Skip to main content

உத்தரப்பிரதேசத்தில் வரலாறு படைத்த பா.ஜ.க! 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

BJP makes history in Uttar Pradesh!

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (10/03/2022) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகளை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கட்சித் தொடங்கிய குறுகிய காலத்தில் டெல்லியைத் தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 262 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 136 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைப்பது உறுதியாகிவிட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த 1985- ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே கட்சித் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆட்சி அமைக்க 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 250- க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

BJP makes history in Uttar Pradesh!

கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த  உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் 384 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், பா.ஜ.க. இம்முறை அதிக தொகுதிகளை இழக்கக்கூடும் என்ற போதிலும், அக்கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 2017- ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே, தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க.வுக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை வாரி வழங்கினர்.


பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருந்த சமாஜ்வாதி கட்சி, கடந்த தேர்தலை விட இம்முறை அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. 2017- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 311 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சுமார் 125 தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்று வரும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 2017- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இம்முறை அதற்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BJP makes history in Uttar Pradesh!



கடந்த தேர்தலில் 110 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, இம்முறை அதே எண்ணிக்கையிலான தொகுதிகளோ அல்லது அதை விட குறைவாகவோ தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.