெரும் இயக்கத்தின் அரசியல் தலைவர், பாசத்தில் குழந்தையாய் இருக்கிறாரே! என நினைத்துக் கொள்வதுண்டு.
பேசுவதை அவர் நிறுத்திக்கொண்ட சூழலில் டெல்லிக்கு பல முறை செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அப்போது டெல்லியில் இறங்கியபோது, பத்திரமாக சென்று விட்டாயா? எனும் வழக்கமான விசாரிப்பு அவரிடமிருந்து இல்லை. அப்போதுதான் முதன்முறையாக வெறுமையை உணர்ந்தேன். அப்பாவின் அந்த ஒற்றை வார்த்தைக்கு இருந்த வலிமையை நான் உணர்ந்த தருணம் அது. பாசத்தில் உங்களிடம் தோற்றுப் போயிருக்கிறேன் அப்பா என எனக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டேன். அந்த உணர்வில் நான் எழுதிய கவிதைதான் 'மௌனம்'. அந்த கவிதையின் கடைசி வரியை, 'நீயின்றி இயங்காது எம் உலகு' என எழுதியதற்கு அப்பாவின் பாசம்தான் காரணமாக இருந்தது.
கோபாலபுரத்தில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, தினமும் அப்பாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஒருமுறை, "ரெண்டு மூணு நாள் வெளியூர் செல்கிறேன் அப்பா!" என அவரது முகத்துக்கு அருகே குனிந்து நான் சொன்ன போது, நெற்றியில் முத்தமிட்டார். பத்திரமாகப் போய் வா என சொல்லாமல் சொன்னது அப்பாவின் அந்த முத்தம்! பேச முடியாவிட்டாலும் தனது செய்கைகள் மற்றும் முக பாவனைகள் மூலம் சொல்ல வேண்டியதை உணர்த்திவிடுவார். அதனைப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு மகளாக பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவரிடம் விவாதித்திருக்கிறேன். மகள் என்பதையும் கடந்து கட்சியின் தொண்டனாக நான் நின்று பேசுவதிலுள்ள கருத்துக்களை அவர் ரசித்துக் கேட்டிருக்கிறார். நான் மகள் என்பதைக் காட்டிலும் கட்சியின் தொண்டன் என்பதில் அவருக்குப் பெருமிதம் உண்டு. என்னிடம் மட்டுமல்ல கட்சியின் தொண்டர்கள் அனைவர் மீதும் இதே பெருமிதமும் அக்கறையும் அவருக்கு உண்டு. அதனால்தான் கட்சி நடத்தும் அரசியல் போராட்டங்கள், மாநாடுகள், பொதுக்குழு கூட்டங்கள் என எதுவானாலும் அதில் கலந்துகொண்டு தொண்டர்கள் வீடு திரும்பும் வரை அவர்களைப் பற்றியே மாவட்டச் செயலாளர்களிடம் விசாரித்துக் கொண்டிருப்பார். "பத்திரமாக வீடு திரும்பியாச்சா?' என என்னிடம் கேட்கும் அந்தக் கேள்வியை மா.செ.க்களிடமும் கேட்பார் அப்பா!
அப்பாவின் பேச்சில், எழுத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்குமான பொருள் தொண்டர்களுக்குத் தெரியும். வார்த்தைகளை எந்த ஏற்ற இறக்கத்தில் உச்சரிக்கிறார் என்பதை வைத்தே பொருளின் ஆழத்தை உணர்ந்தவர்கள் தொண்டர்கள். அதனால், ஒரு நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும், "நான் பேசியதிலிருந்து என்ன புரிந்துகொண்டாய்?” என்பார். புரிந்துகொண்டதை விவரிப்பேன். இதுவரை நான் சொன்ன விளக்கத்தில் அப்பா ஒருமுறைகூட தவறு கண்டதில்லை.
