Skip to main content

சிரியாவில் கொப்புளிக்கும் ரத்த ஊற்று! #1

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
Syria

 

சிரியாவைப் பற்றி சமீபநாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அந்த நாட்டில் ஏதோ சில நாட்களாகத்தான் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதைப் போல பரிதாபப்படுகிறார்கள்.

 

அரபு உலகில் சிரியா மட்டுமல்ல, லெபனான், பாலஸ்தீனம், இராக், எகிப்து என்று எத்தனையோ நாடுகள் கடந்த காலங்களில் கொடூரமான படுகொலைகளைச் சந்தித்திருக்கின்றன.

 

அப்போதெல்லாம் பொங்காத மனிதாபிமானம் இப்போது ஊற்றெடுப்பதற்கு உலகளாவிய பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்வதற்கு முன் சிரியாவின் முன்கதையை கொஞ்சம் அறிந்துகொள்வது நல்லது.

 

கி.மு.10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிரியா நாகரிகத்தின் இருப்பிடமாக கருதப்பட்டிருக்கிறது.

 

ஆனால், நவீன சிரியா முதல் உலகப்போருக்கு பின்னரே உருப்பெற்றது. இன்றைய லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டானின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பெரிய நாடாக இருந்த சிரியா, முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் முடிவில் வல்லரசுகளால் கூறுபோடப்பட்டது.

 

முதல் உலகப்போர் சமயத்தில் ஒட்டாமன் பேரரசில் சிரியா இணைந்திருந்தது. போரின்போது ஒட்டாமன் மற்றும் அதன் கூட்டுப்படையினர் ஆர்மீனியின் இனப்படுகொலை, அஸ்ஸிரியன் இனப்படுகொலைகளை நடத்தினர். கொல்லப்பட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.

 

போரின் முடிவில் ஒட்டாமன் பேரரசை இரண்டாக கூறுபோட்டனர். பிரான்சிடம் இருந்து 1936 ஆம் ஆண்டு விடுதலை பெற்று சிரியா குடியரசாகியது. ஆனால், பிரான்சும் சிரியாவும் ஏற்படுத்திய விடுதலை ஒப்பந்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏற்கவில்லை.

 

அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் முடிவில் 1946ல்தான் பிரான்ஸ் ராணுவம் சிரியாவிலிருந்து வெளியேறியது. அதற்கு முன்னதாக நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியரசின் கையில் ஒப்படைத்தது. குடியரசு ஆனபிறகு 1948 ஆம் ஆண்டு சிரியா படைகள் பாலஸ்தீனத்திற்குள் புகுந்து யூத குடியிருப்புகளை நொறுக்கியது. இஸ்ரேல் உருவாவதை தடுக்கவே இந்த போர் நடத்தப்பட்டது. ஆனால், போர் வெற்றிபெறவில்லை. இதையடுத்தே சிரியா அரசு ராணுவப்புரட்சியால் தூக்கியெறியப்பட்டது. அரபுநாடுகளில் நடைபெற்ற முதல் ராணுவப்புரட்சி என்று இதை கூறுகிறார்கள். ஆனால், அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து பல ராணுவப் புரட்சிகள் நடைபெற்றன. 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பிறகு நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகள் சீரமைக்கப்பட்டன.

 

அந்தச் சமயத்தில் எகிப்தில் அதிபராக நாசர் பதவியேற்றார். அதையடுத்து நாஸரிஸம் என்ற புதிய கோட்பாடு அரபுநாடுகளுக்கு அறிமுகமாகியது. 1956 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் பிரச்சனை உருவானபோது சிரியா அரசு சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டது. இது துருக்கி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. ஆனால், அதுபோல எதுவும் நிகழவில்லை.

 

Syria

 

இந்நிலையில்தான் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்றைய சிரியா ஜனாதிபதி சுக்ரி அல் குவாட்டிலும் எகிப்து அதிபர் நாஸரும் ஒரு உடன்பாடு செய்துகொண்டனர். அதன்படி, எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபு குடியரசை உருவாக்க முடிவு செய்தனர்.

 

இதைத்தொடர்ந்து சிரியாவில் உள்ள மற்ற கட்சிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் வெளிப்படையான நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டனர். சிரியா கம்யூனிஸ்ட் கட்சி என கருதப்படும் பாத் கட்சி நிர்வாகிகள் ஒரு ரகசிய ராணுவத்தை அமைத்தனர். அதன் தலைவர்களாக முகமது உம்ரன், சலாஹ் ஜாடிட், ஹஃபேஸ் அல் ஆஸாத் ஆகியோர் செயல்பட்டனர்.

