Skip to main content

செல்ஃபோன் டவர் வர்றதுக்கு முன்னாடியே சிட்டுக்குருவியை அழிக்க ஆரம்பிச்சுட்டோம்!- சென்னை பறவை மனிதர் சேகர் 

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

சமீபத்தில் 2.0 படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டுள்ளதோ அதே அளவிற்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் பக்‌ஷி ராஜன் கதாபாத்திரமும் பேசப்பட்டது. பறவைகளின் மீது காதல் கொண்டவராக நடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்த படத்தின் மையக்கருத்து என்ன என்றால் செல்ஃபோன் டவர்களிலிருந்து வெளியாகும் கதீர்வீச்சினால் சிட்டுக்குருவி இனங்கள் அழிந்துகொண்டு வருகிறது என்பதுதான். மனிதர்கள் வாழ்வதற்கு பறவைகள் மிகவும் முக்கியாமனது என்ற கருத்தை இப்படத்தில் இயக்குனர் ஷங்கர் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து சென்னையில் வசிக்கும் பறவை காதலலான சேகரிடம் சந்தித்து பேசினோம். அப்போது அவர் பறவைகளை பற்றியும், இந்த படத்தின் கருத்தை பற்றியும் பகிர்ந்தது.
 

sekar

 

 

“நான் இதுவரை 2.0 படத்தை பார்க்கவில்லை, ஆனால் கேள்விப்பட்ட வரையில் பலர் செல்ஃபோன் டவரினால்தான் சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டதாக சொல்கின்றனர். ஆனால், செல்ஃபோன் டவர் வருவதற்கு முன்பே நாம் சிட்டுக்குருவிகளை அழிக்க தொடங்கிவிட்டோம். 20 வருடத்திற்கு முன்பு இந்த வீட்டின் ஜன்னல்களில் அமருவதற்கு என்று பல சிட்டுக்குருவிகள் வரும். பின்னர், பல சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டது. செல்ஃபோன் டவர்கள் நடுவதற்கு 15 வருடங்கள் முன்பே சிட்டுக்குருவிகள் அழிய தொடங்கிவிட்டன. டவர் வருவதற்கு முன்பாகவே இயற்கை சார்ந்தவைகளை நாம் ஆழிக்க தொடங்கிவிட்டோம், மரங்களை வெட்டிவிட்டோம், ஏரி குளங்களை ஆக்கரமிப்பு செய்துவிட்டோம். பிறகு எவ்வாறு பறவைகளுக்கு நீர் கிடைக்கும், தங்குவதற்கு இடம் கிடைக்கும்.  பறவைகளின் வாழ்வாதாரமே மரங்கள்தான். அந்த காலத்தில் நம் வீடுகளில் அரிசி புடைக்கும்போது, வரும் நொய்களை அப்படியே தரையில் போட்டுவிடுவார்கள். அதை பறவைகள் வந்து சாப்பிடும், நான் என்னுடைய சிறு வயதில் இதுபோன்று பல பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது நாம் அனைவரும் நவீனத்திற்கு மாறிவிட்டோம். அவ்வாறு நவீனத்திற்கு போக... போக அழிவுதான். நவீனத்தில் நமக்கு தேவையும் இருக்கிறது. அதேபோல அதில் அழிவும் உள்ளது. 

 

25 வருடங்களுக்கு முன்பு சென்னையை சுற்றி பல மரங்கள் இருக்கும். மாதாவரம் பால் பண்ணை அருகில் அப்போது செல்கையில் மரங்களும், ஏரிகளுமாக இருந்தது. ஆனால், தற்போது அங்கு இருந்த மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வீடுகளால் சூழப்பட்டுள்ளது. மரங்கள்தான் பறவைகளின் வாழ்வாதாரம், அதில்தான் அவை தங்கும், பறவைகள் அதில் கிடைக்கின்ற பழங்களைதான் உணவாக சாப்பிடுகின்றன. தற்போது மரங்கள் இருக்கும் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் இருக்க இடம், உண்ண உணவு இன்றி பறவைகள் தவிக்கின்றன. என் இடத்திற்கு தினசரி நான்காயிரம் ஐயாயிரம் கிளிகள் வருகிறது என்றால் ஏன் வருகிறது என்று பாருங்கள்... காரணம் அவைகளுக்கு சரியான உணவு இல்லை அதனால்தான் இந்த இடத்திற்கு வருகின்றன. பறவைகளுக்கு உணவு தரக்கூடிய மரங்களை அழித்துவிட்டோம். பறவைகளுக்கு சரியான உணவு கிடைத்தால் இந்த இடத்திற்கு வரவே வராது. ஆனால், நாமோ அவற்றிற்கு உணவு அளிக்கும் மரங்களை அழித்துவிட்டோம், இங்கு மட்டுமில்லை எல்லா இடத்திலும் பறவைகளுக்கு உணவு தருகின்ற மரங்களை அழித்து வருகிறோம். 
 

parrots


தற்போது செல்ஃபோன் டவர்களின் கதீர்வீச்சுகளை பற்றி பார்த்தால், அது மனிதர்களாகிய நமக்கும் பிரச்சனை தரக்கூடியதுதான். அதனால் கேன்சர் போன்ற பாதிப்பு வரும் என்கிறார்கள். அளவிற்கு மீறீனால் அமிர்தமும் விஷம் என்கிறார்கள். அதுபோல டவரில் இருந்து வரும் கதீர்வீச்சு 2.0 அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், நம் ஊர்களில் இருந்து வரும் அலைவரிசைகளில் 4.5 இருக்கிறது. முன்பெல்லாம் அலைவரிசைகளை அரசாங்கம் பார்த்துகொண்டது. எப்போது அது தனியாருக்கு விற்கப்பட்டதோ, இது போட்டியாக மாறியது. நகர்புறத்தில் அருகருகே 10 டவர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அது பாதிப்பைதான் ஏற்படுத்தும், அதுவும் ஸ்லோ பாய்ஸன் போன்றது. பறவைகளும் அந்த கதீர்வீச்சால் உடனடியாக இறந்துவிடாது. அதன் லைஃப் குறைந்துவிடும். நம்முடைய வாழ்க்கையிலும் எதோ ஒரு கட்டத்தில் இதனால் நோய் தாக்குதல் ஏற்படும். இப்பொழுது நாம் செல்போனை எல்லாம் விடமுடியாத அளவு சென்றுவிட்டதால் அதை உணர்த்த இப்படியொரு படம் எடுத்திருக்கலாம்.


 

சிலர் பறவைகளை அழகிற்காக வளர்க்கிறார்கள். அது மிகவும் தவறான ஒன்று. பறவைகள் மிகவும் வேகமானது. அது வீட்டில் வைத்து வளர்க்க தகுந்தவை அல்ல. கிளிகளை எல்லாம் வீட்டில் வளர்க்கவே கூடாது. அப்படி வளர்ப்பதற்காக அதன் இறகுகளை வெட்டி வளர்க்கின்றனர். சிலர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக வாங்கி தந்ததாகவும் கூறுகின்றனர். விளையாடும் பொருளா ஒரு உயிர். நம் குழந்தைகளை சிங்கத்திடம் விளையாட கொடுப்போமா. சிலரிடம் இருந்து பாதிக்கப்பட்ட கிளிகளை வாங்கி இங்கே எனது வீட்டிலுள்ள கூண்டுகளில் வைத்து பராமறித்து, பின்னர் அவைகள் நலமானவுடன் இங்கு வந்து உணவு சாப்பிடும் கிளிகளுடன் சேர்த்து அணுப்பிவிடுவேன்” என்றார்.