நேரடி அரசியலுக்கு வந்த பிறகு, முன்பு போல இலக்கியத்தில் நான் ஆர்வம் காட்டவில்லை என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்தது. குறிப்பாக, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதை நான் குறைத்துக்கொண்டதாக நினைத்தார். காரணம், திறமையாளர்கள் முடங்கிப் போய்விடக்கூடாது என கருதுவதால்தான். அதற்காகவே அவ்வப்போது கவிதை எழுதி அவரிடம் காட்டி, பாராட்டுப் பெற வேண்டும் என நினைத்தேன். ஆனால், பல சமயங்களில் அது முடியாமல் போனது. அதே சமயம், அரசியலாகட்டும் இலக்கியப் பணியாகட்டும் அப்பாவின் தாக்கம் இல்லாமல் என்னால் இயங்க முடிந்ததில்லை. சின்னச் சின்ன விசயத்தில் கூட ஒழுங்கு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் அப்பா!
அந்த ஒழுங்கினை அவரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். சுயமரியாதை, பகுத்தறிவு, அடிப்படை மனித உரிமைகள், சமூக நீதி, தமிழினம் சார்ந்த உரிமைகள் உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கியதுதான் திராவிட இயக்க அரசியலின் சுவாசமும் வலிமையும் என்பதை ஒவ்வொரு தொண்டனின் மனதிலும் பதிய வைத்திருப்பதை எனக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். சுயமரியாதையும் சமூக நீதியும்தான் அனைத்துக்கும் அடிப்படை !
உடல்நிலை சரி இல்லை என்றாலும்கூட அவரால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியாது. ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு அறிவாலயத்திற்கோ, முரசொலி அலுவலகத்திற்கோ சென்றுவிடுவார். இதனைப் பலமுறை ஆச்சரியத்துடன் கவனித்தி ருக்கிறேன். ஒருமுறை அது குறித்து கேள்வி எழுப்பியபோது, ”நோயைவிட நான் செயல்படாமல் இருப்பது தான் எனக்கு வலியை அதிகம் தரும்!” என பதில் சொல்லிவிட்டு அறிவாலயம் கிளம்பிவிட்டார். அவர் சொன்ன பதிலை எதிர்த்து விவாதம் செய்ய என்னால் முடியவில்லை. அப்படிப்பட்டவர் வீட்டில் ஓய்வு எடுத்ததை நினைத்தாலே மனது கனக்கத்தான் செய்கிறது.
தேர்தலின் வெற்றியும் தோல்வியும் அவரை பாதித்ததில்லை. இரண்டையும் ஒரே அளவுகோலிலேயே எடைபோடுவார். ஆனால் அவரை மிகவும் பாதிப்பது, தொண்டர்கள் மற்றும் நண்பர்களின் மறைவுதான். தேர்தல் தோல்விகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அவருக்கு, தான் நேசிப்பவர்களின் மறைவு தாங்கொணா துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதேசமயம், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கோபம் காட்டுவதோடு ஒரு கட்டத்தில் அவர்களை மன்னித்துவிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். எல்லோரையும் மன்னிப்பதுதான் அவரது பலமும் பலவீனமும்!
ஒரு மகளாக நினைத்துப் பார்க்கும்போது, அப்பா இல்லை என்பது எனக்கு பேரிழப்புதான். அப்பாவால் ஏற்பட்ட பிரிவின் வலி, கொடுமையானதுதான். அந்த வலிக்கு அப்பாவின் நினைவுகளே மருந்து போடும். அப்பா, எனது அறிவுக்கூர்மையை பல்வேறு விசயங்களில் பட்டை தீட்டியவர்! பல விசயங்களில் என்னை பாதித்த சுயமரியாதை சிந்தனையாளர். அவர் கற்றுக்கொடுத்த வழியில் என் அரசியல் பயணம் தொடரும்! எப்போதும் என்னோடு அன்பாக பேசும் அப்பா, இப்போதும் மௌனங்களால் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அப்பா பேசுவதால், மௌன மொழி, ஓசைகளை விடவும் உன்னதமான மொழியாக இருக்கிறது. அதுவும் என்னை வழிநடத்துகிறது.”