கரோனாவை சென்னையில் கட்டுப்படுத்தி வருகிறோம் என அரசு சொல்லும் நிலையில் மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் அனைத்தையும் அது ஆட்டிப் படைக்கிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 162 பேர், இராமநாதபுரத்தில் 40 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் செலவு மிகவும் குறைவான ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட்டை தமிழகம் முழுவதும் நடத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதின்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன். கடந்த 6-ஆம் தேதி மதுரையில் ஆய்வுப் பணிகளுக்காக வந்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளார். அத்துடன் நிற்காமல் தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரையில் தனது சரவணா மருத்துவமனையில் ரேபிட் டெஸ்ட்டையும் ஆரம்பித்துள்ளார்.
வழக்குத் தொடர்ந்தது குறித்து டாக்டர் சரவணனிடம் பேசினோம். தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்பநிலையிலேயே இந்த RKT (Rapid Kit Test) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி அரசை எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார். உடனே சீனாவிலிருந்து டெஸ்ட் கிட்டை வாங்கினார்கள். மற்ற மாநிலங்களை விட அதிக விலை கொடுத்து வாங்கிய அந்த கிட் தரமற்றவை என தெரிந்ததும் ஊழலை மறைப்பதற்காக திருப்பி அனுப்பினார்கள்.
இப்ப ஐ.சிஎம்.ஆர். சில நிறுவனங்களின் ஆர்.கே.டி.யை அங்கீகரித்துள்ளது. அவற்றை உ.பி., மகாராஷ்டிரா, தெலங் கானா மாநிலங்கள் அதிக அளவில் வாங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டன. இந்த ரேபிட் டெஸ்ட் எடுக்க வெறும் 450 ரூபாய்தான். ரிசல்ட் பதினைந்தே நிமிடத்தில் தெரிந்துவிடும். ஆனால் பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்க ரூ,4,500. ரிசல்ட் வருவதற்கும் பல நாட்கள் ஆகும். சுருக்கமா சொன்னா பி.சி.ஆர். டெஸ்ட் என்பது தனிமனித சோதனை. ரேபிட் டெஸ்ட்டுங்கிறது சமுதாய சோதனை.
ஐ.சி.எம்.ஆர்.ங்கிறது இந்தியாவின் தலைமை மருத் துவ அமைப்பு. அது சொல்லியே முதல்வர் எடப்பாடி கேட்கலேன்னா என்ன பண்ண முடியும்? சமூகப் பரவல் இல்லைன்னு அடிச்சுச் சொல்றார் எடப்பாடி. இந்த ரேபிட் டெஸ்ட் எடுத்தா சமூகப் பரவல்னு அம்பலமாயிடும்னு பயப்படுறாரு. மதுரைக்கு வந்த ஹெல்த் செகரட்டரி ராதாகிருஷ்ணனிடம் இது குறித்து மனு கொடுத் திருக்கேன். நேர்மையான அதிகாரியான அவர், நன்றாகத்தான் பேசினார்.
அப்புறம் இன்னொரு அதி முக்கியமான விஷயம். REMDISIVIR, TOCILIZUMAB, FAVIPIRVIR.போன்ற மிக முக்கிய உயிர்காக்கும் மருந்துகளை அரசாங்கமே மொத்தமா வாங்கி வச்சிருக்கு. அதைத்தான் ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்கள், உயரதிகாரிகள், அரசு டாக்டர்கள் பயன்படுத்தி தங்களை காத்துக்கொள்கிறார்கள். அந்த மருந்துகளை தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கவிடாத அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்'' எனவும் விளக்கினார் டாக்டர் சரவணன்.