Skip to main content

“கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது..” தொல்லியல் துறையில் மீண்டுமொரு புதிய கண்டுப்பிடிப்பு 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Cholapuram is famous for its stone and soil history. ”Another new discovery in the field of archaeology


சிவகங்கையை அடுத்த சோழபுரம் குண்டாங்கண்மாயில் அடையாளம் காண முடியாத உருவம் பொறித்த கல் ஒன்று இருப்பதாக சுத்தானந்த பாரதி பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஆறுமுகம், சிவகங்கை தொல்நடைக் குழு  நிறுவனருக்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து  அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஆசிரியர் ஆரோக்கிய சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா கூறியதாவது, “சோழபுரம் கிழக்கு குடியிருப்பை ஒட்டிய குண்டங்கண்மாய் உள்வாய் கடைப் பகுதியில் 16, 17ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் ஒன்று அடையாளங்காணப் பெற்றுள்ளது. மதுரையில் விஜய நகரப் பேரரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கர், மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தினர். சக்கந்திப் பாளையத்தில் அடங்கிய பகுதியாக சோழபுரம் இருந்திருக்கலாம்.

 

வாமன உருவம்:

வாமன அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும். மாவலி சக்கரவர்த்தியின் கர்வம் அடக்க மூன்றடி உயரம் கொண்ட ஏழை அந்தனராகச் சென்று, தன் காலடியில் மூன்றடி நிலம் கேட்டு உலகை அளந்த இவ்வாமன உருவம், நிலம் தொடர்பான ஆவணங்களில் அரசர் காலத்தில் பொறிக்கப்பெற்றுள்ளது. இங்கு காணப்பெறும் வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, தலையில் குடுமி, மார்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்சகச்சம் ஆகியவற்றோடும் மற்றொரு கையில் கெண்டியில்லாமல் ஊன்றுகோலுடனும் காணப்படுகிறது.

 

கல்தூண்:

நான்கரை அடி உயரமுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட கல்தூண் ஒன்று செங்குத்தாக நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் வாமன உருவம் புடைப்புச் சிற்பமாக காட்டப் பெற்றுள்ளது. மற்றொரு பக்கத்தில் கல்வெட்டு 30 வரிகள் எழுதப்பெற்றுள்ளன. அவை மிகவும் சிதைந்த நிலையில் காணப்பெறுகின்றன.

 

Cholapuram is famous for its stone and soil history. ”Another new discovery in the field of archaeology

 

கல்வெட்டு செய்தி:

ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு கல்வெட்டு தொடங்குகிறது. அதன் பின் சகாப்த ஆண்டு குறிக்கப்பெற்றுள்ளது. அது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. காத்தம நாயக்கர் எனும் பெயர் தெரிகிறது. இவர் அக்காலத்திய அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். அக்கல்வெட்டில்  மதுனா, ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்தி கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இடையில் பத்து வரிகளுக்கு மேல் பொருள் கொள்ளமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. இறுதியாக, ‘இதற்கு கேடு விளைவிப்பவர் யாராகிலும் கங்கைக்கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போகக் கடவதாவது’ என முடிகிறது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டோ அல்லது தானம் தொடர்பான காரணத்தினாலோ குளம் கண்மாய்கள் அளவிடப்பட்டு வெளிப்படுத்தும் விதமாக வாமன உருவத்தோடு இக்கல்வெட்டு அமைக்கப்பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டு குறித்து மேலும் தகவல் தேடும்போது இக்கல்வெட்டு வாசிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஆங்கிலேயர் காலத்தில் 1882இல் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

 

வாமனக்கல்லும் நாயக்கர் கல்வெட்டும்:

கொல்லங்குடி வீரமுத்துப்பட்டியை அடுத்த சிறுசெங்குளிப்பட்டி வயல் பகுதியில் கிடைத்த திருமலை காத்த சேதுபதி காளையார் கோவில் காளீசுவரருக்கு பிரம தேயமாக வழங்கிய கல்வெட்டு வாமன உருவத்தோடு அமைக்கப்பெற்றிருந்ததும், சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் திருவாழிச் சின்னத்துடன் வண்டியூர் பெருமாளுக்குத் தானமாக வழங்கப்பெற்ற நாயக்கர் கால கல்வெட்டும் முன்னர் கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

சோழபுரம்:

சோழபுரம் எனும் பெயரில் பல இடங்களில் ஊர்கள் அமைந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர், சோழர் காலத்தில் தோன்றியதாகவும், அதனாலேயே இப்பெயரில் வழங்கிவருவதாகவும், இங்குள்ள சிவன் கோவில் சோழர்களால் தோற்றுவிக்கப்பெற்றதாகவும் மக்களால் நம்மப்படுகிறது. இங்கு ஒட்டை மண்டபம் என்று மக்களால் வழங்கப்பெறும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய சிவன் கோவில் மிகவும் இடிந்த நிலையில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பெற்றுள்ளன.

 

சோழபுரம் கோட்டை:

சோழபுரத்தில் ஊருக்கு மேற்குப் புறத்தில் செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மண்கோட்டை ஒன்று இருந்து அழிந்து போயுள்ளது. அங்கு காவல் தெய்வமான முனீசுவரர், இன்றும் கோட்டை முனிசுவரராக மக்களால் வணங்கப்படுகிறார். மேலும், கோட்டைப் பகுதியில் திருவாழிச் சின்னத்துடன் திரிசூலம் பொறிக்கப் பெற்ற கல் ஒன்று கண்டெடுக்கப்பெற்று, மக்களின் வழிபாட்டில் உள்ளது.

 

ஆயுதக்கிடங்கு:

கோட்டையாகக் கருதப்படும் இடத்தின் நடுப்பகுதியில் சிதைவுறாமல் இருக்கும் சின்ன அறை போன்ற வடிவம் ஆயுதக் கிடங்காக இருந்திருக்கலாம். கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது. நாயக்கர் கால வாமனக் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.