 

இந்த ராணுவக்குழு நடத்திய திடீர் புரட்சியில் எகிப்து-சிரியா உடன்பாடு முறிந்தது. ஆனால், மீண்டும் சிரியாவில் ராணுவப்புரட்சிகளுக்கு வழி வகுத்தது. பாத்கட்சியின் ராணுவக்குழுவில் இடம்பெற்ற ஹஃபேஸ் தனது தோழரான ஸலாஹ் ஜாடிட்டை வெளியேற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.

 

இவருடைய ஆட்சியில் ராணுவம் பலமிக்கதாக மாற்றப்பட்டது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் சண்டையில் ஈடுபட்டார். அவருக்கு எகிப்தும் உதவி செய்தது. இஸ்ரேலுடன் போர் பின்னர் லெபனானை நோக்கித் திரும்பியது.

 

1976 ஆம் ஆண்டு தொடங்கிய லெபனான் மீதான தாக்குதல் 30 ஆண்டுகள் நீடித்தது. ஜனாதிபதி அல் ஆஸாத் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி வளைகுடாப் போரில் இராக்கிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து சண்டையில் ஈடுபட்டார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி அல் ஹஃபேஸ் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய மகன் பஷர் அல் ஆஸாத் எதிர்ப்பே இல்லாமல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இவர் தனது தந்தையைப் போலில்லாமல் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து ரஷ்ய ஆதரவு நிலையையே மேற்கொண்டார். அந்த அளவுக்கு சிரியா மீதான எதிரிகளின் தாக்குதல் அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபிறகும் ரஷ்ய ஆதரவு நாடுகளை தனது பக்கம் இழுக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியில் முடிந்தது.

 

உள்நாட்டுக் கலகங்களையும், பக்கத்து நாடுகளின் நெருக்குதல்களையும் அமெரிக்கா தனது ஆயுதமாக பயன்படுத்தியது. ஆனாலும், சிரியா அரசு அனைத்து எதிர்ப்புகளையும் ராணுவரீதியாகவே சந்தித்தது. சிரியாவில் வடகொரியா தொழில்நுட்பத்துடன் அணுஉலை தொடங்கப்படுவதாகக் கூறி விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

ஆனால், சிரியாவில் அதுபோல ஒரு அணுஉலை இருந்ததா என்பதை சர்வதேச அணுசக்தி கமிஷன் ஏஜென்சியால் நிரூபிக்க முடியவில்லை. இருந்தாலும், இன்றுவரை வடகொரியாவின் ஆயுதஉதவியை சிரியா பெறுவதாக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பப்படுகிறது.

 

2005 ஆம் ஆண்டு லெபனானில் இருந்து சிரியா வெளியேறியது. அதன்பிறகும் சிரியாவில் இஸ்லாமிய மதக்குழுக்களுக்குள் மோதல்கள் நீடித்தே வந்தன. அதாவது அரபு நாடுகளுக்கே உரிய அத்தனை லட்சணங்களுடன் சிரியாவும் பயணத்தை தொடர்ந்தது.

 

இந்தக் காலகட்டத்தில்தான் தென்னமெரிக்க நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் பல்வேறு நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றத் தொடங்கினர். குறிப்பாக வெனிசூலாவில் இருந்து அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை ஜனாதிபதி சாவேஸ் வெளியேற்றினார்.

 

Syria

 

இதையடுத்து, இராக்கை கபளீகரம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு யுத்தத்தை தொடங்கியது. அங்கும் ஸன்னி, ஷியா பிரிவு முஸ்லிம்களின் மோதலை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது அமெரிக்கா.

 

எண்ணெய் ஊற்றுக்காக அரபு நாடுகளை ரத்தக்களறியாக்கும் அமெரிக்காவின் தொடர் முயற்சிகளை அடுத்த அத்தியாத்திலும் பார்க்கலாம்…

Next Story

"நாம் ஒன்றிணைவோம்" - பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்னி லியோன் உதவி

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Sunny Leone help to Turkey earthquake victims

 

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் தற்போது வரை 46,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.   

 

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கள் நிறுவனம் ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு எங்கள் வருவாயில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கவுள்ளோம். 

 

நாம் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக இழந்ததை நம்பிக்கையோடு மீட்டெடுக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு கை கொடுங்கள். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க எங்களுடன் சேர்ந்து உதவுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் தொடர்ந்து அனாதை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அதையடுத்து தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.   

 

 

Next Story

துருக்கியில் தொடரும் துயரங்கள்; 36 ஆயிரத்தை நெருங்கிய உயிர்ப்பலி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

turkey earthquake casualty toll approaching 36 thousand ongoing

 

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

மீட்புப் பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் முடுக்கி விடப்பட்ட நிலையில் சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கிக்கும் சிரியாவிற்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து மக்களை உயிருடனும் சடலமாகவும் மீட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது இரு நாடுகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.